Monthly Archives: ஜனவரி 2011

உங்கள் ஓட்டு யாருக்கு?

2008ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் பல சுயேட்சை மற்றும் மக்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். மாற்றத்தை விரும்பியே அவர்கள் இதனைச் செய்தார்கள். குறிப்பிட்ட நபர் வெற்றிப் பெற வேண்டும் ஒற்றை நோக்கத்திற்காக மட்டும் மக்கள் ஓட்டுப் போடவில்லை. ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் மீது நம்பிக்கை வைத்தே மக்கள் ஓட்டளித்தார்கள். ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக மாறி வருகிறது. மக்கள் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் விருப்பதற்கு ஏற்றாற்போல தாங்கள் சார்ந்துள்ள கட்சியை விட்டு விலகி வருகிறார்கள். இன்று மக்கள் கூட்டணி அரசாங்கத்தை விமர்சிக்கும் இவர்கள்… நேற்று அதே மக்கள் கூட்டணி பேனரில் நின்று தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக கூச்சலிட்டவர்கள்தாம்.

மக்கள் கூட்டணியோ… தேசிய முன்னணியோ.. எதுவாக இருந்தாலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதி முழுதாக நிறைவேற்றப்படப் போவதில்லை. காரணம்  தங்களது அரசியல் லாபத்தை மட்டுமே முன்னிறுத்தி அரசியலில் குதிக்கும் பச்சோந்திகள் இப்போது  ஏகத்தும் பெருகிக் கிடக்கிறார்கள். இது காரமான விமர்சனமாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நேற்று ஒரு கட்சி, இன்று ஒரு கட்சியென என மாறி மாறி பேசுபவர்களால் என்ன நன்மையைக் கொண்டு வந்துவிட முடியும்?

இதைச் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.. அதை நிறைவேற்றத் தவறி விட்டார்கள் என்று கட்சியை விட்டு விலகக்கூடாது. மாறாக.. மக்கள் தங்களுக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையையும் விட்டு விலக வேண்டும். வாக்களித்த எல்லாரையும் கேனைப் பயல்கள் என்று நினைக்கின்ற அரசியல்வாதிகள்தான் இப்படி நடந்துக் கொள்வார்கள். ஒரு காலத்தில் தேசிய முன்னணி வேட்பாளர்களை பொய்யர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள், பதவி மோகம் கொண்டவர்கள் என்று வாய்கிழிய விமர்சித்து விட்டு.. இப்போது இவர்களும் அதே பாணியைப் பின்பற்றுவது… நகைப்புக்குரியது.

பட்டதாரிகள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாக வேண்டுமென்பதில்லை. மக்கள் பிரச்னையை புரிந்துக் கொண்டவர்கள் பதவிக்கு வர வேண்டும். அது என் பக்கத்து வீட்டு அகமட் ஆகவோ.. ஆ மெங் ஆகவோ அமராகவோ இருந்து விட்டுப் போகட்டும். பிரச்னையில்லை. தேவைப்படுவது மக்கள் சேவகர்கள். அவ்வளவுதான். நான் கரடியாய் கத்திப் பார்த்தேன். செவி சாய்க்கவில்லை என்று கூறும் படித்த பட்டதாரிகளை விட, சாம தான பேத தண்டங்களை உபயோகித்துக் காரியத்தை நடத்திக் காட்டும் மக்கள் பிரதிநிதியே தேவை என்று நான் நினைக்கிறேன்.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தமிழ் மக்கள் தங்களது பொன்னான ஓட்டுகளை தமிழ் வேட்பாளருக்கு போட்டுவிடக் கூடாது. அவர்கள் பின்னணியை தெரிந்துக் கொண்டு ஓட்டுப் போடுவது நல்லது. சொல்வதை நிறைவேக்கக்கூடிய திறன் படைத்தவர்தானா என்று உறுதி செய்துக் கொள்ள வேண்டியது மிக-மிக அவசியம். புத்தக வெளியீட்டு விழா, பரிசளிப்பு விழா, இசைத்தட்டு வெளியீட்டு விழா, கோவில் கும்பாபிஷேகம் போன்ற விழாக்களில் கலந்துக் கொள்வதை விடுத்து… கொஞ்சம் மக்கள் கூடுகின்ற பேருந்து, ரயில், மருத்துவமனை என்று பல இடங்களுக்கும் அடிக்கடி சென்று பார்வையிட்டு வரும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுங்கள்.

உங்கள் தெருவில் இருக்கின்ற பிரச்னை மற்றவர்களுக்கு முன்பு அவர்களுக்கு தெரிய வேண்டும். அவர்தான் உண்மையான மக்கள் பிரதிநிதி. அரசியல் ஸ்டண்ட் காட்டும் விதமாக விசிட் அடிக்கும் கோமாளிகள் நமக்கு தேவையில்லை. கூட்டத்தில் நசுங்கி விடுவேன் என்று பயப்படுகிறவர்கள் வீட்டிலேயே இருந்துக் கொள்ள வேண்டியதுதான். எதற்காக பதவிக்கு வரவேண்டும்?

அடுத்த பொதுத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மக்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டிய நேரமிது.

சொல்லுறதை சொல்லிப்புட்டேன்…
செய்யுறதை செஞ்சுக்குங்க…
நல்லதுன்னா கேட்டுங்குங்க..
கெட்டதுன்னா விட்டுருங்க…

சிறுத்தை (2011)

சமீப காலத்தில் இப்படியொரு முழு நீள நகைச்சுவை படத்தைப் பார்க்கவில்லை. கார்த்திக்கு முதல் இரட்டை வேடம். ஒருவர் திருடன். இன்னொருவர் காவல் அதிகாரி. படத்தின் முற்பகுதி முழுவதும் திருடன் கார்த்தி (ராக்கெட் ராஜா) மற்றும் சந்தானத்தின் காமெடி சரவெடி. வார்த்தைக்கு வார்த்தை சிரிக்கலாம். படத்தில் இவர்கள் அடிக்கும் லூட்டிகள் நிச்சயம் இந்த வருட “டாக்”.

அதிலும் பிற்பாதியில் வில்லன் கும்பலுடன் தனியொரு ஆளாக சந்தானம் நடத்தும் காமெடி தர்பார் “ஏ” ஒன். “ஏய்ய்ய்ய்ய்ய்” என்று சில லோக்கல் ரவுடிகள் கத்தும்போது “ஏன்டா வில்லன்கள் எல்லாம் ஒரே ரிங்டோனோட சுத்துறீங்க” என்று அதிரடியாய் சந்தானம் கேட்கும்போது… சிரிப்பு சத்தத்தில் தியேட்டரே அதிர்ந்தது.

அடுத்து ரத்னவேல் பாண்டியன். பார்வையில் சிறுத்தையின் கூர்மை. பேச்சில் அனல். நடையில் கம்பீரம், செயலில் புயல். போதாதா? வெற்றிப்பட வரிசையில் சிறுத்தைக்கு இடம் உறுதி. இரட்டை வேடத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல்.. இரண்டு படங்களில் நடிக்கிறோம் என்று கார்த்தி நினைத்திருப்பார் போலிருக்கிறது. இரு கதாபாத்திரங்களின் இயல்புகளை இருவேறு விதமாக நடித்துக் காட்டியிருக்கிறார். அதிலும் ரத்னவேல் பாண்டியனின் பாடி லாங்குவேஜ் அசத்தல். கார்த்திக்கு இது ஒரு அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர். இருந்தாலும் தப்பி தவறி கூட யாருடைய பாதிப்பும் குறிப்பாக காக்க-காக்க சூர்யாவின் பாதிப்பு வந்துவிடக்கூடாதென நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.

ரத்னவேல் பாண்டியனுக்கான ப்ளாஷ்பேக் காட்சிகள் அவசர-அவசரமாக நீளம் கருதி கத்தரிக்கப்பட்டது போல தெரிகிறது. மற்றபடி இது லாஜிக் பார்க்கும் படமல்ல. வெறும் பொழுது போக்கு சித்திரம் மட்டுமே. சூர்யாவிற்கு போட்டி நிச்சயமாக வெளியில் இல்லை. வீட்டிற்குள்ளேயே இருக்கிறது.

தமன்னா.. வழக்கமான கதாநாயகி செய்யும் வேலையை மட்டும் செய்திருக்கிறார். ரத்னவேல் பாண்டியன் மகளாக வரும் அந்த சின்னப் பெண் நன்றாக நடித்திருக்கிறது. ஆள் மாறாட்டம் நிகழ்ந்திருப்பதை அறியாமல் தந்தை போலவே இருக்கும் ராஜாவிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் புரியாமல் தவிப்பது.. நிச்சயம் மனதை உருக்கும். சந்தானபாரதியும் மனோபாலாவும் வில்லன் கும்பலுக்கு துணை நிற்கும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். அதையும் நிறைவாக செய்திருக்கிறார்கள். கார்த்தி – சந்தானம் அட்டகாசத்துக்காக பார்க்கலாம்.

BURNING BRIGHT (2010)

அம்மா இறந்து விட்டார். மதியிறுக்க குறைபாடுள்ள தம்பி, அவனை ஒரு பள்ளியில் சேர்த்துவிடலாம் என்றால், பள்ளிக்கு கட்டணமாக கொடுத்த காசோலை பணமில்லை என்று திரும்பி வந்துவிட்டது. அதனால் தம்பியைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். வங்கியில் கேட்டால், வளர்ப்புத் தந்தை மொத்தமாக எல்லா பணத்தையும் எடுத்துவிட்டு அந்த வங்கிக் கணக்கையே மூடிவிட்டதாக சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம் கல்லூரிக்கு போக வேண்டும். தம்பிக்கு வேறொரு ஏற்பாட்டை செய்து விட்டு போகலாம் என்றால் அதுவரை கல்விக் கடனுதவி காத்திருக்காது என சொல்லப்படுகிறது. சரி, வளர்ப்புத் தந்தையிடம் கேட்கலாம் என்றால் அவரோ மொத்த பணத்திற்கும் புலி வாங்கி விட்டதாக சொல்கிறார். சமைக்கும் புளியல்ல. நிஜ புலி.

 எல்லா பக்கமும் இடிக்கிறதே என்று சற்று நேரம் தூங்கி விட்டு எழுந்து பார்த்தால், வீட்டிற்குள் ஒரு புலி அங்கும் இங்கும் திரிந்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நல்ல கொழுகொழுவென இருக்கும் முரட்டுப் புலி. வீட்டில் இருக்கின்ற அனைத்து ஜன்னல் கதவு என்று எல்லாவற்றையும் கனகச்சிதமாக பலகை வைத்து மூடிவிட்டார்கள். அப்படியே வெளியே ஓடி விடவும் முடியாது.

யாரிடமாவது உதவி கேட்கலாம் என்றால் வெளியே கடும் புயலுடன் கூடிய மழை பெய்துக் கொண்டிருக்கிறது. இணையத் தொடர்பும் இல்லை. கைத் தொலைபேசியை புலி மிதித்து உடைந்து விட்டது. மதியிறுக்க குறைபாடுள்ள தம்பியை வைத்துக் கொண்டு ஒரு இளம் பெண் என்னதான் செய்வாள்? புலியிடமிருந்து அவளும் அவள் தம்பியும் தப்பித்தார்களா? நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த பரபரப்பு நிமிடங்கள்தான் இந்த படம்.

எப்படிதான் இப்படியெல்லாம் யோசித்து படமெடுக்கிறார்களோ தெரியவில்லை. ஒரு வீடு, ஒரு புலி, இரண்டு கதாபாத்திரங்கள்தான். ஆனாலும் மிரட்டி இருக்கிறார் இயக்குநர் Carlos Brooks.

உதாரணத்திற்கு ஒரு காட்சி, கைத்தொலைபேசி ஓர் அறையில் இருக்கிறது. அதை எடுக்க வேண்டுமென்றால் வீட்டின் கீழ்தளத்திற்கு செல்ல வேண்டும். புலி அங்கேதான் இருக்கிறது. ஒருவழியாக மறைந்து, ஒளிந்து அந்த அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டு கைத்தொலைபேசியில் வளர்ப்புத் தந்தையை அழைத்தால் அவர் அழைப்பை எடுக்காமல் இருக்கிறார்.

அந்த அறைக்குள் ஆள் அரவம் கேட்பதை உணர்ந்த புலி, அந்த அறைக் கதவை தாக்கத் தொடங்குகிறது. மாட்டிக் கொண்டால் உயிர் போவது நிச்சயம். தப்பிக்க எண்ணி, துவைக்க இருக்கும் துணிகளை மேல்மாடியிலிருந்து கீழே போடும் சந்தினுள் ஏறி ஒளிந்துக் கொள்கிறாள். அந்த அறையையே சுற்றி வரும் புலி, அந்தச் சந்து வழியாக கீழே விழும் அவள் வியர்வையில் மனித வாடையை கண்டுக்கொள்கிறது. அப்படியே அண்ணாந்து அந்த சந்துக்குள் ஒளிந்திருக்கும் அவளை ஒரு பார்வை பார்க்கும் பாருங்கள்….  மரண பயம் என்றால் என்னவென்று அப்போது உணர்வீர்கள்.

முறத்தால் புலியை அடித்து விரட்டிய வீரத்தமிழச்சி என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அதில் கொஞ்சம் சந்தேகம் வந்து விட்டது. மிகவும் வயதான, நோயுற்ற அல்லது சர்க்கஸ் பயிற்சிப் பெற்ற புலியாக இருந்தால் ஒழிய.. முறத்தால் புலியை அடித்து விரட்டுவதெல்லாம் சாத்தியமே இல்லை போலிருக்கிறது.

புலியைத் தவிர தனியொரு ஆளாக படத்தை தூக்கி நிறுத்தியிருப்பவர் படத்தின் நாயகியான Briana Evigan. தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.  அந்தப் புலி எப்படி வீட்டிற்குள் வந்தது? இதன் பின்னணியில் செயல்படுபவர் யார்? என்ற கேள்விக்கெல்லாம் பதில் படத்தில் உள்ளது. குழந்தைகளோடு பார்க்கலாம்.

EXAM (2009)

“இதுவொரு பெரிய நிறுவனம். இங்கு வேலையில் சேர விண்ணப்பித்திருந்தீர்கள். பல்வேறு தேர்வு கட்டங்களை தாண்டி இறுதி நிலைக்கு வந்துள்ளீர்கள். மொத்தம் 8 பேர். அதில் ஒருவருக்குதான் வேலை. அடுத்து வரும் 80 நிமிடங்களில் உங்கள் தலையெழுத்து நிர்மாணிக்கப்பட்டு விடும். ஒரு கேள்விதான் உங்கள் முன் இருக்கிறது. அதற்கு தேவை ஒரே ஒரு பதில். தேர்வு எழுதுவதற்கு முன்பாக, இங்கே எந்த விதிகளும் செல்லாது. நாங்கள் வகுத்துள்ள விதிகள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்…

1) எந்த வகையிலும் உங்களது கேள்வித்தாளை நீங்கள் சேதப்படுத்தக்கூடாது

2) எந்தக் காரணத்துக்காகவும் தேர்வு நடக்கும் அறையை விட்டு வெளியே போகக் கூடாது

3) தேர்வு கண்காணிப்பாளரிடமோ அல்லது அந்த அறையில் இருக்கு பாதுகாவலரிடமோ பேச முயற்சிக்கக்கூடாது

இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தால், அடுத்த நிமிடமே தேர்விலிருந்து நீக்கப்படுவீர்கள். சரியாக பதிலளிக்கும் நபருக்கு கைநிறைய சம்பளத்துடன் கூடிய வேலை. மற்றவர்கள் பேருந்து கட்டணத்துடன் திரும்பிச் செல்வீர்கள். வேறு ஏதும் கேள்வி இருக்கிறதா? …..

இந்த வினாடி முதல் தேர்வு தொடங்குகிறது. வாழ்த்துக்கள்.”

இவ்வளவுதான். இவ்வாறு சொல்லிவிட்டு தேர்வு கண்காணிப்பாளர் அந்த அறையிலிருந்து வெளியேறி விடுகிறார். ஆர்வத்துடன் கேள்வித்தாளைத் திருப்பினால், அதில் கேள்வியே இல்லை. ஏதும் எழுதப்பட்டதாகக் கூட தெரியவில்லை. முழு பக்கமும் வெள்ளையாக இருக்கிறது. கூடவே ஒரு பென்சில். கேள்வியே இல்லாமல் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

8 தேர்வர்களில் ஒரு பெண், அந்த பென்சிலைக் கொண்டு கேள்வித்தாளில் குறிப்பு போல ஏதோ எழுதப்போக.. முதல் விதியை (எந்த வகையிலும் உங்களது கேள்வித்தாளை நீங்கள் சேதப்படுத்தக்கூடாது!) மீறிய குற்றத்திற்காக பாதுகாவலரால் வலுக்கட்டாயமாக அந்த அறையிலிருந்து  வெளியேற்றப்படுகிறார்.  அப்படியென்றால் நிச்சயம் அங்கே கேள்வி இருக்கிறது. அது என்ன? அது எங்கே இருக்கிறது? அடுத்த 80 நிமிடங்களுக்கு அந்தக் கேள்வியைத் தேடி ஏழு கதாபாத்திரங்களும் செய்யும் செயல்களின் கோர்வைதான் இந்தப் படம்.

 பூட்டிய அறையில் எட்டே எட்டு கதாபாத்திரங்களை வைத்து நம்மோடு உளவியல் விளையாட்டு விளையாடி இருக்கிறார் படத்தின் இயக்குநர் Stuart Hazeldine. சமீப காலத்தில் நான் பார்த்த படங்களில் நானும் ஒரு கதாபாத்திரமாக உணர்ந்தது இந்தப் படத்தில்தான். அதாவது 9வது ஆளாக நானும் கேள்வியை தேடிக் கொண்டிருந்தேன். இறுதியில் கேள்வி என்னவென்று தெரிய வரும்போது… அட, எப்படி கவனிக்காம போனோம்? என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

படத்தின் கதையை முழுமையாக சொல்லி விட்டால் படம் பார்க்கும் போது பரபரப்பு குறைந்து விடும். நிச்சயமாக பார்த்து ரசிக்க வேண்டிய படம். பள்ளி செல்லும் குழந்தைகளுடன் தாராளமாக பார்க்கலாம்.

போத்தா சின் என்ற வோங் சுவீ சின் (1951 – 1981)

1951ஆம் ஆண்டு கோலாலம்பூரில் பிறந்தவன் வோங் சுவீ சின். உடன்பிறந்தோர் மொத்தம் 10 பேர். இவனுடைய அப்பா ஓய்வு பெற்ற ஓர் அரசு அதிகாரி. செந்தூல் பசார் சீன ஆரம்ப பள்ளியில் ஆரம்பக் கல்வியை பயின்ற சுவீ சின் பின்னர் மேற்படிப்புக்காக ஆங்கில பள்ளியில் சேர்ந்தான். ஆனால் வழக்கமான வில்லன் பாணியில் இவனும் தனது 15வது வயதில் படிப்பை பாதியில் நிறுத்தினான். சுவீ சின் சிறந்த கல்விமானாக பிற்காலத்தில் வருவான் என்று நம்பிய அவன் தந்தையின் ஆசை, நிராசையானது.

கல்வியை துறந்த சுவீ சின், ஜாலான் துன் இஸ்மாயிலில் அமைந்துள்ள பசாரில் உதவியாளனாக வேலை பார்த்தான். ஒரு வருட காலத்திற்குப் பின் 360 என்ற குண்டர் கும்பல் தொடர்பு கிடைக்க, அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அவர்களோடு இணைந்துக் கொண்டான். தவறான வழியில் சுலபமாக கிடைத்த பணம் அவனுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

என்னதான் முழு நேர குண்டர் கும்பல் உறுப்பினர் என்றாலும் திருடுவதில் அப்போது சுவீ சின் ஒரு பாலர் பள்ளி மாணவன்தான். திருடச் செல்பவர்களுக்கு உதவியாக உடன் செல்லும் பொறுப்பு மட்டுமே அப்போது அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில்தான் அவனது தாயாரும் காலமானார். தாயைப் பார்க்க வேண்டுமென்ற காரணத்திற்காக மட்டும் தனது சொந்த வீட்டிற்குப் போய் வந்துக் கொண்டிருந்த சுவீ சின், அவரது மரணத்திற்கு அதை அப்படியே நிறுத்திக் கொண்டான்.

இது அவனுக்கு அதிகமான சுதந்திரத்தை வழங்கியது. தனது குண்டர் கும்பல் நண்பர்களுடனே வசிக்கத் தொடங்கினான். இதனால் அவனுக்கு இரண்டு லாபம் கிடைத்தது. ஒன்று குண்டர் கும்பலின் நடவடிக்கைகளைப் பற்றி நன்கு புரிந்துக் கொண்டான், இன்னொன்று பயம் என்ற வார்த்தையே அவனுக்கு மறந்து போனது. இதைவிடவும் ஒருமுறை தனது நண்பனின் பாக்கெட்டிலிருந்து நழுவி விழுந்த கைத்துப்பாக்கியைக் கண்ட சுவீ சின், தான் மிகவும் சக்தி வாய்ந்த நபர்களுடன் பழகுவதாக எண்ணி மகிழ்ச்சியடைந்தான்.

எத்தனையோ கொள்ளைகளுக்கு உதவியாக போயிருக்கிறோம், தனியாக ஒன்றைச் செய்து பார்த்தால் என்ன என்று யோசித்த சுவீ சின் துப்பாக்கி வைத்திருந்த தனது இரண்டு நண்பர்களுடன் பேசி, அவர்களையும் தன்னுடைய முதல் கொள்ளைக்கு உதவும்படி கேட்டுக் கொண்டான். அவர்கள் துணையுடன் 19 ஏப்ரல் 1969ல் தனது முதல் கொள்ளையை செய்தான் சுவீ சின். இந்த கொள்ளை வெற்றிகரமாக நடந்தேறியது. இந்த கொள்ளையின் மூலம் கிடைத்த பணத்தில் தனது முதல் கைத் துப்பாக்கியை வாங்கினான் சுவீ சின்.

தொடர்ந்து தனக்கென ஒரு குண்டர் கும்பலை உருவாக்க முடிவெடுத்த சுவீ சின், ஏறக்குறைய 7-8 நபர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டான். அதன்பின் தொடராக 8 கொள்ளை.  என்னதான் 8 தொடர் கொள்ளை என்றாலும் அன்றைக்கு சுவீ சின் கொள்ளையடிப்பதில் சிறுவன்தான். ஆகவே வெகு சுலபத்தில் காவல் துறையினர் சுவீ சின்னையும் அவனது சகாக்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடங்கிய வேகத்திலேயே சுவீ சின் ஆட்டம் முடக்கப்பட்டது.

1974ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையான சுவீ சின் ரொம்பவே மாறி இருந்தான். சிறை வாழ்க்கை அவனுக்கு சுத்தமாக போரடித்துப் போயிருந்தது. மற்ற மனிதர்களைப் போல சுதந்திரமாக வாழ வேண்டுமென முடிவெடுத்தான். அதற்காக முன்பு அவன் வேலை செய்த பசாரிலேயே காய்கறி வியாபாரமும் செய்யத் தொடங்கினான். நேர்மையான வழியில் ஒரு சத்ய சோதனை.

ஆனால் விதி யாரை விட்டது? சுவீ சின்னுக்கு வெகு விரைவிலேயே காய்கறி வியாபாரத்தில் கிடைத்த வருமானம் சலித்து விட்டது. தனது பழைய வாழ்க்கைக்கே திரும்ப முடிவு செய்தான். மேலோட்டமாக பார்த்தால், சிறிய யோசனைக்குப் பிறகு எடுத்த முடிவுதான், ஆனால் இது அவன் வாழ்க்கைப் புரட்டிப் போட்டது, மலாயா வரலாற்றில் அவனொரு கறும்புள்ளியாக காரணமாக அமைந்தது. ஆமாம், சாதாரண சுவீ சின்.. 70ஆம் ஆண்டுகளில் மலாயாவை ஆட்டிப்படைத்த கொள்ளைக்காரன் போத்தா சின்-ஆக அவதாரமெடுத்தது இந்த முடிவுக்குப் பிறகுதான்.

இப்படியொரு முடிவு செய்த போத்தா சின், தன்னைப் போலவே கொடூரமான நபர்களை தனது கும்பலில் சேர்க்கத் தொடக்கினான். எங் செங் வோங் (ஆ வோங்) பெ கோக் சின் (பங்கோர் சாய்) தே போக் லாய் (சீ ஹாய்) என்ற அந்த மூன்று பேரை தனது குண்டர் கும்பலின் முப்படை தளபதிகளாக நியமித்தான். இவர்களோடு இணைந்து தனது புதிய குண்டர் கும்பலில் இருக்கின்ற பலவீனங்களை சரி செய்ய ஆலோசனை நடத்தினான். முதலில் தான் கைது செய்யப்பட்டதற்கான காரணம், அதில் நடந்த தவறுகள், குண்டர் கும்பலை எப்படி வழிநடத்துவது, கண்டபடி  கொள்ளையடிக்காமல் எப்படி ஒழுங்குடன் அதனைச் செய்வது, காவல் துறையின் கவனத்தை எப்படி திசை திருப்புவது என்று விலாவாரியாக அவர்களுடன் இணைந்து திட்டமிட்டான்.

என்னதான் ஆள் பலமும், மன தைரியமும் இருந்தாலும் காவல் துறையின் அதிரடி நடவடிக்கையை சமாளிக்க வேண்டுமென்றால் ஆயத பலமும் தேவை என்பதை உணர்ந்த போத்தா சின், தனது அடுத்த நடவடிக்கையாக தாய்லாந்தில் இருக்கின்ற தன் தொடர்புகள் மூலமாக 3 புதிய துப்பாக்கிகளை வாங்கினான். துப்பாக்கி வந்துவிட்டது. ஆள் பலமும் இருக்கிறது. இனி என்ன கவலை என்று நினைத்த போத்தா சின், தனது பலத்தை பரிசோதித்து பார்க்க விரும்பினான். அதற்காக ஒரு சின்ன திருட்டுக்கு திட்டம் போட்டான். தனது வீட்டிற்குப் பக்கத்திலேயே இருக்கின்ற ஒரு சூதாட்ட விடுதியை அதற்காக குறி வைத்தான்.

1975ஆம் ஆண்டு ஜுன் 2ஆம் தேதி அந்த சூதாட்ட விடுதியை கொள்ளையடித்த போத்தா சின், கண் இமைக்கும் நேரத்தில் சர்வ சாதாரணமாக அங்கிருந்து 5,800 ரிங்கிட்டை கொள்ளையிட்டு தப்பினான்.  இந்தப் பணத்தை தனது குண்டர் கும்பலின் ஆரவார ஆர்ப்பாட்டத்திற்கு பயன்படுத்தாமல் மேலும் 8 கைத்துப்பாக்கி மற்றும் 100 துப்பாக்கி தோட்டாக்கள் வாங்கி வைத்தான்.

துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக கெப்போங் வட்டாரத்தில் இருக்கின்ற ஒரு காலி இடத்தை தேர்வு செய்த போத்தா சின், தனது சகாக்களுக்கு அங்கே துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தான். தினசரி பயிற்சி போத்தா சின்னுக்கு குறி தப்பாமல் சுடும் வரத்தைத் தந்தது. இதனால் செந்தூல் பசார் பகுதிகளில் மிக வெளிப்படையாகவே துப்பாக்கியை இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான் அவன். இதனால் அவனைப் பற்றியோ அல்லது அவனது சகாக்கள் குறித்தோ காவல் துறைக்கு ஏதும் தகவல் கொடுத்தால் அடுத்த நொடியே கொல்லப்படலாம் என்ற அச்சம் இயல்பாகவே பொதுமக்களுக்கு வந்து விட்டது. அதோடு அவனை எதிர்க்க யாருக்கும் துணிவில்லாமல் போனது.

தொடர்ந்து ஜாலான் இம்பியில் அமைந்துள்ள ஒரு வங்கியை குறி வைத்த போத்தா சின், ஜுலை 29ஆம் தேதி அதையும் வெற்றிகரமாக கொள்ளையடித்தான். மொத்தம் 95,000 ரிங்கிட் அந்த வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் கிடைத்த பணத்தைக் கொண்டுதான் போத்தா சின் அப்போது பிரபலமாக திகழ்ந்த டட்சுன் காரை வாங்கி இருக்கிறான். தொடர்ந்து ஒரு சீனக் கோயிலை குறி வைத்த போத்தா சின், அங்கு சூதாடிக் கொண்டிருந்தவர்களிடமிருந்து 10,000 ரிங்கிட்டை கொள்ளையடித்தான்.

போத்தா சின்னின் இந்த நடவடிக்கைகளை அப்போது ஒருவர் கவனமாக கண்காணித்துக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல.. சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு பிரிவின் துணைத் தலைவர் எஸ். குலசிங்கம்தான் அவர். போத்தா சின்னை பற்றிய எல்லா தவல்களையும் திரட்டி விட்டு அவளை அடக்கி ஒடுக்குவதற்கான காய்களை நகர்த்த தொடங்கினார். எஸ். குலசிங்கத்தின் இந்த திடீர் தலையீடு போத்தா சின்னுடைய பெரும்பாலான நடவடிக்கைகளை பாதித்தன. சில நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே முறியடிக்கப்பட்டன. கிட்டத்த எஸ். குலசிங்கத்தின் கிடுக்குப்பிடி போத்தா சின்னின் வளர்ச்சிக்கு பெரிய முட்டுக்கட்டை போட்டது. இதனால் போத்தா சின் வெளிநாட்டிலிருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்வதிலும் பெரும் சிக்கலை சந்திக்க வேண்டியதிருந்தது.

இந்தச் சிக்கலை தீர்க்க, காவல் துறையிடமே கொள்ளையடிக்க போத்தா சின் அதிரடி முடிவெடுத்தான். அவனது பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை அதிகாரிகளை தாக்கிய போத்தா சின், அவர்களிடமிருந்த ஆயுதங்களை திருடிச் சென்றான். தொடர்ந்து இரவு விடுதி பாதுகாவலர் ஒருவரை தாக்கிய போத்தா சின், அவரிடமிருந்த துப்பாக்கி ஒன்றையும் திருடிச் சென்றான். போத்தா சின்னின் இந்த செயலைக் கண்டு காவல் துறையினர் மிகுந்த கோபம் கொண்டார்கள். காவல் துறை அதிகாரிகளையே தாங்கி ஆயுதங்கள் கொள்ளையிட்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  தவிர பொதுமக்களின் உயிருக்கு போத்தா சின் மிரட்டலாகி வருவதைக் கண்டு, அவனைத் தேடும் வேட்டையையும் துரிதப்படுத்தினார்கள்.

இதற்குப் பலனாக 1975ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி போத்தா சின்னை கையும் களவுமாக பிடிக்கும் அளவுக்கு காவல் துறையினர் அவனை நெருங்கினார்கள். அன்று ஜாலான் ஈப்போவில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில் போத்தா சின் தப்பி விட்டாலும், அவனது நெருங்கிய நண்பனான சாவ் குவான் (ஆ குவான்) சூடுபட்டு இறந்து போனான். இதற்கும் பதிலடி கொடுக்க முடிவெடுத்த போத்தா சின் மிகப் பெரிய கொள்ளை ஒன்றுக்குத் திட்டமிட்டான். இந்த முறை குதிரைப் பந்தய கிளப் ஒன்றுக்கு கொண்டு செல்லவிருந்த பணத்தை கொள்ளையடிக்க தீர்மானித்தான். மொத்தமாக 218,000 ரிங்கிட் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் இதுவொரு பெரிய தொகை. இந்த பணத்தைப் பங்கு பிரித்ததில் போத்தா சின்னுக்கு 40,000 ரிங்கிட் கிடைத்தது. கிடைத்த எல்லா பணத்திற்கும் துப்பாக்கிகளாக வாங்கிக் குவித்தான் அவன்.

போத்தா சின் இப்படி ஒருசில சந்தர்ப்பங்களில் காவல் துறையை ஏமாற்றி தனது செயலைத் தொடர்ந்தாலும் காவல் துறையின் முழு கவனமும் அவன் மீது மட்டுமே இருந்தது. போத்தா சின்னுடைய நம்பிக்கைக்குரிய ஆட்களாக தேடிப் பார்த்து அழிக்க ஆரம்பித்தார்கள் காவல் துறையினர். இது அவனது கோபத்தை மென்மேலும் கிளறியது. தன்னை குறி வைத்துள்ள எஸ்.குலசிங்கத்தை கொன்று விட அதிரடியாக தீர்மானித்தான் போத்தா சின். 1975ஆம் ஆண்டு நவம்பர் 22 தேதி பெக்கலிலிங் பக்கமாக வந்துக் கொண்டிருந்த எஸ்.குலசிங்கத்தை இன்னொரு காரில் பின்தொடர்ந்த போத்தா சின், ஒரு சாலை விளக்கில் நின்ற எஸ்.குலசிங்கத்தின் காரை நோக்கி சரமாரியாக 11 முறை சுட்டான்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் எஸ்.குலசிங்கம் நிலைக்குலைந்து போனார் என்றாலும், போத்தா சின் விரும்பியபடி அவர் இறக்கவில்லை. சிறிய காயத்தோடு தப்பித்துக் கொண்டார். இந்த தாக்குதல் போத்தா சின்னை பிடிக்க வேண்டும் என்ற அவர் வேட்கையை இன்னும் அதிகப்படுத்தியது. எஸ்.குலசிங்கம் இறந்து விட்டார் என்ற ஆனந்தக் களிப்பில் இருந்த போத்தா சின், மறுநாள் பத்திரிகைகளில் அவர் உயிருடன் இருக்கிறார் என்ற தலைப்புச் செய்தியைக் கண்டு மிகுந்த ஆத்திரமடைந்தான்.

இந்த சமயத்தில்தான் போத்தா சின் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் இடத்தை பற்றிய தகவலொன்று காவல் துறையினருக்கு கிடைத்தது. போத்தா சின்னை பிடிக்க காவல் துறையினர் கிளம்பினார்கள். அன்று 1976ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் நாள். கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் அமைந்து மரஆலை ஒன்றை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். உள்ளே போத்தா சின் அவன் நண்பர்கள் பங்கோர் சாய், ஆ கியோங்கோடு இருப்பதை உறுதி செய்தபின், அதிரடியாக நுழைந்தனர். இருதரப்பிலும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.  தன் நண்பர்கள் இருவரும் அந்தச் துப்பாக்கி சண்டையில் பலியானது கண்டு கலங்கிப் போன போத்தா சின், சரணடைய சம்மதித்தான்.

 

போத்தா சின் மீதான வழக்கு 4 வருடங்கள் தொடர்ந்து நடைப்பெற்றது. கொள்ளையடித்த பணத்தில் பெரும்பகுதியை அவன் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்துதவி இருக்கிறான் என்றுகூட போத்தா சின்னுடைய வழக்கறிஞர் வாதாடிப் பார்த்தார். (1975ஆம் ஆண்டுகளில் செந்தூல் பசாரில் வாழ்ந்த ஏழை எளியவர் பலருக்கு போத்தா சின் கிட்டத்தட்ட ராபின் ஹ{ட் போல உதவியதாக  இன்றும் சொல்லப்படுகிறது) எனினும் பொது மக்களுக்கு மிரட்டலாக திகழ்ந்தது, அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருந்தது என பல்வேறு குற்றப்பதிவின் கீழ் உயர்நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேல் முறையீட்டு நீதிமன்றமும் இந்த தீhப்பை 1980ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி மறு உறுதிப்படுத்தியது. இறுதியாக 1981ஆம் ஆண்டு ஜுன் 11ஆம் தேதி போத்தா சின் புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டான்.