இதுபோல இன்னும் எத்தனை?

சம்பவம் 1 : மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டிற்கு புதுச் சாயம் பூச விரும்பினார். பொதுவாக இதுபோன்ற வேலைகளுக்கு சீன குத்தகையாளர்களே கிடைப்பார்கள். மணியோ ஒரு இந்திய குத்தகையாளர் கிடைத்தால் அவருக்கு தொழில் கொடுத்த மாதிரி இருக்குமே என்ற நல்லெண்ணம். இணையத்தில் காணப்படுகின்ற மலேசிய இந்தியர் குழுக்களின் வலைப்பின்னல் ஒன்றில் அப்படியொரு சேவையை வழங்குகின்ற நிறுவனத்தை தெரிந்துக் கொண்டார். அவர்களை தொடர்பு கொண்டும் பேசினார். வேலை, அதற்குரிய கூலி எல்லாம் பேசி முடித்தாயிற்று. அவர்களும் ஒரு நல்ல நாள் பார்த்து வேலையை தொடங்கி விட்டார்கள். வேலை முடிந்த கையோடு மணியும் பணத்தை பேசியபடி முழுதாக கொடுத்து விட்டார். பிரச்னை தொடங்கியது அதன் பின்புதான், மணியின் கூற்றுப்படி அவர்கள் செய்த வேலை திருப்தியளிக்கவில்லை. பல இடங்களில் பூசப்பட்ட வர்ண்ணம் திட்டுத் திட்டாக இருந்தது. வேலையிலும் ஒரு சுத்தமின்மை காணப்படவில்லை. வீட்டையே அலங்கோலப்படுத்தி வைத்திருந்தார்கள். மணி அந்த குத்தகையாளரை அழைத்து விபரம் சொன்னார். மறுதரப்பில் இருந்த பதில் அவர் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது. தொழில் கொடுக்கிறேன் என்று சொன்னபோது விழுந்து விழுந்து உபசரித்தவர்கள் இப்போது இப்படி பேசுகிறார்களே என உள்ளுக்குள் குமைந்து போய் விட்டார்.

சம்பவம் 2 : சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  வீட்டில் தண்ணீர்க்குழாய் பிரச்னை. அவரும் இந்தியர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் நண்பர் ஒருவர் பரிந்துரைத்த நபருக்கு அந்த வாய்ப்பை வழங்கினார். வேலை செய்ய அழைக்கப்பட்ட நபரோ அதை மாற்ற வேண்டும்.. இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி பல நூறு ரிங்கிட்களை பொருட்கள் வாங்குவதற்கு என வாங்கிக் கொண்டார். அதோடு போனவர்தான். திரும்பி வரவேயில்லை. பலமுறை சந்திரன் அவரது தொலைபேசிக்கு அழைத்தாலும் எடுப்பதில்லை. வேலை செய்ய வந்தவர் செய்த குளறுபடியால் தன் நண்பரோடு சண்டை போடும்படி ஆகிவிட்ட வருத்தத்தில் இருக்கிறார் அவர்.

சம்பவம் 3 : கதிரேசனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  தனது வீட்டின் முன்பு காலியாக இருந்த இடத்தில் அழகான தோட்டத்தை அமைக்க ஆசை. அதற்காக இந்திய குத்தகையாளரை தேடினார். அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் தனது உறவினர் அந்தத் தொழிலை செய்து வருவதாகக் கூறி அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் வீட்டை வந்து பார்த்து வீட்டின் முன்புறத்தில் எந்த வகையான செடிகளை வைத்தால் அழகாக இருக்கும், அதன் விலை, அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்று ஆலோசனை தந்து விட்டுப் போனார். கதிரேசனுக்கு அவரது ஆலோசனை பிடித்து விட, அவரையே வேலையைச் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். பல ஆயிரங்களை செலவழித்து தோட்டத்தை உருவாக்கிய கதிரேசன் இப்போது கடும் விரக்தியில் இருக்கிறார். காரணம் வீட்டில் நடந்த வைபவத்திற்காக வந்திருந்த சீன நண்பர்களிடம் தோட்டத்தை உருவாக்க ஆன செலவு பற்றி கதிரேசன் சொல்லியபோது.. இது போன்ற தோட்டத்தை அமைக்க அவ்வளவு செலவழிக்க தேவையில்லை என்றும் இப்போது அவர் செலவழித்த தொகையில் பாதியளவே அந்த வேலையைச் செய்ய செலவாகியிருக்கும் என்றும் சொல்லி விட்டு போனார்கள். இப்போது கதிரேசன் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக கருதுகிறார்.

மேலே குறிப்பிட்ட 3 பேர் மட்டுமல்ல.. இதைப் படிக்கும் பலருக்கு இது போன்ற அனுபவம் நேர்ந்திருக்கலாம். பொதுவாக சொந்தத் தொழில் செய்யும் நம் இந்தியர்களில் பலர், இதர இந்தியர்கள் தங்களுக்கு வாய்ப்புத் தருவதில்லை என குறைப்பட்டுக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். உண்மையில் வெகு சிலரே தங்களது தொழிலை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செய்கிறார்கள். பலபேர் ஏதோ அரையும் குறையுமாக தொழிலைக் கற்றுக் கொண்டு அதை நேர்த்தியுடன் செய்ய முடியாமல் இப்படி ஏதாவது கோளாறு செய்து வைக்கிறார்கள். தாங்கள் செய்வது தவறு என்று அவர்கள் உணர்வதே இல்லை. மாறாக புகார் சொல்லும் தங்களது வாடிக்கையாளர் சரியில்லை என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்கிறார்கள்.

சொந்த தொழில் செய்வது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் அதிலொரு நேர்மையும் ஒழுங்கும் இருந்தால்தான் நம்மைப் பற்றி மற்றவர்களிடமும் தங்கள் வாடிக்கையாளர்கள் சொல்வார்கள் என அவர்கள் ஒருபோதும் கருதுவதே இல்லை. தங்களது நடவடிக்கை மற்றவர்களை பாதிக்கும் என்ற அக்கறையும் அவர்களிடம் கிடையாது. வேலை கிடைத்தால் போதும், எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்றே பலர் இப்போது நினைக்கிறார்கள்.

இதெல்லாம் சரியா? இன்னொரு இந்தியருக்கு வாய்ப்பு கொடுக்க நினைக்கும் நல்ல மனம் கொண்டவர்களை அலைக்கழிப்பதன் வழி இவர்கள் சாதிக்கப் போவது என்ன? ஒன்றுமில்லை. அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். தவிர இன்னொரு இந்திய குத்தகையாளரை அழைக்கவே அவர்கள் விரும்புவதில்லை. ஒருவரது செயல்களால் மற்றவர்கள் பிழைப்பில் மண் விழ வேண்டுமா? இவ்வாறு பொறுப்புணர்ச்சி இன்றி செயல்படும் இந்திய குத்தகையாளர்களை என்ன செய்வது? எங்கே முறையிடுவது?

பின்னூட்டமொன்றை இடுக