Monthly Archives: ஜூன் 2010

EDGE OF DARKNESS (2010)

தந்தையர் தின ஸ்பெஷலாக தந்தை பாசம் குறித்த இன்னொரு படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு Mel Gibson நடிப்பில் வெளிவந்துள்ளது.

1985ஆம் ஆண்டில் பிபிசி தொலைக்காட்சியில் ஒளியேறிய தொடரைத் தழுவி இயக்குநர் Martin Campbell இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். Taken படத்தைப் போன்று விறுவிறுப்பாக நகரும் கதையாக இல்லாவிட்டாலும் படத்தில்
 திருப்பங்களுக்கு பஞ்சமில்லை.

பாஸ்டன் நகரில் ஆட்கொலை துப்பறிவாளராக (Homicide Detective) பணியாற்றி வருகிறார் Thomas Craven. விடுமுறையில் அவரைக் காண வரும் மகள் Emma Craven, உடல் நலக்குறைவுடன் இருக்கிறாள். தீடீரென மூக்கிலிருந்து ரத்தம் வழிய, வாந்தி எடுக்கும் Emma தந்தையிடம் ஒன்றை சொல்லாமல் மறைத்து விட்டதாக கூறுகிறாள். அதே நேரத்தில் வீட்டு வாசலிலேயே அவளை யாரோ சுட்டு விடுகிறார்கள். தந்தையின் கரங்களிலேயே Emma இறந்து போகிறாள். Thomas Craven தன் கண்முன்னே நடந்த சம்பவத்தைக் கண்டு மனதளவில் நொறுங்கிப் போகிறார்.

சம்பவத்தை கேள்வியுற்று வருகின்ற அனைத்து போலீஸ் நண்பர்களுமே Thomas Craven மீது வைக்கப்பட்ட குறிதான் தவறி, Emma மீது பட்டுவிட்டதாக சொல்கின்றனர். ஆனால் மகளின் அறையை சுத்தம் செய்யும் Thomas Craven ஒரு கைத்துப்பாக்கியை கண்டெடுக்கிறார். இதன் மூலமாக தனிப்பட்ட வகையில் தன் மகளுக்கு ஏதேனும் பிரச்னை இருந்திருக்குமோ என்று அவர் போலீஸ் மூளை சிந்திக்க தொடங்குகிறது. முதலில் அந்த கைத்துப்பாக்கிக்கு சொந்தமான நபரை தேடிப் பிடிக்கும் Thomas Craven, தொடர்ந்து அப்படியே மகள் வேலை செய்த நிறுவனத்தின் உயரதிகாரி வரை விசாரிக்க தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் Thomas Cravanனுக்கு தன் மகளின் கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதும் அவள் உடல் நலக்குறைவுக்கு காரணம் என்ன என்பதும் தெரிந்து விடுகிறது. அதோடு இதையெல்லாம் அவர்கள் எதற்காக செய்கிறார்கள் என்பதும் புலனாகிறது. அதிகாரத்தோடும் பணத்தோடும் போராட வேண்டிய நிலையில் தானிருப்பதை உணரும் Thomas Craven, சட்டத்தின் பிடியில் அனைவரையும் கொண்டு வருவதற்கான ஆதாரங்களை திரட்டத் தொடங்குகிறார். இந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா? மகள் கொலைக்கு காரணமான ஆதாரங்கள் அவருக்கு கிடைத்ததா? மகளைக் கொன்றவர்களை அவரால் தண்டிக்க முடிந்ததா? என்பதுதான் மீதிப் படம்.

பாசமான தந்தையாக நடித்திருக்கும் Mel Gibson இறந்து போன தன் மகளுடன் பேசிக் கொள்வதாக காட்டப்படும் காட்சிகள் மற்றும்  சிறு வயதில் அவள் செய்த குறும்புகளை நினைத்துப் பார்ப்பதாக வரும் காட்சிகள் அனைத்துமே மனம் கலங்க வைப்பவை. அதிலும் மகளின் அஸ்தியை சிறுவயதில் அவள் துள்ளி விளையாடிய கடலில் கரைக்கும் போது வெளிப்படுத்தும் முகபாவனைகள், மறக்க முடியாதவை. படத்தின் இறுதியில் வரும் மருத்துவமனை காட்சி, மனதிலேயே தங்கிவிடும் ஹாக்கூ கவிதை. பார்க்க வேண்டிய படம்.

ராவணன் (2010)

எல்லாருக்கும் தெரிந்த ராமாயணக் கதை. தளபதி படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு திரைக்கதை அமைத்த மணிரத்னம், இதில் அதிலிருந்து கொஞ்சம் விலகி, ராமாயணத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தையும் உலவ விட்டிருக்கிறார். மாறுபட்ட பெயர்கள் என்றாலும் குறியீட்டின் மூலம் அதை நமக்கு உணர்த்தவும் முற்பட்டிருக்கிறார். அதை விளக்க கார்த்திக் செய்யும் குரங்குச் சேட்டையே போதுமானது. கூடவே தனது டிரேட் மார்க் சிந்தனையின் அடையாளமாக ராவணனை படத்தின் ஹீரோவாக காட்டியிருக்கிறார்.

வீராவாக (விக்ரம்) வரும் ராவணன் ஹீரோ என்றால் ராமன்? வில்லனாக காட்ட வேண்டும். காட்டியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வருகின்ற தேவ்தான் (ப்ரித்திவிராஜ்) இந்தக் கதைக்கு வில்லன். சீதையாக வரும் ராகினி (ஐஸ்வர்யாராய்) கணவனின் அன்புக்கும் வீராவின் காதலுக்குமிடையில் மாட்டிக் கொண்டு திண்டாடும் பெண்ணாக நடித்திருக்கிறார்.

ஊருக்கு நல்லவனாகவும் போலீசுக்கு கெட்டவனாகவும் வாழ்ந்து வரும் வீராவை கைது செய்ய துடிப்பான போலீஸ் அதிகாரி தேவ் முனைகிறார். அதில் ஏற்படும் அமளிதுமளியில் வீராவின் தங்கையை (ப்ரியாமணி) சில போலீஸ் அதிகாரிகள் கெடுத்துவிட, அவர் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொள்கிறார். தங்கைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிக்கு பழி வாங்க பொங்கி எழும் வீரா, தேவ்வின் மனைவியை கடத்தி வந்து கொல்ல முடிவெடுக்கிறான். ஆனாலும் ராகினியின் அழகு அவனை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து விடுகிறது. இதற்கிடையில் தன் மனைவியை கடத்திக் கொண்டு போன வீராவை வேட்டையாட படை பரிவாரங்களோடு காட்டுக்குள் நுழைகிறார் தேவ். ராகினி மீது வீராவிற்கு ஏற்படுகின்ற காதலும், வீரா மீது மெதுவாக ராகினிக்கு ஏற்படுகின்ற ஈர்ப்பும் அதன் பின் வீரா-தேவ் ஆகியோருக்கிடையில் நடக்கும் உச்சக்கட்ட போராட்டமும்தான் படத்தின் கதை.

படத்தின் பலமாக ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் சந்தோஷ் சிவன் – மணிகண்டன் கூட்டணியில் அமைந்த ஒளிப்பதிவு என்று தாராளமாக சொல்லலாம். கூடவே விக்ரமும் தன் பங்குக்கு வீராவாக வாழ்ந்து அசத்தியிருக்கிறார். மணிரத்னம் படங்களில் வசனங்கள் நச்சென்று இருக்கும். இந்தப் படம் அதற்கு விதிவிலக்காக இருந்தாலும் ரசிக்க முடிகிறது. வசனம் சுஹாசினி மணிரத்னம். பொதுவாக பாடல் காட்சியமைப்புகளில் தனி கவனம் செலுத்தும் மணிரத்னம், ஏனோ ஆர்வமாக எதிர்பார்த்த ‘உசுரே போகுது’ பாடலை மட்டும் கண்டுக் கொள்ளாமல் விட்டு விட்டார்.  ராகினியின் மீது வீராவிற்கு ஏற்படுகின்ற காதலை சொல்லுகின்ற பாடலில் கொஞ்சம் அழுத்தம் கூட்டியிருக்கலாம். பாடல் வரிகளில் இருக்கின்ற வேகம், காட்சியமைப்பில் இல்லை. ஆனாலும் படத்தின் இறுதியில் வருகின்ற – ஆடியோ சிடியில் இடம்பெறாத

நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னைத் தொடர்வேன்
உயிரால் தொடுவேன்

பாடல் இந்தக் குறையை சமன் செய்வதோடு மனதிலும் ஒட்டிக் கொள்கிறது. வீராவின் அண்ணனாக பிரபு நடித்திருக்கிறார். இவரது மனைவியாக ரஞ்சிதா. படத்தில் ரஞ்சிதா தோன்றுகிற போதெல்லாம் “நித்தியானந்தா சுவாமி” என்று இளைஞர்கள் கூச்சலிடுகிறார்கள். இறுதிக் காட்சிக்குப் பிறகு ராகினி எடுத்த முடிவு என்ன என்பதையும் காட்டியிருக்கலாம். சில குறைகள் இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதைக்காக கண்டிப்பாக பார்க்கலாம். ஏமாற்றம் தரவில்லை. ஆனாலும் திருமணமான ஆண்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பார்களா என்பது சந்தேகமே!

உலகக் கிண்ண ஆட்டங்கள் இதுவரை….

உலகக் கிண்ண போட்டியில் இடம்பெற்ற அனைத்து பிரிவுக்குமான முதல் ஆட்டங்கள் நேற்றோடு முடிந்து விட்டன. இந்த முறை பெரிய அதிர்ச்சியைத் தந்த ஆட்டங்களாகவும் அவை திகழ்கின்றன. பெரிய குழுக்கள் பலவும் மண்ணைக் கவ்வ, இவை தேறாது என்று வர்ணிக்கப்பட்ட குழுக்கள் அடித்த அடியில் பெரிய குழுக்களின் பயிற்றுனர்கள் பலர் கலங்கிப் போய் கிடக்கிறார்கள்.  அர்ஜெண்டினா, ஜெர்மனி, பிரேசில் மற்றும் நெதர்லாந்து (ஹாலந்து) தவிர மற்ற அனைத்து பெரிய குழுக்களும் சமநிலை அல்லது தோல்வியோடு தங்களது முதல் ஆட்டங்களை முடித்துக் கொண்டது உலக கால்பந்து ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியே. அதிலும் பல கால்பந்து விமர்சகர்களால் இந்த முறை உலகக் கிண்ணத்தை வெல்லுமென ஆருடம் கூறப்பட்ட  ஸ்பெய்ன் 1-0 என்ற கோல் கணக்கில் நேற்றிரவு சுவிஸ்சர்லாந்திடம் வீழ்ந்தது.

ஏ பிரிவு – ஃப்ரான்ஸ்
உலகக் கிண்ண தேர்வாட்டத்தின் போது சர்ச்சைக்குரிய ஆட்டக்காரராக கருதப்பட்ட தியரி ஹென்றி தலைமையில் களமிறங்கிய ஃப்ரான்ஸ் தனது முதல் ஆட்டத்தில் உருகுவே குழுவுடன் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது. தனது அடுத்த ஆட்டத்தில் மெக்சிகோவுடன் மோதவிருக்கும் ஃப்ரான்ஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலும் இருக்கிறது. அதே கட்டாய நிலையில் மெக்சிகோவும் இருப்பதால் பரபரப்பான மோதலாக இது அமையும் என்பது திண்ணம். இந்த பிரிவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் குழு பராகுவே.

பி பிரிவு – அர்ஜெண்டினா
உலக கிண்ண கால்பந்து போட்டியில் கோல் மன்னன் மெசியின் மெஸ்மெரிஸத்தால் அதிரடி படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா, “தலை தப்பியது மரடோனா புண்ணியம்” என்ற வகையில் 1-0 கோல் கணக்கில்தான் நைஜீரியாவை வீழ்த்தியது. அதே சமயம் இன்று தென்கொரியாவுடன் நடத்தவிருக்கும் பலப்பரீட்சையில் அர்ஜெண்டினா என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. வெற்றி பெற கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் அர்ஜெண்டினா இருப்பதாகவே இப்போதைக்கு சொல்ல முடியும். இப்பிரிவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் குழு தென்கொரியா.

சி பிரிவு – இங்கிலாந்து
பல நட்சத்திர ஆட்டக்காரர்களை கொண்ட குழுவாக திகழும் இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் 1-1 என்ற நிலையில் அமெரிக்காவுடன் சமநிலை கண்டது. இங்கிலாந்தைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய சறுக்கல். உலகக் கிண்ணத்தில் அடிக்கடி இப்படி சறுக்கி விழுவது இங்கிலாந்திற்கு புதிதல்ல என்றாலும் பயிற்றுனர் ஃபாபியோ காபெல்லோவின் மீது அனைத்து இங்கிலாந்து ரசிகர்களும் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். வெய்னி ரூனி, ஸ்டீவன் ஜெரால்ட், ஜோன் டெர்ரி, ஃப்ராங்க் லம்பார்ட் போன்ற 4 முக்கிய தளபதிகள் கொண்டிருந்த இங்கிலாந்து கோல் காவலர் செய்த தவறால் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. அல்ஜீரியாவுடனான தனது அடுத்த ஆட்டத்தில் வெற்ற பெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையிலும் இப்போது இங்கிலாந்து இருக்கின்றது. இப்பிரிவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் குழு ஸ்லோவெனியா.

டி பிரிவு – ஜெர்மனி
ஜெர்மனியைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. முதல் ஆட்டத்திலேயே ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கோல் கணக்கில் அடித்து துவைத்து காயப் போட்டிருக்கிறார்கள். செர்பியாவுடனான அடுத்த ஆட்டத்திலும் சுலபமாக 3 புள்ளிகள் பெறுவார்கள் என தாராளமாக நம்பலாம். ஜெர்மனியின் முதல் ஆட்டத்தை கண்ணுற்ற அனைவருமே அக்குழுவின் கட்டுக்கோப்பான நேர்மையான விளையாட்டை பாராட்டியுள்ளனர். இந்தப் பிரிவின் கலக்கல் குழு ஜெர்மனிதான். ஆனாலும் கானா மீது கொஞ்சம் கவனம் செலுத்துவதும் அவசியம்.

ஈ பிரிவு – நெதர்லாந்து
முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியிருக்கிறார்கள். ஆனாலும் அடுத்த ஆட்டம் ஜப்பானுடன் என்பதால் விழிப்புடன் இருப்பது அவசியம். கொஞ்சம் அசந்தாலும் ஜப்பான் வெற்றிக்கனியை தட்டிக் கொண்டு போய்விடும். இலகுவான முறையில் காலிறுதி ஆட்டத்திற்கு தேர்வுபெற வேண்டுமானால் ஜப்பானை வீழ்த்தியே ஆக வேண்டும். பார்க்கலாம். நெதர்லாந்தும் ஜப்பானும் தலா மூன்று புள்ளிகளை கைவசம் கொண்டிருப்பதால் கலக்கல் குழுவென்று இப்பிரிவில் தனியாக எதனையும் சொல்ல முடியாது.

எஃப் பிரிவு – இத்தாலி
உலகச் சாம்பியன் என்ற கௌரவத்தோடு வந்த இத்தாலி, பராகுவேயுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டுள்ளது. அடுத்த ஆட்டம் நியூசிலாந்துடன் என்பதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனாலும் அதற்கு உலகச் சாம்பியன் என்ற கௌரவப் பெயர் மட்டும் போதாது. இத்தாலி இன்னும் நிறைய முயற்சிக்க வேண்டியதிருக்கிறது. இந்தப் பிரிவில் உள்ள அனைத்து குழுக்களுமே தலா ஒரு புள்ளி பெற்றுள்ளன. 

ஜி பிரிவு – பிரேசில்
மரணப் பிரிவு என்று வர்ணிக்கப்படும் இப்பிரிவில் பிரேசிலோடு போர்த்துகலும் இருக்கிறது. இந்த இரண்டு குழுவிற்கும் தலைவலி கொடுப்பதற்கெனவே ஐவரி கோஸ்ட் மற்றும் வடகொரியா இருக்கின்றன. பிரேசில் கால்பந்து உலகில் தவிர்க்க முடியாத நாடு. சம்பா வகையிலான அவர்களது ஆட்ட முறை அனைவரையும் மயக்கக் கூடியது. அதிலும் புதுப்புது பாணியில் பந்தை கையாளும் திறன் அவர்களுக்கு இயற்கையிலேயே இருக்கிறது. அதற்கு வடகொரியாவுடனான ஆட்டத்தின் போது மைக்கோன் அடித்த இரண்டாவது கோல்தான் சாட்சி. பனானா கிக் என செல்லப் பெயர் கொடுத்து காற்பந்து ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த கோலை. இருந்தாலும் ஜுன் 25ஆம் தேதி போர்த்துகலுடன் நடைபெறவிருக்கின்ற ஆட்டம்தான் இந்தப் பிரிவின் உச்சக்கட்ட ஆட்டம். இப்பிரிவின் கலக்கல் குழு எதுவென்பதை தனியாக சொல்ல வேண்டுமா?

ஹெச் பிரிவு – ஸ்பெய்ன்
பல முக்கிய தலைகளால் உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று ஆருடம் சொல்லப்பட்ட நாடு. முதல் ஆட்டத்தில் பரிதாபமாக மண்ணைக் கவ்வி இருக்கிறது. ஹோண்டுராஸ் மற்றும் சில்லி இரண்டையும் வீழ்த்தினால் காலரை தூக்கி விட்டுக் கொண்டு காலிறுதி ஆட்டத்திற்கு ஸ்பெய்ன் தகுதி பெறலாம். இதில் ஒன்றில் தோல்வியைத் தழுவினாலும் சொந்த நாட்டுக்கு கப்பல் ஏறுவதை தவிர ஸ்பெய்னுக்கு வேறு வழியில்லை. இந்தப் பிரிவின் கலக்கல் குழு சில்லிதான்.

**மேற்கண்ட அனைத்தும் முதல் ஆட்டம் முடிந்து தொகுக்கப்பட்ட நிலவரம். சவூத் ஆப்ரிக்கா உருகுவே நீங்கலாக இதர குழுக்கள் அனைத்திற்குமே இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. அதில் பிரிவு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் குழுக்கள் மட்டுமே காலிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும்.

FLAWLESS (2007)

Michael Cain மற்றும் Demi Moore நடித்து, இயக்குநர் Michael Radford இயக்கிய இந்த க்ரைம் திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒரு வைர நிறுவனத்தில் நடந்த கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சினிமா விமர்சகர்களின் நல்ல மதிப்பையும் பெற்றுள்ளது.

 பல்வேறு துறைகளில் மிளிரும் பெண்களை காட்டியபடியே தொடங்கும் இந்தப்படம், மெதுவாக ஒரு பெண்ணை மட்டும் தொடர்ந்து சென்று ஓர் உணவகத்தில் நிலைக்கிறது. தன்னுடைய பத்திரிகையில் வெளிவருகின்ற பெண்கள் சம்பந்தப்பட்ட அங்கத்திற்காக 1950-60ஆம் ஆண்டுகளில் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வைர வர்த்தக நிறுவனம் ஒன்றில் நிர்வாகியாக பதவி வகித்த பெருமைக்குரிய Laura Quinn என்ற வயதான ஒரு பெண்ணை அந்த பெண் நிருபர் பேட்டியெடுக்க தொடங்குவதிலிருந்து படம் தொடங்குகிறது. அத்துடன் Laura Quinn பார்வையிலிருந்தே படத்தின் கதை விரிவடைகிறது.

 1950-60ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் மிகப் பெரிய வைர நிறுவனமாக திகழந்த டைமண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் நிர்வாகியாக பதவி வகித்தவர் Laura Quinn. காலையில் வேலைக்கு முதல் ஆளாக வருவது தொடங்கி தன் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தன்னையே தேய்த்து உருக்கி உழைப்பதற்கு தயங்காத பெண்தான் Laura. அவளுடன் இணைந்து வேலை செய்த ஆண்களோடு ஒப்பிட்டால் Lauraவின் அறிவும் ஆற்றலும் மேம்பட்டவை, ஆனாலும் அவளது உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிட்டாமலேயே போகிறது. ஆறு முறை அப்படி அவள் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படாமல் உதாசீனப்படுத்தப்படுகிறாள். ஒரு கட்டத்தில் ரஷ்யர்களால் தனது நிறுவனத்திற்கு ஏற்படவிருந்த நஷ்டத்திலிருந்து தனது சமயோசித அறிவால் தீர்வு காண ஆலோசனை தருகிறாள். ஆனாலும் அவரை வேலையை விட்டு நீக்க நிறுவனம் முடிவெடுக்கிறது.

அந்த விஷயத்தைக் கூட மாலையில் அவளது அலுவலகத்தை சுத்தப்படுத்த வரும் Mr.Hobbs என்றவரிடமிருந்து அறியும் Laura கொதித்துப் போகிறார். தன்னுடைய உழைப்பை நிறுவனத்தினர் அங்கீகரிக்கா விட்டாலும் பரவாயில்லை. இப்படி மாடாக உழைத்தும் தன்னை தூக்கி வீச தயாராகி விட்டார்களே என்ற ஏமாற்றம் அவளைப் பாடாய் படுத்துகிறது. ஒரு சமயம் Lauraவைத் தன்னை தனியே வந்து சந்திக்கும்படி குறிப்பு அனுப்பும் Mr.Hobbs , Lauraவைச் சந்திக்கும் வேளையில் வைர நிறுவனத்தை கொள்ளையடிக்க தாம் திட்டமிட்டிருப்பது குறித்து விவரிக்கிறார். ஆரம்பத்தில் Laura இதனை மறுத்தாலும் தன் நிறுவன மேலதிகாரிகளுக்கு சரியான தண்டனை தரும் வகையிலும் ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவும் இதற்கு ஒத்துழைக்க சம்மதிக்கிறார். தங்களுடைய தேவைக்கு ஏற்ற ஆனாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கே வைரத்தை எடுக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்கின்றனர்.

எதை எப்படிச் செய்வது என்ற சரியான திட்டமிடலுடன் மறுநாள் அலுவலகத்திற்கு வரும் Laura, புதிதாக தன் அலுவலகத்தில் பொருத்தப்படும் ரகசிய கேமராக்களைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். ஒரு சின்ன தவறும் தன்னை காட்டிக் கொடுத்து விடும் என்பதால் Mr.Hobbsசிடம் அந்த கொள்ளையடிக்கும் திட்டத்தை கைவிட்டு விடும்படி சொல்கிறாள். ஆனாலும் Mr.Hobbs அதனை கேட்பதாக இல்லை. மாறாக எல்லாவற்றையும் தான் சமாளித்துக் கொள்வதாக Lauraவிடம் கூறுகிறார். ஆரம்பத்தில் இருவருடைய தேவைக்கு ஏற்ற வகையில் மட்டுமே கொள்ளையடிக்க ஒப்புக் கொண்ட Mr.Hobbs, அந்த நிறுவத்தின் கையிருப்பில் இருந்த அத்தனை வைரங்களையும் மொத்தமாக கொள்ளையடித்து விட, நிலைமை மோசமாகி விடுகிறது.

இதனால் கடுமையான ஆத்திரமுறும் Laura, Mr.Hobbsசிடம் சண்டையிடுகிறாள். நிறுவனத்தில் நடந்த கொள்ளையைப் பற்றி விசாரிக்க தனியொரு அதிகாரி நியமிக்கப்படுகிறார். பல்வேறு கட்டங்களில் நடத்தப்படும் சோதனையிலிருந்து Lauraவும் Mr.Hobbsசும் தப்பினார்களா? இறுதியில் அவர்களின் நிலை என்ன என்பதுதான் இதயத் துடிப்பை எகிற வைக்கும் மீதிப்படம்.

ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து கொள்ளையைப் பற்றி விவரிக்கும் இந்த கதை பார்ப்பதற்கு புதிதாகவே இருக்கிறது. ஏதையும் திட்டமிடுது சுலபம்தான். ஆனால் அந்த திட்டத்தில் ஏதேனும் கோளாறு நிகழும்போது ஏற்படும் பயம் கலந்த பரபரப்புதான் குற்றவாளிகள் மாட்டிக் கொள்வதற்கான அஸ்திவாரமாகிறது. தன்னை சுற்றி துப்பறிவாளரின் பிடி நெருங்கி வருவதை உணர்ந்து Laura ஆக நடித்திருக்கும் Demi Moore காட்டும் முக பாவனைகள் அபாரமானவை. அதே சமயத்தில் வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டு வந்து நிற்கும் பாத்திரத்தை அலட்டலே இல்லாமே செய்திருக்கிறார் Michael Cain. படத்தின் முடிவு நெகிழ்ச்சி தரக்கூடியது. பார்க்க வேண்டிய படம்.