Category Archives: தன்னம்பிக்கை

THE PURSUIT OF HAPPYNESS (2006)

தொழிலிலும், வாழ்க்கையிலும் தோற்றுப் போன ஒருவன், அதிலிருந்து மீண்டெழுந்து ஒரு முன்னுதாரண மனிதனாக வாழ முடியுமா?

முடியும்!!! என்று தன்னம்பிக்கையோடு நெற்றிப்பொட்டில் அடிதாற்போல் சொல்லியிருக்கும் படம்தான் THE PURSUIT OF HAPPYNESS. வாழ்க்கையில் சோர்வுற்ற அனைவருக்கும் இந்தப் படம் ஓர் உற்சாக டானிக். படத்தின் திரைக்கதையை Chris Gardner என்ற மனிதரின் சுயசரிதையிலிருந்து உருவாக்கி இருக்கிறார்கள். முதலில்…

நிழல்

pursuit_of_happyness_Chris Gardner ஒரு நடுத்தர குடும்பத் தலைவர். Linda என்ற மனைவி, Christopher Gardner Jr. என்ற மகனுடன் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு வாடகை அபார்ட்மெண்ட்டில் வசித்து வருகிறார். தன்னுடைய சேமிப்பை மொத்தமாக முதலீடு செய்து வாங்கிய மருத்துவ ஸ்கேனிங் மெஷின்கள் விற்பனையில் காலை வாரிவிட, வருமானத்துக்கு குடும்பம் திண்டாடத் தொடங்குகிறது.

மாதக் கடைசி பிரச்னைகள் கழுத்தை நெரிக்க… பொருளாதார சுமையைத் தாங்க முடியாத மனைவி, Chris சையும் மகன் Christopher ரையும் தனியே விட்டுவிட்டு நியூயார்க் சென்று விடுகிறாள். ஒரு ஷேர் புரோக்கர் உதவியால் Chrisசுக்கு ஒரு நிறுவனத்தில் ஷேர் புரோக்கர் வேலை கிடைக்கிறது.

சம்பளமில்லாமல் ஆறு மாத டிரெய்னிங் முடித்தபின்தான் அந்த வேலை கிடைக்கும். அதிலும் அந்த டிரெய்னிங்கில் கலந்துக் கொண்டுள்ள 20 பேரில் ஒருவருக்குதான் அந்த வேலை உறுதியாக்கப்படும். நிச்சயமற்ற எதிர்காலமாயினும் நம்பிக்கையுடன் நேர்முக பேட்டிக்கு வர Chris சம்மதிக்கிறார்.

வேலைக்கு போகத் தொடங்கிய சில நாட்களிலேயே தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை கட்ட முடியாமல், சின்ன பட்ஜெட் மோட்டல் ஒன்றில் தங்க வேண்டிய நிலை. ஒரு கட்டத்தில், அதுவும் இல்லாமல் போக ரயில் நிலைய டாய்லெட்டில் மகனுடன் இரவைக் கழிக்க நேர்கிறது. இறுதியில் Chris Gardner வாழ்க்கை என்னவாகிறது? அவரது கஷ்டங்கள் தீர்கிறதா? அவரது வேலை நிரந்தமாகிறதா? தொலைத்து விட்ட மகிழ்ச்சியை அவர் திரும்ப பெற்றாரா? என்பதுதான் மனதை உருக்கும் மீதிப் படம்.

Chris Gardner ஆக Will Smith. அற்புதமான கலைஞன். ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார். வேலை இல்லாமல் திண்டாடுபவன் எப்படி இருப்பான்? பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற பொறுப்புள்ள அப்பா எப்படி இருப்பார்? ஆயிரம் கஷ்டங்கள் சூழ நடமாடினாலும் ஓர் ஆண் வெளியுலகத்திற்கு எப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்வான்? படத்தைப் பாருங்கள். நிச்சயம் அதற்கான பதிலை தன் நடிப்பில், அசைவில், வசன உச்சரிப்பில் காட்டியிருக்கிறார் Will Smith. அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு அவையெல்லாம் பால பாடங்கள்.

உதாரணத்துக்கு ஒரு காட்சி… இரவு தங்க இடமில்லை. பையனிடம் அது குறித்து சொல்ல முடியாது.  டாய்லெட்டில் உறங்கப் போகிறோம் என்று எப்படி மகனிடம் சொல்வது? அதற்காக மகனுடன் ஒரு சின்ன விளையாட்டு விளையாடி, மறைந்து கொள்ள குகையைக் காட்டுகிறேன் என்று டாய்லெட்டுக்குள் கூட்டிச் சென்று, அவன் உறங்க தான் விழித்திருந்து… டாய்லெட் கதவுகள்  தட்டப்படும் போதெல்லாம் வாய்விட்டு அழ முடியாமல் உள்ளுக்குள்ளேயே குமுறி, வெம்பி, சிதறி… படத்தைப் பாருங்கள், நான் சொல்வது புரியும்.

இவர்தான் நடிப்பில் இப்படியென்றால், படத்தில் Will Smith மகனாக வரும் அவரது நிஜமான மகன் Jaden Smith தும் நடிப்பில் 16 அடி பாய்ந்திருக்கிறார். புலிக்குப் பிறந்ததல்லவா அநாயசமாக பாய்கிறது. தந்தையின் நிலையை உணர்ந்து… சாக்லெட் கேட்க கூட தயங்குகின்ற அந்த காட்சி… வசனங்களே இல்லாமல் சில நிமிடங்கள் வருகின்ற காட்சிதான்… ஆனால் அது ஏற்படுத்துகின்ற தாக்கம் அதிகம்.

இப்படி படத்தில் குறிப்பிட்டு சொல்ல நிறைய காட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக  எல்லாவற்றையும் விவரித்தால் படத்தின் சுவாரசியம் குறைந்து விடும். கண்டிப்பாக அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். இந்த அழகான காவியத்தை செதுக்கிய இயக்குநர் Gabriele Muccino.

நிஜம்

chris_gardner_Thomas Turner மற்றும் Betty Jean தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் Chris Gardner. சிறுவயதிலேயே தந்தையைப் பிரிந்து வாழ்ந்த காரணத்தால், வளர்ப்புத் தந்தை Freddie Triplettடின் கொடுமைகளோடு முறையான வழிகாட்டல் இல்லாமலேயே Chris Gardner வளர்ந்தார். ஒரு பிரச்னையில் தாயும் சிறைக்குச் சென்றுவிட, தனது 3 தாய் மாமன்களோடு சேர்ந்து வசிக்கத் தொடங்கினார். அவர்களில் Chris Gardner ரை மிகவும் பாதித்தவர் அவரது இளைய மாமாவான Henry.

தந்தைக்கு அடுத்த இடத்தில் இருந்த அவரும் அடுத்த ஒரு வருடத்திலேயே திடீரென நீரில் மூழ்கி இறந்து போனார். தனது தாயாருக்கு திருமணத்தில் ஏற்பட்ட தோல்வியும், எதிர்பாராத சிறை வாழ்க்கையும் Chris Gardner மனதில் அப்போதே தன்னம்பிக்கையை வளர்த்து விட்டிருந்தன. வாழ்க்கையில் எதிர்படுகின்ற சவால்களை தனியாளாக சமாளிக்கும் மனப்பக்குவத்தை  அவரது தாயாரிடமிருந்துதான் Chris Gardner கற்றுக் கொண்டார். சிறுவயதில் தந்தையில்லாமல் தான் படுகின்ற துன்பங்களை எதிர்காலத்தில் தன் பிள்ளைகளும் அனுபவிக்கக்கூடாது என்று அவர் அப்போதே முடிவு செய்தார்.

மார்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் போன்றோரின் உரைகளை கேட்டு வளர்ந்த Chris Gardner, அப்போது சவுத் ஆப்ரிக்காவிலும் உலகளாவிய ரீதியிலும் நடந்த இனப் பிரிவினைவாதத்தைக் கண்டு மனம் வருந்தினார். வறுமை, சிறார் கொடுமை, பாலியல் துன்புறுத்தல், படிப்பறிவின்மை போன்றவை அவர் மனதை மிகவும் பாதித்தன.

அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்த தனது மாமா Henry, உலகை வலம் வந்த அனுபவத்தை கேட்டு வளர்ந்த Chris Gardnerரும் உயர்கல்விப் படிப்பை முடித்த கையோடு அமெரிக்க கடற்படையில் பணியாற்ற கிளம்பினார். அவருக்கு கடற்படை துறையின் மருத்துவ பிரிவில் வேலை கிடைத்தது. அங்கே பணிபுரிந்த Dr. Robert Ellis ஈடுபட்டிருந்த சில பல்கலைகழக ஆய்வு ஆராய்ச்சிகளில் உதவியாளராக பணியாற்றத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டு கடற்படை வேலையைத் துறந்த Chris Gardner முழு நேரமாக அறுவை சிகிச்சை நிபுணத்துவ பிரிவில் Dr. Robert Ellisசுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அதே will & Chrisசமயத்தில் பல்வேறு மருத்துவ பத்திகைகளுக்கு கட்டுரை எழுதுகின்ற Dr. Rober Ellisசுக்கு துணை ஆசிரியராகவும் செயல்படத் தொடங்கினார்.

1877ஆம் ஆண்டு கணிதவியல் நிபுணரான Sherry Dysonனை மணந்துக் கொண்டார். என்னதான் மருத்துவ துறையில் பரந்த அனுபவம் இருந்தாலும், தானொரு தகுதி வாய்ந்த மருத்துவர் இல்லை என்பதை உணர்ந்த Chris Gardner, மருத்துவ துறை சார்ந்து படிக்கும் தன் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு வேறு துறையில் ஈடுபட முடிவு செய்தார். அதனை தனது 26வது பிறந்தநாளின் போது மனைவி Sherry Dysonனிடமும் தெரிவித்தார்.

அதுவே இருவரது வாழ்க்கையிலும் பிரச்னைகள் ஏற்பட காரணமானது. அந்த சமயத்தில்தான் பல் மருத்துவ துறை மாணவியான Jackie Madinaவுடன் தனது உறவை வளர்த்துக் கொள்ள தொடங்கினார் Chris Gardner. மூன்று வருடத்திற்குப் பிறகு கர்ப்பிணியாக இருந்த Jackie Madinaவுடன் சேர்ந்து வசிக்கத் தொடங்கினார். 1981ஆம் ஆண்டு அவரது மகன் Christopher Medina Gardner பிறந்தார். அப்போது Chris Gardner வருடத்திற்கு எட்டு நூறு டாலர் வருமானம் கிடைக்கக்கூடிய சாதாரண ஆய்வுக்கூட உதவியாளர் வேலையையே பார்த்து வந்தார். அவரது இந்த வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. நான்கு வருடத்திற்கு பிறகு Chris Gardner, மருந்து மாத்திரைகள் விற்கும் சேல்ஸ்மேன் வேலையில் சேர்ந்தார். அது குடும்ப பிரச்னைகளை சமாளிக்க ஓரளவுக்கு உதவியது.

1986ஆம் ஆண்டுடன் Sherry Dysonனுடனான தனது ஒன்பது வருட இல்லற வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் Chris Gardner. ஒரு முறை வேலைக்காக சான் பிரான்சிஸ்கோ சென்ற அவர், ஃபெர்ராரி காரில் வந்து இறங்கிய ஒரு மனிதரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதுதான் Chris Gardner வாழ்க்கையை திசை திருப்பியது. Bob Bridges என்ற அந்த மனிதர்தான் Chris Gardnerருக்கு ஃபைனான்ஸ் பற்றி விளக்கினார். அதோடு ஃபைனான்ஸ் துறையில் செயல்பட்டு வந்த ஷேர் மார்க்கெட் நிறுவனங்களின் நிர்வாகிகளையும் Chris Garnerருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இப்படி கிடைத்த அறிமுகத்தை தொடர்ந்து, Chris Gardner தனது சேல்ஸ்மேன் வேலையை பாதியிலேயே கிடப்பில் போட்டு விட்டு ஷேர் மார்க்கெட் குறித்த நுணுக்கங்களை கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

Chris Gardnerரின் ஆர்வத்தைக் கண்ட ஒரு நிர்வாகி அவரை தன்னுடைய நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்த முடிவு செய்தார். அதே சமயத்தில், அவரது குடும்ப வாழ்கையிலும் விரிசல் விழத் தொடங்கியது. கார் பார்க்கிங் அபராதத்தை கட்ட இயலாத காரணத்தால், அவருக்கு ஒரு நாள் இரவு முழுக்க சிறையில் கழிக்கும் தண்டனை  விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து வீடு bookதிரும்பிய Chris Gardner, வீட்டில் தன் மனைவியும் மகனும் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டார். அதோடு தன்னுடைய துணிமணிகள் உட்பட அனைத்தும் பொருட்களும் அங்கிருந்து காணாமல் போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். வேலைக்கு சென்ற இடத்திலோ அவரை நியமித்த நிர்வாகி சென்ற வாரமே வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக சொல்லி விட்டார்கள்.

முறையான கல்வி, அனுபவம் போன்ற அடிப்படை தகுதிகள் இல்லாமல், கைது செய்யப்படுவதற்கு முன்னர் போட்டிருந்த சட்டையோடு Dean Witter Reynolds’ என்ற நிறுவனம் நடத்திய நேர்முக தேர்வில் அவர் கலந்துக் கொண்டார். அந்த நேர்முக தேர்வுக்குக் கூட, Bob Bridges பரிந்துரைக்குப் பின்னரே அழைத்திருந்தனர். அங்கே அவருக்கு டிரைனிங் அடிப்படையிலான வேலை வழங்கப்பட்டது. அதற்காக மாதந்தோறும் 1000 டாலர் உதவி நிதி கொடுக்கப்பட்டது. அந்த வருமானம் அவருக்குப் போதுமானதாக இல்லை. தனது நிலையை உயர்த்திக் கொள்ள கடுமையாக உழைத்த Chris Gardner, ஒரு நாளைக்கு 200 வாடிக்கையாளர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசுவது என்று தனக்குத்தானே ஓர் இலக்கை வகுத்துக் கொண்டார்.

நான்கு மாதம் கழித்து திரும்பிய அவரது இரண்டாவது மனைவி Jackie, அவரது மகன் Christopherரை அவரிடமே விட்டு விட்டுப் போய்விட நிலைமை இன்னும் மேசமானது. திருமணமாகாத இளஞர்களுடன் தங்கியிருந்த வீட்டில் மகனை சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். அதற்காக மகனை ரோட்டில் விட்டு விட முடியாது. என்ன நடந்தாலும், ஏது நடந்தாலும்  தன்னைப் போல் தந்தையால் கைவிடப்பட்ட நிலை தன் மகனுக்கும் நேரக்கூடாது என்பதில் மட்டும் Chris Gardner உறுதியாக இருந்தார். என்ன செய்வதென யோசித்தார். இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது, தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்குமளவுக்கு  பணத்தைச் சேமிக்கும் வரை, கிடைக்கின்ற இடத்தில் உறங்குவது. முடிந்தால் தினமும் உறங்குகின்ற இடத்தை வேறு வேறானதாக தேர்வு செய்துக் கொள்வது. பகலில் மகனை பராமரிப்பாளர் வீட்டில் விட்டு விடுவதால் பிரச்னையில்லை. இரவில்தானே… சமாளித்துக் கொள்ளலாம் என்ற குருட்டு தைரியத்துடன் மீண்டுமொரு வாழக்கைப் போராட்டத்துக்கு தயாரானார்.

Chris Gardnerரின் தொழில் பக்தியைக் கண்ட நிறுவனம், அவரை கிட்டத்தட்ட மேற்பார்வையாளர் நிலைக்கு உயர்த்தியது. இந்த முறை அதிர்ஷ்டம் Chris Gardner பக்கம் இருந்தது. ஒரு வருடத்திலேயே தனியொரு வீட்டை வாடகைக்கு பிடித்த Chris Gardner, தன் மகனுடன் அங்கே நிரந்தமாக குடியேறினார். அதோடு, அவர் பார்த்து வந்த வேலையும் அவருக்கே நிரந்தரமாக்கி விட்டார்கள். வீடு இல்லாமல் ஒரு வருடம் தெருவோரங்களிலும், பூங்காக்களிலும், ரயில் நிலைய டாய்லெட்டுகளிலும் அலைந்து திரிந்த அவர்,  இறுதியாக இரவு நேரங்களில் நிம்மதியான தூங்கத் தொடங்கினார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு வருடமாக Chris Gardner தங்க இடமில்லாமல் அலைந்தது பற்றி அவர் அலுவலக நண்பர்கள் யாருமே உணராமல் இருந்ததுதான். அந்த அளவுக்கு தன்னுடைய கஷ்டங்களை மறைத்துக் கொண்டு ஜாலியான மனிதனாகவே தன்னைக் காட்டிக் கொண்டார் Chris Gardner.

1987ஆம் ஆண்டு பத்தாயிரம் வெள்ளி முதலீட்டில், Gardner Rich & Co என்ற பெயரில் அவர் வீட்டு மாடியிலேயே சாப்பாட்டு மேசையை விட இரண்டு மடங்கு பெரிதான ஒரு மேசையுடன் செயல்பட ஆரம்பித்த அவரது அலுவலகம், அடுத்த பத்தொன்பது வருடங்களில் (2006) Christopher Gardner International Holdings என்ற பெயர் மாற்றம் கண்டு நியூயார்க், சிக்காகோ, சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் கிளை பரப்பி, ஒரு மாபெரும் ஆலமரமாக வளர்ந்து நின்றது ஒரு தனி வெற்றி வரலாறு! Chris Gardner இன்றொரு பில்லியனர்.

chrisஇவரது வாழ்க்கை மற்றவர்களுக்கு வழிகாட்ட கூடும் என்பதால் சிஎன்என், பிபிசி மற்றும் ஃபோக்ஸ் சேனல் போன்ற செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி தலைகாட்டும் மனிதராக Chris Gardner மாறியுள்ளார். தவிர, இவர் எழுதிய சுயசரிதை மட்டும் இதுவரை பல்லாயிரக்கணக்கான காப்பிகள் விற்று முடிந்திருக்கின்றன. மொத்தம் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அது வெளிவந்துள்ளது. தங்குவதற்கு இடமில்லாமல் அலைந்து திரிந்த காலத்தில் தனக்கு ஆதரவளித்த ஒரு தேவாலயம் உட்பட பல சமூக நல அமைப்புகளுக்கு Chris Gardner இன்றளவும் உதவி வருகிறார்.

Chris Gardnerரின் வாழ்க்கையை பார்க்கும்போது… தன்னம்பிக்கை என்ற வார்த்தைக்கு எதிர்காலத்தில் Chris Gardner என அகராதியில் அர்த்தம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு அவர் தகுதியானவரும் கூட!