Monthly Archives: ஒக்ரோபர் 2011

7ஆம் அறிவு (2011)

வழக்கம் போலவே கடைசியில் அமைந்திருக்கும் Couple Seat. சனிக்கிழமை இரவு 9.15 காட்சி. ட்ரோபிகானா சிட்டி மால் GSC. பொதுவாக இந்த திரையரங்குக்கு தமிழர்கள் வருவது குறைவு. எல்லாரும் தி கெர்வ், 1 உத்தாமா அல்லது பிஜே ஸ்டேட் பிக் சினிமா திரையரங்குகளை நோக்கியே படையெடுப்பார்கள். இந்த முறை அதிலொரு மாற்றம். 4 நாட்களுக்கான 24 காட்சிகளின் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்திருந்தன. படம் வெளிவந்து 4 நாட்களாகி விட்டது. ஆனாலும் கூட்டம் அலைமோதுகிறது. பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புவதை பார்க்க முடிந்தது. படத்திற்கு கொடுக்கப்பட்ட விளம்பரம் செய்த மாயம் இது. ஆனால் படம் ஏமாற்றவில்லை.  

டாமோ என சீன மக்களால் போற்றி வணங்கப்படுகிற போதிதர்மன் ஒரு தமிழன். இந்த ஒற்றை வரியை தமிழ் சினிமாவிற்கு ஏற்றபடி திரைக்கதை அமைத்து அதை நமக்கெல்லாம் தீபாவளி விருந்தாக பரிமாறி இருக்கிறார் முருகதாஸ்.

 போதிதர்மன் பல்லவ இளவரசன். நோக்கு வர்மம், தற்காப்புக் கலை, மூலிகை மருத்துவத்தில் அவரொரு நிபுணர். சீனாவில் பரவி வரும் ஒரு மர்ம நோய் தமிழ்நாட்டை பீடிக்காமல் இருக்க அவரை சீன தேசத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். (பலர் அவர் ஏன் சீன தேசத்துக்குப் போனார் என புரியாமல் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்) அவரும் அங்கு சென்று அந்த நோயை குணப்படுத்துகிறார். அப்படியே அந்த சீன மக்களுக்கு தற்காப்பு கலையையும் நோக்கு வர்மத்தையும் கற்றுத் தருகிறார். அந்த சீன மக்களின் சுயலநல வேண்டுகோளுக்காக விஷம் கலக்கப்பட்ட உணவை உண்டு அங்கேயே இறந்து சமாதியாகிறார்.

இப்போது போதிதர்மன் கற்றுக் கொடுத்த அதே கலைகளைக் கொண்டு இந்தியாவை தனது கைப்பாவை ஆக்கிக் கொள்ள சீன சக்திகள் முயற்சிக்கின்றன. அவர்களுக்கு சுபா என்றொரு மாணவி போதிதர்மனின் டிஎன்ஏ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. தங்களது திட்டத்திற்கு சுபாவின் ஆராய்ச்சி இடையூறு விளைவிக்கும் என்பதால் அவளை அழிக்க டோன் லீ என்றொரு ஆளை அனுப்பி வைக்கின்றனர். சுபாவையும் இந்தியாவையும் காப்பாற்ற போதிதர்மன் வம்சாவளியில் பிறக்கின்ற அரவிந்த் உதவுகிறார். இதுதான் படத்தின் கதை.

ஒரு தமிழனின் பெருமையை பறைசாற்றும் படமென்றாலும் இடையிடையே ஸ்ருதிஹாசனும் சூர்யாவும் பேசும் சில வசனங்கள் நமக்கு  அறை கொடுக்கின்ற எண்ணத்தை உருவாக்குவதை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக, அடிமைத்தனத்தையே விரும்பி ஏற்றுக் கொள்ளும் பெருமிதம் நமக்கு மட்டும்தான் இருக்கிறதென ஸ்ருதிஹாசனும் தமிழன் போகிற இடங்களில் எல்லாம் அடி வாங்குகிறான் என்று சூர்யா சொல்லும்போதும் வலிக்கிறது.

9 நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனை கொன்றால் அது வீரமல்ல என சூர்யா சொல்லும்போது புலித் தலைவன் மீது ஏற்படுகின்ற அந்த கண நேர மதிப்பு.. அதை விவரிக்க வார்த்தையில்லை.

உண்மைதான். இந்தப் படம் நமது உணர்ச்சிகளை தூண்டி அதன் மூலம் லாபம் பார்க்கும் முயற்சிதான். திரைப்படம் என்பதே லாபத்திற்காக செய்யப்படும் வணிகமே தவிர நம்மை திருத்தவோ அல்லது நமக்கு கருத்து சொல்லவோ உருவாக்கப்படுவதில்லை. அப்படியொரு எண்ணத்தோடு படம் பார்க்க போகிறவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்றும் புரியவில்லை. இளைஞர்கள் சினிமா பார்த்து கெட்டுப் போகிறார்கள் என்பது எந்த அளவுக்கு கேணைத்தனமாக கூற்றோ.. அதுபோலதான் ஒரு படத்தை பார்த்து விட்டு வந்தபின்பு கன்னாபின்னாவென படத்தின் இயக்குநருக்கு அறிவுரையும் ஆலோசனையும் வழங்குவதும்.
 
ஒரு படத்தைப் பற்றி விவாதிக்க என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை. பல கோடிகளை கொட்டி படமெடுக்கும் ஒரு தயாரிப்பாளரை விட, ஒரு கதையை உருவாக்கி அதை சினிமாவாக எடுக்கின்ற இயக்குநரை விட 10-15 ரிங்கிட் கொடுத்து விரும்பியே போய் படம் பார்த்து விட்டு கருத்து வாந்தி எடுக்கின்ற சிலரின் ஒலக சினிமா தேடல் என்னவென புரியவில்லை. ஏன்பா.. நீங்களும் ஓர் ஒலக சினிமா எடுத்துதான் காட்டுங்களேன். அப்போதாவது உங்கள் ஒலக சினிமாவின் புரிதல் என்னவென எங்களுக்கும் விளங்குமல்லவா? சரி, அவர்கள் எதையோ செய்து தொலைக்கட்டும். உலக இயக்கம் நடைபெற இது போன்ற கோமாளிகளும் தேவைப்படுகிறார்கள்.

இந்தப் படம் முடிந்து வெளியே கார் நிறுத்துமிடத்திற்கு வந்தபோது கிட்டத்தட்ட 85 விழுக்காடு சீனர்களே என்னைச் சுற்றி அங்கே இருந்தார்கள். படத்தில் காட்டப்படுவது போல சீனர்களில் பலர் சுயநலவாதிகளே. இது கொஞ்சம் காரமான கூற்றாக தோன்றலாம். ஆனால் போதிவர்மன் கற்றுக் கொடுத்தது போல சீனர்களிடமிருந்து நீங்கள் எதையும் இலகுவாக கற்றுக் கொள்ள முடியாது. நமக்கு தெரியாத ஒன்றை அவர்களிடம் கேட்டால் அதற்கொரு தயாரான பதிலை அவர்கள் வைத்திருப்பார்கள். அது… “தெரியாது”.

சீனர்களோடு வேலை செய்பவர்களுக்கு நான் சொல்வது புரியும். தொழில் நுணுக்கங்களை அவ்வளவு சுலபமாக அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவுதான் நீங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் ரகசியத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள மாட்டார்கள்.

தொழில் விவகாரத்திலும் சீனர்கள் நடந்துக் கொள்ளும் முறை புரிந்துக் கொள்ள முடியாதது. தன் இனத்திற்கு வியாபாரம் கொடுக்கவே அவர்கள் விரும்புவார்கள். ஒரு கடைவரிசையில் 3 வேறு இனத்தவரின் கடைகள் இருந்தால் இதில் சீனர் கடையாக தேடிச் சென்று பொருட்கள் வாங்குவது தொடங்கி, மற்ற வியாபாரிகளை குறைத்து பேசுவது வரை சீனர்களுக்கு நிகர் சீனர்களே. மிக நல்ல சீன முதலாளிகளும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கை மிக சொற்பமே.

இதில் தமிழன் மட்டும்தான் “தவுக்கே, பாஸ்” என இன்னமும் சீனர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சீனர்களை இப்படி முதலாளி – முதலாளி என்றழைப்பதில் தமிழர்களுக்கு அப்படியொரு ஆனந்தம். தவிர தங்களுக்கு தெரிந்த விஷயத்தை யாரும் கேட்பதற்கு முன்பாகவே தம்பட்டம் அடித்து காட்டிக் கொள்வதும் ஏமாளித்தனமாக தன் இனத்தை தவிர மற்ற இனத்தவருக்கு தங்களுக்குத் தெரிந்ததைக் கற்று தருவதிலும் தமிழர்களை மிஞ்ச ஆளில்லை.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என யார் சொன்னது? பெரும்பாலான தமிழனிடமும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது இன்னொரு தமிழன் எப்படி நம்மை விட நன்றாக வாழலாம் என்ற வயிற்றெரிச்சல். இதனால் ஏற்படும் பொறாமையில் ஆயிரம் பிரிவினைகள், கூச்சல்கள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. விளைவு நம்மை பிரநிதிக்க 30 கட்சிகள் 300 தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.

படம் முடிந்து வெளியே வரும்போது இளைஞர் பட்டாளத்திலிருந்து  ஒரு கபோதி கூவியது “என்னவோ பெரிய
..தி தர்மனாம். பேசாம வேலாயுதம் பார்க்க போயிருக்கலாம்”. இதுதான் நமது இளைய தலைமுறையின் லட்சணம்.  இவர்களுக்கு உலக சினிமாவை எடுத்துக் காட்டினால் மட்டும் மாற்றம் வந்துவிடப் போகிறதா? அடப்போங்கடா…

பி.கு: இது எனது 100வது பதிவு.

அதிரப் போகும் அன்ஃபீல்ட்

இன்று சரியாக இரவு 7.40 மணிக்கு உலகத்தின் பெரும்பாலான மக்கள் தொலைக்காட்சி முன் அமர்ந்திருப்பார்கள். மென்செஸ்டர் யுனைட்டெட் –  லீவர்ஃபூல் மோதுகின்ற கால்பந்தாட்டம் என்பதால் பல உணவகங்கள் இன்று பெரிய அளவில் கல்லா கட்டும். வெறும் தேநீர் விற்பனையே பல நூறு ரிங்கிட்களை தொட்டுவிடும். நைட் கிளப்புகள் இன்று உற்சாக கூத்தாடும். எல்லாம் அந்த 90 நிமிட போராட்டத்திற்காக..

இது ஒன்றும் கிண்ணத்தை வெல்ல நடக்கின்ற இறுதிப் போராட்டமல்ல.. ஆனாலும் மென்.யு vs லீவர்ஃபூல் என்றாலே கால்பந்தாட்ட ரசிகர்களுக்கொரு கொண்டாட்டம்தான். நீங்கள் மென்.யு ரசிகராகவோ அல்லது லிவர்ஃபூல் ரசிகர்களாகவோ இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லை.. கால்பந்தாட்ட பிரியராக இருந்தாலே போதும்.. தானாக இந்த ஆட்டத்தை பார்ப்பீர்கள். காரணம்.. இவ்விரு குழுக்களும் பரம வைரிகள்.

ஒரு காலத்தில் ஜரோப்பா-இங்கிலாந்து சாம்பியனாக வலம் வந்த லீவர்ஃபூல் ஒரு பக்கம் தொடை தட்டி நிற்கிறது. லீவர்பூல் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்துக் கொண்டே தன்னை இன்றைய இங்கிலாந்து – ஜரோப்பா வட்டார ஜாம்பவானாக நிலைநிறுத்திக் கொண்ட மென்.யு இன்னொரு பக்கம் மல்லுக் கட்ட காத்திருக்கிறது. இன்று இரவு ஏறக்குறைய 9.30 மணியளவில் இந்த இரு குழுக்களில் யார் உண்மையான பலத்துடன் 11-12 இங்கிலாந்து லீக் கிண்ணத்தை வெல்ல முன்னேறப் பேகிறார்கள் என்று தெரிந்து விடும்.

அதற்கு முன்பதாக ஏற்கனவே இந்த இரண்டு குழுக்களும் மோதிய  இந்த நூற்றாண்டின் ஆட்ட முடிவுகளைப் பார்ப்போம்..

2000-2001 (இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி)

மென்.யு 0 – 1 லிவர்ஃபூல்
மென்.யு 0 – 2 லிவர்ஃபூல்

2001-2002 (இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி)

மென்.யு 0 – 1 லிவர்ஃபூல்
மென்.யு 1 – 3 லிவர்ஃபூல்

2002-2003 (இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி)

மென்.யு 4 – 0 லிவர்ஃபூல்
மென்.யு 2 – 1 லிவர்ஃபூல்

2003-2004 (இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி)

மென்.யு 0 – 1 லிவர்ஃபூல்
மென்.யு 2 – 1 லிவர்ஃபூல்

2004-2005 (இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி)

மென்.யு 1 – 0 லிவர்ஃபூல்
மென்.யு 2 – 1 லிவர்ஃபூல்

2005-2006 (இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி)

மென்.யு 1 – 0 லிவர்ஃபூல்
மென்.யு 0 – 0 லிவர்ஃபூல்

2006-2007 (இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி)

மென்.யு 1 – 0 லிவர்ஃபூல்
மென்.யு 2 – 0 லிவர்ஃபூல்

2007-2008 (இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி)

மென்.யு 3 – 0 லிவர்ஃபூல்
மென்.யு 1 – 0 லிவர்ஃபூல்

2008-2009 (இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி)

மென்.யு 1 – 4 லிவர்ஃபூல்
மென்.யு 1 – 2 லிவர்ஃபூல்

2009-2010 (இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி)

மென்.யு 2 – 1 லிவர்ஃபூல்
மென்.யு 0 – 2 லிவர்ஃபூல்

2010-2011 (இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி)

மென்.யு 3 – 2 லிவர்ஃபூல்
மென்.யு 1 – 3 லிவர்ஃபூல்

இதுவரை மோதிய 22 ஆட்டங்களில் மென்.யு 12 முறையும் லீவர்ஃபூல் 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1 ஆட்டம் சமநிலையில் முடிந்துள்ளது. கடந்த ஆண்டு இவ்விரு குழுவும் மோதிய போது லீவர்ஃபூல் 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் மென்.யுவை வீழ்த்தியது. ஆக, இன்று நடைப்பெறவிருக்கும் இந்த பலப்பரீட்சை மிக கடுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மென்.யு குழுவின் வெய்ன் ரூனி, இன்று தன்னை உலகுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். ஈரோ கால்பந்து போட்டியின் போது சிகப்பு அட்டை பெற்று மூன்று ஆட்ட தடையை அவர் எதிர்நோக்கியுள்ளார். அதே சமயத்தில் சட்டத்திற்கு புறம்பான கால்பந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ரூனியின் தந்தை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

ஆகவே இவ்விறு சம்பவங்களும் லிவர்ஃபூல் ரசிகர்களை வெய்ன் ரூனியின் நம்பிக்கை உடைக்கும் வகையில் கோஷம் எழுப்ப வைக்கும். இதை ரூனி சமாளித்து தன் குழுவை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வாரா என்பதையே பெரும்பாலான கால்பந்து ரசிகர்கள் கவனிக்க போகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் வெல்லப் போவது இன்றைய ஜாம்பவான் மென்.யு வா? இல்லை அன்றைய ஜாம்பவான் லீவர்ஃபூலா? பார்க்கலாம்.

சரி, நீங்கள் யார் பக்கம் என்றா கேட்கிறீர்கள்?

MANCHESTER UNITED… மங்காத்தாடா…!

இதுபோல இன்னும் எத்தனை?

சம்பவம் 1 : மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டிற்கு புதுச் சாயம் பூச விரும்பினார். பொதுவாக இதுபோன்ற வேலைகளுக்கு சீன குத்தகையாளர்களே கிடைப்பார்கள். மணியோ ஒரு இந்திய குத்தகையாளர் கிடைத்தால் அவருக்கு தொழில் கொடுத்த மாதிரி இருக்குமே என்ற நல்லெண்ணம். இணையத்தில் காணப்படுகின்ற மலேசிய இந்தியர் குழுக்களின் வலைப்பின்னல் ஒன்றில் அப்படியொரு சேவையை வழங்குகின்ற நிறுவனத்தை தெரிந்துக் கொண்டார். அவர்களை தொடர்பு கொண்டும் பேசினார். வேலை, அதற்குரிய கூலி எல்லாம் பேசி முடித்தாயிற்று. அவர்களும் ஒரு நல்ல நாள் பார்த்து வேலையை தொடங்கி விட்டார்கள். வேலை முடிந்த கையோடு மணியும் பணத்தை பேசியபடி முழுதாக கொடுத்து விட்டார். பிரச்னை தொடங்கியது அதன் பின்புதான், மணியின் கூற்றுப்படி அவர்கள் செய்த வேலை திருப்தியளிக்கவில்லை. பல இடங்களில் பூசப்பட்ட வர்ண்ணம் திட்டுத் திட்டாக இருந்தது. வேலையிலும் ஒரு சுத்தமின்மை காணப்படவில்லை. வீட்டையே அலங்கோலப்படுத்தி வைத்திருந்தார்கள். மணி அந்த குத்தகையாளரை அழைத்து விபரம் சொன்னார். மறுதரப்பில் இருந்த பதில் அவர் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது. தொழில் கொடுக்கிறேன் என்று சொன்னபோது விழுந்து விழுந்து உபசரித்தவர்கள் இப்போது இப்படி பேசுகிறார்களே என உள்ளுக்குள் குமைந்து போய் விட்டார்.

சம்பவம் 2 : சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  வீட்டில் தண்ணீர்க்குழாய் பிரச்னை. அவரும் இந்தியர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் நண்பர் ஒருவர் பரிந்துரைத்த நபருக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். வேலை செய்ய அழைக்கப்பட்ட நபரோ அதை மாற்ற வேண்டும்.. இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி பல நூறு ரிங்கிட்களை பொருட்கள் வாங்குவதற்கு என வாங்கிக் கொண்டார். அதோடு போனவர்தான். திரும்பி வரவேயில்லை. பலமுறை சந்திரன் அவரது தொலைபேசிக்கு அழைத்தாலும் எடுப்பதில்லை. வேலை செய்ய வந்தவர் செய்த குளறுபடியால் தன் நண்பரோடு சண்டை போடும்படி ஆகிவிட்ட வருத்தத்தில் இருக்கிறார் அவர்.

சம்பவம் 3 : கதிரேசனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  தனது வீட்டின் முன்பு காலியாக இருந்த இடத்தில் அழகான தோட்டத்தை அமைக்க ஆசை. அதற்காக இந்திய குத்தகையாளரை தேடினார். அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் தனது உறவினர் அந்தத் தொழிலை செய்து வருவதாகக் கூறி அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் வீட்டை வந்து பார்த்து வீட்டின் முன்புறத்தில் எந்த வகையான செடிகளை வைத்தால் அழகாக இருக்கும், அதன் விலை, அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்று ஆலோசனை தந்து விட்டுப் போனார். கதிரேசனுக்கு அவரது ஆலோசனை பிடித்து விட, அவரையே வேலையைச் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். பல ஆயிரங்களை செலவழித்து தோட்டத்தை உருவாக்கிய கதிரேசன் இப்போது கடும் விரக்தியில் இருக்கிறார். காரணம் வீட்டில் நடந்த வைபவத்திற்காக வந்திருந்த சீன நண்பர்களிடம் தோட்டத்தை உருவாக்க ஆன செலவு பற்றி கதிரேசன் சொல்லியபோது.. இது போன்ற தோட்டத்தை அமைக்க அவ்வளவு செலவழிக்க தேவையில்லை என்றும் இப்போது அவர் செலவழித்த தொகையில் பாதியளவே அந்த வேலையைச் செய்ய செலவாகியிருக்கும் என்றும் சொல்லி விட்டு போனார்கள். இப்போது கதிரேசன் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக கருதுகிறார்.

மேலே குறிப்பிட்ட 3 பேர் மட்டுமல்ல.. இதைப் படிக்கும் பலருக்கு இது போன்ற அனுபவம் நேர்ந்திருக்கலாம். பொதுவாக சொந்தத் தொழில் செய்யும் நம் இந்தியர்களில் பலர், இதர இந்தியர்கள் தங்களுக்கு வாய்ப்புத் தருவதில்லை என குறைப்பட்டுக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். உண்மையில் வெகு சிலரே தங்களது தொழிலை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செய்கிறார்கள். பலபேர் ஏதோ அரையும் குறையுமாக தொழிலைக் கற்றுக் கொண்டு அதை நேர்த்தியுடன் செய்ய முடியாமல் இப்படி ஏதாவது கோளாறு செய்து வைக்கிறார்கள். தாங்கள் செய்வது தவறு என்று அவர்கள் உணர்வதே இல்லை. மாறாக புகார் சொல்லும் தங்களது வாடிக்கையாளர் சரியில்லை என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்கிறார்கள்.

சொந்த தொழில் செய்வது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் அதிலொரு நேர்மையும் ஒழுங்கும் இருந்தால்தான் நம்மைப் பற்றி மற்றவர்களிடமும் தங்கள் வாடிக்கையாளர்கள் சொல்வார்கள் என அவர்கள் ஒருபோதும் கருதுவதே இல்லை. தங்களது நடவடிக்கை மற்றவர்களை பாதிக்கும் என்ற அக்கறையும் அவர்களிடம் கிடையாது. வேலை கிடைத்தால் போதும், எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்றே பலர் இப்போது நினைக்கிறார்கள்.

இதெல்லாம் சரியா? இன்னொரு இந்தியருக்கு வாய்ப்பு கொடுக்க நினைக்கும் நல்ல மனம் கொண்டவர்களை அலைக்கழிப்பதன் வழி இவர்கள் சாதிக்கப் போவது என்ன? ஒன்றுமில்லை. அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். தவிர இன்னொரு இந்திய குத்தகையாளரை அழைக்கவே அவர்கள் விரும்புவதில்லை. ஒருவரது செயல்களால் மற்றவர்கள் பிழைப்பில் மண் விழ வேண்டுமா? இவ்வாறு பொறுப்புணர்ச்சி இன்றி செயல்படும் இந்திய குத்தகையாளர்களை என்ன செய்வது? எங்கே முறையிடுவது?

உதிர்ந்த ஆப்பிள் – ஸ்டீவ் ஜாப்ஸ்

1980ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை உலகப் பந்தில் இருந்த அத்தனை இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 5ஆம் தேதி காலமாகி விட்டார். இவரது தொழில் போட்டியாளராக கருதப்பட்ட பில்கேட்ஸ் கூட “ஸ்டீவ் ஜாப்ஸ், இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பல தலைமுறைக்கு நினைவுக்கூறப்படும்” என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அப்படி என்ன செய்து விட்டார் ஸ்டீவ்?

 1954ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ நகரில் திருமணமாகாத கல்லூரி காதலர்களுக்கு மகனாக பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், சூழ்நிலை காரணமாக பவுல் ஜாப்ஸ்-பவுலா ஜாப்ஸ் தம்பதியருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார். பொதுவாக அறிவாளிகளுக்கும் பள்ளிப் படிப்புக்கும் ஏழாம் பொருத்தம் போலிருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் கூட படிப்பில் தேறாதவர் என முத்திரை குத்தப்பட்டவர்தான். இருந்தாலும் ஏதோ தாக்குப் பிடித்து கல்லூரி வரை வந்தார். ஆனால் ஸ்டீவ் வோஸ் என்பவருடன் ஏற்பட்ட நட்பு இவரது வாழ்க்கையை வேறொரு தளத்திற்கு, இனிவரும் காலங்களில் சரித்திரமாகப் போகிற உயரத்திற்கு கொண்டு சென்றது.

21 வயதில் கல்லூரி படிப்புக்கு முழுக்கு போட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், தனது நண்பனுடன் சேர்ந்து ஆப்பிள் என்ற நிறுவனத்தை தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் தொடங்கினார். கணிணி மெல்ல – மெல்ல உலகத்திற்கு அறிமுகமாகிக் கொண்டிருந்த தருணத்தில் ஆப்பிள் 1 என்ற கணிணியை அவர்கள் தயாரித்து முடித்திருந்தனர். சில குறைகளோடு இருந்த ஆப்பிள் 1க்கு பதிலாக ஆப்பிள் 2 என்ற கலர் கணிணியை தொடர்ந்து உருவாக்கி அசத்தினார் ஸ்டீவ் வோஸ். இது போதாதா? ஒரு பொருளை எப்படி மக்கள் அலறியடித்துக் கொண்டு வாக்கும்படி செய்வது என்ற சூத்திரத்தை அப்போது உலகிற்கு கற்றுத் தந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆப்பிள் 2, மில்லியன் யூனிட் விற்பனையானது அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனை. பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகள் அறிமுகமான சில மணி நேரத்திற்குள்ளாக இமாயல உயரத்தைத் தொட்டது இரண்டாவது சாதனை. இவையிரண்டும் 24 வயதிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ்சை மில்லியனர் ஆக்கின.

சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஆப்பிள் இப்போது உலகமே வியக்கும் நிறுவனம். ஆயிரக்கணக்கான பங்குதாரர்கள். போதாதா? உடனே பெர்சனல் கம்ப்யூட்டரான மேக் என்ற மேக்கின்டாஷ்சை உருவாக்கத் தொடங்கி விட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். இப்படி வேண்டும், அப்படி வேண்டும் என ஃப்ரேம்-ஃப்ரேமாக செதுக்கி அதனை உருவாக்கினார். இதற்காக தனியொரு குழு இரவுப் பகலாக ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டளைக்கு ஏற்ப ஆப்பிளில் வேலை பார்த்தது.

(ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு இந்த கணிணி சாப்ட்வேர், அப்ளிகேஷன், இத்யாதி இத்யாதி பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியாது. இவருக்கு தெரிந்ததெல்லாம் யாரை எங்கே எப்போது எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதும் எந்தப் பொருளை எப்படி, எவ்வாறு, எப்போது உருவாக்கி சந்தையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே. இந்த விஷயத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ்சை மிஞ்ச வேறு ஆள் கிடையாது)

இருந்தாலும் மேக்கின்டாஷ் மக்கள் வாங்குகிற விலையில் இல்லை என்பது ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு உறைக்காமல் போனது அவரது கெட்ட நேரம். மேக் இனி உலகை ஆளும் என ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையில் ஆப்பிள் 2 விற்பனையே அப்போது ஆப்பிள் நிறுவன உயிர்ப்புக்கு காரணமாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ்சை பொருத்தவரை தான் செய்வதே சரியென நினைக்கக்கூடிய ஆசாமி என்பதால் ஆப்பிள் ஊழியர்கள் அனைவரும் பேசாமல் இருந்து விட்டனர். ஆனால் நிறுவன இயக்குநர் வாரியத்தால், ஸ்டீவ் ஜாப்ஸ் மேக் தயாரிக்கிறேன் பேர்வழி என செய்த அட்டகாசங்களை பொறுக்க முடியவில்லை.

இதற்கிடையில் ஆப்பிள் கம்பெனியில் அவரது இயக்குநர் பதவிக்கு வேட்டு வைக்கும் விதமாக சில சம்பவங்கள் நடந்தது. மனம் வெறுத்து போய், தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகினார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஒரே ஒரு பங்கை (ஷேர்) மட்டும் ஞாபகார்த்தமாக வைத்துக் கொண்டு தனக்கு சொந்தமாக இருந்த ஆப்பிளின் அனைத்து பங்குகளையும் விற்றார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு அவர் “நெக்ஸ்ட்’ என்றொரு நிறுவனத்தை தொடங்கினார்.

புதிதாக பிறந்த நெக்ஸ்ட் நிறுவனம் கல்லூரிகளில் பயன்படுத்தும் விலை மலிவான கணிணிகளை தயாரிக்கப் போகிறது என செய்தி காட்டுத்தீ போல பரவியது. வாயப்பைத் தவறவிட விரும்பாத ஐபிஎம் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ்சுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள அவர் வீட்டு வாசலில் வந்து நின்றது. வழக்கம் போலவே தனது ஸ்பெஷலான குணங்களால் ஐபிஎம் நிறுவனத்தை தலை தெறிக்க ஓட வைத்தார் ஸ்டீவ் ஜாப். அப்படி ஓடிய ஐபிஎம் நேராக பில் கேட்ஸ்சிடம் போய் நின்றதும் அதன் விளைவாக மைக்ரோசாப்ட் பிறந்ததும் தனி வரலாறு.

ஸ்டீவ் ஜாப்ஸ்சின் நெக்ஸ்ட் நிறுவனமோ அடுத்த ஸ்டெப்புக்கு போக முடியாமல் அப்படியே நின்றது. ஸ்டீவ் ஜாப்ஸ்சை நம்பி பணத்தைக் கொட்ட ஆட்கள் தயாராக இருந்தாலும் விற்பதற்கு ஏதாவது சரக்கிருக்க வேண்டுமல்லவா? வெறுமனே கையைப் பிசைந்துக் கொண்டிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். அடுத்து?

இந்தக் கேள்வி ஸ்டீவ் ஜாப்ஸ் மூளையை போட்டுக் குடைய, அனிமேஷன் பக்கம் தன் பார்வையை திருப்பினார் அவர். ஆப்பிளில் இருந்த காலத்திலேயே ஸ்டீவ் ஜாப்ஸ்சிற்கு ‘பிக்ஸார்” என்ற நிறுவனத்தின் மீது ஒரு கண் இருந்தது. அதை வாங்கச் சொல்லியும் அவர் ஆப்பிள் இயக்குநர் வாரியத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தார். ஆனால் ஆப்பிளில் இருந்த காலத்தில் அந்த கனவு நனவாகவில்லை. இப்போது வாய்ப்பு அவரைத் தேடி தானாக வந்தது. “பிக்ஸார்” ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு சொந்தமானது.

நெக்ஸ்ட் போல பிக்ஸாரும் ஸ்டீவ் ஜாப்ஸ்சிற்கு தொடக்கத்தில் பெரிய லாபத்தை வாரி இறைத்துவிடவில்லை. அகலக் கால் வைத்து விட்டோமோ என்றுதான் அவரும் யோசித்தார். ஆனால் பிக்ஸாரின் பலமாக இருந்தது அதன் வசமிருந்த இரண்டு அனிமேஷன் கிராபிக்ஸ் சாப்ட்வேர்ஸ். இவை இரண்டும் டிஸ்னியை பிக்ஸார் பக்கமாக இழுத்து வந்தன. ஆமாம் அனிமேஷன் துறையில் நாளை பிக்ஸார் தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் என டிஸ்னி போட்ட கணக்கு பொய்க்கவில்லை. இரண்டு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய “டாய் ஸ்டோரி” திரைப்படத் துறையில் தனக்கென ஒரு வரலாறை பதிவு செய்தது.

இந்தச் சூட்டோடு சூடாக பிக்ஸாரை பங்குச் சந்தையில் இறக்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். அது அவரை மீண்டும் பில்லியனர் ஆக்கியது. தொடர்ந்து ஆப்பிள் பக்கம் தன் பார்வையை திருப்பினார். என்ன இருந்தாலும் அவர் பார்த்து வளர்த்த நிறுவனமல்லவா? ஸ்டீவ் ஜாப்ஸ்சின் நல்ல நேரம் ஆப்பிள் அப்போது மைக்ரோசாப்ட் – ஐபிஎம் என்ற இரு ஜாம்பாவான்களுக்கு இடையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. ஆப்பிளை தூக்கி நிறுத்த ஏதாவது செய்தே ஆக வேண்டும் என அதன் இயக்குநர் வாரியம் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தபோது தனது நெக்ஸ்ட் சாப்ட்வேரை வாங்கிக் கொள்கிறீர்களா என்று வலை வீசினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அப்படியே நெக்ஸ்ட் நிறுவனத்தை வாங்க ஆப்பிள் முன்வந்தது. நல்ல விலைக்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு அதை விற்றவர் கையில் 1.5 மில்லியன் ஆப்பிள் பங்குகள் இருந்தன. ஒரு காலத்தில் கனத்த மனதுடன் தன்னிடமிருந்த ஆப்பிள் பங்குகள் அனைத்தையும் விற்று விட்டு ஒரே ஒரு பங்கை மட்டும் வைத்திருந்த அதே ஸ்டீவ் ஜாப்ஸ்… மீண்டும் ஆப்பிளின் முக்கிய பங்குதாரர் ஆனார். எங்களோடு இணைந்துக் கொள்கிறீர்களா ஆப்பிள் இயக்குநர் வாரியம் கேட்டபோது வருடம் 1 டாலர் சம்பளத்திற்கு இயக்குநர் வாரியத்தில் நீடிக்கிறேன். தலைவர் பொறுப்பு தேவையில்லை என்று பதில் சொன்னார்.

தொடர்ந்து ஆப்பிளை தூக்கி நிறுத்த வேண்டும். யோசித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். பதிலுக்கு பில்கேட்ஸ் 150 கோடியை ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அடுத்த சில வருடங்களுக்கு ஆப்பிள் தள்ளாடாமல் இருக்க இப்படியொரு ஏற்பாடு. தொடர்ந்து தான் முன்பு செய்த மேக்-கை புது வடிவம் கொடுத்து ஐ-மேக் என்ற பெயரில் வெளியிட்டார். அது மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

 ஆப்பிள் மீண்டும் இன்னொரு ஆட்டத்திற்கு தயாரானது. 99ஆம் ஆண்டு ஐ-புக் என்ற லேப்டாப். ஆப்பிள் லாபத்தில் செயல்படத் தொடங்கியது. 2001ஆம் இசைத்துறையின் தலையெழுத்தை மாற்றி வைக்கும் முதல் முயற்சியாக ஐ-டியூன்ஸ் என்ற சாப்ட்வேரை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அதே ஆண்டு ஐ-பாட் என்ற கையடக்க வாக்மேனை அறிமுகப்படுத்தினார். அது மக்களின் ஏக போக வரவேற்பை பெற்றது. எங்கு பார்த்தாலும் ஐ-போட் மயம். கிட்டத்தட்ட நூறு மில்லியன் ஐ-போட்களை விற்று ஆப்பிள் சாதனை படைத்தது.

இந்த நேரத்தில் அவர் ஆப்பிளின் தலைமை செயலாக்க அதிகாரி ஆகிவிட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். கணிணி, இணையம், இசைத்துறையில் ஆப்பிளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியாகி விட்டது. அடுத்து????? உலகமே ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவிப்பிற்காக காத்துக் கிடந்தது. ஐ-போட் அறிமுகமாகி சரியாக ஆறு வருடங்கள் கழித்து (2007) மீண்டும் மக்கள் முன் தோன்றினார் ஸ்டீவ் ஜாப்ஸ். தொலைத் தொடர்பு துறையின் தலையெழுத்தை மாற்றி வைக்கும் அதிசயம் நிகழ்ந்தது. ஆம், அன்றுதான் ஐ-போனை அறிமுகப்படுத்தினார் அவர். ஐ-போன் விற்பனையைப் பற்றி தனியாகத் சொல்லத் தேவையில்லை. சூப்பர் ஹிட்.

இன்னும் ஏதோ குறைகிறதே என யோசித்திருப்பார் போலிருக்கிறது 2010ஆம் ஆண்டு ஐ-பேட் என்ற கையடக்க கணிணியை ஆப்பிள் வெளியிட்டது. தொடர்ந்து ஐ-பேட்டின் மீது வைக்கப்பட்ட குறைகளை களைந்து ஜ-பேட்2 என்ற மாடலை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்து வைத்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் தலைவராக அவர் கடைசியாக அறிமுகப்படுத்திய சாதனம் அதுதான்.

2004ஆம் ஆண்டிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு தான் கணைய புற்றுநோய்க்கு ஆளாகி உள்ளோம் என்பது தெரியும். இருந்தாலும் அது தனது தனிப்பட்ட விவகாரம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பலமுறை பத்திரிகைகள் இது பற்றி கேள்வி எழுப்பிய போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி முடிந்தவரை அவரது உடல்நலன் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை தட்டிக் கழித்தார். இருந்தாலும் இந்த விஷயத்தை அவரால் 2009ஆம் ஆண்டு வரைதான் மூடி மறைக்க முடிந்தது.

2009 ஆம் ஆண்டு கணைய மாற்று அறுவவை சிகிச்சை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது ஆப்பிள் ஊழியர்களிடம் “நான் எதிர்பார்த்ததை விட என் உடல் மோசமாக இருக்கிறது” என தன்னுடைய உடல் நிலை குறித்து சூசகமாக அறிவித்து விட்டே மருத்துவ விடுப்பில் சென்றார் அவர்.

2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உடல்நலனில் கவனம் செலுத்தப் போவதாக கூறி காலவரம்பற்ற மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். மெலிந்து, சோர்வுற்ற நிலையில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ்சை அதற்கு முன்பாக ஆப்பிள் ஊழியர்கள் கண்டதில்லை. அபாயகரமான என்னமோ நடக்கப் போகிறது என்று மட்டும் அவர்களுக்கு புரிந்தது.

பங்குச் சந்தையிலோ ஆப்பிளின் பங்கு விலைகள் வீழ்ச்சியுற தொடங்கின. தொடர்ந்து அவர் பங்குதாரதாக இருந்த டிஸ்னி போன்ற நிறுவனங்களின் பங்குகளில் சரிவு ஏற்பட்டன. உலகம் ஒரு சோகமாக நாளுக்கு தன்னை தயார் செய்துக் கொள்ளத் தொடங்கியது.

இதோ.. நேற்று முன்தினம் தொடங்கி பத்திரிகை, இணையம், தொலைக்காட்சி என எங்கு திரும்பினாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இரங்கல் செய்திதான். முயற்சி செய், சரியான நேரத்தில் சரியான முடிவை எடு, மக்களின் தேவையைப் புரிந்துக் கொள், மாத்தி யோசி என அவர் நமக்கு விட்டுச் சென்ற அனுபவ பாடங்கள் ஏராளம். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சாதாரண மனிதர்தான். அவர் ஒன்றும் தேவகுமாரன் இல்லை. அவர் பிறக்கும்போது வானில் வால் நட்சத்திரம் எதுவும் தோன்றியதாக யாரும் சொல்லவில்லை. ஆனாலும் அவர் பல கோடி இளைஞர்களின்  கனவு நாயகன் அன்றும் இனி எப்போதும்….!