Monthly Archives: ஜூலை 2009

TARE ZAMEEN PAR (2007)

உங்களில் மாணவப் பருவத்தைப் பற்றிய ஞாபகங்கள் இல்லாதவர்கள் யாராவது உண்டா? பட்டாம்பூச்சி போல் கவலையின்றி திரிந்த அந்த வசந்த காலங்கள், இனியொரு முறை வாழ்வில் வருமா என்று ஏங்காத இதயம் உண்டா? வாழ்க்கையின் ஏதாவதொரு நொடியில்,  ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நிகழ்காலத்திலிருந்து நம்மை பிரித்தெடுக்கும் அந்த ஈர நினைவுகள் நெஞ்சில் சொட்டு சொட்டாக விழுந்து, இன்பம் நிரப்பி சுகமான சுமையை விட்டுச் செல்லும்.

சில படங்களுக்கு இதுபோன்ற உணர்வை தட்டி எழுப்பக்கூடிய ஆற்றல் உண்டு. உதாரணம் ஆட்டோகிராஃப். அந்தப் படம்,
ஓர் இளைஞனின் வாழ்க்கையில் ஒவ்வொரு பருவத்திலும் நடந்த சம்பவங்களில் ஒரு பகுதியை மட்டும் காட்டிய படம் என்பதால் பள்ளிப் பருவ நினைவுகள் ஒரு கட்டத்துக்கு மேல் நகராமல் அப்படியே வேறொரு பருவத்துக்கு தாவி விடும்.

taare_zameen_par_posterஆனால் சமீபத்தில் நான் பார்த்த Tare Zameen Par என்ற இந்திப் படம் நிச்சயம் நமது ஆழ்மனதில் இருக்கின்ற பழைய ஞாபகத் தந்திகளை மீட்டிச் செல்லும். அதிலும் நம்முடைய ஆசிரியர்களுடனான நமது உறவு குறித்த நினைவுகளையும் கண்முன் நிறுத்தும் என்பது நிச்சயம்.

இஷான் என்ற எட்டு வயது மாணவனுக்கு படிப்பென்றாலே ஆகாது. பள்ளிக்கூடம் செல்வதையே வெறுக்கிறான். பாடத்தில் கவனம் செலுத்த முடியாததால் அனைத்து பாடங்களிலும் குறைவான மதிப்பெண்களே அவனுக்குக் கிடைக்கிறது. தூண்டுகோலாக இருந்து உதவி செய்ய வேண்டிய ஆசிரியர்களே அவனை உருப்படாத மாணவன் என்று சொல்கிறார்கள். சக மாணவர்கள் மத்தியில் நிற்க வைத்து அவமானப்படுத்தும் ஆசிரியர்களை அவன் வெறுக்கிறான். இதற்கிடையில் இஷானின் தனிப்பட்ட உலகமோ மிகவும் பரந்து விரிந்தது. விதவிதமான வர்ணங்கள் மற்றும் பிராணிகள் நிறைந்த குழந்தைப் பருவத்திற்கே உரிய மேஜிக் உலகம் அவனது. அதில்தான் அவன் நிறைவாய் வாழ்கிறான்.

பள்ளியில்தான் அவனுக்கு பிரச்னை என்றால் வீட்டிலும் அவனைப் புரிந்துக் கொள்ளும் மனிதர்கள் இல்லை. வேலை-வேலை என்று ஓடும் அப்பா.. வீட்டு வேலையில் இருந்து எல்லாவற்றையும் தனியொரு பெண்ணாக சமாளிக்கும் அம்மா… அதில் ஆறுதலாய் இருப்பது அண்ணன் மட்டுமே… அவனும் படிப்பு, விளையாட்டு என்று முதல்தர மாணவனாக இருக்கிறான். அதனால் இஷான் செய்யும் சின்ன-சின்ன குறும்புகள் கூட பெரிய பிரச்னையாகிறது, அல்லது பிரச்னையாக்கப்படுகிறது.  ஒரு நாள் பள்ளி பள்ளிக்கு மட்டம் போடும் இஷான் தன் மனம் போன போக்கில் தெருவெல்லாம் அழைந்து திரிந்து விட்டு வீட்டிற்கு வருகிறான். இஷான் பள்ளிக்கு மட்டம் போட்டதைக் கண்டிக்கும் அவனது பெற்றோர்கள் அவனை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்ப முடிவெடுக்கின்றனர். அங்கேயாவது அவன் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டு நல்ல முறையில் படிப்பான் என்று நம்புகின்றனர்.

ஆனால், அங்கே சேர்க்கப்பட்டது முதல், நன்றாக படிக்கும் மற்ற மாணவர்களுடன் கல்வியில் போட்டி போட வேண்டிய சூழலும், குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் தனிமையுணர்வும் அவனை பாதிக்கிறது. அதனால் மற்றவர்களிடம் அந்நியப்பட்டு வாழவே அவன் விரும்புகிறான். அவனது இந்த திடீர் மாற்றம் கல்வியில் மேலும் அவனை பின்தங்க வைக்கிறது. அங்கேயும் மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் இஷான் ஆளாகிறான்.

அப்போதுதான் ராம் ஷங்கர் நிகும்ஃப் என்ற இளம் ஆசிரியர்  இஷான் படிக்கும் பள்ளிக்கு ஓவிய ஆசிரியராTare Zameen 1க வந்து சேர்க்கிறார். நட்பான, ஆதரவான இவரது அணுகுமுறை ஆசிரியர் என்ற பயத்தைப் போக்கி மாணவர்கள் மத்தியில் நல்ல நண்பர் என்ற உணர்வை உண்டாக்குகிறது. ஒருநாள் வகுப்பிற்கு பாடம் நடத்தும் இவர்  எல்லா மாணவர்களையும் ஓவியம் வரையச் சொல்கிறார்.
ஆனால் இஷான்  மட்டும் தனக்கு வழங்கப்பட்ட தாளில் எதையும் வரையாமல் அப்படியே காலியாக விட்டுச் செல்கிறான். இஷானின் நடவடிக்கையை கவனிக்கும் நிகும்ஃப், அவன் ஏதோ பிரச்னையில்
இருப்பதை உணர்கிறார்.

இஷானின் பழைய புத்தகங்களை திருப்பிப் பார்க்கும் நிகும்ஃப், அவன் Dyslexia எனப்படும் ‘புரிந்து படிக்கும் இயலாமை’யில் திண்டாடுவதை புரிந்துக் கொள்கிறார். அதே சமயத்தில் அவனுள் புதிந்து கிடக்கும் ஓவியத் திறமை கண்டும் திகைத்துப் போகிறார்.  அதனை உறுதி செய்துக் கொள்ள அவன் வீட்டிற்கும் போகிறார். இஷானது பெற்றோரிடம் அவன் திறமையான மாணவன்தான் என்றும் அவனை புரிந்துக் கொண்டு உதவி செய்தால் அவனும் மற்ற மாணவர்கள் போல் கல்வியில் பிரகாசிப்பான் என்றும் நிகும்ஃப் கூறுகிறார். மேலும் Dyslexia – ஆல் அவதியுறுவதால் அவன் திறமையான மாணவன் இல்லையென்று கருதிவிடக் கூடாது என்று சொல்கிறார். 

இஷானின் பெற்றோரிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்காததைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வரிடம் பேசும் நிகும்ஃப்,  தனக்கு அவகாசமும் வாய்ப்பும் கொடுத்தால் இஷானை சிறந்த மாணவனாக்கி காட்டுகிறேன் என்று கூறுகிறார்.  நிகும்ஃப்பின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் முதல்வர் அதற்கு சம்மதிக்கிறார்.

இஷானுக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு வகுப்பு நடத்தும்taare-zameen-par 2 நிகும்ஃப், அவனது பலவீனத்தைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் பாடம் நடத்தி அவனையும் சிறந்த மாணவர்கள் வரிசையில் இடம்பெற வைக்கிறார். அதே சமயத்தில் நிகும்ஃப் ஏற்பாட்டில் பள்ளியில் நடக்கும் ஓர் ஓவியப் போட்டியில் தனது ஆசிரியர் நிகும்ஃப்பையே பின்னுக்குத் தள்ளி முதல் பரிசை வெல்கிறான் இஷான் . இலைமறைவில் இருந்த ஒரு நட்சத்திரத்தின் திறமையை அப்போதுதான் அந்த பள்ளியே புரிந்துக் கொள்கிறது.

உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய மிக நுட்பமான கதையை இயக்கி அதில் நிகும்ஃப் பாத்திரம ஏற்று நடித்திருப்பவர் அமீர்கான். அவருடைய பாத்திரத்தை கன கச்சிதமாக செய்திருக்கிறார். படத்தில் அசர வைத்தது 8 வயது சிறுவன் இஷானாக நடித்திருக்கும் டர்ஷில் ஷஃபாரிதான்.

தன்னை எல்லாரும் திட்டுகின்ற ஆத்திரம், தனிமையின் தவிப்பு, அதனால் உருவாகும் வெறுப்பு, தன்னை புரிந்து கொண்ட மனிதனை சுற்றி வரும் குழந்தை மனம், பலபேர் முன்னிலைக்கு வரத் தயங்கும் தடுமாற்றம், நடிப்பில் அமீர்கானை சர்வ சாதாரணமான பின்னுக்குத் தள்ளியிருக்கிறான் டர்ஷில் ஷஃபாரி. 

படத்தில் இறுதிக் காட்சியில் வருகின்ற ஓவியப் போட்டியில் ஒட்டுமொத்தப் பள்ளியும் ஓவியம் வரைவதில் மூழ்கிக் கிடக்க, தன்னுடைய மாணவனை காணவில்லையே என்று நிகும்ஃப்  பரிதவிப்பதும்… அவன் வந்ததும் ஓடிச் சென்று அவனது கையில் ஒரு தாளை கொடுத்து ஓவியம் வரைய அனுப்புவதும் ஓர் ஆசிரியருக்கே உரித்தான குணங்கள்.

இறுதியில் தான் வரைந்ததை ஆசிரியரிடம் கொடுத்து விட்டு, தன் ஆசிரியர் என்ன வரைந்திருக்கிறார் என்று எட்டிப் பார்க்கும் இஷான் அவர் வரைந்த படத்தைப் பார்த்து விட்டு கண்கலங்குவது கவிதை… ஏனெனில் அவன் ஆசிரியர் வரைந்த ஓவியம் இதுதான்……

tzp 3

2007ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம், உலகளாவிய ரீதியில் பலரது பாராட்டைப் பெற்றதோடு நல்ல வசூலையும் கண்டது. 2008 ஆம் ஆண்டுக்கான பிலிம்ஃபேர் விருதையும் இப்படம் வென்றுள்ளது. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

***ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உறவை சொற்களுக்குள் அடக்கி விட முடியாது. அது எல்லையில்லாதது. படத்தைப் பார்த்து முடித்ததும் ஆரம்ப பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு ஆசிரியர்களாக இருந்த ஒவ்வொருவரும் நினைவில் வந்து போனார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் பற்றி இன்னொரு பத்தியில் சொல்கிறேன்…

12 ROUNDS (2009)

12RoundsFBI மற்றும் போலீஸ் துறையே சல்லடை வீசி தேடும் Miles Jakson என்ற தீவிரவாதியை New Orleans போலீஸ் அதிகாரி Danny Fisher கைது செய்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக தீவிரவாதியின் காதலி ஒரு விபத்தில் சிக்கி இறந்து விடுகிறாள்.

அந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து Danny யின் மனைவி Molly கடத்தப்படுகிறாள். தன்னுடைய காதலி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே Danny யின் மனைவியை கடத்தியதாக சொல்லும் Miles Jakson,  அவளை மீட்டுச் செல்ல விரும்பினால் தன்னுடைய 12 சுற்று கொண்ட சவால்களை Danny கடந்து வர வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இந்த 12 சவால்களையும் Danny சமாளித்தாரா? தன்னுடைய மனைவியை உயிருடன் மீட்டாரா? என்பதுதான் படக்கதை.

ஜெட் வேகத்தில் ரெக்கை கட்டி பறந்திருக்க வேண்டிய கதை. ஏனோ தெரியவில்லை, நொண்டுகிறது. 12 சவால்களும் அதை கடந்து வர Danny எடுக்கின்ற முயற்சிகளும் சரியாகவே இருக்கின்றன. இருந்தும் படத்தில் ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது. 

படத்தின் நாயகன் John Cena  நிஜத்தில் மல்யுத்த வீரர் என்றாலும், மற்ற கதாநாயகர்கள் போல் அதிரடியாக பத்து, பதினைந்து பேரை தனியாளாக புரட்டி எடுக்காமல் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையிலேயே நடித்துள்ளார். ஆனாலும்….

அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்ற பரபரப்பை கூட்டி நம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்திருக்க வேண்டிய படம், நமக்குள்ளே ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாமல் ஏமாற்றுகிறது.

படத்தின் மைய ஈர்ப்பாக இருந்திருக்க வேண்டிய 12 சவால்களில் இயக்குநர் கவனம் செலுத்தாமல் போனதற்கு அதற்கு பின்னணியில் இருக்கும் வில்லனின் இன்னொரு திட்டம் என்பது புரிகிறது.ஆனால் அதிலும் அழுத்தமில்லை. படத்தின் இயக்குநர் Renny Harlin.

ANGELS & DEMONS (2009)

angels-demons-poster-2Dan Brown எழுதிய Angels & Demons நாவல் 2000ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் அதற்குப் பின்னர் 2003ஆம் எழுதப்பட்டு 2006ஆம் ஆண்டு திரைப்பட வடிவில் வெளிவந்த The Da Vinci Code உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி நல்ல வசூலையும் வாரிக் கொட்டியதால் இப்போது Angels & Demons நாவலும் Da Vinci Code திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளது.

ஐரோப்பிய அணுசக்தி ஆய்வுக்கூடத்திலிருந்து அணுகுண்டை விட அதிகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய Antimatter கடத்தப்படுகிறது. அதே சமயத்தில் போப்பாண்டவர் இறந்து விட்ட காரணத்தால் புதிய போப்பாண்டவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பும் வாட்டிகனில் நகரில் உயர்நிலை கார்டினல்களால் நடத்தப்படுகிறது. அப்போது வாட்டிகன் நகரே இறந்துபோன முன்னாள் போப் அவர்களது வளர்ப்பு மகனான Camerlengo என்ற பாதிரியின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

 இதனிடையே அடுத்த போப்-ஆக தேர்ந்தெடுக்கப்படலாம் என கருதப்படும் நான்கு கார்டினல்களை 400 வருடமாக இயங்கிவரும் “இலுமினாட்டி’ என்ற ரகசிய இயக்கத்தினர் கடத்தி விடுகின்றனர். (இலுமினாட்டி இயக்கத்தினர் கத்தோலிக்க திருச்சபை மீது எதிர்ப்புணர்வு கொண்டவர்கள்) அதோடு அன்றிரவு எட்டு மணி தொடங்கி நான்கு கார்டினல்களும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் என்றும் முடிவாக வாட்டிகன் நகரே Antimatter வீசி அழிக்கப்படும் என்று தகவல் அனுப்புகின்றனர்.

இந்த சிக்கலான பிரச்னையை தீர்ப்பதற்காக வாட்டிகன், குறியீடு சம்பந்தப்பட விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் Robert Langdon அவர்களது உதவியை நாடுகிறது. 10 வருடமாக தன்னுடைய ஆராய்ச்சிக்காக வாட்டிகன் ஆவணக் காப்பகத்தை பார்வையிட பலமுறை அனுமதி கோரியும் கூட ஒவ்வொரு முறையும் வாட்டிகன் பாராமுகம் காட்டியதை பொருட்படுத்தாது, (காரணம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்) நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அவரும் வாட்டிகனுக்கு உதவ முன்வருகிறார். இவரோடு Antimatter விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற Vittoria Vetra இணைந்துக் கொள்கிறார்.

இதனிடைய கடத்தப்பட்ட 4 கார்டினல்களில் மூன்று கார்டினல்கள் மூன்று வெவ்வேறு தேவாலயங்களில் ‘நிலம்’, ‘காற்று’, ‘நெருப்பு” என்ற வரிசைப்படி கொல்லப்படுகின்றனர். ஒவ்வொரு கார்டினலும் கொல்லப்படுவதற்கு முன்பே அந்தந்த தேவாலயங்கள் இருக்குமிடத்தை Robert Landon கண்டு பிடித்தாலும், அவர்கள் சென்று சேர்வதற்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. இறுதியாக “நீர்” என்ற வரிசையின்படி கொல்லப்படவிருந்த Baggia என்ற கார்டினலை மட்டும் Robert Langdon காப்பாற்றி விடுகிறார். ‘இலுமினாட்டி’யின் அடுத்தக் குறி Camerlengo-வாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் Robert Langdon னும் Vetra வும் அவரைத் தேடி போகின்றனர்.

அங்கே என்ன நடக்கிறது? ஊரையே ஏமாற்றும் வகையில் ஒரு நாடகத்தை நடத்தி அடுத்த போப் ஆக ஆசைப்படுபவன் யார்? அந்த ஏமாற்று வேலையை Robert Langdon எப்படி கண்டு பிடிக்கிறார்? கயவனின் முடிவு என்ன? என்பதுதான் மீதிப் படம். ஒரு புதிர் போட்டியில் கலந்து கொண்ட அனுபவம் படத்தை பார்த்தால் நிச்சயம் கிடைக்கும். கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் வாட்டிகன் நகரை அழிவிலிருந்து காப்பாற்றுவதும், அறிவியல் பெரிதா? மதம் பெரிதா? என்று கேள்வி படத்தில் மறைமுகமாக எழுப்பப்படுவதும் சர்ச்சையை எழுப்பக்கூடிய அம்சங்கள். ஆகவே அது பற்றி அழமாக விவரிக்க தேவையில்லை. Robert Langon ஆக நடித்திருக்கும் Tom Hanks வழக்கம் போலவே அசத்தியிருக்கிறார். Transformers: Revenge of the Fallen  வெளிவரும் வரை 2009ஆம் ஆண்டில் அதிக வசூலை வாரிக் குவித்த படம் என்ற பெருமையை இப்படம் கொண்டிருந்தது. பார்க்க வேண்டிய படம். படத்தின் இயக்குநர் Ron Howard .

THE LAST HOUSE ON THE LEFT (2009)

last_house_on_the_leftJohn (அப்பா) Emma (அம்மா) Mari  (மகள்) மூவரும் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுப்பதற்காக நகரத்தை விட்டு தள்ளியிருக்கும் தங்களுடைய ஏரிக்கரை வீட்டிற்கு வருகிறார்கள். அங்கு வந்ததும் Mari அவர்களது வீட்டிற்கு அருகிலிருக்கும் ஒரு சிறிய பட்டணத்தில் வசிக்கின்ற தன்னுடைய தோழி Paige ஜைப் பார்க்கப் போவதாக சொல்கிறாள். John னும் Emma வும் தங்களது மகளிடம் காரை கொடுத்து இரவுக்குள் திரும்பி வந்து விடும்படி சொல்லி அனுப்பி வைக்கின்றனர். தோழி Paige ஜைச் சந்தித்த Mari தன் அம்மாவை தொலைபேசியில் அழைத்து தோழியுடன் தங்கிக் கொள்ள அனுமதி கேட்கிறாள். அதற்கு Emma மறுத்து விடுகிறார். இரவுக்குள் Mari யை வீடு திரும்புமாறு சொல்கிறார்.

அன்றிரவு அவர்களது ஏரிக்கரை வீட்டிற்கு நால்வர் உதவி கேட்டு வருகின்றனர். அதில் ஒருவனுக்கு தலையில் பலத்த காயம்பட்டிருக்கிறது. John மருத்துவர் என்பதால் அடிபட்டவனுக்கு முதலுதவி அளிக்கிறார். அதோடு அவர்களை தங்களது விருந்தினர் தங்கும் வீட்டிலேயே தங்கிக் கொள்ள அனுமதியும் அளிக்கிறார். 

அவர்கள் உறங்க சென்ற பின்பு, திடீரென ஒரு சத்தம் கேட்டு வெளியில் சென்று பார்க்கும் John, அவரது மகள் Mari அலங்கோல நிலையில் கந்தலாக கிடப்பதைப் பார்க்கிறார். அவளை உள்ளே தூக்கி சென்று முதலுதவி அளிக்கும் அவர் மகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி இருப்பதையும் உணர்ந்துக் கொள்கிறார். அந்த செய்தியை மனைவியிடம் தெரிவிக்கும் சமயத்தில்தான் தங்களது மகளை இந்த நிலைக்கு ஆளாக்கியது உதவி கேட்டு வந்த நால்வரும்தான் என்று தெரியவருகிறது. தங்களது ஒரே மகளை அந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த நால்வரையும் John மற்றும் Emma எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதுதான் மீதிப்படம்.

இந்தப் படத்தில் பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை காட்சி அப்பட்டமாக காட்டப்படுகிறது என்பதால் குடும்பத்தோடு படத்தைப் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. 1972 ஆண்டு இதே பெயரில் வெளிந்த படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். அன்றைய படத்திற்கு திரைக்கதை எழுதிய Wes Craven தான்  இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அம்சம் வில்லன் Krug ஆக நடித்திருக்கும் Garret Dillahunt டின் நடிப்பு. அலட்டிக் கொள்ளாமல் நடித்து நம்மை மிரட்டியிருக்கிறார். (இவர் ஆஸ்கர் விருது வென்ற ‘NO COUNTRY FOR OLD MAN’ என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) மற்றபடி படத்தைப் பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. **டிரைய்லரில் பெரிய எதிர்பார்ப்பை தருகின்ற படங்கள், முழுநீள படமாக பார்க்கின்ற போது ஏமாற்றி விடும். அப்படி ஏமாற்றிய படங்களில் இதுவும் ஒன்று!

‘கதகளி’ நூல் வெளியீட்டு விழா

kathacover

நண்பர் உதயசங்கர் எஸ்பியின் ‘கதகளி’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 12ஆம் தேதி, தேசிய நூலக அரங்கத்தில் காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் நேராக நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கே வந்து விடலாம். நுழைவு இலவசம்.

“இந்த விழாவில் நிறைய இந்தியர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். குறிப்பாக மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்று சமீபத்தில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது சொன்னார். ஓர் இந்தியர் தேசியமொழி இலக்கியத் துறையில் இவ்வளவு தூரம் சாதிப்பது சாதாரண காரியமில்லை. அதற்க்கெல்லாம் அசாத்திய மொழி ஆற்றலும் கற்பனை வளமும் வேண்டும். அப்படியொரு மனிதராக நம்மிடையே வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு சாதனையாளருக்கு மதிப்பளிக்க விரும்பினால் கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு போங்க… மனசார வாழ்த்திவிட்டு வாங்க…!.

நிகழ்ச்சி நிரல் தேவைப்படுகிறவர்கள் http://www.kavyan.blogspot.com என்ற வலைப்பதிவு முகவரியில் அதைக் காணலாம்.