Monthly Archives: ஜூன் 2011

INSIDIOUS (2011)

Renai-Josh Lambert தம்பதி, புதிய வீட்டில் தங்களது மூன்று பிள்ளைகளுடன் குடியேறுகிறார்கள். ஒரு நாள் இவர்களின் மூத்த மகன் Dalton வீட்டின் மாடியில் அமைந்திருக்கும் ஓர் அறைக்குச் செல்கிறான். விளக்கை போடுவதற்காக படியில் ஏறும்போது கால் சறுக்கி கீழே விழுந்து விடுகிறான். ஆரம்பத்தில் மகனுக்கு காயமேதும் ஏற்படவில்லையென Renai – Josh  சமாதானமடைந்தாலும்.. மறுநாள் காலையில் அவனை எழுப்பும்போது Dalton அசைவின்றி கிடப்பதை கண்டு திடுக்கிடுகின்றனர். மருத்துவர்களோ அவன் காரணமே சொல்ல முடியாத கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

 மூன்று மாதங்களுக்குப் பிறகும் Dalton கோமா நிலையிலிருந்து மீளாததைத் தொடர்ந்து Renai – Josh அவனை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அன்று தொடங்கி அந்த வீட்டில் தொல்லைத் தரும் பல்வேறு விசித்திர சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. இதுபற்றி Renai, Joshசிடம் சொல்கிறாள். சூழ்நிலையின் தீவிரத்தைப் புரிந்துக் கொள்ளும் Josh வேறு புதிய வீட்டிற்கு மாற்றலாகிச் செல்ல சம்மதிக்கிறான்.

புதிய வீட்டிலும் தொல்லை தரும், அச்சுறுத்தும் சம்பவங்கள் நடப்பது குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் பல குழப்பம் தரும் சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. அந்தச் சமயத்தில் அங்கு வரும் Joshசின் தாயார், அங்கு நடக்கும் சம்பவங்களை புரிந்துக் கொண்டு அதற்கு தீர்வு காணும் சக்தியுடைய தனது தோழியை அங்கு வரவழைக்கிறாள். தாயாரின் எண்ணத்திற்கு ஆரம்பத்தில் Josh தடை சொல்லாவிட்டாலும், முற்றிலுமாக அவன் எதையும் நம்பத் தயாராக இல்லை. ஆனாலும் தாயார் மற்றும் மனைவியின் வற்புறுத்தலின் போரில் மகனை கோமா நிலையிலிருந்து மீட்டெடுக்கக்கூடிய முயற்சிக்கு Josh சம்மதிக்கிறான். ஆபத்தும், தொல்லைகளும் நிறைந்த அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததா? தன்னுடைய மகனை அந்த தம்பதியினரால் காப்பாற்ற முடிந்ததா? Reina – Josh வீட்டில் நடந்த தொல்லைகளுக்கு காரணம் என்ன என்பதுதான் மீதிப்படம்.

திகில் மற்றும் மர்மம் நிறைந்த இந்தப் படத்தை Saw, Death Silent, Death Sentence போன்ற படங்களை எழுதி இயக்கிய James Wan இயக்கியுள்ளார். இவர் மலேசியா, சரவாக் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இப்போது 34 வயதுதான் ஆகிறது. ஆஸ்திரேலியா Royal Melbourne Institute of Technologyயில் படிக்கும்போது சந்தித்த Leigh Whannel என்பவரை தனது தொழில் பங்காளியாக்கிக் கொண்ட இவர் தனது சொந்த திரைக்கதையை மட்டுமே இதுவரை இயக்கி வந்துள்ளார். Saw II, Saw III, Saw IV, Saw V, Saw VI, Saw 3D போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

I SPIT ON YOUR GRAVE (2010)

பொதுவாக இது ஆணாதிக்க உலகம். ஆண் திமிர் இங்கே பெரும்பாலான ஆண்களிடம் விரவிக் கிடக்கிறது. பெண்களை வெறும் போகப் பொருளாகவே பார்த்துப் பழகிப் போனவர்களுக்கு அவர்களின் மென்மையான மனதும், நளினமான செயல்களையும் ரசிக்கத் தெரியாது. மாறாக அவர்களின் உடலும் சதையும் மட்டுமே தெரியும். வாய்ப்பு கிடைத்தால் அந்தப் பெண்ணை சீரழிக்கவும் தயங்க மாட்டார்கள். இதே போன்ற மனநிலை கொண்ட 5 ஆண்களிடம் ஒரு பெண் சிக்கினால் என்ன ஆகும்? அதுதான் I Spit On Your Grave படத்தின் கதை.

Jennifer Hills ஒரு நாவலாசியர். தனது இரண்டாவது நாவலை எழுத தனிமையான இடத்தை தேர்ந்தெடுக்கிறாள். ஒரு நாள் அவளது கழிவறைக் குழாயில் சின்ன பிரச்னை ஏற்படுகிறது. இது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் சொல்கிறாள். அவரும் பிரச்னையை சரி செய்ய ஒரு ஆளை அனுப்பி வைப்பதாக கூறுகிறார். குழாயைச் சரி செய்தவனை பாராட்டும் விதமாக, அவனுக்கு முத்தம் ஒன்றை கொடுக்கிறாள் Jennifer. அவனோ அந்த முத்தத்தை தப்பாக அர்த்தப்படுத்திக் கொள்கிறான். அதோடு அவள் முத்தம் கொடுத்தது பற்றி அவனது நண்பர்களிடமும் கூறுகிறான். உடனே அவர்கள் அவளொரு தவறான நடத்தைக் கொண்ட பெண் என்று நினைத்து இரவே அவளை சென்று பார்ப்பது என்று முடிவெடுக்கிறார்கள்.

இரவில் தன் வீட்டில் அத்துமீறி நுழையும் அவர்களை கண்டு Jennifer பயந்து போகிறாள். அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள போராடுகிறாள். ஒருவழியாக தப்பித்து அந்நகர ஷெரீப்பிடம் தஞ்சமடைகிறாள். ஆனால் ஷெரீப்பும் அந்த 4 பேருடன் சேர்ந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்கிறான். எங்கே உயிருடன் விட்டு வைத்தால் Jennifer எல்லாரையும் காட்டிக் கொடுத்து விடுவாளோ என்ற பயத்தில் அவளை கொல்ல அந்த ஜவரும் முடிவெடுக்கும் சமயத்தில், அவள் பக்கத்திலிருக்கும் ஆற்றில் குதித்து விடுகிறாள். கிட்டத்தட்ட அவள் இறந்து விட்டதாகவே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் சமயத்தில்.. அந்த ஜவரும் அவளால் பழிவாங்கப்படுகின்றனர்.

இந்தப் படம் 1978ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த படத்தின் ரீமேக் என்றாலும் பழிவாங்கும் காட்சிகள் கொஞ்சம் மெருகேற்றப்பட்டிருக்கின்றன. இதே போன்ற கதையைக் கொண்டதுதான் ஏற்கனவே நான் எழுதியிருந்த The Last On The Left படம். ஆனால் அந்த படத்தில் பெற்ற தந்தையும் தாயும் பெண்ணை சீரழித்தவர்களை பழிவாங்குவார்கள். இதிலோ பாதிக்கப்பட்ட பெண்ணே தன்னை கெடுத்தவர்களை பழிவாங்குகிறாள். அதுவும் மிகக் கொடூரமாக அவர்களை தண்டிக்கிறாள். தன்னை கதறக்-கதறக் கெடுத்தவர்களை அந்தப் பெண் பழிவாங்கும் போது நமக்கு அதிர்ச்சியே ஏற்படவில்லை. மாறாக மனநிறைவு மட்டுமே ஏற்படுவது படத்தின் மிகப்பெரிய பலம். கமல்ஹாசன் “உன்னைப்போல் ஒருவன்” படத்தில் சொல்வதுபோல் வன்முறைக்கு வன்முறையே தீர்வு என அழுத்தந்திருத்தமாக கூறிருக்கும் திரைக்கதை. தவிர பெண்ணால் ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்றும் உரக்கச் சொல்லியிருக்கும் படம்.

OLDBOY (2003)

Oh Dae  Su ஒரு தொழிலதிபர். அவளது மகளின் பிறந்தநாளின் போது அவன் கடத்தப்படுகிறான். அன்றிலிருந்து 15 வருடங்களுக்கு தனியொரு அறையில் அவன் சிறை வைக்கப்படுகிறான். மனித தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சி மட்டுமே அவனுக்கு துணையாக இருக்கிறது. தொலைக்காட்சி வழியாக தனது மனைவி கொல்லப்பட்டதையும் மகள் தத்துக் கொடுக்கப்பட்டதையும் தெரிந்துக் கொள்கிறான். அந்தச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 15 வருடங்களும் அவனுக்கு உணவாக பொறித்த டம்ப்ளிங் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

ஒரு நாள், ஓர் உயரமான கட்டிடத்தின் மேல் மாடியில் Oh Dae Su விடுவிக்கப்படுகிறான். கூடவே ஒரு கைத்தொலைபேசியும் கொஞ்சம் பணமும் அவனுக்கு இன்னொரு மனிதன் மூலமாக கொடுக்கப்படுகிறது. 15 வருடங்களாக தன்னை காரணமே இல்லாமல் ஒரே இடத்தில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய அந்த மர்ம மனிதனை பழிவாங்க கிளம்புகிறான் Oh Dae Su.

உணவகம் ஒன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் Mi-Do என்பவளுடன் Oh Dae Su விற்கு பழக்கம் ஏற்படுகிறது. அதே சமயத்தில் Oh Dae Su வை தொடர்பு கொள்ளும் அந்த மர்ம மனிதன்.. இன்னும் 5 நாட்களுக்குள் அவனைத் தேடி வராவிட்டால் Mi-Do வைக் கொலை செய்யப்போவதாக மிரட்டுகிறான். ஒருவழியாக தன்னைக் கடத்தியவனை தேடிப்பிடிக்கும் Oh Dae Sue, அவனைப் பழிவாங்குவதற்குப் பதிலாக அவனிடம் கெஞ்சத் தொடங்குகிறான்.. Oh Dae Sue விடம் ஏற்பட்ட மனமாற்றத்திற்கு காரணம் என்ன? அவனை ஏன் அந்த மர்ம மனிதன் 15 வருடங்கள் அடைத்து வைத்திருந்தான்? போன்ற பல கேள்விகளுக்கு பதில் படத்தில் இருக்கிறது.

பொதுவாக பழிவாங்கும் உணர்ச்சி நம்மில் பலருக்கு இருக்கிறது. இந்தப் படத்தில் வருகின்ற அந்த மர்ம மனிதன் தனக்கு ஏற்பட்ட இழப்பை, அதை ஏற்படுத்தியவனும் அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இப்படியொரு தண்டனையை தேர்ந்தெடுக்கிறான். 15 வருடங்கள் என்பது மிக நீண்டதொரு காலம்தான். அவன் நினைத்திருந்தால் 2 நிமிடங்களில் மிகக் கொடூரமாக சித்ரவதை செய்து Oh Dae Sue வைக் கொன்றிருக்க முடியும். ஆனால் ஏன் அவன் இப்படியொரு வழியைத் தேர்ந்தெடுத்தான் என்பதில் தொடங்கி.. Oh Dae Sue வை பழிவாங்குவதற்காக காரணம் வரை எல்லாமே நம்மை புரட்டி போடும் விஷயங்கள்.

படத்தின் கதையை ஜீரணிப்பதற்கு நிறையவே கஷ்டமாக இருந்தாலும் வாழ்க்கை எப்போதும் கற்பனைக்கு அற்பாற்பட்ட புதிர்களை உள்ளடக்கியது என்கிற நிஜத்தையும் அப்படியே ஒதுக்கிவிட முடியவில்லை. அந்த வகையில் இதுவொரு முக்கியமான படமாகிறது. உலக சினிமா விமர்சகர்களால் பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்ட இந்த தென் கொரிய படத்தை இயக்கியவர் Park Chan Wook. சினிமாவை நேசிப்பவர்கள்  கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

** இந்த படம் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் 2006ஆம் ஆண்டு ஜிந்தா (ZINDA) என்ற பெயரில் வெளிவந்தது. படத்தின் கதையில் சில மாற்றங்களைச் செய்து இந்திய சினிமாவிற்கு ஏற்ற வகையில் இயக்கி இருந்தார் இயக்குநர் சஞ்சய் குப்தா.