Monthly Archives: ஏப்ரல் 2010

உலுசிலாங்கூர் இடைத்தேர்தல் முடிவு…

பரபரப்பாக பேசப்பட்ட உலுசிலாங்கூர் தொகுதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 5 நாட்களாகி விட்டன. இந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் பி.கமலநாதன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் கூட்டணி வேட்பாளர் டத்தோ ஸைட் இப்ராஹிம்மை விட 1,725 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பி.கமலநாதனின் இந்த வெற்றியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அவர்களின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டியுள்ளது. இது மஇகாவிற்கோ அல்லது பி.கமலநாதனுக்கோ கிடைத்த தனிப்பட்ட வெற்றியாக கொண்டாட முடியாது. அம்னோ, டத்தோஸ்ரீ நஜீப் மற்றும் தான்ஸ்ரீ முஹிடீன் யாசின் ஆகியோரின் பலத்தினால்தான் மீண்டும் அங்கே மஇகா தலைதூக்க முடிந்திருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.

தேர்தலில் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, மலாய் மற்றும் இந்திய வாக்காளர்களின் ஓட்டுகள் கணிசமான அளவு தேசிய முன்னணி பக்கம் சாய்ந்திருக்கிறது. ஆனால் சீனர்களின் ஓட்டுகள் இன்னமும் மக்கள் கூட்டணி பக்கம்தான் இருக்கிறது. நாங்கள் இன்னமும் எதிர்காலத்தை பற்றிதான் யோசிக்கிறோம் என்று சீனர்கள் சூசகமாக தேசிய முன்னணிக்கு சொன்ன செய்தியாகத்தான் இதனை நாம் கருத முடியும். அடுத்த பொதுத் தேர்தலுக்குள்ளாக தன்னை ஒட்டுமொத்த மலேசியர்களை பிரதிநிதிக்கும் கூட்டணியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை சீனர்கள் இதன் வழி தேசிய முன்னணிக்கு உறுதிபட தெரிவித்துள்ளனர். 1 மலேசியா கொள்கை மீதான சீனர்களின் சந்தேகமும் இதன் வழி தெரிய வந்துள்ளது.

உட்கட்சி கலவரத்திலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக மீண்டு வருவதாக கூறிக்கொள்ளும் எம்சிஏவுக்கு கிடைத்த அபாய அறிவிப்பாக இந்த வாக்களிப்பு இருந்தாலும்… ஒட்டுமொத்தமாக எம்சிஏவின் மீதே எல்லாப் பழியையும் தூக்கிப் போட்டுவிட முடியாது. தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளுமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக ஆளும் அரசு சீன சமூகத்திற்கு செய்து வந்திருக்கின்ற அனைத்து சேவைகளையும் மீண்டும் மறுபரிசோதனை செய்து பார்ப்பது அவசியமாகும். தவிர பெர்காசாவிற்கும் எம்சிஏவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள தேவையில்லாத மோதல் சுகமாக முறையில் தீர்க்கப்பட வேண்டும்.

மலாய் வாக்காளர்களை பொருத்தவரை இந்த தேர்தலில் அவர்கள் அம்னோ பக்கம் மீண்டும் சாய்ந்ததற்கு ஒரேயொரு முக்கியமான காரணம்தான் உண்டு, அது டத்தோஸ்ரீ நஜீப். உலுசிலாங்கூர் தொகுதியில் விரவிக் கிடக்கும் பெல்டா திட்டம் முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இப்போது அவரது மகனே ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் தந்தை மீதான தங்களது விசுவாசத்தை புலப்படுத்தும் வகையிலும் தந்தையின் திட்டத்தை தனயன் கைவிட்டுவிட மாட்டார் என்ற நம்பிக்கையிலும்தான் அவர்கள் தங்களது வாக்குகளை தே.முன்னணி பக்கம் திருப்பியிருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிட்டது மலாய்க்காரரா? சீனரா? இந்தியரா? என்றெல்லாம் அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. துன் ரசாக்கின் மகன் ஆட்சிப் பொறுப்பிலிருக்கிறார், அவர் நமக்கெதாவது புதிய திட்டங்களை வகுப்பார் என்ற நம்பிக்கைதான் அவர்கள் தே.முன்னணி பக்கம் வந்துள்ளார்கள். ஆக மலாய் சமூகத்தின் ஓட்டுக்கு முழு ஆதாரம் டத்தோஸ்ரீ நஜீப்தான்.

நமது இந்திய வாக்காளர்களை பொருத்தவரை, இந்த இடைத்தேர்தலில் தங்களுக்கு கிடைக்கவிருக்கின்ற லாபத்தை அடிப்படையாக கொண்டுதான் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளனர் என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால் தேசிய முன்னணி வழங்கிய வாக்குறுதிகள் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் இவர்களின் வாக்குகள் மீண்டும் மக்கள் கூட்டணி பக்கம் சாய்ந்துவிடும் வாய்ப்புகள் மிக-மிக அதிகம்.

பொதுவாக சீனர்களைப் போல இந்திய வாக்காளர்கள் எதிர்காலத்தை பற்றி திட்டமிட்டு செயல்படுவதில்லை. அப்போதைக்கு தங்களுக்கு கிடைக்கின்ற லாபம், வாக்குறுதிகள் மற்றும் வசதி வாய்ப்புகள் மட்டும்தான் தேர்தலின் போது அவர்களின் வாக்களிப்பை நிர்ணயிக்கிறது. அந்த வகையில் இந்த இடைத்தேர்தலின் போது மக்கள் கூட்டணியை விட தேசிய முன்னணியே நிறைய வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது, பல வகைகளில் இந்திய சமூகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வளிப்பதாகவும் சொல்லியிருக்கிறது. இந்த வாக்குறுதி மற்றும் செயல் திட்டங்கள் இந்த இடைத் தேர்தலின் வெற்றிக்கு உதவினாலும்… அடுத்த பொதுத் தேர்தலின் போதுதான் இந்தியர்களின் உண்மையான நிலைப்பாடு தெரிய வரும். இழந்து விட்ட இந்திய வாக்குகளை மீட்டு விட்டோம் என்ற எண்ணத்தில் பழையபடியே கொடுத்த வாக்குறுதிகளை வசதியாக மறந்து விட்டால் அதற்கான பலனை நிச்சயம் பொதுத் தேர்தலின் போது தேசிய முன்னணி அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்பது மட்டும் திண்ணம்.

இந்த இடைத்தேர்தலில் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்வதாக தெரிவித்துள்ள டத்தோ ஸைட், தேசிய முன்னணி ஓட்டுகளை வாங்கி விட்டதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். தவிர தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, பணம் கொடுத்த ஓட்டுகளை வாங்க வேண்டிய நிலையில் தேசிய முன்னணி இல்லை என கூறியுள்ளார். தோல்வியைத் தழுவியவர்கள் இதுபோல கூறுவது இயல்புதான் என்றாலும், டத்தோ ஸைட் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது விசாரணைக்கு கொண்டுவர வேண்டிய ஒன்றாகும். மிகவும் வெளிப்படையான ஆட்சியைத் தருவதாக உறுதி கூறியுள்ள நமது பிரதமர் இது பற்றி பரிசீலிப்பார் என நம்புவோம்.

எது எப்படியோ தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. பி.கமலநாதனும் இப்போது எம்.பியாகி விட்டார். அடுத்த அவர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் இப்போது இங்கே முக்கியமான கேள்வி. உலுசிலாங்கூர் தொகுதி முடிவு இன்னொரு ஈஜோக் முடிவு போல ஆகிவிடாமல் இருப்பதற்கு எம்.பி கமலநாதன் கடுமையாக உழைக்க வேண்டும். அவரது சேவையும் அர்ப்பணிப்பு உணர்வும்தான் பொதுத்தேர்தலின் போது அவரது நிலையை காப்பாற்றப் போகின்றன. அதையும் பொறுத்திருந்து பார்ப்போம்…

உலுசிலாங்கூர் தொகுதி இடைத்தேர்தல் – ஒரு பார்வை

உலுசிலாங்கூர் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளராக பி.கமலநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தொகுதி வேட்பாளர் தேர்வு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உலுசிலாங்கூர் தொகுதியைப் பொருத்தவரை டத்தோ ஜி.பழனிவேல் அல்லது முகிலன் ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் முகிலனை வேட்பாளராக அறிவிக்கக்கூடாது என்று டத்தோஸ்ரீ சாமிவேலு இறுதிவரை பிடிவாதமாக இருந்தததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

டத்தோ பழனிவேலுவைப் பொருத்தவரை அவர் கறைபடியாத, செயலாற்றக்கூடிய அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்டாலும், அடித்தட்டு மக்கள் நெருங்க முடியாத தலைவராக இருக்கிறார் என்றே தொகுதி மக்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். இதன் காரணமாகவே தேசிய முன்னணி இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனத்தெரிகிறது. ஆனாலும் மஇகா தலைமைத்துவ மாற்றம் சுமூகமாக நடக்கும் வகையில் டத்தோ பழனிவேலுவுக்கு செனட்டர் பதவி அளித்து துணை அமைச்சராக்கவும் தேசிய முன்னணி தயாராக இருப்பதாக தெரிய வருகிறது.

இது குறித்து டத்தோஸ்ரீ சாமிவேலுவிடம் தீவிரமாக கலந்தாலோசித்த பின்னரே பி.கமலநாதனை துணைப் பிரதமர் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் வேட்பாளராக அறிவித்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் இழுப்பறியாக இருந்த வந்த வேட்பாளர் தேர்வு ஒருவழியாக சுமுகமான தீர்வை கண்டுள்ளது.

அதே சமயம் இது போன்ற குழப்பங்கள் ஏதுமில்லாமல் டத்தோ ஸைட் அவர்களை வேட்பாளராக அறிவித்ததிலிருந்தே மக்கள் கூட்டணி இந்த இடைத் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி விட்டது தெரிய வருகிறது. ஆளும் மாநிலத்தில் நடக்கும் தேர்தல் என்பதால் அதிரடி அறிவிப்பு, மக்கள் நல திட்டம் என தொகுதியில் அமர்க்களப்படுத்தி வருகிறது மக்கள் கூட்டணி.

இனி வேட்பாளர்களை கவனிப்போம்:-

தே.மு வேட்பாளர் பி.கமலநாதன்

தொகுதி பக்கம் மஇகாவுக்கு முன்பிருந்த செல்வாக்கு இல்லை என்பதே நிதர்சன உண்மை. அண்மையில் நான் தொகுதி பக்கம் போயிருந்தபோது கூட, இதே நிலையைதான் பார்க்க முடிந்தது. மக்கள் கூடுகின்ற காலை சந்தை, முடிவெட்டு நிலையம், உணவகம், பேருந்து நிலையம், மருத்துவமனை என எல்லா இடங்களிலும் இப்போது இந்த இடைத்தேர்தல் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் டத்தோ பழனிவேலு தேவையில்லை என்பதில் நிறைய பேர் உறுதியாக இருந்ததையும் பார்க்க முடிந்தது.

தேசிய முன்னணியின் மீது மக்களுக்கு அதிருப்தியில்லை என்றாலும் மக்கள் கூட்டணியின் மீது அங்குள்ள மக்கள் நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளனர். தமிழ்ப்பள்ளிக்கு நிலம், நிதியுதவி என்பது தொடங்கி பல்வேறு நல திட்டங்களையும் மக்கள் கூட்டணி தலைமையில் அமைந்துள்ள சிலாங்கூர் மாநில அரசு தாராள மனதுடன் அங்கு செயல்படுத்தி வருகிறது. இது இடைத் தேர்தலையொட்டிய அரசியல் காய்நகர்த்தலாக தென்பட்டாலும்-விமர்சிக்கப்பட்டாலும், முழு வீச்சில் இது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது அங்குள்ள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தே.மு வேட்பாளர் பி.கமலநாதன் நிறுவனம் ஒன்றின் பொது உறவு இயக்குநராக பணியாற்றி வருகிறார். அதோடு மஇகா கட்சியின் தகவல் பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். தேர்தலில் வேட்பாளராக அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறை. வணிக ரீதியிலான பொது உறவுகளை வளர்ப்பதில் அவர் திறமை கொண்டவராக இருந்தாலும் மஇகாவின் தகவல் பிரிவு தலைவராக அவரது சேவை மக்களால் குறிப்பாக இந்தியர்களால் உணரப்பட்டுள்ளதா என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். அந்த பிரிவின் மூலம் அவர் மஇகா சார்ந்த தகவல்களை-மறுமலர்ச்சி திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளாரா என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கும் தேர்தலாக இது விளங்கப் போகிறது.

முற்றிலும் புதிய வேட்பாளராக திகழும் பி.கமலநாதன் முழுக்க-முழுக்க அம்னோவின் பலத்தை நம்பியே தேர்தல் களத்தில் நிற்கப்போகிறார். மஇகாவின் செல்வாக்கு இந்த முறை அவருக்கு எந்த முறையிலும் கை கொடுக்கப் போவதில்லை. தவிர தொகுதி பக்கம் பி.கமலநாதனுக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு அவரது வெற்றிக்கு எந்த அளவுக்கு கைக்கொடுக்கும் என்பது கணிக்க முடியாத ஒரு விஷயமாகவே உள்ளது. மேலும் மஇகா உலுசிலாங்கூர் தொகுதி முன்னாள் துணைத் தலைவர் வி.எஸ் சந்திரன் சுயேட்சை வேட்பாளராக வேறு களமிறங்குகிறார். இதுவும் பி.கமலநாதனின் வெற்றியை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆக, இந்த தேர்தலில் பி.கமலநானின் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவுதான். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் அதை அம்னோவின், குறிப்பாக டத்தோஸ்ரீ நஜீப் – தான்ஸ்ரீ முஹிடின் யாசின்  தலைமைத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகத்தான் கருத முடியுமே தவிர மஇகாவின் மறுமலர்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது.

மக்கள் கூட்டணி வேட்பாளர் டத்தோ ஸைட் இப்ராஹிம்

மக்கள் கூட்டணி சார்பில் இம்முறை டத்தோ ஸைட் இப்ராஹிம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே துன் அப்துல்லா அகமட் படாவி ஆட்சிக் காலத்தின் போது தேசிய முன்னணி சார்பில் அமைச்சராக பதவி வகித்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சர் பதவியிலிருந்தும் பின்னர் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்தும் விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கிளாந்தான் கோத்தா பாரு அம்னோ தொகுதி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற டத்தோ ஸைட், 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது கோத்தா பாரு நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டார். கடுமையான போராட்டத்துக்கு பிறகு அந்தத் தொகுதியில் வெற்றியும் பெற்றார். பாஸ் கட்சியின் கோட்டையான அந்த தொகுதியை, 15 வருடத்திற்கு பிறகு அப்போதுதான் தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 2004ஆம் ஆண்டு நடைப்பெற்ற கோத்தாபாரு அம்னோ தொகுதி தேர்தலில், பண அரசியலில் ஈடுபட்டதாக கூறி டத்தோ ஸைட்டின் உறுப்பினர் நிலையை அம்னோ ஒழுங்கு நடவடிக்கை குழு 3 ஆண்டு காலம் ரத்து செய்தது.

2008ஆம் ஆண்டு துன் அப்துல்லா அகமட் படாவி அவர்களால் டத்தோ ஸைட் மீண்டும் அமைச்சராக்கப்பட்டார். ஆனாலும் 6 மாதங்கள் மட்டுமே அவர் அந்தப் பதவியில் நீடித்தார். உள்நாட்டு தடுப்புக் காவல் சட்டம் மற்றும் லிங்கம் வீடியோ வழக்கு தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளால் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மக்கள் கூட்டணியில் இணைந்த டத்தோ ஸைட் அன்று முதல் இன்று வரை மக்கள் கூட்டணியின் முக்கிய ஜெனரலாக திகழ்ந்து வருகிறார்.

டத்தோ ஸைட் இப்ராஹிமிற்கு நாடு தழுவிய அளவில் நல்ல அறிமுகம் இருக்கிறது. ஆகவே தனிப்பட்ட வகையில், அவர் தன்னை தொகுதி மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்  இல்லை. ஆனாலும் இந்திய வாக்காளர்களைப் பொருத்தவரை அவரை எத்தனைப் பேர் அறிந்து வைத்துள்ளனர் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

இருந்தாலும், மக்கள் கூட்டணி நிறைய இந்திய பிரநிதிகளை கொண்டுள்ள காரணத்தால், இந்த பிரச்னை விரைவில் களையப்பட்டு விடும் என்றும் நம்பலாம். தொகுதி பிரச்னை மட்டுமின்றி தேசிய அளவிலான பிரச்னையிலும் குரல் கொடுக்க கூடியவர் என்ற நம்பிக்கையை மலாய் மற்றும் சீன வாக்காளர்களிடையே டத்தோ ஸைட் பெற்றுள்ளார். தவிர, ஏழை எளிய மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று அவர் சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்திருப்பது தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக, இந்த தேர்தலில் இவரே வெற்றி வாய்ப்பை அதிகம் கொண்ட வேட்பாளராக திகழ்கிறார்.

மொத்தத்தில்…

தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரு தரப்பும் இதுவொரு முக்கியமான இடைத்தேர்தலாக திகழ்கிறது. விரைவில் 13வது பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கின்ற நிலையில் தங்களது பலத்தை பரிசோதித்துக் கொள்ளும் களமாகத்தான் அவை இரண்டும் இந்த பொதுத் தேர்தலை அணுகப் போகின்றன. ஆகவே இருதரப்பிலும் சூடான, பரபரப்பான பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தாராளமாக நம்பலாம்.

இருதரப்புமே வெற்றி பெற கடுமையான போராட்டம் நடத்தினாலும், தேர்தல் கண்ணாமூச்சி காட்டினாலும்… கொளுத்துகின்ற வெயிலில் தன் குடும்பத்தின் அடுத்த வேளை தேவைக்காக வேர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் ஏழையின் கையிலுள்ள அந்த துப்புச் சீட்டில்தான் இருதரப்பில் யாரோ ஒருவருக்கான வெற்றி ஒளிந்துக் கொண்டிருக்கிறது!

PRECIOUS (2009)

1996 ஆம் ஆண்டு Sapphire என்ற எழுத்தாளர் எழுதிய Push என்ற நாவலை தழுவி, இயக்குநர் Lee Daniels  இயக்கிய படம்தான் Precious.

அது 1987ஆம் ஆண்டு. அப்போது Claireece ‘Precious’ Jones (Gabourey Sidibe) க்கு 16 வயதுதான். கனத்த சரீரம், பெரிய உருவம். படிப்பில் கெட்டியெல்லாம் இல்லை. சுமாருக்கும் கீழ்நிலையில் உள்ள மாணவி. ஆனால் அதற்குள் தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள். இதற்கு காரணம் அவள் அப்பா. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய அவள் அம்மா Mary (Mo’Nique) கொடுமைக்காரியாக இருக்கிறாள். Mary க்கு மாதமொரு முறை பொதுநல இலாக்காவிடமிருந்து வருகின்ற காசோலை மட்டுமே மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. Preciousசின் முதல் குழந்தையோ அவளது பாட்டியின் பராமரிப்பில் வளர்கிறது. சுற்றிலும் பிரச்னை, பிணக்குகளோடு வாழும் Preciousக்கு தன்னையொரு பிரபல மாடலாக உருவகப்படுத்திக் கொண்டு கனவுலகில் சஞ்சரிப்பது மட்டுமே நிம்மதி தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. தன்னை சுற்றியுள்ள பிரச்னைகளிலிருந்து மறக்கச் செய்து அவளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள அந்தக் கற்பனைகள் உதவுகிறது.

இந்த நிலையில் இரண்டாவது முறையாக அவள் கருவுற்றிருப்பதை அறியும் பள்ளி நிர்வாகம் அவளை பள்ளியை விட்டு நீக்க முடிவெடுக்கிறது. ஆனாலும் நல்ல மனம் படைத்த அந்த பள்ளியின் முதல்வர், Precious போலவே பிரச்னை கொண்ட மாணவிகள் பயிலும் மாற்றுவழி கல்வி மையம் ஒன்றில் சேருமாறு Preciousக்கு ஆலோசனை தருகிறார். வாழ்க்கை தரத்தை மாற்றிக் கொள்ளும் எண்ணத்தில் Preciousசும் அந்தப் பள்ளியில் இணைகிறாள்.

புதிய ஆசிரியை Blu Rain (Paula Patton)  முயற்சியால் Precious எழுதப் படிக்க கற்றுக் கொள்கிறாள். இதற்கிடையில் அவளுக்கு இரண்டாவது குழந்தையும் பிறக்கிறது. முதல் குழந்தை போல் டவுன் சிண்ட்ரோம் குழந்தையாக இல்லாமல் இந்தக் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது. ஏற்கனவே பொதுநல இலாக்காவிடமிருந்து காசோலை வருவது நின்று போன கடுப்பில் இருக்கும் Mary, கைக்குழந்தையோடு வரும் Precious சையும் அவள் குழந்தையை Abdulலையும் தாக்குகிறாள். பதிலுக்கு திருப்பி தாக்கும் Precious, கைக்குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவளுக்கு அவளது ஆசிரியை Blu Rain தன்னுடைய வீட்டில் தங்க இடம் தருகிறார்.

ஆனால் அதன் பிறகுதான் அவளது வாழ்க்கையில் பெரிய இடி விழுகிறது. அது என்ன? அதை எப்படி Precious எதிர்கொள்ளப் போகிறாள்? அவள் அம்மா Mary யின் நிலை என்ன? கடைசி காட்சிகளில் ஒட்டுமொத்த சோகத்தையும் கொட்டி அதிலும் கொஞ்சம் நம்பிக்கையை விதைத்து, படம் பார்க்கும் நம்மை ரோலர் கோஸ்டரில் ஏற்றி விட்டது போல உணர்ச்சிக் கொந்தளிப்பில் கலைத்து போட்டு விடுகிறார்கள். இறுதி முயற்சியாக Preciousசுடன் இணைந்து வாழும் எண்ணத்தில் அவள் அம்மா Mary பொதுநல அதிகாரியின் முன்பு தன்னுடைய இயலாமையை விவரித்து புலம்புவது… நெஞ்சை நெருடும் காட்சி.

முழுக்க-முழுக்க ஆப்ரிக்க-அமெரிக்க இனத்தவர் வாழ்வியலைச் சார்ந்த கதைக்களம். சில காட்சிகள் அதிர வைக்கின்றன. பல காட்சிகள் கலங்க வைக்கின்றன. படத்தின் கதைக் குறிப்பும், போஸ்டர்களும் இது பெண்களுக்கான படம் என்பது போன்ற தோற்றத்தை உங்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தால்… அதை அப்படியே துடைத்தழித்து விட்டு படத்தை பாருங்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

SHUTTER ISLAND (2010)

படத்தின் பெயரிலேயே Dennis Lehane என்ற எழுத்தாளர் எழுதிய நாவலைத் தழுவி GoodFellas, The Aviator, The Departed போன்ற படங்களை இயக்கிய,  பிரபல இயக்குநர் Martin Scorsese இயக்கிய மர்மம் + திகில் படம்தான் Shutter Island.

1954ஆம் ஆண்டு. Shutter Island தீவில் இருக்கின்ற Ashecliff என்ற மனநல மருத்துவமனையிலிருந்து தப்பித்து போன Rachel Solando  என்ற மனநோயாளியை கண்டுபிடிக்க Teddy Daniels (Leonardo Dicaprio) – Chuck Aule (Mark Ruffalo) என்ற இரு அதிகாரிகள் அந்தத் தீவிற்கு போகிறார்கள். மொத்தம் 66 நோயாளிகள் மட்டுமே இருந்ததாக கணக்கு காட்டப்பட்ட அந்த தீவில், 67 நோயாளிகள் இருந்ததாக அதிகாரிகள் இருவருக்கும் ஒரு துப்பு கிடைக்கிறது. இதனை அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் Dr.John (Ben Kingsley) மறுக்கிறார். கூடவே அந்த தீவில் நடக்கின்ற சம்பவங்களும் மர்மமாக இருக்க, உண்மையை கண்டறியும் வகையில் இரு அதிகாரிகளும் செயல்படுகிறார்கள்.

Danielsக்கு இந்த விசாரணையின் இடையிடையே இரண்டாம் உலகப் போரில் தாம் பங்கேற்றபோது ஏற்பட்ட அனுபவங்களும், இறந்து போன தன் மனைவியின் நினைவுகளும் அடிக்கடி வந்து போகின்றன. இதனால் அவர் அடிக்கடி நிலைதடுமாறுகிறார். திடீரென ஒருநாள் தப்பித்து போன Rachel Solando கிடைத்து விட்டதாக தகவல் வர, அதிகாரிகள் இருவரும் அவளை சென்று காண்கின்றனர். ஆனால் Danielsக்கு மட்டும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக தோன்றுகிறது. அவர் தொடர்ந்து தன் விசாரணையை நடத்துகிறார். அந்த விசாரணைக்கு அவரது பார்ட்னர் Chuck உதவுகிறார்.

ஒரு கட்டத்தில் காணாமல் போன உண்மையான Rachel Solandoவை Daniels கண்டுபிடிக்கிறார். அவர் மூலம் அந்தத் தீவில் நடந்து வரும் ஆராய்ச்சி பற்றியும் அறிந்து கொள்கிறார். இதனிடையே Danielsசுடன் வந்த இன்னொரு அதிகாரியான Chuck காணாமல் போகிறார். அதைப் பற்றி தலைமை மருத்துவரிடம் விசாரிக்கும் போது, Daniels அந்த தீவிற்கு வரும்போது அப்படியொரு நபரை உடன் அழைத்து வரவில்லை என்கிறார் Dr. John. தாம் ஏதோ சதி வலையில் சிக்கிக் கொண்டிருப்பதாக உணரும் Daniels அதன் பிறகு என்ன செய்கிறார்? அந்தத் தீவில் உண்மையில் என்னதான் நடக்கிறது? யார் பக்கம் உண்மை இருக்கிறது? என்பதுதான் பரபரப்பான மீதிப் படம். இறுதிக்காட்சி மட்டும் கொஞ்சம் இழுவையாக இருக்கிறது.

இந்த படத்தின் பலமே அதன் காட்சியமைப்புகள்தான். ஆனால் படத்தின் பாதியிலேயே படத்தின் இறுதியில் நடக்கப் போவது இதுதான் என்ற ஓர் ஊகத்திற்கு வர முடிவது திரைக்கதையில் இருக்கின்ற குறைபாடு. (ஆனால் இதனை எல்லாராலும் உறுதியாக அனுமானிக்க முடியும் என்று சொல்ல முடியாது) மற்றபடி படத்தில் தனியொரு ஆளாக அசத்தியிருப்பவர் Leonardo Dicaprio. காட்சியமைப்பு, நடிப்பு ஆகியவற்றுக்காக  கண்டிப்பாக பார்க்க வேண்டிய திகில் படம்.

UP IN THE AIR (2009)

வாழ்க்கையில் எந்தவிதமான உறவுகளையும் வைத்துக் கொள்ளாத, அந்த உறவுகளால் ஏற்படும் சுமைகளையும் சுமக்க விரும்பாத, தன் விருப்பப்படி தனியனாய் வாழ்ந்த ஒருவன் திடீரென அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டு தனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முற்பட்டால் என்ன நடக்கும்? இந்த கேள்விக்கு விடை தேடி எடுக்கப்பட்ட படம்தான் Up In The Air. இந்தப் படம் Walter Kirn என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். படத்தின் இயக்குநர் Jason Reitman.

இனி படத்தின் கதை,

வாழ்க்கையில் பெரும்பகுதியை ஆகாயத்திலேயே செலவழிக்கின்ற Ryan Bingham (George Clooney) க்கு அடுத்தவர்களின் வேலைக்கு உலை வைப்பதுதான் வேலை. ஒருவர் முகத்தைப் பார்த்து இன்று முதல் உங்கள் சேவை இந்த நிறுவனத்திற்கு தேவையில்லை. அதனால் உங்களை நீக்குகிறோம் என்று சொல்ல வேண்டும். அதையும் அவர்கள் மனம் கோணாமல் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் Ryanனை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் கச்சிதமாக முடித்துத் தருகிறார். ஒரு பக்கம் பிசியாக தன்னுடைய வேலைக்கு ஏற்றாற்போல பறந்து கொண்டிருக்கும் Ryan, ஒருநாள் தன்னைப் போலவே ரெக்கை இல்லாமல் தொழில் நிமித்தமாக பறந்துக் கொண்டிருக்கும் Alex Goran (Vera Farmiga) என்றப் பெண்ணைப் பார்க்கிறார். இருவருக்கும் பார்த்ததும் பற்றிக் கொள்கிறது நெருப்பு. வேறு – வேறு திசை நோக்கி பறந்தாலும் எங்காவது ஒரு புள்ளியில் சந்தித்து உறவைத் தொடருகிறார்கள். இருவருக்குமிடையே எந்தவித கமிட்மெண்டும் இல்லை என்பதுதான் இதில் வசதியாக இருக்கிறது.

இதனிடையே.. உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்ய வேண்டிய வேலையை ஏன் பறந்து-பறந்து செய்ய வேண்டும் என்ற கேள்வியை கேட்டபடி புதிய திட்டத்தோடு Ryan வேலை செய்யும் நிறுவனத்தில் சேருகிறார் Natalie Keener (Anna Kendrick) . இந்த விஷயத்தில் Ryanக்கும் Natalieக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பயணச் செலவு கட்டுப்படும் என்றால் Natalie சொல்லும் இணைய முறையை பயன்படுத்திப் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது என்கிறார் Ryanனின் முதலாளி. இருந்தாலும் Ryan சொல்லும் முறை சரியானதா அல்லது Natalie சொல்லும் முறை சாத்தியமானதா என்பதைக் கண்டறிய இருவரையும் பணிக்கிறார். இரு வேறு எண்ணம் கொண்ட இருவர் ஒன்றாக பயணிக்கிறார்கள்.

இந்த பயணத்தின் இடையே Alexசும் இவர்களுடன் சேர்ந்துக் கொள்கிறார். இப்படி மூவரும் இணைந்திருக்கும் சமயத்தில்  நிகழ்கின்ற சில சம்பவங்களும் நிகழ்ச்சிகளும் Ryan மனதிலும் Natalie மனதிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மாற்றம் அவர்கள் இயல்பை எப்படி புரட்டிப் போடுகிறது, அதற்காக அவர்கள் என்ன விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது என்பதுதான் மீதி படம்.

அழுத்தமான கதை கொண்ட படத்தை சுவாரசியம் குன்றாமல் சொல்வதென்பது மிகப்பெரிய கலை. இயக்குநரும், படத்தின் நாயகன் George Clooneyயும் அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படம் முடியும் போது நிச்சயம் மனம் கனத்துப் போயிருக்கும். பார்க்க வேண்டிய படம்.