Monthly Archives: பிப்ரவரி 2009

THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON

the-curious-case-of-benjamin-button-movie-poster-11சுழியத்தில் இருந்து தொடங்கும் மனித வாழ்க்கை, எண்பதில் தொடங்கி அப்படியே பின்னோக்கி நகர்ந்தால் எப்படி இருக்கும் என்ற தேடலின் பதில்தான் THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON என்ற இந்த திரைப்படம்.

படம் ஒரு மருத்துவமனையில் தொடங்குகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் டெய்சி தனது மகள் கேத்தரினிடம் ஒரு டைரியைக் கொடுத்து படிக்குமாறு கேட்கிறாள். அது பெஞ்சமின் பட்டனின் டைரி. பெஞ்சமினின் பின்னணிக் குரலில் விரிகிறது கதை…

80 வயதுக்குரிய தோற்றத்துடன் பிறக்கும் ஆண் குழந்தை, அதன் தந்தையாலேயே ஒரு முதியோர் காப்பகத்தில் கைவிடப்படுகிறது. அங்கிருக்கும் ஒரு கறுப்பினப் பெண் அவனை எடுத்து வளர்க்கிறாள். அவள்தான் அவனுக்கு “பெஞ்சமின்” என்று பெயரிடுகிறாள். இளம் வயதாக இருந்தாலும் தோற்றத்தில் முதியவனாக இருக்கும் பெஞ்சமின் தனது இளமைக் காலத்தை அனுபவித்து வளர்கிறான். அங்கே அவனுக்கு டெய்சி என்ற சிறுமியின் நட்பு கிடைக்கிறது. இருவருக்கும் ஏறக்குறைய சம வயதாக இருந்தாலும் தோற்றத்தில் வேறுபட்டு இருக்கின்றனர்.

சில காலத்துக்கு பிறகு பெஞ்சமின் வேலை செய்ய போகிறான். அவனுக்கு கப்பல் ஒன்றில் வேலை கிடைக்கிறது. கப்பல் தலைவனுடன் நெருக்கமாகி விடும் பெஞ்சமினை தன்னுடனேயே வரும்படி அழைக்கிறான் கப்பல் தலைவன். இதற்கிடையில் பெஞ்சமினுக்கு ஒரு பெரிய பணக்காரனின் நட்பும் கிடைக்கிறது. கப்பல் வேலைக்குப் போவதற்கு முன்னர் அவனிடம் வரும் டெய்சி, அவன் எந்த நாட்டில் கரையிறங்கினாலும் அங்கிருந்து தனக்கொரு போஸ்ட் கார்டு போடுமாறு கேட்டுக் கொள்கிறாள். அவர்களது உறவு போஸ்காட்டிலேயே வளரத் தொடங்குகிறது.

ஒரு தங்கும் விடுதியில் தன்னுடன் தங்கியிருக்கும் ஒரு திருமணமான பெண்ணுடன் பெஞ்சமினுக்கு தொடர்பு ஏற்படுகிறது. அந்த உறவு சில நாட்களிலேயே அற்றுப் போகிறது. பெஞ்சமின் மீண்டும் கப்பல் வேலைக்கு செல்கிறான். போர் சமயம் என்பதால் பெஞ்சமின் வேலை செய்த கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. பெஞ்சமின் மீண்டும் தான் வளர்ந்த முதியோர் காப்பகத்திற்கு வருகிறான். அங்கே மீண்டும் டெய்சியைப் பார்க்கிறான். நடனத்தில் ஆர்வம் கொண்டுள்ள டெய்சி அவன் வயது முதிர்ந்த தோற்றத்தில் இருந்தாலும் அவனை விரும்புவதாக சொல்கிறாள். அதனை மறுத்து விடும் பெஞ்சமின், அவள் வயதுக்கேற்ற ஒருவனை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கூறுகிறான். இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

பெஞ்சமினுடன் நெருக்கமாக இருந்த பணக்கார நண்பன் மீண்டும் பெஞ்சமினைத் தேடி வருகிறான். வயதாகி மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் அவன், நான்தான் உன்னுடைய தந்தை என்று பெஞ்சமினிடம் கூறுகிறான். அதோடு தன்னுடைய பட்டன் தொழிற்சாலை உட்பட அனைத்து சொத்துக்களையும் பெஞ்சமின் பெயருக்கே எழுதி வைத்து விட்டு இறந்து போகிறான்.

மீண்டும் டெய்சியை காண விரும்பும் பெஞ்சமின் அவளைத் தேடிப் போகிறான். அவளுக்கு காதலன் இருப்பதையும் அவள் உலகம் முழுவதும் உள்ள மேடையில் நடனமாடுவதை லட்சியமாக வைத்திருப்பதை அறிந்துக் கொள்ளும் பெஞ்சமின் அவளை மீண்டும் பிரிந்து வருகிறான்.

ஒரு விபத்தில் சிக்கிக் கொள்ளும் டெய்சிக்கு காலில் பலத்த அடிபடுகிறது. காலில் அடிப்பட்ட காரணத்தால் டெய்சி நடனத்தை மறக்க வேண்டியதாகிறது. மீண்டும் தான் வளர்ந்த முதியோர் காப்பகத்திற்கு வரும் டெய்சி பெஞ்சமினைத் திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்கிறாள். வாழ்கையின் மத்திய வயதில் இருவரும் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். டெய்சி சொந்தமாக ஒரு நடனப்பள்ளியை தொடங்கி நடத்துகிறாள். இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதற்கு சாட்சியாக ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

சில மாதங்களிலேயே எதிர்காலத்தில் டெய்சி எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினையை புரிந்துக் கொள்ளும் பெஞ்சமின், தன்னுடைய மகளின் ஒரு வயது பிறந்த நாள் முடிந்த மறுநாள் அதிகாலையில், அவர்களை விட்டு பிரிந்து செல்கிறான். மகளுக்கு பதின்ம வயது நடக்கும் போது திரும்பி வரும் பெஞ்சமின், டெய்சி இன்னொரு திருமணம் செய்திருப்பதை அறிந்துக் கொள்கிறான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பெஞ்சமினை  சிறுவனாகப் பார்க்கிறாள் டெய்சி. அப்போது அவன் முதிய வயதில் வரும் ஞாபக மறதியால் எல்லாவற்றையும் மற்ந்து விட்டிருக்கிறான். டெய்சியும் அவனுடனேயே தங்கியிருந்து அவனை பார்த்துக் கொள்கிறாள். காலங்கள் செல்ல செல்ல வயது குறைந்து கொண்டே வரும் பெஞ்சமின் இறுதியாக ஒரு கைக்குழந்தையாகி டெய்சியின் அணைப்பிலேயே இறந்து போகிறான்.

படம் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது. ஆனால் அவ்வளவு நேரமும் கடந்து போனதே தெரியவில்லை. அந்த அளவுக்கு கதையோடு ஒன்றிப் போக முடிகிறது. இந்த நீண்ட படத்தில் வருகின்ற எந்த கதாபாத்திரமும் சோடையானதாக இல்லை.

பெஞ்சமினின் வாழ்க்கை பயணம் முழுவதும் நம்மையும் கூடவே கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் பெஞ்சமினாக நடித்திருக்கும் BRAD PITT . அற்புதமான நடிப்பு. சிறு வயது தோழியாக இருந்து, காதலியாகி பின்னர் மனைவியாகி இறுதியில் தாயாகும் பாத்திரத்தை நெஞ்சை உருக்கும் வகையில் செய்திருக்கிறார் KATE BLANCHETT . அதிலும் கைக்குழந்தையான பெஞ்சமின் அவர் மடியில் இறந்து போகும் இடத்தில் எழுகின்ற உணர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மொத்தத்தில் DAVID FINCHER இயக்கியிருக்கும் திரைக் காவியம்தான் THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON.

CHANGELING

changeling-poster-800x11851924ஆம் ஆண்டில் நடந்த ஒர் உண்மைச் சம்பவம்தான் இந்தப் படம். தொலைப்பேசி துறையில் வேலை செய்யும் கிறிஸ்டீன் கொலின்ஸ், தன் மகன் வால்டர் கொலின்ஸ்சுடன் அமைதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் அவரது மகன் வால்டர் கொலின்ஸ் மர்மமான முறையில் காணாமல் போகிறான். அவனைக் கண்டு பிடித்து தருமாறு காவல் துறையின் உதவியை நாடுகிறார் கிறிஸ்டீன் கொலின்ஸ்.

ஒரு நாள், மகனை கண்டு பிடித்து விட்டோம் என்று கூறி வால்டர் அல்லாத இன்னொரு பையனை கொண்டு வந்து நிறுத்துகின்றனர் காவல் துறையினர். ஆரம்பத்தில் அது தன் மகன் இல்லை என்று மறுக்கும் கிறிஸ்டீன் ஓர் அதிகாரியின் பேச்சை நம்பி அந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். சிறுவனின் நடவடிக்கை மற்றும் செய்கைகளைக் கொண்டு அவன் தன் மகனில்லை என்று கூறும் கிறிஸ்டீனைக் காவல் துறை அதிகாரிகள் கேலி பேசுகின்றனர். அதோடு பொது மக்கள் மத்தியில் காவல் துறைக்கென இருக்கும் கௌரவத்தை அவர் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். அதிகார வர்கத்துக்கும் ஒரு பெண்ணிற்குமான உரிமைப் போராட்டத்தின் முதல் வித்து இந்த இடத்தில் விழுகிறது.

அந்த நேரத்தில்தான் ஒரு பாதிரியார் கிறிஸ்டீனுக்கு உதவ முன்வருகிறார். நியூயார்க் நகர காவல் துறை தவறான நபர்களின் கைகளில் சிக்கி சீரழிந்து போயிருப்பதையும் அவர் கிறிஸ்டீனுக்கு சுட்டிக் காட்டுகிறார். தங்களுடைய இயலாமையை மறைப்பதற்காக காவல் துறை ஆடும் நாடகம் அதுவென்றும் அவர் அவளுக்குப் புரியவைக்கிறார்.

உண்மையை அறிந்து கொள்ளவும் ஆதாரத்தைத் திரட்டவும் சிறுவனை பல் பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறாள் கிறிஸ்டீன். அவனை பரிசோதிக்கும் பல் மருத்துவர் அந்த சிறுவன் அவளது மகனல்ல என்று உறுதியாக கூறுகிறார். அது குறித்து தன் சார்பாக ஓர் ஒப்புதல் கடிதம் தருவதாகவும அவர் சொல்கிறார். வால்டரின் பள்ளி ஆசிரியையும் புதிதாக வந்துள்ள இந்த சிறுவன் அவளது மகனில்லை என்று கூறுகிறார்.

காவல்துறையின் ஏமாற்று வேலையைக் கண்டு கொதிப்படையும் கிறிஸ்டீன் பத்திரிகையாளர்களை கூட்டி பகிரங்கமாக காவல் துறையின் இயலாமையைப் பற்றியும் அவர்களின் பொறுப்பற்ற செய்கையைப் பற்றியும் விவரிக்கிறார். அதோடு இதைப் பற்றி நிரூபிக்க தன்னிடம் தகுந்த ஆதாரம் இருப்பதாகவும் கூறுகிறார். காவல் துறையினருக்கு கிறிஸ்டீனின் இந்த செயல் எரிச்சலூட்டுகிறது. உடனே கிறிஸ்டீனை மனம் நலன் பாதிப்புற்றவர் என்று கூறி மனநல மருத்துவமனைக்கு அனுப்புகிறது காவல் துறை. அங்கே இருக்கும் மருத்துவர், காவல் துறை கொண்டு வந்து சேர்ப்பித்திருக்கும் சிறுவனை தன் மகன் என்று ஒப்புக் கொள்ளும் பத்திரத்தில் கையெழுத்திட்டால் அவளை விடுவிப்பதாக பேரம் பேசுகிறார்.

அந்த மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான பெண்கள் காவல் துறையினரால் வேண்டுமென்றே அங்கு அனுப்பப்பட்டவர்களாக இருக்கின்றனர். இது கிறிஸ்டீனின் மனதை வெகுவாக வேதனைப்படுத்துகிறது.

அதே நேரத்தில் காவல் துறை அதிகாரி ஒருவரால் பிடிக்கப்படும் சிறுவன் ஒருவன், தனது உறவினன் ஒருவனுடன் சேர்த்து சிறுவர்களை கடத்திக் கொண்டு போய் கொன்றிருப்பதாக வாக்குமூலம் தருகிறான். அந்த சிறுவனை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி, காணாமல் போன பையன்களின் படங்களை எடுத்துக் கொடுக்க… அந்தச் சிறுவன் தாம் கடத்திய பையன்களின் படங்களை மட்டும் தனியே எடுத்துக் கொடுக்கிறான். அதில் வால்டரின் படமும் இருப்பது கண்டு அந்த அதிகாரி திகைப்படைகிறார்.

கிறிஸ்டீனுக்கு காவல் துறையினரால் ஏதோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று உணர்ந்த பாதிரியாரும் கிறிஸ்டீனைத் தேடி காவல் நிலையம் வரை வந்து விசாரிக்கிறார். நல்லவர்கள் சிலரது உதவியோடு அவளை அந்த மனநல மருத்துவமனையில் இருந்தும் விடுவிக்கிறார். சிறுவர்களை கடத்திச் சென்ற கொலைகாரனையும் காவல் துறையினர் கைது செய்கின்றனர்.

கிறிஸ்டீன் காவல் துறையினர் மீது தொடுத்த வழக்கும் சிறுவர்களை கொன்ற கொலைகாரனின் வழக்கும் ஏக காலத்தில் நடக்கிறது. அதில் கடமை தவறிய காவல் துறை அதிகாரி நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிடப்படுகிறது. அந்நகர மேயர் தேர்தலில் நிற்பதில் இருந்து தடை செய்யப்படுகிறார். காவல் துறையின் உயர் அதிகாரி பதவிலிருந்து விலக்கப்படுவதாகவும் உத்தரவு தரப்படுகிறது. கொலைக்காரனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. தண்டனை பெற்ற கொலைக்காரன் கிறிஸ்டீனைப் பார்த்து உன் மகனை நான் கொலை செய்யவில்லை என்று கூறுகிறான்.

சில நாட்களுக்குப் பிறகு கிறிஸ்டீனுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது. அதில் அவளது மகன் வால்டருடன் கொலைகாரனிடம் இருந்து தப்பித்த ஒரு சிறுவன் கிடைத்திருப்பதாக தகவல் கிடைக்கிறது. திரும்பி வந்த சிறுவன் வால்டரின் உதவியுடன்தான் தான் தப்பித்ததாகவும் ஆனால் அதன் பின்னர் ஆளுக்கொரு திசையாக பிரிந்து விட்டதாகவும் வாக்குமூலம் கொடுக்கிறான். சிறுவனின் இந்த வாக்குமூலத்தை கேட்ட கிறிஸ்டின் மகன் திரும்பி வந்துவிடுவான் புதிய நம்பிக்கையுடன் தன் அன்றாட வாழ்வுக்கு திரும்புவதாக படம் முடிகிறது.

தனது உரிமையை நிலைநிறுத்த போராடும் கிறிஸ்டீன் அதிகார வர்க்கம் தன் மீது நிகழ்த்துகின்ற அடக்குமுறையை தாங்கிக் கொண்டு போராடும் அப்பாவி மக்களின் பிரதிநிதியாக இருக்கிறார். பெண்களின் மீது காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வரும் அடக்குமுறையின் அவலத்தையும் இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அந்தளவில் இது முக்கியத்துவம் வாய்ந்த படமாகிறது. படத்தை ஹாலிவூட்டின் பிரபல இயக்குநர் க்ளீன்  ஈஸ்வூட் இயக்கியுள்ளார். படத்தின் நாயகியாக ஏஞ்சலினா ஜோலி நடித்துள்ளார். 1924ஆம் ஆண்டில் நடந்த கதையாக இருந்தாலும் படம் மிக விறுவிறுப்பாகவே இருக்கிறது. பார்க்க வேண்டிய படம்.

“இசைப்புயல்” ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றார்.

ar-rahman-oscar-2009

09 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் 2 விருதுகளை வென்றிருக்கிறார் “இசைப்புயல்” ஏ.ஆர் ரகுமான். “ஸ்லம்டோக் மில்லியனர்” என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காகவும் அதே படத்தில் இடம்பெற்ற “ஜெய் ஹோ” என்ற பாடல் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டதற்காகவும் அவருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த இசையமைப்பாளர் விருது வாங்கிய பின், மேடையில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று கூறி தானொரு நிறம் மாறாத தமிழன் என்றும் நிரூபித்துள்ளார் ஏ.ஆர் ரகுமான். அது தன்னடக்கத்து கிடைத்த வெற்றி. தவிர ஏ.ஆர்.ரகுமான் ஒரு நிறைகுடம்.தளும்பாது!

நான் கடவுள்

naan-kadavul-1ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு பையனை காசியில் 14 வருடங்களுக்கு முன்னர் “தொலைத்து விட்டு” போகும் தந்தை அவனைத் தேடி மீண்டும் தன் மகளோடு காசிக்கு வருகிறார். அங்கிருக்கும் ஒரு நண்பரிடம் காசியில் வாழும் தன் மகனை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்கிறார். முதலில் மகனைத் தொலைத்ததற்கான காரணத்தைக் கேட்டு உதவ மறுக்கும் நண்பர், அவர் காலில் விழுந்து குற்ற உணர்ச்சியோடு கதறி மன்றாடுவதைக் கண்டு மனமிறங்கி உதவ முன்வருகிறார். அப்போதுதான் கதாநாயகன் ருத்ரனின் (ஆர்யா) அறிமுகம்.

இதுவரை தமிழ் சினிமாவின் எந்தவொரு கதாநாயகனுக்கும் இப்படியொரு உடல் மெய்சிலிர்க்க வைக்கும் அறிமுகக் காட்சி கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. லோ ஆங்கிள் பொசிஷனில் ரவுண்ட் டிராலியில் இருக்கின்ற கேமரா தலைகீழாக தவமிருக்கும் ருத்ரனை வட்டமிட்டும் காட்சிலேயே கதாபாத்திரத்தின் தீவிரத்தன்மை விளங்கிவிடுகிறது. காட்சிப் பின்னணியில் அதிர்கிற “ஓம் சிவயோகம் அல்லது ஓம் சிவோஹம்” பாடல் இசை இளையராஜா என்பதை உணர்த்துகிறது. பாடல் காட்சியின் ஊடாகவே ருத்ரன் அகோரி சன்னியாசிகளுக்கு மத்தியில் வாழ்வதும், எரிகின்ற பிணங்களுக்கு முன்பு அமர்ந்து அவன் இறந்தவர்களுக்கு மோட்சம்? அளிப்பதும் காட்டப்படுகிறது. இந்த இடத்தில்தான் ஒரு பிணத்திற்கு முன்னால் அமர்ந்து தவம் செய்துக் கொண்டிருக்கும் மகனைக் கண்டு பிடிக்கிறார் அப்பா. அவனை அழைத்துப் போக எண்ணி குருவிடம் அனுமதி கேட்க, ருத்ரனை தனியாக அழைக்கும் குரு “அகோரி ஆக விரும்பினால் உறவுகளை அறுத்துவிட்டு வா. என்னை வந்து சேரும் நாள் உனக்கே தெரியும்.” என்று போதித்து ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.

வீட்டு வந்த மகனை பார்த்து அதிர்ச்சி அடையும் ருத்ரனின் அம்மா அடுத்து வரும் சில காட்சிகளிலேயே அவனைப் புரிந்து விலகி விடுவது மனதில் ஒட்டவில்லை. சாப்பிட அழைக்கும் தாயைப் பார்த்து “நான் இத்தனை நாள் சாப்பிட்டேனா இல்லையான்னு தெரியாம நீ சாப்பிடாமையா இருந்த..? உடம்பைப் பார்த்தா அப்படி தெரியலியே.. நல்ல குப்பைத் தொட்டி மாதிரி இருக்கே…!”, “ஏதாவது கேளுன்னா… கஞ்சா கிடைக்குமா?” என்று ருத்ரன் சொல்வதும், தங்கை வயதுக்கு வந்த விஷயத்தை சொல்லி வீட்டிற்கு அழைக்கும் தாயிடம் “ஐயிரண்டு மாதம்..” என்ற சித்தர் பாடல்!? ஒன்றை சொல்லி விரட்டுவதும் பாலா படத்தின் ஹீரோக்களுக்கு இருக்கும் வழக்கமான சுபாவங்கள்.

பொதுவாக பாலா படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கு அந்த படமே திருப்புமுனை படமாக அமையும். ஆர்யாவைப் பொருத்தவரை இது அவரது வாழ்நாளில் மறக்க முடியாத படம் என்பதாக மட்டும்தான் சொல்ல முடியும். (ஓபனிங் அருமையாக இருந்தாலும்) படத்தில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைவு. தவிர அவர் பெரும்பாலும் சமஸ்கிருதம் பேசுகிறார். இடையிடையே தமிழ் பேசுகிறார். வேக வேகமாக நடக்கிறார். தலைகீழாக தியானம் செய்கிறார். வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து சில காட்சிகளில் வருகிறார். மயானத்தில் அமர்ந்து சாம்பல் பூசிக் கொள்கிறார். கஞ்சா இழுக்கிறார். தன்னோடு மலைக்கோவிலில் இருக்கும் போலி சாமியார்களை? மிரட்டுகிறார், அர்த்த ராத்திரியில் உடுக்கை அடிக்கிறார். ஒரு காட்சியில் சங்கு ஊதுகிறார். முரட்டுத்தனமாய் சண்டை போகிறார். போலீஸ்காரர்கள் அவரை ஏதோ அயல் கிரகவாசியை பார்ப்பது போல் முறைத்து முறைத்துப் பார்க்கிறார்கள். பச்…. பாலாவின் வழக்கமான ஹீரோ. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஆர்யா…! (நல்ல வேளை தல நடிக்கல!).

அடுத்தது பிச்சையெடுக்க தயாரிக்கப்படும் மனிதர்களின் அறிமுகம். என்ன தயாரிக்கிறார்களா? என்று கேட்டால்.. ஆம் கை கால்களை கூட்டி குறைத்து தயாரிப்பதாகத்தான் வில்லன் தாண்டவன் சொல்கிறார். தாண்டவனாக நடித்திருக்கும் ராஜேந்திரன் வேறு யாரும் அல்ல, பிதாமகன் படத்தில் வரும் ஜெயில் சண்டை காட்சியில் விக்ரமினால் புரட்டி எடுக்கப்படும் மொட்டை ஜெயில் வார்டனாக நடித்தவர்தான். அலட்டல் இல்லாமல் வில்லனாக நடித்து மிரட்டியிருக்கிறார். அதுவும் கடைசி காட்சியில் அம்சவள்ளியை (பூஜா) அவர் அடித்து துன்புறுத்தும் விதம் கொடுமை. ஆரம்பக் காட்சியில் பிச்சையெல்லாம் எடுக்க முடியாது என்று முரண்டு பிடிக்கும் ஒரு பெண்ணை அவர் உதைத்து கல்லால் அடித்து பிச்சையெடுக்க சம்மதிக்க வைப்பதே அவர் பாத்திரத்தின் தன்மையை விளக்க போதுமானது. பிச்சையெடுக்கும் மனிதர்களை அடைத்து வைத்திருக்கும் இடம் சேதுவில் வரும் மடம் போலவே இருக்கிறது. அந்த இடத்தில் பிச்சையெடுக்க பயிற்சி தருகிறார்கள். தேவைப்பட்டால் கை கால்களை உடைக்கிறார்கள். திருமணம் பேசி நிச்சயிக்கிறார்கள். (வரதட்சணை கொஞ்சம் அதிகம் 10 லட்சம்).

பிச்சைக்காரர்கள் பாத்திரத்தில் நடித்த அனைவரும் (கவிஞர் விக்ரமாதித்தனையும் சேர்த்து) மிக நன்றாக நடித்துள்ளனர். படத்தில் அவர்கள் நடித்தது போலவே இல்லாதது பாலாவின் உழைப்பைக் காட்டுகிறது. அதிலும் அடிக்கடி எள்ளல் நகைச்சுவையை எடுத்து விடும் அந்த கருத்த சிறுவனும் வளர்ச்சி குறைந்த பெண்ணும் அருமையான தேர்வு. படத்தில் வரும் அங்கவீனர்கள் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவர்களின் வாழ்வைப் பார்க்கும் போது  “உனக்கென்ன கேடு” என்று நம்மைப் பார்த்து கேட்பது போலவே இருக்கிறது. படத்தில் தான் ஆசையாய் பார்த்து வளர்ந்த ஒரு மூளைவளர்ச்சி குன்றிய குழந்தை, வலுக்கட்டாயமாக இன்னொரு மாநில பிச்சைக்கார ஏஜெண்டால் பிரிக்கப்படும்போடு அதைத் தடுக்க முடியாத ஆதங்கத்தில் கவிஞர் விக்ரமாதித்யன் கடவுளை “தேவு…யா மகனே” என்று திட்டுகிறார். என்னவோ தெரியவில்லை அந்த நேரத்தில் அறை எண் 305-இல் கடவுள் திரைப்படத்தில் வேலை கிடைக்காமல் கஷ்டப்படும் கஞ்சா கருப்பு குடித்துவிட்டு கடவுளை வம்புக்கிழுக்கும் காட்சி வந்து போனது. (கூடவே சிரிப்பும்).

வில்லன் தாண்டவனுக்கு மூன்று உதவியாளர்கள். அதில் முருகன்தான் (கிருஷ்ணமூர்த்தி) பெஸ்ட். முருகனிடம் மட்டும் செல்லுபடியாகும் உருப்படிகளை கொடுக்கிறார் தாண்டவன். அப்படி செல்லுபடியாகும் என்று முருகனால் கருதப்பட்டு போலீசாரின் சூழ்ச்சியால் தாண்டவனிடம் கொண்டு வந்து சேர்க்கப்படும் பெண்ணாக பூஜா.

“ஜே.ஜே” படத்தில் பார்த்த பூஜாவை நினைத்துக் கொண்டு போனீர்கள் என்றால் சாரி… அங்கே நமக்காக காத்திருப்பது பாலாவின் குருட்டுப் பெண் அம்சவள்ளி. தனது வளர்ப்பு தந்தையின் கூட்டத்திலிருந்து முருகனால் பிரித்து கொண்டு வரப்படும் காட்சியிலும், பாடல் ஒன்றைப் பாட சொல்லி வில்லன் தாண்டவன் மிரட்டுகின்ற காட்சியிலும், ஆர்யாவுக்கு தாய் பாசம் குறித்து விளக்கம் சொல்லுகின்ற காட்சியிலும், வில்லனால் அடித்து துன்புறுத்தப்படும் காட்சியிலும், இறுதியாக ஆர்யாவிடம் அடுத்த பிறப்பு இல்லாத வரம் கேட்டு கெஞ்சுகின்ற காட்சியிலும்…. ஹேட்ஸ் ஆஃப் பூஜா! (விருதுக்கு ரெடியாயிருங்க!)

படத்தின் இன்னொரு குறிப்பிட்டு சொல்லத்தக்க அம்சம் இளையராஜாவின் பின்னணி இசை. மேஸ்ட்ரோ…. மேஸ்ட்ரோதான். அதிலும் “கருணைக் கொலை” செய்யப்படுவதற்கு முன்பு பூஜா பேசி முடித்ததும் வருகின்ற வயலின் இசை சிலிர்க்க வைக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, இருக்கிறது. ஆனாலும் அரைகுறை உடை அணியும் கதாநாயகி, “ஏய்…ஏய்” என்று வெற்று சவடால் பேசும் ஹீரோ அண்ட் வில்லன் கோ, வணிக நோக்கத்திற்காக வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் காட்சிகள் மற்றும் பாடல்கள் இல்லாத படம் என்பதால் அந்த குறைகளை மன்னித்து விட்டு தாராளமாக படம் பார்க்கலாம்.

மொத்தத்தில் பாலா ஆடியிருக்கும் கலைத் தாண்டவம்தான் “நான் கடவுள்”.

நாகேஷ் – மறக்க முடியாத ஆளுமை…!

nagesh1

நடிகர் நாகேஷ் அவர்கள் மரணம் பற்றி பலர் எழுதி விட்டார்கள். இருந்தாலும் நானும் இங்கு சொல்வதற்கு ஒரு விஷயம் இருக்கிறது. நடிகை மனோரமாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டபோது அவருக்கு பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் மேடை ஏறி மனோரமாவை வாழ்த்திப் பேசும் நாகேஷ் நகைச்சுவை கலைஞர்கள் எதிர்நோக்கி வரும் அவமானங்கள் குறித்த தனது மனக் குமுறலை தெரிவித்திருப்பார். நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்படுவதில் பாராபட்சம் காட்டப்படுகிறது என்ற ஆதங்கமும் அவர் பேச்சில் அப்போது வெளிப்பட்டது. இருந்தாலும் நடிகை மனோரமாவிற்கு விருது கிடைத்திருப்பதை குறிப்பிட்டு “ஆச்சி… சாதிச்சாச்சு!” என்று சொல்லிவிட்டு மேடை இறங்குவார் நாகேஷ். அதுதான் நாகேஷின் பெருந்தன்மை.

நகைச்சுவையைப் பொருத்தவரை அவர்தான் சக்கரவர்த்தி. ஆனாலும் தன்னுடைய இறுதி காலம் வரை இந்திய அரசின் எந்தவொரு உயரிய விருதும் பெறாத மக்களின் அபிமான கலைஞனாகவே நாகேஷ் காலமாகி இருக்கிறார். உலகத்தில் வாழும் பெரும்பாலான இந்தியர்களுக்கும் பொதுவான ஒரு பழக்கம் இருக்கிறது. அதுதான் வாழும் போது தன்னுடன் வாழும் சக மனிதனை கௌரவிக்க மறுத்து விடுவது. இனிமேலாவது இதுபோன்ற விஷயங்கள் முறையாக கவனிக்கப்பட வேண்டும். நாகேஷின் திறமை சாமானிய மக்களுக்கும் புரிந்தது. உயர்த்தட்டு மக்களுக்கும் புரிந்தது. ஆனால் ஏனோ அரசியல்வாதிகளுக்கு மட்டும் இறுதி வரை விளங்காமலேயே போய்விட்டது. இறுதிவரை நம்மை சிரிக்க வைத்து நாகேஷ் ஜெயித்திருக்கிறார். அவரை கௌரவிக்க மறந்து நாம்தான் தோற்றிருக்கிறோம்.!