Monthly Archives: ஜூலை 2010

KELING (கெலிங்) என்றால் என்ன? பி.ரம்லியின் பதில்!

கடந்த 18ஆம் தேதி (தலைநகர்) தேசிய நூலகத்தில்  நடைப்பெற்ற ‘ஹங் துவா’ கண்காட்சிக்கு கண்ணன் என்ற அன்பர் போயிருந்ததாகவும், அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பதாகையில் “ஜாவா, கெலிங், சீன, சீயாம் மற்றும் அரபு மொழிகளில் ஹங் துவா புலமை பெற்றவராக இருந்தார்’ என்று எழுதப்பட்டிருந்ததாகவும் மலேசிய இந்தியர் கிளப் வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இதில் கெலிங் என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது எந்த மொழியை என்றும் கேட்டிருந்தார். அதோடு இதையெல்லாம் தடுத்து நிறுத்தப் போகிறவர் யார்? என்று ஆதங்கப்பட்டிருந்தார்.

கெலிங் என்றால் உண்மையில் என்ன அர்த்தம்? சில தேசிய மொழி இணைய அகராதியில் தேடிப் பார்த்தேன்…

http://search.cari.com.my/dictionary/dic.php

Keling – Tamil, Telugu & Indian

http://prpm.dbp.gov.my/

(இந்த இணைய பக்கத்தில் மற்றவர்களை விட ஒருபடி மேலே சென்று ‘கெலிங்’ என்ற வார்த்தைக்கு வேறொரு அர்த்தத்தை தருகின்ற வகையில் கவிதையாகவும் பழமொழிகளாவும் உருவாக்கியுள்ளனர்)

Keling – Orang India yang Beragama Islam, Orang-Orang yang berasal dari Selatan India

கவிதை

Orang Keling sembahyang kusami,
     Bawa dian sepuntung seorang;
Ibarat ambo rumput di bumi,
     Pagi petang dipijak orang.

பழமொழி

1) Suruh kerja golok Keling,
     suruh makan parang puting.

இதன் பொருள்:
Malas bekerja tetapi banyak makan.

2) Bagai tabut keling, di luar berkilat di dalam berongga.

இதன் பொருள்:
Baik di luar tetapi jahat hatinya

http://kamus.lamanmini.com/index.php

Keling – Indian, Tamil & Telungu

இத்தனை நாட்களாக இந்திய முஸ்லிம்களையும் தமிழர்களையும் சேர்த்தே (ஒரு குறுகிய பார்வையோடு) கெலிங் என்று அழைத்து வந்தார்கள்.

ஆனால் இந்திய முஸ்லீம்கள் எப்போது ‘சாமி’ கும்பிட்டார்கள் என்று தெரியவில்லை.

Orang Keling sembahyang kusami

ஆக, நிச்சயமாக அது தொழுகையை குறிப்பிடும் வார்த்தை அல்ல. அதனால் இந்திய முஸ்லிம்கள் இந்த வட்டத்திற்குள் வர மாட்டார்கள். இதிலேயே கெலிங் வார்த்தையின் நம்பகத்தன்மையின் மீது சந்தேகம் ஏற்படுகிறது.

 அடுத்ததாக கலிங்க தேசத்தவர் என்றார்கள்.  கலிங்கம் என்று அவர்கள் நாக்கு உச்சரிக்க இயலாததால் கெலிங் என்று அழைப்பதாக சொன்னார்கள். இது வரைக்கும் கூட பொறுத்துக் கொள்ளலாம்.

என் மொழிக்கு கெலிங் என்று பெயர் வைக்க நீ யார்?

இதுதான் இப்போதைக்கு கேள்வி… உலக நாடுகள் பலவும் தமிழை – தமிழ் மொழி என்றுதான் குறிப்பிடுகின்றன. ஏன் அண்டை நாடான சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் வாய் கிழிய சகோதரத்துவம் பேணும் தேசம் – உண்மையான ஆசியா என்று கொக்கரிக்கும் மலேசியாவில் மட்டும் தமிழ் மொழி என்றால் என்னவென்று தெரியாதாம். கெலிங் என்று அர்த்தம் கொடுத்துதான் அதை விளக்குவார்களாம்.  யார் காதில் பூ சுற்றும் வேலை இது?

தமிழ் மொழிக்கு கெலிங் என்று அர்த்தம் கொடுக்க எந்த ஈனப்பயலுக்கு தகுதி இருக்கிறது? உலகின் மிக தொன்மையான மொழியடா அது!

செம்மொழி!

எல்லாவற்றையும் விட அது எங்கள் தாய்மொழி!

தமிழை, தமிழ் மொழி என்றே அடையாளப்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள். அன்றைய கால வழக்கம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டாதீர்கள். வழக்கம் என்பதே பழக்கத்தினால் வருவதுதான். மற்றவர்களின் மனதை உங்கள் வழக்கம் புண்படுத்தும் பட்சத்தில், அதை மாற்றிக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை. இருக்கவும் கூடாது. சகோதரத்துவம் பேணப்படுவதாக மார்த்தட்டி கூறப்படுகின்ற ஒரு நாட்டில் இதுபோன்ற மனக்கசப்பை விதைக்கக்கூடிய வார்த்தைகள் பயன்பாட்டில் இருப்பது அவமானம்.

இனி எந்தவொரு தேசிய மொழி அகராதியிலும் கெலிங் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. 1 மலேசியா கொள்கைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய களங்கமாகவே இதனைக் கருதி, கெலிங் என்ற வார்த்தையை தேசிய மொழியிலிருந்து மலேசிய அரசு நீக்கிவிட ஆவன செய்ய வேண்டும்.

வெறுமனே வேலை வெட்டிக்கு போகாமல் தின்றுக் கொழுத்த இனத்தின் மொழி தமிழ் அல்ல!

தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் பலவற்றை சாதிக்க முடியும். ஆனால் நம் இனத்தில் அதற்குதான் இடமில்லாமல் போய்விட்டது.

இந்த வார்த்தை குறித்து நான் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 1998 & 2005 ஆண்டுகளில்  கெலிங் என்ற வார்த்தையை பயன்படுத்த, அந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், கெலிங் வார்த்தையை அகராதியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பலர் குரல் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் நம்மில் ஒருசிலரோ, கெலிங் என்ற வார்த்தையை அகராதியில் இருந்து நீக்கி விடுவதால் மட்டும் நம்மை தரந்தாழ்த்தி பேசுவதை தடுத்து நிறுத்தி விட முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

இனத்தைப் பற்றி குறிப்பிட்ட போதுதான் மௌனம் காத்தீர்கள் சரி, இப்போது மொழியை பற்றி குறிப்பிடும் போதும் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கலாம் அல்லவா? இந்த விஷயத்தில் மட்டும் நிலைமையை இப்படியே நீடிக்க விடக்கூடாது. நம் மொழியை கேவலப்படுத்தும் உரிமை எந்தக் கொம்பனுக்கும் இல்லை.

இப்படிச் சொல்லியும் கேட்காமல், நாங்கள் பிடித்த  முயலுக்கு 3 கால்கள் என்று அடம்பிடிப்பார்கள் என்றால்… நம் நாட்டின் உன்னதக் கலைஞனான காலஞ்சென்ற பி.ரம்லி அவர்கள், செனிமான் பூஜாங் லாபோக் (SENIMAN BUJANG LAPOK – 1961) படத்தில் அறிவுரையாக சொன்ன ஒரு வசனத்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறேன். அதைப் படித்தாவது அவர்கள் தங்களையே உணர்ந்துக் கொள்ளட்டும்…

“பஹாசா மெனுன்ஜுக்கான் பங்சா”

“BAHASA MENUNJUKKAN BANGSA”

(நீங்கள் உச்சரிக்கின்ற வார்த்தையே உங்கள் இனத்தின் அடையாளத்தைக் காட்டுகிறது)

இதைவிடவா வேறு தெளிவான சாட்டையடி வேண்டும்?

THE SHINING (1980)

1980ஆம் ஆண்டு, பிரபல இயக்குநர் Stanley Kubrick அவர்களால் Stephen King எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட The Shining, இது வரை வெளிவந்த பிரபல திகில் படங்களின் வரிசையில் இன்றைக்கும் பல ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் படமான விளங்குகிறது.

நகரிலிருந்து தனித்திருக்கின்ற Overlook தங்கும் விடுதியை குளிர்காலம் முடியும் வரை கவனித்துக் கொள்கின்ற பொறுப்பாளர் வேலைக்கு Jack Torrance (Jack Nicholson) என்ற எழுத்தாளர் விண்ணப்பிக்கிறார். அந்த வேலை அவருக்கே தரப்படுகிறது. ஆனாலும் அந்த விடுதியின் மேலாளர் அங்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஓர் சம்பவத்தைப் பற்றி விவரித்து எழுத்தாளரை எச்சரிக்கை செய்கிறார். எழுத்தாளருக்கோ, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நழுவ விட மனமில்லை. ஆகவே எல்லாவற்றையும் தான் சமாளித்துக் கொள்வதாக சொல்கிறார். எழுத்தாளருடன் அவரது மனைவி Wendy (Shelley Duvall) யும் மகன் Danny (Danny Llyod) யும் அங்கே தங்க வருகிறார்கள்.

ஐந்து மாதங்கள் நீடிக்கும் அந்த குளிர்காலத்தில் இந்த மூவரைத் தவிர அங்கே யாரும் வர மாட்டார்கள் என்பதும் அவர்களுக்கு சொல்லப்படுகிறது. ஏதாவது ஆபத்து அவசரம் என்றால் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு தெரிவித்தால் உதவி கிடைக்கும் என்று மட்டும் சொல்லிவிட்டு அனைவரும் கிளம்புகிறார்கள்.

ஆரம்பத்தில் அந்த சூழல், வாழ்க்கை முறை எல்லாமே நன்றாகவே இருக்கிறது. ஆனால் போகப் போக அனைத்தும் தலைகீழாக மாறத் தொடங்குகிறது. இயற்கையாகவே Danny க்கு எதிர்காலத்தைப் பற்றியும் இறந்த காலத்தைப் பற்றியும் ஓரளவுக்கு கணிக்க முடிகிற சக்தி இருக்கிறது. அந்த தங்கும் விடுதியில் இருக்கின்ற பிரச்னை குறித்தும் பின்னர் நடக்கப் போகின்ற விபரீதம் பற்றியும் அவன் முன்கூட்டியே உணர்கிறான்.

அதே சமயத்தில், அமைதியை நாடி வந்த எழுத்தாளரின் செய்கைகள் நாளுக்கு நாள் விவகாரமாகவும் மூர்க்கத்தனமாகவும் மாறிக் கொண்டே வருவதைக் கவனிக்கும் அவரது மனைவி, எழுத்தாளரை ஓர் அறையில் பூட்டி வைக்கிறார். அத்துடன் அந்த விடுதியை விட்டு தப்பிக்கவும் முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? எழுத்தாளருக்கு என்னதான் பிரச்னை? அங்கே பல வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கான பதில்தான் மீதிப் படம்.

இந்தப் படம் வெளிவந்து 30 வருடங்கள் ஓடி விட்டது. இருந்தாலும் படம் பார்க்கும்போது ஏற்படும் திகில் அந்த குளிர்காலம் போலவே குளிர்ச்சியில் உறைந்துக் கிடக்கிறது. இந்த படத்தைப் பற்றிய விமர்சனங்களை படித்தபோது ஒன்றை புரிந்துக் கொள்ள முடிந்தது. படம் வெளிவந்த புதிதில், இந்தப் படம் இன்னும் 30 வருடங்கள் கழித்தும் பேசப்படப் போகிறது என்று யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. டிவிடியில் கிடைத்தால் நிச்சயம் வாங்கிப் பாருங்கள். அருமையான திகில் படம்.