Monthly Archives: ஒக்ரோபர் 2009

A PERFECT GETAWAY (2009)

perfect-getawayDavid Twohy இயக்கிய புதிய படம். த்ரில்லர் படம் என்றார்கள்.  Hawaii தீவின் எழில் கொஞ்சும் அழகை காட்டியிருப்பதை தவிர, இந்தப் படத்தில் மற்ற எதையும் பிரமாதம் என்று சொல்ல முடியாது. காட்சிகள் பலவற்றை முன்கூட்டியே யூகிக்க முடிகிறது. Action நாயகியான Milla Jovovich இந்தப் படத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பதைத் தவிர வேறொன்றையும் குறிப்பிட்டு சொல்ல தோன்றவில்லை. படத்தின் கதை இதுதான்..

புதிதாக திருமணமான Cliff (Steve Zahn) – Cydney (Milla Jovovich) என்ற தம்பதிகள் தங்களது தேனிலவைக் கொண்டாட Hawaii தீவிற்குப் போகிறார்கள். அங்கே போனதும், அவர்களைப் போலவே தேனிலவுக்கு வந்த தம்பதிகள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. கொலைகாரர்களும் ஒரு தம்பதிகள் என்று நம்பப்படுவதால் Cliff-Cydney யாரையும் எளிதில் நம்புவதாக இல்லை.

அந்த சமயத்தில்தான் Kale (Chris Hemsworth) – Cleo (Marley Shelton) மற்றும் Nick (Timothy Olyphant) – Gina (Kiele Sanchez) என்ற தம்பதியரை சந்திக்கின்றனர். தாங்கள் சந்தித்த இரு தம்பதிகள் மீதுமே Cliff-Cydneyக்கு சந்தேகம் இருந்தாலும் Kale-Cleoவை விட பாதுகாப்பு கருதி Nick-Gina தம்பதிகளை நம்பி தங்களது பயணத்தை தொடங்குகிறார்கள். இதற்கிடையில் Kale-Cleoவை அங்கு நடந்த கொலைக்கு காரணமானவர்களாக கருதி போலீஸ் கைது செய்கிறது. கூடவே பிடுங்கப்பட்ட மனித பற்கள் சிலற்றையும்  போலீசார் அவர்களிடமிருந்து கைப்பற்றுகின்றனர்.

கொலையாளிகள் கைதான நிம்மதியுடன் Cliff-Cydney மற்றும் Nick-Gina தம்பதிகள் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள்… ஆனால் அதற்குப் பின்னர்தான் கொலையாளிகள் யார் என்ற மர்ம முடிச்சு அவிழ்கிறது. இதில் Cliff-Cydney மற்றும் Nick-Gina தம்பதிகளின் நிலை என்ன? இவர்களில் யார் உண்மையான கொலையாளி? ஏன் அவர்கள் கொலை செய்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கான பதில்தான் மீதிப்படம்.

Hawaii தீவை ரசிப்பதற்காகவும் Milla Jovovich மாறுப்பட்ட நடிப்பிற்காகவும் படத்தைப் பார்க்கலாம். மற்றபடி…  நிறைய படங்களில் பார்த்தாச்சு!

PUBLIC ENEMIES (2009)

public_enemiesThe Last Of The Mohicans, Heat, The Insider, Ali, Collateral போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் Michael Mannனின் புதிய படம் Public Enemies. 1930-1934ஆம் ஆண்டுகளில் அமெரிக்க காவல் துறைக்கு பெரும் தலைவலியாக விளங்கியவன் வங்கிக் கொள்ளையனான John Dillinger. கொலை கொள்ளை என்று இவன் செய்த குற்றங்களின் பட்டியல் மிக நீளம். அதனாலேயே அவனை நம்பர் 1 சமூக விரோதியென அறிவித்து அமெரிக்க காவல் துறை  சல்லடை போட்டு தேடியது.

அந்த கொள்ளையனின் வாழ்க்கையில் இறுதி சில மாதங்களில் நடந்த சம்பவங்களை கோர்த்து ஒரு அருமையான திரைப்படமாக தந்திருக்கிறார் இயக்குநர் Michael Mann. படம் 1933ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. சிறையிலிருந்து தப்பிக்கும் John Dillinger, முதலில் தனது சகாக்களோடு சேர்ந்து ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கிறான். பின்னர் ஒரு விருந்தில் காதலி Billie Frechetteவை சந்திக்கிறான். அதற்குப் பிறகு காவல் அதிகாரி Melvin Purvisசின் அறிமுகம்.

John Dillinger செய்கின்ற குற்றங்களை பொறுக்க முடியாத போலீஸ் படை தலைவர் J.Edgar Hoover, John Dilligerரைப் பிடிப்பதற்கென்றே Melvin Purvis தலைமையில் ஒரு சிறப்பு குழுவை நியமிக்கிறார். ஆனால் எதற்கும் அஞ்சாத John Dilligerரின் சகாக்களைக் கண்ட Melvin Purvis தனது மேலதிகாரியிடம் மேலும் சில சிறப்பு அதிகாரிகளை தந்துதவுமாறு கேட்கிறார். அவரும் சில அதிகாரிகளை அனுப்பி வைக்கிறார். அவர்கள் John Dillingerரைப் பிடித்தார்களா? John Dillingerரின் காதலி  மற்றும் சகாக்களின் நிலை என்ன? என்பதுதான் மீதிப்படம். கொள்ளைக்காரன் John Dilligerராக Johnny Depp. அவனை கைது செய்ய நியமிக்கப்படும் சிறப்பு அதிகாரி Melvin Purvisஆக Christian Bale. காதலி Billie Frechetteஆக Marion Cotillard நடித்துள்ளனர்.

John Dillingerரை மற்ற கொள்ளையர்களை விட மாறுபட்டவனாக காட்டுவதில் இயக்குநர் வெற்றிப் பெற்றிருக்கிறார். குறிப்பாக, கொடுத்த வாக்கை காப்பாற்றுபவன், நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவன், காதலை மதிப்பவன், எதற்கும் அஞ்சாதவன் என பல காட்சிகள் படத்தில் வந்து போகின்றன.  இது தவிர, காவல் துறைக்கு சவாலாக விளங்கியதன் காரணமாக மக்களின் கவனத்தைப் பெற்ற குற்றவாளியாக வேறு அவன் இருக்கிறான்.

John Dillingerஆக நடித்திருக்கும் Johnny Depp, அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். சிறையிலிருந்து சர்வ சாதாரணமாக தப்பிப்பது, வங்கியை ஷாப்பிங் போவது போல கொள்ளையடிப்பது, விரும்புகின்ற பெண்ணை விடாமல் துரத்தி காதலிப்பது, கைது செய்யப்பட்ட பிறகு பத்திரிகையாளர்களிடம் தெனாவட்டாக பேட்டியளிப்பது, தன் காதலி கைது செய்யப்படுவதைக் கண்டு பொங்கி எழும் அதே சமயத்தில் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு காப்பாற்ற முடியாமல் தவிப்பது, தன்னைப் பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் அலுவலகத்திலேயே நுழைந்து தொலைக்காட்சியில் சீரியஸாக விளையாட்டு போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் அதிகாரிகளிடம் ஸ்கோர் என்னவென்று கேட்பது… வாய்ப்பு கிடைத்த இடத்தில் எல்லாம் Johnny Depp அசத்தியிருக்கிறார். 

காவல் அதிகாரிக்கே உள்ள மிடுக்கு, கம்பீரம் சட்டத்தை மதிக்கும் தன்மை, சமூக விரோதிகளை   சுட்டுக் கொல்லும் தீரமென தனக்குரிய Melvin Purvis பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார் Christian Bale. அதே சமயத்தில் தவறான ஒரு காவல் துறை அதிகாரியால் சித்ரவதை செய்யப்படும் John Dillingerரின் காதலியை கழிவறைக்கு தூக்கிச் செல்லும் காட்சியில் அவரது மனிதாபிமானம் தெரிகிறது.

காதலியாக வரும் Marion Cotillardடுக்கு இந்தப் படத்தில் பெரிய வேடமில்லை. ஆனாலும் காவல் துறையால் கைது செய்யப்பட்ட பிறகு வரும் காட்சிகளில் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். படத்தின் இறுதிக் காட்சி நிச்சயம் அனைவரையும் கலங்க வைக்கும். அதை இங்கே குறிப்பிடுவது நன்றாக இருக்காது. பார்த்து அனுபவிக்க வேண்டிய காட்சி அது. நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

ORPHAN (2009)

orphanHouse Of Wax பட இயக்குநர் Jaume Collet-Serrs சின் புதிய படம். ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது ஆங்கிலேயர்களுக்கு பிடிக்கும். பிரபலங்கள் நிறைய பேர் கூட இப்படி ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். ஆனால் இப்படி தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் பின்னணியை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் எப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கலாம் என்ற கற்பனையின் விளைவுதான் Orphan.

தனது 3வது குழந்தை இறந்து போனதை மறக்க முடியாமல் தவிக்கும் Kate (Vera Farmiga), தன் கணவர் John Coleman (Peter Sarsgaard) சம்மதத்துடன் Esther (Isabelle Fuhrman) என்ற 9 வயதுடைய ரஷ்ய பெண்ணைத் தத்தெடுக்கிறார். இந்த தம்பதியருக்கு ஏற்கனவே Daniel என்ற மகனும் Max என்ற காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணும் இருக்கின்றனர். புதிதாக வீட்டிற்கு வரும் Esther ரை Max சுக்குப் பிடித்தாலும் Daniel அவளைத் தன் தங்கையாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.

Max செய்கின்ற சைகை மொழிகளை சீக்கிரமே கற்றுக் கொள்கிற Esther அவளிடம் மிகுந்த நெருக்கம் காட்டுகிறாள். தவிர தன் சுவீகார தந்தையான John னுடன் நெருங்கி பழகுகிறாள். ஆரம்பத்தில் நன்றாக இருக்கும் Kate மற்றும்  Esther உறவு ஒரு கட்டத்தில் திடீரென தலைகீழானதாக மாறி விடுகிறது.

இதற்கிடையில் ஒரு நாள் Esther ருடன் ஒரே வகுப்பில் படிக்கும் பள்ளித் தோழி ஒருத்தி, சிறுவர்கள் விளையாடும் இடத்தில் கீழே தள்ளி விடப்படுகிறாள். அந்தப் பழி Esther மீது விழுகிறது. Esther ரும் Max சும் இதனை மறுத்தாலும், Kate மட்டும் Esther ரை ஒரு நல்ல மனநல நிபுணரிடம் காட்டலாமென John னிடம் சொல்கிறாள்.

ஆரம்பத்தில் John இந்த யோசனைக்கு மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் சம்மதிக்கிறார். Esther ரை பரிசோதிக்கும் மனநல நிபுணர், Esther ரின் புத்திசாலிதனத்தைக் கண்டு பிரச்னை அவளிடம் இல்லை Kate டிடம்தான் உண்டு என்று சொல்லி விடுகிறார். இதனால் Kate மனமுடைந்து போகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு Kate மற்றும் Esther உறவு இன்னும் மோசமாகிறது.
 
Esther ரை தத்துக் கொடுத்த ஆரவற்றோர் இல்ல பராமரிப்பாளர் Sister Abigail, Esther நடந்துக் கொண்ட விதத்தைக் கேள்விப்பட்டு அவளைச் சந்திக்க வருகிறார். தன்னுடைய பின்னணியைப் பற்றி Sister Abigail விசாரித்து பார்ப்பதாக சொல்வது Esther ரின் கோபத்தைக் கிளறி விடுகிறது. அதனால் Sister Abigail யிலை Esther கொன்று விடுகிறாள்.

அன்று தொடங்கி Esther ரால் அந்த வீட்டில் பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. ஒவ்வொரு  பிரச்னையும் Kate ஆல்
 உருவாகப்பட்டது போல் Esther கதையை திசை திருப்பி விடுகிறாள். அதற்கு Kate டின் குடிப்பழக்கமே காரணம் என்றும் அவர் கணவர் John நம்புகிறார்.

Esther ஏன் இப்படி நடந்துக் கொள்கிறாள்? உண்மையில் அவள் யார்? அவளது நோக்கமென்ன? Kate, Max, John மற்றும் Daniel நிலை என்னவாகிறது? என்பதுதான் பரபரப்பான மீதிப் படம். 

சமீபத்தில் வந்த திகில் பட வரிசையில் இந்த படம் கொடுக்கின்ற உணர்வை வேறு படம் கொடுத்தாக நினைவில்லை. உண்மையிலேயே பயங்கரமானதாக இருக்கிறது. காட்சிக்கு காட்சி Esther செய்யும் அடவாடித்தனங்கள் நம்மை உறைய வைப்பவை. திரைக்கதை வலுவானதாக இருந்தாலும் சில காட்சிகளை முன் கூட்டியே யூகிக்க முடிகிறது. பாலியல் காட்சிகள் கொண்ட படமென்பதால் குடும்பத்தோடு படத்தைப் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. மற்றபடி பார்க்க வேண்டிய படம்.

THE TAKING OF PELHAM 123 (2009)

pelhamposter-bigDenzel Washingtonனும் John Travoltaவும் நடித்திருக்கும் புதிய படம். 1972ஆம் ஆண்டில் இதே பெயரில் வெளிவந்த ஒரு படத்தை ரீ-மேக் செய்திருக்கிறார் படத்தின் இயக்குநரான Tony Scott. த்ரில்லர் படம் என்றார்கள். படம் முடியும் போது அப்படியொன்றும்  பிரமாதம் என்று சொல்லத் தோன்றவில்லை.

அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் இடம்பெற்றுள்ள உரையாடல்களையே அறுவை என்று நினைப்பவர்கள் தயவு செய்து இந்தப் படத்துக்குப் போய் விடாதீர்கள். பாதியிலேயே எழுந்து ஓடி வர  வேண்டியதிருக்கும்.  சரி, படத்தின் கதை?

துப்பாக்கி ஏந்திய நால்வர் Pelham Bay Park ஸ்டேஷனிலிருந்து புறப்படும் ஒரு ரயிலைப் பிணை பிடிக்கிறார்கள். ரயிலில் உள்ள பிரயாணிகளை உயிருடன் மீட்க வேண்டுமென்றால் ஒரு மணி நேரத்துக்குள் 10 மில்லியன் டாலர் பிணைப் பணத்தை தங்களுக்கு தரவேண்டும் என்றும் கேட்கிறார்கள். இந்த பேச்சு வார்த்தை கடத்தல் கும்பல் தலைவன் ரெய்டருக்கும், ரயில் போக்குவரத்து ஃடிராபிக் கண்காணிப்பாளர் கார்பருக்கும் இடையில் நடக்கிறது.

கார்பர் ஏற்கனவே ரயில் வாங்குகின்ற விஷயம் தொடர்பில் ஓர் ஜப்பான் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டை எதிர்நோக்கிய பணியாளர் என்பதால், காவல் துறை அவர் மீதும் தன் சந்தேக கண்ணைப் பதிக்கிறது. இதற்கிடையில் கடத்தல் கும்பல் தலைவன் கார்பரையே பணத்தை எடுத்துக் கொண்டு வந்து தரும்படி பணிக்கிறான்.

பணத்தை எடுத்துக் கொண்டு கார்பர் போனாரா? கடத்தல்காரர்கள் பணத்தோடு தப்பித்தார்களா? கார்பரின் நிலை என்ன? என்பதுதான் மீதிப் படம். Denzel Washingtonனும் John Travoltaவும் தேர்ந்த நடிகர்கள்தான். தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அவர்கள் நிறைவாகவே செய்திருக்கிறார்கள். ஆனாலும் விறுவிறுப்பாக நகர்ந்திருக்க வேண்டிய திரைக்கதை. ஏனோ மெதுவாக நகர்கிறது.

கார்பர் லஞ்சம் வாங்கிய வழங்கில் சிக்கிக் கொண்டிருப்பதை இண்டர்நெட் வாயிலாக அறிந்துக் கொள்ளும் ரெய்டர், துப்பாக்கி முனையில் ஒரு பயணியை வைத்துக் கொண்டு லஞ்சம் வாங்கியதை கார்பர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கும் போது தனக்கு யாரென்றே தெரியாத ஒரு மனிதனின் உயிர் காப்பற்றப்பட வேண்டும் என்ற காரணத்துக்காக கார்பர் லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொள்வதும், அந்தப் பணத்தை தன்னுடைய மகள்களின் கல்லூரி மற்றும் சிறப்பு வகுப்பு கட்டணத்துக்கு பயன்படுத்திக் கொண்டதை விவரிக்கும் காட்சியும்…

நகர மேயர் வீடு வரை தன்னுடைய சிறப்பு பாதுகாப்பிலேயே கொண்டு சென்று விடுவதாக வாய்ப்பு தரும்போது பாதாள ரயிலில் செல்வதுதான் தனக்கு பிடிக்கும் காரணம் அதுதான் எனது தொழில் என அந்த உதவியை  மறுத்துவிட்டு கார்பர் பாதாள ரயிலில் பயணிப்பதும் உண்மையிலேயே ரசிக்கத் தக்க காட்சிகள். மற்றபடி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை.

DRAG ME TO HELL (2009)

drag-me-to-hellEvil Dead 1&2, Spiderman 1,2&3 படங்களை இயக்கிய Sam Raimiயின் புதிய படம். வங்கியில் பணிபுரியும் கிறிஸ்டி ஃப்ரவுன் (Allison Lohman) துணை நிர்வாகியாக பதவி உயர்வு கிடைக்க காத்திருக்கிறார். அந்த சமயத்தில் 2 முறை தவணை வாய்ப்பு கொடுத்தும் தனது வீட்டுக் கடனைச் செலுத்தாத சில்வியா கானுஸ் (Lorna Laver) என்ற வயதான மூதாட்டி கிறிஸ்டியிடம் மேலும் ஒரு வாய்ப்பு தரும்படி கேட்டு வருகிறாள். வங்கியின் நிர்வாகி கிறிஸ்டியையே இந்த விஷயத்தில் முடிவெடுக்குமாறு சொல்கிறார். துணை நிர்வாகியாக வேண்டுமென்றால், சிக்கலான பிரச்னைகளுக்கு தைரியமாக முடிவெடுக்க பழகிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். இதனால் அந்த மூதாட்டிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க கிறிஸ்டி மறுத்து விடுகிறாள். காலில் விழுந்து இறைஞ்சுகின்ற அந்த மூதாட்டியை காவலர்களை அழைத்து வெளியேற்றுமாறு சொல்கிறாள் கிறிஸ்டி. இதைக் கண்டு அந்த மூதாட்டி சினமடைகிறாள். தன்னை கிறிஸ்டி அவமானப்படுத்தி விட்டதாகவும் கூறுகிறாள். கிறிஸ்டி மீது தீராத வெறுப்பு கொள்கிறார்.

அன்றிரவு வேலை முடிந்து திரும்பும் கிறிஸ்டிக்கும் அவளுக்காக காத்திருக்கும் அந்த மூதாட்டிக்கும் பிரச்னையாகிறது. அந்த சண்டையின் முடிவில் மூதாட்டி கிறிஸ்டிக்கு சாபமிடுகிறாள். இந்த பிரச்னையிலிருந்து தப்பித்து காதலனுடன் (Justin Long) வீடு திரும்பும் கிறிஸ்டி, இடையில் இந்திய ஜோதிடர் (Dileep Rao) ஒருவரிடம் தன்னுடைய எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறாள். மூதாட்டி கொடுத்த சாபம் குறித்து எச்சரிக்கும் அந்த ஜோதிடரை கிறிஸ்டி முழுமையாக நம்பாவிட்டாலும் ஏதோ ஒன்று நிகழப் போவதை அவள் உள் மனம் எச்சரிக்கிறது.

அன்று தொடங்கி 3 நாட்களுக்கு கிறிஸ்டியின் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போகிறது. ஏதோவொரு தீய சக்தியின் தாக்குதலுக்கும் கிறிஸ்டி ஆளாகிறாள். வேலை செய்கின்ற இடத்திலும் பதவி உயர்வு கொஞ்சம் தள்ளிப் போடப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் மூலகாரணமான அந்தக் கிழவியைச் சந்திக்கச் செல்லும் கிறிஸ்டி, அவள் இறந்து போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள்.

அந்த சாபத்தால் கிறிஸ்டியின் வாழ்க்கை என்னவாகிறது? கிறிஸ்டி தன்னை சுற்றி வரும் அந்த சாபத்திலிருந்து மீண்டாளா? என்பதுதான் படம். கதை எப்படி இருந்தால் என்ன? திரைக்கதை அமைக்கும் யுக்தியிலேயே ரசிகர்களை கட்டிப் போட்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டுதான் Sam Raimi படத்தை எடுத்திருப்பார் போலிருக்கிறது.

ஸ்பைடர்மேன் படங்களில் பயன்படுத்திய தொழில்நுட்ப விஷயங்கள் எதையும் Sam Raimi இந்த படத்தில் பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. இன்னமும் பழையபடியே நிழல் உருவத்தில் பேயைக் காட்டிக் கொண்டிருக்கிறார். இருந்துங்கூட இறுதி காட்சி வரை படத்தை ரசிக்க முடிகிறது.  இது Spiderman 1,2&3 போன்ற பெரிய பட்ஜெட் படமில்லை என்றாலும் பாக்ஸ் ஆபீஸ் படமாக அமைந்தது.