Monthly Archives: மார்ச் 2010

உலுசிலாங்கூர் தொகுதி வேட்பாளர் யார்?

மஇகா தலைமைத்துவ மாற்றத்திற்கு வழிவிடப்போகும் இடைத் தேர்தல்?

நேற்று முன்தினம் வரை உலுசிலாங்கூர் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாக எந்தக் கட்சி வேட்பாளர் போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி அலையடித்த நிலை ஓய்ந்து, இன்று மஇகா சார்பில் அந்தத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழும்பத் தொடங்கியிருக்கிறது. இதற்காக மஇகா சார்பில் 3 வேட்பாளர்கள் பெயரையும் பிரதமரிடம் நேற்று சமர்ப்பித்திருப்பதாக அறிவித்திருக்கிறார் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு.

உலுசிலாங்கூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜைனால் அபிடின் அண்மையில் மூளை புற்றுநோயால் காலமானார். அதன் தொடர்பில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 1990ஆம் ஆண்டு முதற்கொண்டு இந்தத் தொகுதியை தன் வசம் வைத்திருந்த மஇகா துணைத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேலு 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அடித்த அரசியல் சுனாமியில் இந்த தொகுதியை பி.கே.ஆர் கட்சி வேட்பாளர் டத்தோ ஜைனால் அபிடினிடம் பறிகொடுத்தார். வெறும் 198 வாக்கு வித்தியாசத்தில்தான் அவர் தோல்வியுற்றார் என்றாலும் 1990ஆம் ஆண்டிலிருந்து அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற முறையில் டத்தோ ஜி.பழனிவேலுவின் செல்வாக்கு அங்கே சரிந்து வருகிறதோ என்ற ஐயப்பாட்டையும் அத்தோல்வி ஏற்படுத்தியது.

இதன் காரணமாக தற்போது நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் முதன்மைக் கட்சியாக விளங்கும் அம்னோவிற்கே அந்த தொகுதியை இம்முறை ஒதுக்க வேண்டுமென அம்னோ தலைவர்கள் சிலர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தனர். தவிர, பெரும்பான்மையான உலுசிலாங்கூர் தொகுதி மக்களும் கூட மஇகா உறுப்பினரொருவர் அங்கே போட்டியிடுவதை விரும்பவில்லையென அவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி கருத்துரைத்த மஇகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு அப்படியொரு நிலை அந்த தொகுதியில் இல்லையென மறுப்பு தெரிவித்தார். அது மட்டுமின்றி அந்த தொகுதியில் டத்தோ ஜி.பழனிவேலு போட்டியிடுவதையே தாம் விரும்புவதாகவும் கூறினார். இதனால் மஇகாவிற்கு இன்னொரு அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

உலுசிலாங்கூர் தொகுதியில் போட்டியிடப் போவது மஇகா வேட்பாளர்தான் என்று முடிவாக நேற்று முன்தினம் அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், இதற்காக 3 மஇகா வேட்பாளர்களின் பெயர்களை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் தொடர்பில் பிரதமரை நேற்று சந்தித்த டத்தோஸ்ரீ சாமிவேலு 3 வேட்பாளர்களின் பெயரைப் பரிந்துரைத்துள்ளதாக கூறியுள்ளார். அந்த பெயர்ப்பட்டியலில் டத்தோ ஜி.பழனிவேலுவின் பெயரும் இருக்கிறது.

மஇகா கட்சியில் வழக்கம் போலவே டத்தோ சுப்ராவிற்கு (முன்னாள் துணைத் தலைவர்) இந்த முறை வாய்ப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. டத்தோ சுப்ரா சார்புடைய பத்திரிகை ஒன்று இதற்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் பல இணையத்தள பக்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே போல பெரும்பான்மையான தேசிய முன்னணி உறுப்பினர்கள், 61 வயதாகிவிட்ட டத்தோ ஜி.பழனிவேலுவை விட இன்னும் இளமையான ஒருவரை மஇகா ஏன் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டனர். ஆனாலும் இறுதி முடிவென்பது பிரதமர் கையில் இருக்கிறது.

அந்த வகையில், தேசிய முன்னணி வேட்பாளர் தேர்வில் டத்தோ ஜி.பழனிவேலு அவர்களே முன்னணியில் இருக்கிறார் என்று செய்தி கசிந்துக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் டத்தோ ஜி.பழனிவேலு வெற்றி பெறும் பட்சத்தில் மஇகா தலைமைத்துவ பொறுப்பை அவரிடமே ஒப்படைக்க டத்தோஸ்ரீ சாமிவேலு முடிவெடுத்து விட்டார் என்றும் மஇகா வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள். பிரதமரை சந்தித்தபோது கூட இதை தெளிவாக டத்தோஸ்ரீ சாமிவேலு கூறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை பிரதமரின் தேர்வும் டத்தோ ஜி.பழனிவேலுவாக இருந்தால் மஇகா புதிய தலைமைத்துவ மாற்றத்திற்கான முதல் படியில் கால் வைத்து விட்டது என்றே அர்த்தம் என்றும் பலமான பேச்சு அடிபடுகிறது.

THE MOTHMAN PROPHECIES (2002)

அமெரிக்கா, West Virginia மாநிலத்தில் அமைந்துள்ள Point Pleasant  என்ற சிறிய நகரில் 1966-1967 ஆம் ஆண்டுகளின் மத்தியில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, 1975ஆம் ஆண்டு John Keel எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் The Mothman Prophecies. திகில் மற்றும் திருப்பங்கள் நிறைந்த இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் Mark Pellington. படத்தின் கதை இதுதான்…

John Klein (Richard Gere) வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபர். எதிர்பாராத விதமாக அவரும் அவரது மனைவி Mary (Debra Messing) யும் ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். விபத்தில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் Maryக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவருகிறது. அது தெரிந்த சில நாட்களிலேயே Mary காலமாகி விடுகிறார். மனைவியின் இழப்பு John Kleinனை ரொம்பவே பாதிக்கிறது.

ஒரு வேலைக்காக Virginia மாநிலத்தில் இருக்கின்ற Raymond நகருக்கு காரில் பயணிக்கும் John Klein, அவருக்கே தெரியாமல் 5 மணிநேரம் பயணித்து Point Pleasant என்ற சிறிய நகருக்கு வந்து விடுகிறார். இது எப்படி நடந்தது என்ற குழப்பத்திலிருந்து அவர் விடுபடுவதற்கு முன்பே அந்த நகரில் நடந்த, நடந்துக் கொண்டிருக்கின்ற சில மர்ம நிகழ்ச்சிகளை Connie Mills (Laura Linney) என்ற காவல்துறை அதிகாரியின் மூலம் கேள்விப்படுகிறார்.

ஏற்கனவே தன் மனைவியின் மரணத்துக்கு முன்பு நடந்த விபத்து மற்றும் தனது இறுதி காலத்தில் Mary வரைந்து வைத்துவிட்டுப் போன ஓவியம் போன்றவற்றில் சந்தேகம் கொண்டிருந்த அவருக்கு, Point Pleasant நகரில் நடந்துக் கொண்டிருக்கின்ற சம்பவங்கள் வியப்பைத் தரவே அங்கேயே தங்கியிருந்து அந்த மர்ம பின்னணியைப் பற்றி ஆராயத் தொடங்குகிறார். தனது மனைவியின் மரணத்திற்கும், Washington நகரிலிருந்து கிட்டத்தட்ட 400 மைல் தள்ளியிருக்கும் Point Pleasant நகரில் நடக்கின்ற சம்பவத்திற்கும் ஏதோவொரு ஒற்றுமை இருப்பதையும் அப்போது அவர் உணர்கிறார்.

அந்த சமயத்தில்தான் Indrid Cold என்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றின் தொடர்பு அவருக்கு கிடைக்கிறது. வருங்காலத்தில் நிகழவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே எச்சரிக்கும் அந்த சக்தி Point Pleasant நகரில் மிக விரைவில் நடக்கவிருக்கும் ஒரு பேரழிவு குறித்து எச்சரிக்கை செய்கிறது.

John Klein அந்த மர்ம சக்தியை நம்பினாரா? அதன் எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டாரா? அவரால் அப்படியொரு சம்பவம் நிகழாமல் தடுக்க முடிந்ததா? என்பதுதான் பதைபதைப்பான மீதிப் படம்.

இந்த படத்தில் வருவது போன்ற சக்திகள் உலகில் உள்ளனவா? இதெல்லாம் சாத்தியமா? என்று கேட்டால்… Point Pleasant நகரின் Silver Bridge பாலத்தின் வரலாறு அதற்கொரு சாட்சியாக இன்றும் இருக்கிறது. தவிர, மனைவியின் மரணம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு உருக்குலைத்து போடுகிறது என்பதையும் இயக்குநர் தனது இந்த படத்தில் நன்கு காட்டியுள்ளார்.

CONTROL (2007)

‘Touching from a Distance’ என்ற புத்தகத்தை தழுவி Anton Corbijn என்ற அறிமுக இயக்குநர் எடுத்த படம்தான் CONTROL. 1977ஆம் ஆண்டு தொடங்கி 1980 ஆம் ஆண்டு வரை அப்போது பிரிட்டனில் பிரபலமாக திகழ்ந்த Joy Division என்ற இசைக்குழுவின் தலைமைப் பாடகரான Ian Curtis  என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ‘Touching from a Distance’ என்ற அந்த  புத்தகம், Ian Curtis அவர்களின் துணைவியார் Deborah Debbie Curtis எழுதியதாகும்.

அன்றைய காலக்கட்டத்தில் பிரிட்டனில் பிரபலமாக திகழ்ந்த Punk Rock வகை இசையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய பாடகரான Ian Curtis, தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்னை, இன்னொரு பெண்ணுடனான தொடர்பு, அவரது வலிப்பு நோய் மற்றும் அதன் காரணமாக அவர் செய்து கொண்ட தற்கொலை பற்றிதான் இந்தப் படம் விவரிக்கிறது.

மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துக் கொண்ட Ian Curtis (Sam Riley), ஓர் அரசாங்க ஊழியராகத்தான் ஆரம்பத்தில் பணியாற்றுகிறார். பின்னர் அவருக்கு 3 இசைக்குழு உறுப்பினர்களின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த அறிமுகம் அவரை நாடறிந்த பாடகராக்குகிறது. Joy Division என்ற தனியொரு இசைக்குழுவை உருவாக்கும் அவர்கள் அன்றைய இசை உலகை கலக்கத் தொடங்குகிறார்கள். அதற்கு Ian Curtis அவர்களின் குரல்தான் மிகப் பெரிய பக்கபலமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தக் குழுவினர் நிறைய  இசைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ள தொடங்கினார்கள்.

Ian Curtis இசைக்குழுவுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியதால் அப்போது நிறைமாத கர்பிணியாக இருந்த அவரது மனைவி Debbie (Samantha Morton) யை அவரால் முறையாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் அரசாங்க வேலையையும் அவர் தொடர்ந்து செய்து வந்த காரணத்தால் போதிய ஓய்வில்லாமல் மிகவும் அவதிப்பட்டார். ஓய்வின்மை அவரை வலிப்பு நோய்க்கு ஆளாக்கியது. இதனால் அரசாங்க வேலையை விட்டு விலக முடிவெடுத்த சமயம், அவருக்கு பெண் குழந்தையொன்று பிறந்தது. நிலையான வருமானம் இல்லாத காரணத்தால் மனைவி Debbie வேலைக்குச் செல்ல தொடங்கினார். குடும்பத்தின் மீது அக்கறை காட்டாத Ian Curtisசின் பொறுப்பற்ற செயல் அவர்களது உறவில் விரிசலை உண்டாக்கியது,

இதற்கிடையில் தங்களை பேட்டி காண வந்த Annik Honore (Alexandra Maria Lara) என்ற பெண் நிருபருடன் Ian Curtis சுக்கு தொடர்பு ஏற்படுகிறது. இந்தத் தொடர்பு Ian Curtis மற்றும் அவர் மனைவி Debbie க்கிடையிலேயான உறவில் மேலும் பிளவை உண்டாக்குகிறது. ஒரு கட்டத்தில்  Debbie இந்தத் தொடர்பை கண்டுபிடித்து விட, Ian Curtis தனக்கு Annikதான் முக்கியமென கூறி வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். அந்த சமயத்தில் அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வாய்ப்பு அவர்களது இசைக்குழுவுக்கு கிடைக்கிறது.

மீண்டும் வலிப்பு நோய்க்கு ஆளாகும் Ian Curtis மிகுந்த மனக் குழப்பத்திற்கு உள்ளாகிறார். அமெரிக்கா செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தன் மனைவியை சந்திக்க வருகிறார். ஓரிரவு மட்டும் அந்த வீட்டில் தங்கி விட்டு மறுநாள் சென்று விடுவதாக மனைவியைக் கேட்டுக் கொள்ளும் Ian Curtis, அங்கேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொள்கிறார். இறக்கும் போது அவருக்கு வெறும் 23 வயதுதான் என்று படத்தின் இறுதியில் காட்டுகிறார்கள்.

மிகவும் இளம் வயதுடைய ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை விவரிக்கும் இந்தப் படம், பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றது. தவிர நிறைய விருதுகளையும் பெற்றுள்ளது. இந்தப் படம் இளம் வயதினருக்கே உரிய வேகத்தையும், எதையும் சாதித்துக் காட்டும் அவர்களது முயற்சி  மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றை காட்டினாலும், ஒழுக்கமின்மை மற்றும் பொறுப்பை தட்டிக் கழிக்கும் மனப்பாங்கு ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி சீரழிந்து விடுகிறது என்பதையும் காட்டுகிறது. அந்த வகையில் இது குறிப்படத்தக்க படமாகிறது. இந்தப் படத்தில் பரபரப்பான காட்சிகள் இல்லை. ஆனால், பார்வையார்களை இறுதிக் காட்சி வரை கட்டிப்போடும் திரைக்கதை இருக்கிறது. இந்த படம் முழுக்க கறுப்பு வெள்ளை வண்ணத்திலேயே எடுக்கப்பட்டுள்ளன. பார்க்க வேண்டிய படம்.

Ian Curtis மறைவுக்குப் பின்னர் Joy Division இசைக்குழுவினர் மேலும் சில ஆல்பங்களை வெளியிட்டாலும், அவர்களால் Ian Curtis இருந்தபோது அடைந்த உச்சத்தை அதற்குப் பிறகு எட்ட முடியவில்லை. அந்நாளைய இசை விமர்சகர்கள் சிலரோ, Ian Curtis சாதனையின் உச்சத்தில் இருந்த சமயத்தில் அதுவும் மிகவும் இளம் வயதிலேயே இறந்து விட்டதால்தான் அவரை இன்னும் பலர் நினைவில் வைத்துள்ளார்கள் என்றும் ஒருவேளை  மேலும் சில காலம் வாழ்ந்திருந்தால் அவர் இந்த அளவுக்கு அங்கீகரிக்கப்படும் கலைஞராக திகழ்ந்திருக்க மாட்டார் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.