பட்டாம்பூச்சி விளைவு

“நீ எதையோ செய்து விட்டு போ… எனக்கு அதுபற்றி கவலையில்லை. ஆனால், இனிமேல் உனக்காக பத்து டாலர் கூட செலவழிக்க மாட்டேன்” அப்பா தனது முடிவை சொல்லி விட்டார். இனிமேல் அவரிடம் பேசி பலனில்லை. அவருக்கு இயல்பாகவே மோட்டார் சைக்கிள் மீதும் விமானம் மீதும் பெரிய ஆர்வமோ அக்கறையோ இருந்தது இல்லை. எனவே இது அவரிடமிருந்து எதிர்ப்பார்த்த பதில்தான்.

அம்மா பொறுமைசாலி. மகனின் குணமறிந்த குணவதி. எதற்கும் பிடிகொடுக்காத கணவனைக் கட்டிக் கொண்டு, இத்தனை காலமும் தனது சோகத்தையும் கவலையையும் மறைத்துக் கொண்டு வாழத் தெரிந்தவள். “உனக்கு விமானம் ஓட்ட வரும். கவலைப்படாதே. நீ நிச்சயம் பெரிய விமானியாக வருவாய்” என்று ஆசிர்வதித்து அனுப்பினாள்.

முதல் முறையாக தனது லட்சியத்தை நோக்கி தனியொருவனாக தனது வீட்டை, சொந்த ஊரை விட்டு போகப் போகிறான். பிறந்ததிலிருந்து அவன் தனது சொந்த மாநிலத்தை விட்டு வேறெங்கும் போனதில்லை. ராணுவ பயிற்சி முகாம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தான். பேருந்து நகரத் தொடங்கியதும் ஜன்னலில் காட்சிகள் ஓடத் தொடங்கின. அதோடு சேர்ந்து அவன் எண்ணங்களும் ஓடியது.

சிறு வயதில் மிருகக்காட்சி சாலையில் பயந்து பயந்து எட்டிப் பார்த்த சிங்கத்தை விடவும் அவனுக்கு தினசரி கண்முன் பறக்கின்ற சிட்டுக் குருவி பிடித்திருந்தது. சிங்கம் வலிமையானதுதான். ஆனால் அதுவும் மனிதர்களைப் போல தரையில் நடக்கின்றன. ஆனால் பறவைகள் அப்படியல்ல, பறவைகளுக்கு வானமே உலகம். கோடு போட்டு பிரிக்கப்பட்ட எல்லைகளோ, யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமோ பறவைகளுக்கு இல்லை. பறவைகள் சுதந்திரமானவை, அவைகளின் சிறகுகள் யாரும் தொட முடியாத உயரத்தில் சிறகடிக்கின்றன.

எத்தனையோ முறை தனது பள்ளி மரக் கிளைகளில் ஓய்வெடுக்கும் குருவிகளை பிடிக்க முயற்சி செய்திருக்கிறான். அவை பிடிப்பட்டதே இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து பறந்து விடுகின்றன. பறவை சிறகடித்து பறப்பதுதான் எவ்வளவு அழகாக இருக்கிறது? இடம் – வலம் – மேலே – கீழே என்று எல்லா திசைகளும் அவைகளுக்கு பறக்க ஏதுவானவை. எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்.. தரையில் நின்றுக் கொண்டிருந்தாலும் சரி.. விர்ரென்று அவை சிறகடித்து பறக்கும்போது உலகமே அதன் காலடியில் வீழ்ந்து கிடப்பதாக அவனுக்கு தோன்றும்.

அந்த சுதந்திரம் நமக்கும் வாய்க்க வேண்டுமென்றால் நிச்சயம் விமானியாக வேண்டும். யாருமற்ற பரந்த வெளியில், இந்த உலகத்து மக்களெல்லாம் எறும்புகளாக தெரிகின்ற உயரத்தில் பஞ்சு போல பறப்பதென்பது எவ்வளவு பெரிய சுதந்திரம்? ஆனால் நிச்சயம் பயணிகள் ஏற்றிச் செல்லும் விமானியாகக் கூடாது. ராணுவ விமானியாக வேண்டும். தாக்க வரும் எதிரியின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு நடுவே ஊடுருவி பறப்பதுதான் எவ்வளவு பெரிய சாகசம்?

ஒரு குருவியைப் போல மேலிருந்து கீழாக, கீழிலிருந்து மேலாக பறப்பதெல்லாம் போர் விமானிக்கு மட்டுமே சாத்தியமான விளையாட்டுகள். அந்தரத்தில் நாம் நிகழ்த்துக்கின்ற சித்து வேலைகளைக் கண்டு கீழே இருப்பவர்களுக்கு ஒருவித கிறக்கம் வர வேண்டும். இவன் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.

சிறுவயதில் ஒருமுறை விமானத்தில் பறந்தபடியே சாக்லெட்டுகளை கார் ரேஸ் பார்க்க வந்த ரசிகர்கள் மீது தூவுகின்ற ஒரு விளம்பர யுக்திக்காக அவன் விமானத்தில் பறக்க வேண்டியிருந்தது. அந்த நாள்தான் விமானத்தின் மீதான அவனது காதலை மேலும் வளரச் செய்தது.

நான் இந்த உலகம் எப்போதும் நினைவுக்கூறும் விமானியாக வேண்டும். அதுதான் என் லட்சியம். அதுவே என் இலக்கு. அதுவரை கண் அயரக்கூடாது. பயிற்சி களத்தில் எந்தவொரு சவாலையும் சந்திக்க தயாராகவே இருக்கிறேன். என்னுடைய கனவைத் தொடும் நாள் வெகு தூரத்தில் இல்லை…

0000000000000000000000000

ஜெர்மனி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நாம் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ளவும் இப்படியொரு தாக்குதல் தேவைப்படுகிறது. அதேசமயம் அத்தியாவசிய மூலப்பொருட்களும் எண்ணைய்யும் இப்போதைய நமது அவசர தேவைகள். இந்த இரண்டு வளங்கள் மிகுந்த பகுதிகளான கிழக்கிந்திய தீவுகளையும் தென்கிழக்கு ஆசியாவையும் நாம் உடனே கைப்பற்ற வேண்டும்.

ஆசியாவில் நமது சந்தையை திட்டமிட்டு அழித்து வரும் குள்ளநரித்தனத்துக்கு சாவு மணி அடிக்க வேண்டும். கிழக்கிந்திய தீவுகளையும் தென்கிழக்கு ஆசியாவையும் நம் வசப்படுத்துவதற்கு ஏதுவாக தெற்கு பசிபிக் முழுவதும் மையம் கொண்டிருக்கும் நம் படைகளின் இருப்பை நிலை நிறுத்தவும் இதைச் செய்தே ஆக வேண்டும். எனதருமை வீரர்களே… நாம் இப்போது கை வைக்கப் போவது சாதாரண நாட்டின் மீது அல்ல. அசுர பலம் கொண்ட நாடு. நாடுகளுக்கிடையிலான போரை சாதூரியமாகப் பயன்படுத்தி மூட்டை மூட்டையாய் பணத்தை கஜானாவில் பத்திரமாக நிரப்பிக் கொண்டிருக்கும் நாடு.

இந்த தாக்குதல் மட்டும் பிசுபிசுத்து போனால் பின் விளைவுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். நிச்சயம் இதுவொரு சூதாட்டம்தான். ஆனால், வேறு வழியில்லை ஆடித்தான் பார்க்க வேண்டும். ம்… புறப்படுங்கள்” ராணுவ ஜெனரல் டோஜோ பேச்சில் அவசரம் தெரிந்தது. அதைவிட முக்கியமாக திட்டமிட்ட காரியத்தை தனது போர் விமானப் படை கச்சிதமாக முடித்து வர வேண்டும் என்ற கவலையும் கூடவே இருந்தது.

ராணுவ ஜெனரல் டோஜோ விரும்பியது போலவே பேர்ல் ஹார்பர் தாக்கப்பட்டது.

0000000000000000000000000

அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மரணத்திற்குப் பிறகு புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட ட்ரூமனுக்கு அதோடு தூக்கமும் போய்விட்டது. “ஜப்பான். என்ன மாதிரியான நாடு இது? ஏன் இப்படி பிடிவாதமாக இருக்கிறார்கள்? பேசாமல் சரணடைந்து விடலாமே… ஏன் தேவையில்லாமல் நிபந்தனை அது இதுவென இழுத்தடிக்கிறார்கள், ஆளானப்பட்ட ஜெர்மனியே வீழ்ந்து விட்டது. இவர்களுக்கென்ன?

முன்னாள் அதிபர் இறந்த அன்றைய தினமே புதிய அதிபராக பதவிக்கு வந்துவிட்டால் மட்டும் போதுமா? நம்முடைய பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? இப்படியே உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் ரஷ்யா ஜப்பானை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் போலிருக்கிறதே.. இது நம்முடைய இமேஜை அமெரிக்க மக்களிடையே சிதைத்து சின்னா பின்னமாக்கிவிடுமே…

என்ன ஆள் இவர்… 4 ஆண்டுகளாக தொடர்ந்து மல்லுக்கட்டி வரும் ஜப்பானை அடக்க முடியாத வெத்துவேட்டாக இருக்கிறாரே என்று யாரும் சொல்லி விடக்கூடாது அல்லவா? என்னுடைய பெயரை உலகம் மறக்காதிருக்கவும் உறவாடிக் கொண்டே நம்மோடு பனிப்போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவுக்கு பாடம் கற்றுக் கொடுக்கவும் உலகமே அலறுகின்ற வகையில் பெரிதாக ஏதாவதொன்றை செய்தே ஆக வேண்டும்” என்ற ஒரு உறுதியான முடிவெடுத்த பிறகே அதிபர் ட்ரூமனுக்கு தூக்கம் வந்தது.

அதிபரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் செயலாளர் ஹென்றி சிதிம்சனும் ஜெனரல் க்ரோவ்சும் பிரதமர் ட்ரூமனுக்கு விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடித்துள்ள வெடிகுண்டு பற்றி விளக்கமளித்தார்கள். குறிப்பாக ஜப்பான்தான் அந்த வெடிகுண்டை சோதித்து பார்ப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடமாக இருந்தது என்றும் சொன்னார்கள்.

அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிர ஆலோசனையில் இருந்தார்கள். எங்கே அடிக்கலாம்?

டாக்டர் ஸ்டேர்ன்ஸ் 4 இடங்களை தேர்வு செய்து கொடுத்தார்.

கியோதோ, ஹிரோஷிமா, யோகோஹாமா, கோகுரா. கடைசியில் ஹிரோஷிமாவையும் கியோதோவுக்கு பதிலாக நாகாசாகியையும் தேர்வு செய்தார்கள்.

0000000000000000000000000

உலகம் வியக்கும் போர் விமானியாக வேண்டும் என்ற கனவோடு வந்த எனக்கு, ராணுவத்தில் வெடிகுண்டுகளைச் சுமந்து சென்று எதிரிகளை தாக்கியழிக்கும் விமானப்படை பிரிவில் வேலை கிடைத்தது நிச்சயம் தற்செயலாக நடந்த விஷயமல்ல. கரணம் தப்பினால் மரணம் நிகழ்ந்துவிடும் விளையாட்டுதான். ஆனால் நான் விரும்பி வந்ததும் இது போன்றதொரு அனுபவத்தை தேடித்தான் என்பதால் மரணம் எனக்கொரு பிரச்னையாக தோன்றியதில்லை.

எல்லாவிதமான போர் விமானங்களையும் கையாளும் திறமை எனக்கிருந்தது. புதிதாக உருவாக்கப்படும் போர் விமானத்தை என்னையே பரிசோதித்து பார்க்கச் சொல்லி எனது மேலதிகாரிகள் கேட்டுக் கொள்வது வழக்கம். குறிப்பாக குண்டுகள் வீசி எதிரிகளை தாக்கியழிக்கும் எந்தவொரு விமானமும் நான் பரிசோதிக்காமல் போரில் பங்கு பெற்றதில்லை.

அன்றும் அப்படிதான், புதிய பி-29 வகை குண்டுவீச்சு விமானத்தை அந்தரத்தில் பரிசோதித்து விட்டு கீழிறங்கிய சமயத்தில் என்னை சந்திக்க ஒருவர் வந்தார். “கொலரடா ஸ்பிரிங் தளத்திற்கு நாளை காலை 9 மணிக்குள் வேண்டிய துணிமணிகள், பி-4 பேக் எடுத்துக் கொண்டு வந்து விட வேண்டும். இனி பி-29 பயிற்சிக் களத்தில் வேலையில்லை” என்று அவர் சொன்னார்.

மறுநாள் சொன்ன நேரத்திற்கு கொலரடா ஸ்பிரிங் சென்றபோது, கொலம்பியா பல்கலைகழக அணுவாயுத பேராசிரியர் டாக்டர் நோர்மன் ராம்சே என்னைச் சந்தித்தார். ‘சில ஆண்டுகளாக நாங்கள் மான்ஹாட்டன் புரொஜெக்ட் என்ற பெயரில் அணுவாயுத குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தோம். அது பூர்த்தியாகி விட்டது. அதனால் அதை ஒரு விமானத்தில் பொருத்தி பரீட்சித்து பார்க்க விரும்புகிறோம். விமானப்படை தளபதி அர்னால்ட் கொடுத்த 3 பேர் அடங்கிய பெயர்ப் பட்டியலில் உங்களது பெயரும் இருந்தது. அதனால் உங்களை இந்த பரிசோதனைக்கு பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்” என்று சொன்னார்.

அணுவாயுதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கின்ற அறிவுதான் அப்போது எனக்கு இருந்தது. மற்றபடி ஏதோவொரு பெரிய காரியத்தை செய்து முடிக்க அமெரிக்க அரசு என்னை நாடி வந்திருக்கிறது என்ற செய்தியே எனக்கு பெரிய மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயமாக இருந்ததால், மற்ற எதைப்பற்றியும் சிந்திக்கின்ற ஆவல் எனக்கு ஏற்படவில்லை.

0000000000000000000000000

“ஸ்டாலினிடம் விஷயத்தை சொல்லி விடலாம் என்று நினைக்கிறேன். என்ன நினைக்கிறீர்கள்?” இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் கேட்டார் அமெரிக்க அதிபர்.

“அவரது கருத்தையும் அறிந்து கொள்வது நல்லதுதான். எதற்கும் ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள்” என்றார் சர்ச்சில்.

“ஜப்பான் சரணடைவது போல தெரியவில்லை. அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதெல்லாம் வீண் வேலை. நாங்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வெடிகுண்டு ஒன்றை தயாரித்து இருக்கிறோம். அதை ஜப்பான் மீது போடவிருக்கிறோம்” என்று பட்டும் படாமலும் விஷயத்தை ரஷ்ய அதிபர் ஸ்டாலினிடம் சொன்னார் ட்ரூமன்.

மெல்லிய புன்னகை – சிறு தலையாட்டல் – ஒருரிரு வார்த்தைகள் – சம்பிரதாயமான கைக்குலுக்கலோடு ட்ரூமனுடனான அந்த பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டார் ஸ்டாலின்.

“நான் சொன்னது ஸ்டாலினுக்கு புரிந்தது போலவே தெரியவில்லை.” என்று சர்ச்சிலிடம் கவலை தெரிவித்தபடி அங்கிருந்து கிளம்பினார் ட்ரூமன்.

நாடு திரும்பியதும், ரகசியமாக அணு ஆய்வில் ஈடுபட்டு வரும் தனது நாட்டு விஞ்ஞானிகளுக்கு “சற்று துரிதமாக செயல்படுங்கள்” என்று அவசர குறிப்பு ஒன்றை அனுப்பி வைத்த பிறகே உறங்கப் போனார் ஸ்டாலின்.

அமெரிக்காவின் தாக்குதல் திட்டத்தை அறிந்து கொண்ட அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், புதிய அணுகுண்டை ஜப்பான் மீது பிரயோகிக்க வேண்டாம் என்று அதிபர் ட்ரூமனைக் கேட்டுக் கொண்டார். “கிடைத்திருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி அணுசக்தியின் பலத்தை நிரூபித்து காட்டாவிட்டால் மேற்கொண்டு காங்கிரஸ் சபையிடம் எப்படி அணுசக்தி ஆராய்ச்சிக்கென ஒதுக்கீடு கேட்க முடியும்?. ஏற்கனவே மான்ஹாட்டன் புரொஜெக்ட்கென பல கோடி வெள்ளியை மானியமான பெற்றிருப்பதை மறந்து விட்டீர்களா? ” என்று கவலைப்பட்டார் பிரதமரின் சிறப்பு உதவியாளர் பயர்ன்ஸ்.

“சரி, முடித்து விடலாம்” என்றார் ட்ரூமன்.

000000000000000000000000

“ஜப்பான் ஹிரோஷிமாவில் ஒரு குண்டு வீச வேண்டும். அதன் எடை 20 ஆயிரம் டன். குண்டை வீசியவுடன் உடனடியாக 159 டிகிரி வளைந்து திரும்பி விடுங்கள். இது உங்களை குண்டு வெடிப்பின் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும்” என்று டாக்டர் ராம்சே சொன்னபோது, எனக்கு 2 விஷயங்கள் புரிந்தன. ஒன்று, இந்த 20 ஆயிரம் டன் என்பது ஜரோப்பிய போரில் அமெரிக்க விமானப்படை வீசிய மொத்த குண்டுகளின் எடையைவிட அதிகம். அப்படியென்றால் ஜப்பானில் வீசப்படவிருக்கும் குண்டு நிச்சயம் சக்தி வாய்ந்த குண்டாகவே இருக்க வேண்டும்.

இரண்டாவது, குண்டை வீசியவுடனேயே விமானத்தை 159 டிகிரி வளைந்து திரும்புவதென்பது லேசுபட்ட விஷயமல்ல. காரணம் குண்டை வீசியவுடன் 1500 அடி உயரத்திலேயே அது வெடித்து விடும் வாய்ப்புகளே அதிகம். தேர்ந்த விமானிகள் யாவரும் ஒப்புக்கொள்ளும் விஷயம் இது. அப்படியென்றால் 159 டிகிரியில் விமானத்தை வளைத்து திருப்புவதற்கு எனக்கு 40-42 வினாடிகள் மட்டுமே எஞ்சியிருக்கும். ஆகவே கடுமையான பயிற்சி எடுக்காவிட்டால் என்னால் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்து வர முடியாது.

என் திறமைக்கு விடப்பட்ட சவாலாகவே நான் இதைக் கருதினேன். வேகமும் காற்றழுத்தமும் விமானத்தின் இலக்கை திசை திருப்பலாம். கொஞ்சம் அசந்தாலும் விமானத்தின் வால் பகுதி உடைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. நான் காத்திருந்த தருணம் இதுதான். என்னை உலகுக்கு நிரூபிக்க எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்;ப்பு. நிச்சயம் இதை நழுவ விடக்கூடாது.

தகவல் சொல்லப்பட்ட நாள்முதல் 25 ஆயிரம் அடி உயரத்தில், குண்டை வீசிவிட்டு 159 டிகிரியில் விமானத்தை வளைத்து திருப்புவதற்கு நான் தீவிர பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். சில நாட்களிலேயே என்னால் 40 வினாடிகளில் விமானத்தை 159 டிகிரியில் வளைத்து திருப்ப முடிந்தது.

நான் தயாரானதும் சிறப்பு குண்டை தூக்கிச் செல்வதற்கு ஏதுவாக விமானத்தின் பாகங்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டன. ஏற்கனவே இருந்ததைவிட சக்தி வாய்ந்த இயந்திரம் அதற்கு பொருத்தப்பட்டது. குண்டு வீசுவதற்கு வசதியாக அடிப்பாகத்தில் சிறப்பு கதவு ஒன்றும் செய்யப்பட்டது. எல்லாம் தயாராகியதும், அந்த விமானத்துக்கு செல்லமாக “எனோலா கே” என்று என் தாயாரின் பெயரை சூட்டினேன்.

ஜப்பானில் இருந்து 1500 மைல் தொலைவில் இருந்த மரியானாஸ் தீவிலிருந்து நாங்கள் கிளம்பினோம். ஏற்கனவே இரண்டு விமானங்கள் வானிலை மற்றும் அங்கிருக்கும் சூழலை சரி பார்க்க எங்களுக்கு முன்னரே கிளம்பி போயிருந்தன. எல்லாம் சரியாக இருக்கிறது என்ற தகவல் கிடைத்ததும் நான் கிளம்பினேன்.

நாங்கள் குண்டு வீசுவதற்கு திட்டமிட்டிருந்த இடத்தை நெருங்கியதும், உடனடியாக குண்டை வீசிவிட்டு அங்கிருந்து வளைந்து விட்டோம். ஆனால் கொஞ்ச தூரம் தள்ளி வந்த பின்புதான் அந்த குண்டின் வீரியத்தை உணர முடிந்தது. ஊதாவும் பழுப்பும் கலந்த வர்ணத்தில் ஒரு பெரிய புகை மண்டலம் சுமார் 40,000 ஆயிரம் அடிக்கு எழும்பியது. சற்று முன் கண்களுக்கு தெரிந்த நகரத்தை லாவா குழம்புபோல ஏதோ ஒன்று மறைத்திருந்தது. நெருப்பையும் புகையையும் தவிர வேறு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை.

ஏதோ ஒரு பெரிய பயங்கரமான காரியத்தை செய்து விட்டு வந்திருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் அது குறித்து நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை. எவ்வளவு விரைவாக முடியுமோ.. அவ்வளவு விரைவில் நான் எனது விமான தளத்திற்கு திரும்பி விட வேண்டும் என உத்தரவு போடப்பட்டிருந்தது.

உலகின் முதல் அணுகுண்டை வீசிய விமானி என்று என் பெயரை சரித்திரம் எழுதி வைத்திருப்பது எனக்குத் தெரியும். பலரும் என்னை ஈவு இரக்கமற்ற மனிதன் என்று நினைக்கிறார்கள். என் வாழ்நாள் முழுவதும் அமெரிக்க ராணுவத்தின் போர் விமானியாக பணியாற்ற வேண்டும் என்றுதான் கனவு கண்டேன். என் 29வது வயதில் எனது நாட்டின் நலனுக்காகவே நான் இந்தச் செயலை செய்ய வேண்டியிருந்தது.

அந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் இறந்து போனது உண்மைதான். ஆனால் எதையும் நான் விரும்பி செய்யவில்லை. சொல்லப் போனால், அது என்ன வகையான விளைவுகளை ஏற்படுத்தும் குண்டு என்பது கூட எனக்கு அப்போது தெரியாது. தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவனே ராணுவ வீரன். நான் என் தலைமை வழங்கிய கட்டளையை மட்டுமே நிறைவேற்றினேன். எனவே, ஜப்பான் மீதான அந்தத் தாக்குதல் குறித்து என்னிடம் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை.

நான் ஜப்பானுடனான போரை ஆரம்பித்து வைக்கவில்லை. ஆனால் அதை நான்தான் முடித்து வைத்தேன். ஒருவேளை என் தந்தை விரும்பியதுபோல நான் ஒரு மருத்துவராகி இருந்தாலோ ஜப்பான் பேர்ல் ஹார்பரை தாக்காமல் இருந்திருந்தாலோ அல்லது அமெரிக்கா ‘மான்ஹாட்டன் புரோஜெக்டில்” ஈடுபடாமல் இருந்திருந்தாலோ ஹிரோஷிமா மீது அணுகுண்டு தாக்குதல் நடந்திருக்காது. ஆனால் எல்லாமே நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டவை. நடந்து விட்டது.

பின்னூட்டமொன்றை இடுக