மே13 கலவரம்

மலேசிய வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளியாக திகழ்கிற மே13 கலவரம், 1969ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் முடிவின் எதிரொலி என்றால் அது மிகையில்லை.

 அன்று 1969ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி, காலையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருந்தன. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தும், அதிர்ச்சி தரும் வகையில் கூட்டணிக் கட்சி (அம்னோ-மசீச-மஇகா) 2/3 பெரும்பான்மையை தக்க வைப்பதில் தோல்வி கண்டிருந்தது. 1964ஆம் ஆண்டு 86 நாடாளுமன்ற தொகுதிகளை வென்ற கூட்டணிக் கட்சி 1969ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெறும் 66 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. எதிர்கட்சிகளான டிஏபி-பாஸ் மற்றும் பிபிபி அந்தத் தேர்தலில் மொத்தமாக 37 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றிருந்தன.

அந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்த எதிர்க்கட்சிகள், அதற்கொரு வெற்றி விழாவை நடத்த நாள் குறித்தன. அது 1969ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி. போலீஸ் பெர்மிட்டுடன் நடந்த இந்த வெற்றி ஊர்வலம், இன பிரச்னையை தூண்டிவிட நடத்தப்பட்ட ஒன்றல்ல என்றாலும் இதில் கலந்து கொண்ட அடையாளம் தெரியாத பலரின் தன்மூப்பான நடவடிக்கையால், மலாய் இன மக்களின் வெறுப்பு சீனர்களின் பக்கம் திரும்பியது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர், மலாய்காரர்களின் சிறப்புரிமை மற்றும் பூமிபுத்ரா அல்லாத இனங்களின் குடியுரிமை சார்ந்து கேள்வி எழுப்பியிருந்தது இதற்கு வசதியாக அமைந்து விட்டது.

மீண்டும் மே 12 ஆம் தேதி இன்னொரு வெற்றி ஊர்வலத்தை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. அதனை கோலாலம்பூரில்  நடத்தவும் முடிவு செய்தன. மலாய் இனத்தவர் அதிகம் வசிக்கின்ற கம்போங் பாரு வழியாக இந்த ஊர்வலம் வந்தபோது, பொறுப்பற்ற சில நபர்களால் எழுப்பப்பட்ட தேவையில்லாத இனநெடி மிகுந்த கோஷம் மற்றும் ஊர்வலத்தில் காட்டப்பட்ட பதாதைகளால் கோபமுற்ற மலாய் இன மக்கள் துடைப்பத்தை வீதிக்கு கொண்டு வந்து தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். சிலாங்கூர் மாநிலத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் வெற்றி ஊர்வலத்தில் அக்கட்சிகளின் ஆதரவாளர்கள், மலாய் இன மக்கள் மீது காறி உமிழ்ந்தும், துடைப்பத்தை தங்களது வாகனத்தில் கட்டிவைத்தும் (பல இடங்களில் கூட்டணிக் கட்சி
தொகுதிகளை எதிர்கட்சிகள் தங்கள் வசமாக்கி கொண்டதன் அடையாளமாக) கொண்டாடினர்.

பெரும்பான்மையான சீன உறுப்பினர்களைக் கொண்டிருந்த எதிர்கட்சிகள், இந்த ஊர்வலம் நடந்து முடிந்த மறுநாள் (மே 13) தங்களது ஆதரவாளர்களின் செயலுக்காக மன்னிப்பு கோரின. ஆனாலும், இந்த மன்னிப்பு கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களின் காதுகளை எட்டுவதற்கு முன்பாகவே, அதே நாளன்று முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒரு வெற்றி ஊர்வலத்தை கூட்டணிக் கட்சிகளின் சார்பாக அம்னோ நடத்த வேண்டுமெனக் கோரி அதன் ஆதரவாளர்கள் அப்போதைய சிலாங்கூர் முதல்வர் டத்தோ ஹரூண் இட்ரிஸ் வீட்டிற்கு முன்பாக கூடினர். டத்தோ ஹரூண் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்கும் பொருட்டு அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதோடு அம்னோ ஏற்பாட்டில் வெற்றி ஊர்வலம் அன்றைய இரவு 7.30 மணியளவில் நடத்தப்படும் என அறிவித்தார்.

இதற்கிடையில், ஸ்தாபாக்கில் மலாய் இன ஆடவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட தகவலும் மலாய் இன கர்ப்பிணி பெண் ஒருவரின் கருவை பன்றி இறைச்சியை மாட்டி வைக்க பயன்படுத்தும் கொக்கியைக் கொண்டு கருவறுத்த தகவலும் அங்கு கூடியிருந்த கூட்டத்தினரை கொந்தளிக்க வைத்தது. இது உண்மையா, பொய்யா என்று ஆராய்ந்துக் கொண்டிருக்க யாருக்கும் பொறுமையில்லை. இனக் கலவரம் தொடங்கி விட்டது.

சரியாக மாலை 4 மணியளவில் கம்போங் பாரு வழியாக சென்ற இரு சீன ஆடவர்களின் தலை துண்டிக்கப்பட்டது. சிகரட் கொண்டுவரப்பட்ட வேன் கொளுத்தப்பட்டது. அதன் ஓட்டுனநர் கொல்லப்பட்டார். சீன குண்டர் கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் இதற்கு பதிலடி கொடுக்கும் செயலில் இறங்கினர். கோலாம்பூர் சுற்று வட்டாரத்தில் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.. பொதுச் சொத்துகள் சேதமாக்கப்பட்டன. இந்த கலவரத்திற்கு ஏற்றவாறு ஆயுதங்களையும் அவர்கள் முன்கூட்டியே தயார் செய்தும் வைத்திருந்தனர்.

இருதரப்பின் தாக்குதலும் எல்லை மீறிப் போக.. நிலமையைக் கட்டுப்படுத்தும் வகையில் சிலாங்கூர் வட்டாரங்களில் ஊரடங்குச் சட்டம் அமலாக்கப்பட்டது. முதலில் ஃஎப்.ஆர்.யூ கட்டுப்பாட்டில் இருந்த கம்போங் பாரு பின்னர் ரெஜிமென் ரேஞ்சர் பிரிவின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு சீனரின் தலைமையில் செயல்பட்ட இந்தப் பிரிவு, நிலைமையைக் கட்டுப்படுத்துவதாக கூறி மலாய் இளைஞர்களை சுடத் தொடங்கியது. கம்போங் பாரு மலாய் இளைஞர்கள், தாங்கள் சீனர்களுக்கு மத்தியிலும் ரெஜிமென் ரேஞ்சர் படைக்கு மத்தியிலும் பலிகடா ஆக்கப்பட்டு விட்டதாக குமுறினர். இந்தக் குமுறல் பின்னர் மாபெரும் கோபக் கனலாக மாறியது. இதன் எதிரொலியாக ரெஜிமென் ரேஞ்சர் படைக்கு பதிலாக மலாய்காரர்கள் நிரம்பிய ராணுவப் படை அங்கே பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டது.

ஆனால், அப்படி வந்த சில ராணுவ வீரர்கள் சீனர்களுக்குச் சொந்தமான நகைக்கடைகளில் இருந்த பொருட்களை கொள்ளையடித்தனர். தவிர தங்கள் மீது கண்ணாடி பாட்டிலை வீசியதாக கூறி சீனர்களை சுடத் தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன இளைஞர்கள் ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மானில் அமைந்துள்ள ஓடியன் திரையரங்கை முற்றுகையிட்டு கைப்பற்றினர். அதில் படம் பார்த்துக் கொண்டிருந்த சீனர்களை மட்டும் வெளியேற்றும் விதமாக திரையில் சீன மொழியில் அறிவிப்பு போடப்பட்டது. அதில் இருந்த இதர இனத்தவருக்கு சீன மொழியை படிக்கத் தெரியாதென்பது கலகக்காரர்களுக்கு வசதியாக போய்விட்டது. கொலை வெறியுடன் ஓடியன் திரையங்கில் நுழைந்த சீன இளைஞர்கள், அங்கிருந்த அனைவரையும் கொன்று குவித்தனர்.

சிலாங்கூர் – கோலாலம்பூர் மட்டுமே இந்த இனக்கலவரம் நடந்தது. பேராக், கெடா, பினாங்கு, ஜொகூர், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. மலாக்காவில் சிறு கலவரம் நடந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

மே 13 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களால் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது. பின்னர் துங்குவின் ஆலோசனையின் பேரில் மே 16ஆம் தேதி பேரரசர் சுல்தான் இஸ்மாயில் நசாரூதீன் ஷா அவர்கள் தேசிய நடவடிக்கை மன்றத்தை அமைக்கும்படி உத்தரவிட்டார். அதன் தலைவராக துணைப்பிரதமர் துன் அப்துல் ரசாக் பொறுப்பேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்ட நிலையில் அடுத்த 18 மாதங்கள் நாட்டின் அனைத்து சட்ட திட்ட கட்டுப்பாடுகளும் தேசிய நடவடிக்கை மன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. மெல்ல-மெல்ல இனக்கலவர பாதிப்பிலிருந்தும் மலேசியா மீளத் தொடங்கியது.

1970ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி, துங்கு அப்துல் ரஹ்மான் பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து துன் அப்துல் ரசாக் நாட்டின் இரண்டாவது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1971ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மீண்டும் நாடாளுமன்றம் நடவடிக்கைகள் செயல்படத் தொடங்கியது. தீமையிலும் ஒரு நன்மை என்பது போல நமது நாட்டின் தேசிய கோட்பாடு (ருக்குன் நெகாரா) இந்த இனக் கலவரத்திற்கு பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது.

(மே 13 கலவரம் பற்றிய பல்வேறு கட்டுரை, செய்திக் குறிப்பு என பலவற்றை வாசித்த பின்தான் இந்தப் பதிவை எழுதினேன். பல தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தன. அதில் சில கட்டுரை மற்றும் செய்தி குறிப்புகளில் காணப்பட்ட முக்கிய தகவல்களை மட்டுமே இங்கே தொகுத்து தந்துள்ளேன்)

பின்னூட்டமொன்றை இடுக