Monthly Archives: ஏப்ரல் 2009

சொல்லாத சொல்…!

நினைவலையின்
விசும்பலில்
நுரை போல்
நாக்கின் நுனி
தொட்டு கரைகிறது….

இன்றா…
நாளையா…
அடுத்த வாரமா…
அடுத்த வருடமா…?

பிரசவத்திற்கு காத்திருக்கும்
தாய்க்கு ஈடாக

நினைவுக்கு வர மறுக்கும்
வார்த்தைக்கான
ஒவ்வொரு நிமிடக்
காத்திருப்பு…

யாருக்கோ காத்திருக்கும்
வார்த்தைக்குதான் தெரியும்…

நான் வேட்டைக்காரனா…
பலி ஆடா என்று…

புத்தியின்
மத்தியில் சன்னமாய்
சிக்கிக் கிடக்கிறது…

சொல்லாத சொல் ஒன்று…!

AWAKE (2OO7)

awake1ஒரு பணக்கார இளைஞன் (Hayden Christensen), அவனுக்கு இதயத்தில் பிரச்னை. தன் அம்மாவின் (Lena Olin) செயலாளினியாக வேலை செய்யும் பெண்ணின் (Jesicca Alba) மீது அவனுக்கு காதல் ஏற்படுகிறது. அம்மாவின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொள்கிறான். அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய நாட்டிலேயே சிறந்த பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவர் (Arliss Howard) காத்துக் கொண்டிருக்க, அவனோ தன்னோடு இடையில் சிநேகிதமான ஒரு டாக்டரிடம் (Terrance Howard) அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்புகிறான். மகனின் விருப்பத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் அரை மனதோடு அவனது விருப்பத்திற்கு சம்மதம் சொல்கிறாள் அவனது அம்மா.

அறுவை சிகிச்சைக்கு முன்பு அம்மாவின் எதிர்ப்பையும் மீறி காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்கிறான். அறுவை சிகிச்சை நாளன்று அவனுக்கு மயக்க மருந்து செலுத்தப்படுகிறது. உடல் மட்டும் செயலிழந்து போன நிலையில் அவனுக்கு விழிப்பு வந்து விடுகிறது.  தன்னுடைய உயிரை காப்பாற்றுவான் என்று நம்பிய டாக்டர் நண்பனும் அவனது குழுவினரும் தன்னைக் கொல்ல முடிவெடுத்திருப்பதும் அவனுக்குத் தெரிய வருகிறது. அவர்கள் ஏன் அவனைக் கொல்ல முடிவெடுக்க வேண்டும்? உடலின் எந்தவொரு பாகத்தையும் அசைக்க முடியாத நிலையில், தன்னை நம்பவைத்து ஏமாற்றிய துரோகத்தின் மரணப் பிடியில் இருந்து அவன் தப்பித்தானா? அவனுக்கு எப்படி, யார் உதவி செய்கிறார்கள்? என்பதுதான் மீதி திரைக்கதை.

ஆரம்பத்தில் நட்பு, காதல் என்று படம் ஜாலியாக நகர்ந்தாலும் மருத்துவமனை காட்சிகளின் போது நெஞ்சு பதைபதைக்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பரபரப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும். அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதை இயக்கியிருப்பவர் Joby Harold.

13th DISTRICT (2004)

poster_districtb13poster113th District பிரான்ஸ் நாட்டு திரைப்படம். படத்தின் இயக்குநர் Pierre Morel . இதில் இடம்பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளுக்காக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற படம் இது. எந்த உபகரணமும் பயன்படுத்தாமல், கிராபிக்ஸ் கலப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட உண்மையான ஸ்டண்ட் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. படத்தில் இரண்டு ஹீரோக்கள். 

Leito தன்னுடைய District 13 ஏரியாவில் போதைப் பொருளை விற்றுக் கொண்டிருக்கும் பிரபல தாதாவான Taha வை எதிர்த்து போராடுகிறார். Leito செய்யும் ஒரு காரியத்தால் Taha விற்கு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது. அதன் காரணமாக Leito வின் தங்கை Lola வை அந்த தாதா கடத்துகிறார். தனியொரு ஆளாக சென்று தங்கையை மீட்கும் ஹீரோ போலீசிடம் அடைக்கலம் கேட்கிறார். தாதாவின் அரசியல் செல்வாக்கிற்கு அடிபணியும் காவல் துறை தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த ஹீரோவை ஜெயிலில் தள்ளுகிறது. தாதாவை அவன் தங்கையோடு பத்திரமாக வெளியே அனுப்பி வைக்கிறது.

படத்தின் இன்னொரு ஹீரோ Damien. போலீஸ்காரர். Taha வினால்
கடத்தப்பட்ட ஒரு வெடிகுண்டை கண்டுபிடிக்கும் பொறுப்பு இவருக்கு தரப்படுகிறது. அதனால் ஏற்கனவே  Taha வால் பாதிக்கப்பட்ட  Leito வின் துணையுடன் அதை கண்டுபிடிக்க முனைகிறார். அதில் இருவரும் வென்றார்களா இல்லையா என்பதுதான் முடிவு.

இந்த படத்தின் முதல் நாற்பது நிமிடங்கள் இதயத்துடிப்பை எகிற வைக்கும் ஸ்டண்ட் காட்சிகளால் நிரம்பியிருக்கிறது. Leito வாக நடித்திருக்கும் David Belle யின் உடம்பு உண்மையில் ரப்பரில்தான் செய்திருக்க வேண்டும் போலிருக்கிறது. தன்னை துரத்துகின்ற தாதாவின் ஆட்களிடமிருந்து தப்பிக்க அநாயசமாக சுவர், இரும்பு கேட், ஜன்னல், படிகட்டு என்று ஓடி, தாண்டி, குதித்து அதகளப்படுத்துகிறார். பார்க்கும் நமக்குதான் அடிவயிறு கலங்குகிறது. கரணம் தப்பினாலும் உடம்பில் பல எலும்புகள் முறிந்துவிடும் அபாயம் அதிகம். (தாய்லாந்து திரைப்படமான ஓங் பாக்கிலும் இதே போன்ற துரத்தல் காட்சி உண்டு) அடுத்த இருபது நிமிடங்கள் Damien னின் (Cyril Raffaelli) அறிமுகம். ஒரு கேசினோவை ஃபுட்பால் மைதானமாக பாவித்து எதிகளை பந்தாடுவார். அதுவும் கலவரப்படுத்தும் சாகச காட்சிகள் நிறைந்ததுதான். மீதிதான் திரைப்படம்.

படத்தின் தொடக்கத்தில் இருக்கின்ற வேகம் இறுதிக்காட்சியில் இல்லை. சப்பென்று முடித்து விட்டார்கள்.  மற்றபடி பூலோகத்தின் சொர்க்கம் என்றழைக்கப்படும் பாரீஸை தலைநகரமாக கொண்ட பிரான்ஸ் நாட்டில் கூட வன்முறையும் குற்றச்செயல்களும் உண்டு என்று உணர்த்துகின்ற திரைக்கதை.  ஸ்டண்ட் காட்சிகளை விரும்புகிறவர்கள் தாராளமாக பார்க்கலாம்.

CUBE (1997)

cube_the_movie_poster_art2இந்த படம் வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும் இன்னமும் படத்தின் காட்சிகள் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. நான் பார்த்தவரையில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சிறந்த psychological மற்றும் science fiction படம் இதுதான். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் உலகளாவிய ரீதியில் நடைப்பெற்ற பல திரைப்பட விழாக்களில் 13 விருதுகளை அள்ளிய கனடா நாட்டு திரைப்படம் இது.

வெவ்வேறு வாழ்க்கைத் தகுதி, தொழில், பின்னணி மற்றும் திறமைகளைக் கொண்ட 7  பேர், ஒரு நாள் தனித்தனி கனசதுரத்துக்குள் கண் விழிக்கிறார்கள். அவர்கள் எப்படி அங்கு கொண்டு வரப்பட்டார்கள், எதற்காக கொண்டு வரப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. மேலே, கீழே, இடது பக்கம், வலது பக்கம் எல்லாமே ஒரு மாதிரியான கனசதுரம்தான். மொத்தமாக 6 வழிகள். அதிலிருந்து விரைவாக வெளியேறி விட வேண்டும் என்பது மட்டும் அவர்களுக்குப் புரிகிறது. ஆனால் எப்படி? அதுதான் படம்.

பொறிக்குள் மாட்டிக்கொண்ட எலியைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த 7 பேரின் நிலையும் அப்படிதான். கனசதுரம் என்ற பெறிக்குள் மாட்டிக் கொண்ட எலியைப்போல அவர்களும் அங்கும் இங்கும் ஒடுகிறார்கள். கீழே இறங்குவதாக நினைத்து ஒரு பக்கம் கதவைத் திறந்தால் அது இன்னொரு கனசதுரத்தின் இடது புறமாக இருக்கிறது. மேலே ஏறுவதாக நினைத்து ஒரு பக்கம் திறந்தால் அது இன்னொரு கனசதுரத்தின் மேற்புறமாக இருக்கிறது. படம் முழுக்க நிறைய திருப்பங்களும் அதிர்வுகளும் இருக்கின்றன. அறிவியல், கணிதம், மனித உணர்வு இவை மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாக பின்னப்பட்ட திரைக்கதை. இந்த படத்தின் இயக்குநர் Vincenzo Natali.

வித்தியாசமான கதையமைப்பு கொண்ட படங்களை விரும்புவோருக்கு ஏற்ற படம் இது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2002ஆம் ஆண்டு வெளிவந்தது என்று நினைக்கிறேன். நான் அதை இன்னும்  பார்க்கவில்லை. பார்த்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?

7 POUNDS (2008)

seven_pounds1சமீபத்தில் வந்த படங்களில் நான் மிகவும் ரசித்த படம் 7 Pounds. தான் செய்துவிட்ட ஒரு தவறுக்காக குற்ற உணர்ச்சியில் பாதிக்கப்படும் ஒருவன் அதற்கு பரிகாரம் செய்யும் வகையில் தனக்கு யாரென்றே தெரியாத 7 அந்நிய மனிதர்களுக்கு உதவ முடிவெடுக்கிறான்.  யார் அவன்? அவன் செய்த பாவம் என்ன? அவனிடம் உதவி பெறப் போகிறவர்கள் யார்? அவர்களுக்கு எந்த வகையில் அவன் உதவப் போகிறான்? இறுதியில் அவனுடைய நிலை என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில் திரைக்கதையில் இருக்கிறது.

ஹாலிவூட்டின் சிறந்த முன்னணி நடிகர்களில் ஒருவரான Will Smith இந்தப் படத்தில் Ben Thomas என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இதற்கு முன்பாக இவர் நடித்த The Pursuit Of Happyness படத்தை இயக்கிய Gabriele Muccino தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு ஆரம்பத்தில் எதிர்மறையான விமர்சனங்களே முன்வைக்கப்பட்டன. ஆனால் அதையும் மீறி தனது கனமான திரைக்கதையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த படம் இது.

ஒரு மனிதனுக்கு எத்தனை உணர்ச்சிகள் உண்டோ அத்தனையும் Will Smith த்துக்கு இயல்பாகவே நடிக்க வருகிறது. மனதில் கனமான துக்கத்தை சுமப்பதை சொல்லும் விழிகள், அதை மறைப்பதற்காக அவர் செய்யும் சின்ன-சின்ன வேடிக்கைகள். ஒவ்வொரு காட்சியிலும் மனதைக் கொள்ளை கொள்கிறார்.

தனது இறுதி முடிவு தெரிந்தபோதும் தன்னை நெருங்கி வருகின்ற பெண்ணின் காதலுக்கு அடிபணிவதாகட்டும்…. தன் அண்ணனிடம் அவகாசம் கேட்டு கெஞ்சுவதாகட்டும்… தன்னை சிறுவயதில் இருந்து நன்கறிந்த நண்பனிடம் தன்னுடைய துக்கத்தை மறைத்துக் கொண்டு கட்டளை இடுவதாகட்டும்….  Will Smith கிடைத்த இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இன்னொரு அம்சம் இயல்பான உரையாடலில் ஆங்காங்கே தூவப்பட்டுள்ள நகைச்சுவை துளிகள். படத்தை பார்ப்பவர்களுக்கு Will Smith அடுத்தவருக்கு உதவ கடைபிடிக்கின்ற வழிமுறையைப் பார்க்கும்போது குழப்பம் ஏற்படலாம். ஆனால் அவரது உண்மையான நோக்கத்தைப் புரிந்துக் கொள்ளும்போது அது நமது மனநிலையை நிச்சயம் கலங்க வைக்கும்.  படத்தின் இறுதிக் காட்சி கவிதை.

வேறு எப்படி சொல்ல…?

GRAN TORINO (2009)

gran-torino-3643-poster-largeகொரிய பேரில் பங்குபெற்ற முன்னாள் ராணுவ வீரர் Walt Kowalski மனைவியை இழந்தவர். தன்னுடைய இரு மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோருடன் ஒத்துப் போக முடியாத நிலையில் அயல்நாட்டு குடியேறிகள் வசிக்கும் பகுதியில் தன்னுடைய நாய் டெய்சியுடன் தனியாக வசித்து வருகிறார். அவரைப் பொறுத்தவரை அவரது உறவுகள் அவருக்கு தொந்திரவு தருபவை, பணிவில்லாத நடத்தை கொண்டவை என்பதாகவே இருக்கிறது. தன்னிடமிருந்து எதையும் பெறுவதென்றால் மட்டும் தன்னை தேடி வரக்கூடிய, எதுவும் இல்லாத பட்சத்தில் அவரைத் திரும்பிக்கூட பார்க்காத உறவுகளாக அவர்கள் இருப்பதைக் கண்டு அவர்களை வெறுக்கிறார்.

அவருக்குப் பக்கத்து வீட்டில் ஒரு சீன-வியட்னாமிய குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த  Thao Vang Lor என்ற இளைஞன் Walt டின் 1972 Gran Torino Sport  வாகனத்தை திருட நினைக்கிறான். அதற்காக ரௌடி கும்பலைச் சேர்ந்த தன் உறவினன் ஒருவனோடு இணைந்து அந்தக் காரைத் திருட திட்டம் போடுகிறான். 

Walt டின் காரைத் திருட முயற்சிக்கும் சமயத்தில், அவர் அவர்களை விரட்டி விடுகிறார். அன்று தொடங்கி ரௌடி கும்பலிலேயே நிரந்தரமாக இணைந்து விடுமாறு அவனது உறவினனால் Thao Vang Lor மிரட்டப்படுகிறான். வாய்த் தகராறு கைக்கலப்பாக மாறுகிறது. Walt அதனைத் தடுத்தி நிறுத்தி அந்த கும்பலிடமிருந்து அவனை விடுவிக்கிறார். தனக்கு உதவி செய்த அவரிடம், அவரது வாகனத்தை திருட முயற்சித்தாக ஒப்புக் கொள்கிறான் Thao Vang Lor. அந்த தெரு மக்களே Walt ட்டை காவல் தெய்வமாக மதிக்கத் தொடங்குகிறார்கள். இது அவரது  தனிமையை பாதிக்கிறது.

தெருவில் சில கருப்பின இளைஞர்கள்  Thao Vang Lor ரின்  அக்கா Sue விடம் தகராறு செய்து கொண்டிருப்பதைப் பார்க்கும் Walt அவளை அவர்களிடமிருந்து விடுவித்து வீட்டில் கொண்டுபோய் பத்திரமாக இறக்கி விடுகிறார். அவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் நல்ல நட்பு உருவாகிறது. அவரது காரை திருட முயன்றதற்கு தண்டனையாக அவரது வீட்டில் Thao Vang Lor  உதவியாளனாக வேலை செய்யுமாறு அவன் அக்காவும் அம்மாவும் பணிக்கின்றனர்.

தங்களை விரட்டியடித்ததற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில் ரௌடி கும்பலைச் சேர்ந்தவர்கள் Thao Vang Lor அக்கா Sue   வைக் கடத்திச் சென்று கற்பழித்து விடுகிறார்கள். அவர்களை Walt எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் திருப்பமான முடிவு.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு Clint Eastwood முன்னணி கதாபாத்திரமேற்று நடித்துள்ள படம். படத்தை தயாரித்து இயக்கியிருப்பது அவர்தான். படத்தின் துவக்கத்தில் இனவெறியை அப்பட்டமாக காட்டக்கூடிய வசனங்கள் இருந்தாலும் போகப் போக படத்தின் கதையோட்டம் மாறி இறுதியில் மனிதாபிமானமே வெல்லும் என்ற கருத்தில் சமன்படுகிறது. சோர்வு தட்டாத திரைக்கதை அமைப்பு படத்தை ரசிக்க வைக்கிறது.  Clint Eastwood நடிப்பு மற்றும் திரைக்கதைக்காக படத்தைப் பார்க்கலாம். 1972  தயாரிக்கப்பட்ட Gran Torino Sport  க்காகவும்தான்!

மலேசியாவின் புதிய பிரதமர் – டத்தோஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக்

najib

மலேசியாவின் 6வது புதிய பிரதமராக நாளை (ஏப்ரல் 3 2009) டத்தோஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக் பதவியேற்பார்  என்று சொல்லப்படுகிறது. மலேசியா நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை இந்த நிகழ்வு தொடங்கி வைக்கப் போகிறது.

1953ஆம் வருடம் ஜூலை 23ஆம் தேதி பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள கோலலிப்பிஸ் நகரத்தில் நாட்டின் 2வது பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்களுக்கு மகனான பிறந்தார் டத்தோஸ்ரீ நஜீப். 6 பேர் கொண்ட குடும்பத்தில் இவர் மூத்த மகனாவார். 1974ஆம் ஆண்டு அவர் நோட்டிங்ஹாம் பல்கலைகழகத்தில் வர்த்தக நிதிநிர்வாக துறையில் பட்டப்படிப்பை முடித்தார். 1976ஆம் ஆண்டு தனது தந்தையின் திடீர் மறைவிற்கு பின் நடைப்பெற்ற பெக்கான் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசிய வரலாற்றில் மிக இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானவர் என்ற பெருமையையும் டத்தோஸ்ரீ நஜீப் அப்போது பெற்றார். அடுத்த வருடத்திலேயே துணையமைச்சர் பதவியை அலங்கரித்து இளம் வயதில் துணையமைச்சராக பதவி வகித்தவர் என்ற வரலாற்று பெருமையை பதிவு செய்தார். பின்னர் தனது 29வது வயதில் பகாங் மாநில முதல்வராக பதவி ஏற்றார்.

1987ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு முழு அமைச்சராக பொறுப்பேற்றார். 1988ஆம் ஆண்டு இவர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவராக அன்றைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களால் நியமிக்கப்பட்டார். 1993ஆம் ஆண்டு அம்னோ உதவி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ நஜீப் 2004ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அம்னோ உதவி தலைவர்களில் ஒருவராகவே பதவி வகித்து வந்தார்.

2004ஆம் ஆண்டு இவர் துணைப் பிரதமராக அப்போது புதிய பிரதமராக பதவியேற்ற டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி அவர்களால் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அம்னோ துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மாதம் நடைப்பெற்ற அம்னோ தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ நஜீப், நாளை நம் நாட்டின் 6வது பிரதமராக பதவியேற்கவிருக்கிறார்.

அல்தான்துயா

டத்தோஸ்ரீ நஜீப் அவர்களின் இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வீசப்பட்டுள்ளன. அதில் அவரது அரசியல் வாழ்க்கையையே அசைத்துப் பார்த்தது பிரபல மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா கொலை வழக்கு. டத்தோஸ்ரீ நஜீப்பின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவரான அப்துல் ரசாக் பகிண்டா இந்த கொலை வழக்கில் குற்றவாளி என குற்றஞ்சாட்டப்பட்டதால், ஆரம்பத்தில் இந்த வழக்கு மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. கொலைக்கு காரணமானவராக குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் ரசாக் பகிண்டாவின் விடுதலைக்குப் பின்னர் அந்த பரபரப்பு கொஞ்சம் அடங்கி அமைதியாகி விட்டது.

நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற இந்த வழக்கு இன்னும் முழுமையாக பூர்த்தியடையவில்லை.  வழக்கு தொடங்கப்பட்ட போது டத்தோஸ்ரீ நஜீப்புக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் உண்டென எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டின. மலேசியா டுடே ஆசிரியர் ராஜா பெத்ரா கமாருடின், டத்தோஸ்ரீ நஜீப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் கொலை சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கடந்த வருடம் ஜூன் மாதம் சத்தியப்பிரமாண வாக்குமூலம் அளித்தார்.

அப்துல் ரசாக் பகிண்டாவால் நியமிக்கப்பட்ட தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம், டத்தோஸ்ரீ நஜீப்பை தொடர்புபடுத்தி கடந்த வருடம் ஜூலை 1ஆம் தேதி சத்தியபிரமாண வாக்குமூலம் ஒன்றை தாக்கல் செய்தார். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அதை அவர் மீண்டும் வாபஸ் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் அளித்த புதிய சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் டத்தோஸ்ரீ நஜீப் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் நீக்கப்பட்டிருந்தன. பல வெளிநாட்டு பத்திரிகைகள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவே செய்தி வெளியிட்டன.

டத்தோஸ்ரீ நஜீப் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக, தனக்கும் மங்கோலிய அழகி அல்தான்துயாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென பொதுப்படையாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி இஸ்லாம் சமய முறைப்படி புனித அல்-குரான் மீது சத்தியம் செய்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லாவும் துணைப்பிரதமர் நஜீப் அவர்களுக்கு இவ்விவகாரத்தில் பக்கபலமாக நிற்பதாக அறிவித்தார்.

இவை தவிர, சமீப காலத்தில் டத்தோஸ்ரீ நஜீப் லஞ்சம், பண அரசியல், அன்வார் இப்ராஹிம் மீதான் சைபுல் தொடுத்த ஒரின வழக்கு பின்னணியில் செயல்பட்டவர் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார். ஆனால் இவைகளில் எதுவுமே ஆதாரப்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

ஒன்றன் பின் ஒன்றாக தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் இருந்து மீண்டுக் கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ நஜீப் அவர்களின் கைகளில்தான் மலேசிய நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. அரசாங்கத்தின் பல்வேறு துறை அமைச்சர் பதவியை அலங்கரித்து பரந்த அனுபவம் பெற்ற அவரது தலைமைத்துவம் கொண்டுவரப் போகும் மாற்றங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

வாழ்த்துகள் டத்தோஸ்ரீ நஜீப்!