Monthly Archives: செப்ரெம்பர் 2009

உன்னைப்போல் ஒருவன் (2009)

Unnaipol Oruvanதீவிரவாதத்தை ஒழிக்க, தீவிரவாதிகளை அழிப்பது தவறில்லை என்ற கருத்தை வலியுறுத்தி வந்திருக்கின்ற படம். வன்முறைக்கு தீர்வாக வன்முறையே இருந்துவிட்டுப் போகட்டும் என்ற கடும் கோபத்தின் வெளிப்பாடுதான் உன்னைப்போல் ஒருவன்.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மனிதன் ஒருவன். தன்னுடைய நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களில் 4 பேரை தண்டிக்க நினைக்கிறான். அதற்காக நகரத்தின் முக்கியமான 5 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி காவல் துறையை தனது கோரிக்கைக்கு செவி சாய்க்கச் சொல்கிறான். அதில் அவன் வென்றானா? இல்லையா? என்பதுதான் படம்.

தனியொரு மனிதனின் கோபம், அதையெல்லாம் மொத்தமாக சேர்த்து வைத்து ஒரே நாளில் காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை கொட்டித் தீர்ப்பதுதான் படம். அதன் காரணமாக படம் 2 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே ஓடுகிறது.

கமல்ஹாசன், மோகன்லால் என்ற இரு மிகப் பெரிய நட்சத்திரங்கள் தவிர தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலா எதுவும் இந்த படத்தில் இல்லை. படம் ஆரம்பித்த 10வது நிமிடம் தொடங்கி இறுதிக்காட்சி வரை பரபரப்புடன் கதை நகர்கிறது. சமீபத்தில் வந்த தமிழ்ப்படங்கள் எதிலும் இத்தனை பரபரப்பான கதையமைப்பு இல்லை. 

கதை என்று பார்த்தால், படத்தில் கமலிடம் இருக்கின்ற அந்த எண்ணம் நம்மில் யாருக்குமே இல்லை என்று அப்படியே கடந்து போய்விட முடியாது. தன்னைச் சுற்றி நடக்கின்ற அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இங்கு எல்லாரது மனதிலும் இருக்கிறது. நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அப்படி ஏற்படும் கோபத்தின் விளைவுகளைப் பற்றிய கவலை அதைவிட அதிகமானதாக இருப்பதால்தான் சாமான்யன் எவனும் இங்கு ஆயுதம் ஏந்துவதில்லை.

கமல் இதில் நம் எண்ணத்தை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகவே இருக்கிறார். வன்முறையை ஒழிக்க தான் முன்வந்திருப்பதாக அவர் சொன்னாலும்… காவல் துறை மீதும் காவலர்கள் மீதும் அவர் கொண்டிருக்கும் பயம் காட்சியினூடாகவே காட்டப்படுகிறது.

விருமாண்டி, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களுக்கு இருந்த கூட்டம் இந்த முறை திரையரங்குகளில் இல்லை. கமல் ரசிகர்களும் கமலின் தீவிர விமர்சகர்களும் மட்டுமே படம் பார்க்க வருகிறார்கள் போலிருக்கிறது. ஒரு பக்கம் படத்தை பாராட்டினால் இன்னொரு பக்கம் உலக நாடுகளின் பெயர்களை வரிசையாகச் சொல்லி அந்த நாட்டு படங்களைப் போல் வருமா? என்று கேள்வி எழுப்பும் கூட்டமும் இருக்கிறது.

இந்தி படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டாலும் ‘உன்னைப்போல் ஒருவன்’ தமிழ் சினிமாவில் முக்கியமான படம் என்பதை மறுக்க முடியாது. கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் எல்லாமே தரமாக இருக்கிறது.

படம் எப்படியிருக்கிறது என்று கேட்பவர்களுக்கு…

உங்க வீட்டு கழிவறையில் இருக்கிற கரப்பான் பூச்சி, சமையலறைக்கு வந்துட்டா தீனி போட்டு வளர்ப்பீங்களா இல்லை அடிச்சு தூக்கி வீசுவீங்களா?

அடிச்சு தூக்கி வீசுவோம்னு சொல்றவங்க… கண்டிப்பா படத்தைப் பாருங்க.

என்ன செய்யலாம்னு யோசிக்கறவங்க… படத்தை பார்த்துவிட்டு யோசியுங்கள். 

அந்த கரப்பான் பூச்சி ஆணா? பெண்ணா? என்ன மதம்? என்ன இனம்? பூச்சி வதை சட்டத்தில் போட முடியுமா? முடியாதா? என்று கேள்விகளை மட்டுமே கேட்பவர்கள்… இது உங்களுக்கான படமல்ல. பார்த்துவிட்டு கருத்து வாந்தி எடுக்காதீங்க!!!!

SECRET WINDOW (2004)

secret_windowMort Rainey ஒரு எழுத்தாளர். மனைவியிடமிருந்து பிரிந்து வாழும் அவர், தன்னுடைய ஏரிக்கரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். ஒரு நாள் John Shooter என்பவர் அவரை சந்திக்க வருகிறார். தான் எழுதிய ஒரு கதையை Mart Rainey திருடி விட்டதாகவும் குற்றஞ்சாட்டுகிறார். ஆரம்பத்தில் இதனை ஒரு பொருட்டாக கருதாத Mart Rainey, சாட்சிக்காக Shooter கொடுத்த கதையின் நகலை குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறார்.

வீட்டு வேலைக்காரியோ குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அந்த நகலை பத்திரமாக எடுத்து வைக்கிறாள். எதேச்சையாக அதை கவனிக்கும் Mart Rainey உண்மையில் Shooter சொல்வது சரிதானா என்பதை கவனிக்க, தான் திருடி எழுதியதாக சொல்லப்படும் கதையை தேடிப் பார்க்கிறார். அப்படி ஒப்பிட்டு பார்க்கும் போது Shooter கொடுத்த கதை நகலில் இருக்கின்ற வார்த்தைகள், சம்பவங்கள் தன்னுடைய கதையிலும் இருப்பதைக் கண்டு திகைப்படைகிறார்.

இதன் தொடர்பாக Mart Rainey மற்றும் Shooter இடையில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அந்த கருத்து வேறுபாடு, விரோதமாக மாறி Mart Raineyயின் வளர்ப்பு நாயை Shooter கொல்வதில் வந்து நிற்கிறது. அதோடு நிறைய மிரட்டல்களையும் Mart Rainey சந்திக்க வேண்டியதாகிறது. உள்ளுர் ஷெரீப்பை நம்பாத Mart Rainey தனியார் துப்பறிவாளர் ஒருவரை தன்னுடைய பாதுகாப்பிற்கென ஏற்பாடு செய்கிறார்.

இதற்கிடையில் Mart Raineyயின் மனைவி Amy வசிக்கும் வீடு யாரோ ஒருவரால் தீக்கிரையாகிறது. அதே சமயத்தில் Mart Rainey நியமித்த தனியார் துப்பறிவாளரும், Shooterரைப் பார்த்த அதே ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் இன்னொரு நபரும் கொலை செய்யப்படுகிறார்கள். Shooterரின் கதை எழுதப்படுவதற்கு முன்பே ஓர் இதழில் தன்னுடைய கதை வெளிவந்திருப்பதை ஆதாரமாகக் காட்ட Mart Raineyக்கு அவரது பதிப்பாளரால் தபாலில் அனுப்பி வைக்கப்படும் இதழிலிருந்து கதை வெளிவந்த பகுதி மட்டும் கிழித்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் செய்வது யார்? உண்மையில் கதையை திருடியது யார்? Mart Rainey வாழ்க்கையில் ஏன் இத்தனை மர்மங்கள்? என்பதுதான் மீதிப் படம். கதையின் முடிவு யாரும் எதிர்பாராத திருப்பம் கொண்டது.

அருமையான சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படமான இதை Stephen King எழுதிய Secret Window, Secret Garden என்ற நாவலைத் தழுவி எடுத்திருக்கிறார்கள். எழுத்தாளர் Mart Rainey யாக நடித்திருப்பவர் பிரபல நடிகர் Johnny Depp. படத்தின் இயக்குநர் David Koepp. படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு அம்சம் படத்தின் ஒளிப்பதிவு.

SCARFACE (1983)

scarfaceAl Pacino நடித்த படங்களில் பெரும்பான்மையான படங்கள் குண்டர் கும்பல், குற்றச் செயல் போன்ற கதைகளைக் கொண்டதாகவே இருக்கும். அந்த வரிசையில் உலக ரசிகர்களால் இன்றளவும் ரசிக்கப்படும் Godfather 1,2,3 ரைத் தவிர அவருக்கென தனியொரு அடையாளத்தைக் ஏற்படுத்திக் கொடுத்த படம் Scarface.

1983ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம், அப்போதைய இளைஞர்களின் கலாச்சார அடையாளமாகவும் திகழ்ந்தது. 1939ஆம் ஆண்டில் வெளிவந்த படத்தின் ரீ-மேக்தான் இந்தப் படம் என்றாலும், Al Pacino வின் ஸ்டைலான நடிப்பிற்காக ரசிக்கப்பட்ட படம் இது. அவரும் தான் செய்த கேரக்டர்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் Scarface படத்தில் செய்த Tony Montana கேரக்டர்தான் என்று பல சமயங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

இனி படத்தின் கதை…

1980ஆம் ஆண்டு க்யூபா நாட்டின் பொருளாதார நிலை கடும் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் மக்கள் அமெரிக்க நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுந்தார்கள். அப்படி தஞ்சம் புகுந்தவர்களில் ஒருவன்தான் Tony Montana. 

கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்திறங்கிய இருபத்தைந்தாயிரம் குற்றவாளிகளில் அவனும் ஒருவன். அதனால் அமெரிக்க க்ரீன் கார்டு இல்லாத அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் அவனும் தங்க வைக்கப்படுகிறான். அங்கேதான் தன்னுடைய நண்பன் Manny Ribera வையும் சந்திக்கிறான். முகாமில் தங்கியிருந்த ஒரு மாதம் கழித்து அமெரிக்க க்ரீன் கார்டுக்காக Tony Montana ஒரு கொலை செய்கிறான். அதிலிருந்து அமெரிக்காவிலும் அவனுடைய குற்றசெயல்கள் ஆரம்பிக்கின்றன.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தைத் தவிர Tony Montana விற்கு வேறு எதிலும் ஈடுபாடு இல்லை. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய அவன் தயார். அப்படிதான் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் Frank கின் நட்பு கிடைகிறது. அதன் பின்னர் Tony Montana முழு நேர போதைப் பொருள் கடத்தல்காரனாகிறான். பகுதிநேரமாக தன்னுடைய தலைவன் Frank கின் காதலி Elvira வையும் காதலிக்கிறான்.

ஒரு முறை Frank சார்பாக Omar என்பவனோடு பொலிவியா நாட்டின் மிகப்பெரிய கடத்தல் மன்னான Alejandro Sosa வைச் சந்திக்கச் செல்லும் Tony Montana, Sosa வின் நம்பிக்கையான ஆளாகிறான். இதனால் Frank – Tony Montana உறவில் விரிசல் விழுகிறது. அந்த விரிசலின் முடிவில் Frank கொல்லப்படுகிறான். அதோடு Frank கின் காதலி Elvira வையும் Tony Montana மணந்துக் கொள்கிறான். அன்று முதல் Frank கின் தலைமையில் இயங்கி வந்த அனைத்து சட்டவிரோத செயல்களும் Tony Montana வின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறது. இதனால் கணக்கிலடங்கா சொத்துக்களுக்கு Tony Montana அதிபதியாகிறான்.

அதன்பின் Elvira – Tony Montana உறவு என்னவாகிறது? Tony யின் நண்பன் Manny யின் நிலையென்ன? இறுதியில் Tony Montana என்னவாகிறான்? என்பதே மீதிப் படம். இன்றைய படங்களோடு ஒப்பிட்டால் படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், Al Pacino நடிப்பிற்காக படத்தை பார்க்கலாம். படத்தின் இயக்குநர் Brian De Palma. மேலே இருக்கின்ற இந்தப் படத்தின் கருப்பு வெள்ளை போஸ்டர் கூட இன்றுவரை மிகப் பிரபலமான போஸ்டராக திகழ்ந்து வருகிறது.

BEDTIME STORIES (2008)

bedtime_stories_adam_sandler_movie_posterஇரவில் குழந்தைகளை தூங்க வைக்க காலங்காலமாக கதை சொல்லி வருகிறார்கள். அப்படி சொல்லப்படும் கதைகள் பெரும்பாலும் கற்பனைக் கதைகளாகவே இருக்கும். அந்த கற்பனை கதைகள் நிஜ வாழ்க்கைக்கு தொடர்புடையதாக இருந்து அவை அப்படியே நடந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையின் விளைவுதான் Bedtime Stories.

சின்ன மோட்டல் முதலாளியான Skeeter Bronson னின் தந்தை அதனை தொடர்ந்து நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறார். அவரின் கஷ்டத்தைப் புரிந்துக் கொண்ட வர்த்தகர் ஒருவர் அந்த மோட்டலை தன்னிமே விற்று விடும்படி கேட்கிறார். முதலில் தனது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து யோசிக்கும் Skeeter ரின் தந்தையிடம் Barry Nottingham என்ற அந்த புத்திசாலி வர்த்தகர், “தக்க சமயம் வரும்போது, உன் மகனை இதே இடத்தில் நான் நிர்மாணிக்கப் போகும் மிகப் பெரிய ஹோட்டலுக்கு நிர்வாகியாக்குகிறேன்” என்று வாக்குறுதி தருகிறார். அதை நம்பிய Skeeter ரின் தந்தை மோட்டலை விற்று விடுகிறார். கால சூழற்சியில் சின்னதாக நிர்மாணிக்கப்படும் அந்த ஹோட்டல் பெரிய நட்சத்திர ஹோட்டலாக மாற்றம் காண்கிறது.

அந்த ஹோட்டலுக்கே நிர்வாகியாக பொறுப்பேற்றிருக்க வேண்டிய Skeeter, அந்த ஹோட்டலில் ஒரு சாதாரண வேலைக்காரனாக பணியாற்றுகிறான். ஒரு நாள் மிகப் பெரிய விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும் அந்த ஹோட்டலின் உரிமையாளர், 21ஆம் நூற்றாண்டு மக்களை கவரும் வகையில் புதியதொரு மாபெரும் ஹோட்டலை கட்டப் போவதாக அறிவிக்கிறார். அதோடு அந்த புதிய ஹோட்டலுக்கு Kendall என்ற ஒருவனை நிர்வாகியாகவும் நியமிக்கிறார். இதைக் கண்டு Skeeter கவலையடைந்தாலும், தனக்குரிய நேரம் வரும்போது நிச்சயமாக நிர்வாகி பதவியை வகிப்பேன் என்று நிம்மதியடைகிறான்.

இதற்கிடையில், வேலை தேடி செல்லும் அக்காவின் பிள்ளைகளை இரவில் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை Skeeter ஏற்றுக் கொள்கிறான். இரவானதும் கதை கேட்டே உறங்கிப் பழகிக் போன குழந்தைகள், Skeeter ரையும் கதை சொல்லுமாறு கேட்கின்றன. தன்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில் கொஞ்சம் கற்பனை கலந்து அவர்களுக்கு கதையாக சொல்கிறான் Skeeter. அவன் சொல்கின்ற கதை குழந்தைகளுக்கு பிடித்திருந்தாலும் அதன் முடிவுகள் பிடிக்காமல் போகின்றன. அதனால் குழந்தைகளே கதையின் முடிவை தீர்மானிக்கின்றன.

அப்படி குழந்தைகளிடம் தான் சொன்ன கதையும் அதற்கு குழந்தைகள் சொன்ன முடிவும் தன் வாழ்க்கையில் நிஜமாகவே நடப்பதை உணரும் Skeeter, ஹோட்டல் மேனேஜராகும் தன் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் அது சம்பந்தப்பட்ட கேரக்டர்கள் வந்து போகும் கதையாகவே சொல்லத் தொடங்குகிறான். அப்படி சொல்லப்படும் கதைகளின் முடிவு எப்படி அமைகிறது? இறுதியில் Skeeter அந்த ஹோட்டலின் நிர்வாகி ஆனானா? என்பதுதான் கதை.

கதையென்று படத்தில் பெரிதாக ஏதும் இல்லைதான். ஆனால் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நல்ல பொழுதுபோக்கு படத்தை ரசிக்க விரும்புகிறவர்கள் தாராளமாக இந்த படத்தைப் பார்க்கலாம். படம் தொடங்கியது முதல் இறுதி வரை சிரிக்க வைத்திருக்கிறார்கள். படத்தில் நடித்திருப்பவர் பிரபல காமெடி நடிகர் Adam Sandler. படத்தின் இயக்குநர் Adam Shankman.

மஇகாவின் துணைத் தலைவர் யார்?

நாளை மஇகா தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த முறையும் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு, தன்னுடன் இணைந்து பணியாற்ற தகுதியுடையவர்கள் என்று சொல்லி அதிகாரத்துவ அணியை அறிவித்திருக்கிறார். மற்றபடி இந்த முறை நிறைய பேர் தனித்தே போட்டியிடுகிறார்கள். மஇகாவில் இது வழக்கத்திற்கு மாறான மாற்றம்.

துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலாக இது விளங்கினாலும் துணைத் தலைவர் பதவிக்கு நடக்கின்ற மும்முனை போட்டியைப் பற்றிதான் மலேசியா முழுவதும் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். டத்தோ எஸ்.சுப்ரமணியம், டத்தோ ஜி.பழனிவேலு மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் ஆகியோர் இந்த முறை துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். இதில் டத்தோ சுப்ராவும் டத்தோ பழனியும் ஏற்கனவே அந்தப் பதவியை அலங்கரித்திருக்கிறார்கள். டத்தோ சோதிநாதன் மட்டும் முதல் முறையான அந்தப் பதவியைக் குறிவைத்து களமிறங்குகிறார்.

இனி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தனித் தனியாக பார்ப்போம்…

டத்தோ எஸ்.சுப்ரமணியம்

மக்கள் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். டத்தோஸ்ரீ சாமிவேலுவும் இவரும் அடிக்கடி முறைத்துக் கொள்வார்கள். கொஞ்ச காலம் கழித்து கைகுலுக்கிக் கொண்டு ‘மக்கள் நலன் கருதி இணைக்கிறோம்’ என்று அறிக்கை விடுவார்கள். இடையில் எந்த சாத்தான் புகுந்து வேதம் ஓதுமோ தெரியாது, மீண்டும் பத்திரிகைகளில் அறிக்கை போர் நடத்தி ஒருவர் சட்டையை ஒருவர் இழுத்துக் கிழிக்காத குறையாக திட்டிக் கொள்வார்கள்.  மஇகா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு நடந்துக் கொண்டிருக்கும் அறிக்கை போர் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்போது அமெரிக்கா-ரஷ்யா மாதிரி அணுகுண்டு வீசுவதைப் பற்றியெல்லாம் பேசி மஇகா பேராளர்கள் வயிற்றில் புளியை அல்ல கிலோ-கிலோவாக மிளகாய்த் தூளை கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி வாய்ப்பைப் பொருத்தவரை டத்தோ சுப்ராவிற்கென தனிப்பட்ட ஆதரவாளர்கள் மஇகாவில் உண்டு. அந்த ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் நிச்சயம் டத்தோ சுப்ராவை சென்றடையும். ஆனால் அந்த ஓட்டுக்களை மட்டுமே டத்தோ சுப்ரா நம்பிக் கொண்டிருக்க முடியாது. காரணம் சென்ற முறை நடைப்பெற்ற தேர்தலில் கூட டத்தோ பழனிவேலுவிடம் இவர் தோற்றுப் போனார். இத்தனைக்கும் பழனிவேலு அப்போது முற்றிலும் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் ஆதரவை நம்பியே களத்தில் நின்றார். இப்போது அவரும் ஒரு தவணை துணைத் தலைவராக வேறு இருந்து விட்டார். ஆகவே போட்டி நிச்சயம் கடுமையானதாக இருக்கும். இந்த தேர்தல் டத்தோ சுப்ராவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்ற தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. வேறு கட்சியில் இணைய மாட்டேன். நான் மஇகாகாரன் என்று ஒவ்வொரு முறையும் டத்தோ சுப்ரா சொல்லி வந்திருக்கிறார். ஆனால் மஇகா தலைவரோ இவர் ஒரு செயல்படாத அரசியல்வாதி என்கிறார். மஇகா பேராளர்களின் நிலைதான் மதில் மேல் பூனை மாதிரி ஆகி விட்டது.

டத்தோ ஜி.பழனிவேலு

தேசிய தலைவரின் ஆசி பெற்ற தளபதி. வெற்றிக் கோட்டை தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறார். கிட்டத்தட்ட தலைமைப் பொறுப்பை இவரிடம்தான் கொடுத்து விட்டுச் செல்லப் போகிறேன் என்று டத்தோஸ்ரீ சாமிவேலுவும் கோடிகாட்டி விட்டார். டத்தோ சுப்ரா சாதிக்க முடியாத விஷயம் இது.  மௌனமாக இருந்தே பழனிவேலு சாதித்துக் கொண்டார். அந்த வகையில் இவர் ஓகே என்று மஇகாவில் லேசாக முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். எல்லாம் ஜயப்பனின் அருள்.

இவரது நிலை முயல் ஆமை கதை போல் ஆகிவிடும் என்றும் எதிர்தரப்பினர் சொல்கிறார்கள். தலைவனின் ஆணையை மீறி மஇகாவில் ஒன்றுமில்லை என்பதை டத்தோ பழனிவேலு அறியாதவரல்ல. ஆனாலும் சென்ற முறை இவருக்கு விழுந்த ஓட்டுகள் இந்தமுறை டத்தோ சோதிநாதன் தரும் போட்டியினால் சிதறிவிடும் வாய்ப்பு இருப்பதையும் இவர் கவனத்தில் கொள்ள வேண்டும். டத்தோ சோதியும் முன்பு டத்தோஸ்ரீயின் அரவணப்பில் இருந்தவர்தானே… ஆகவே இவருக்கு ஓட்டு போடுவதில் என்ன பிரச்னை ஏற்பட்டுவிடப் போகிறது என மஇகா பேராளர்கள் கருதினால் அதன் விளைவுகள் பழனிவேலுவின் வெற்றியை பாதிக்கும். ஆக, பழனிவேலு வெற்றிக் கோட்டிற்கு மிக மிக அருகில் இருந்தாலும், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு தெரியும் வரை எதுவும் உறுதியாக சொல்வதற்கில்லை.

டத்தோ எஸ்.சோதிநாதன்

இன்றைய தேதிக்கு மஇகாவின் டைனமிக் இளைஞர் இவர்தான். மாற்றத்திற்கான தேவை என்ற இவரது பிரச்சார யுக்தி மஇகா பேராளர்களின் குறிப்பாக இளைஞர்களின் பார்வையை இவர் பக்கம் ஒரளவுக்கு திருப்பியுள்ளது. அதே நேரத்தில் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் விசுவாசியாக இருந்த இவர், திடீரென தலைவர் ஆசி பெற்ற  வேட்பாளருக்கு எதிராக தேர்தலில் குதித்திருப்பதும் பலரது புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கைப்பிடியிலிருந்த அதிகார சாட்டை மெல்ல மெல்ல நழுவி விழுந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாகவும் இது தென்படுகிறது. 

தனது அதிகாரத்துவ அணி வேட்பாளரை எதிர்த்து களமிறங்கியிருக்கும் டத்தோ சோதிநாதனைப் பார்த்து, துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை விடுத்து நேராக தேசிய தலைவர் பதவிக்கே போட்டியிட்டிருக்கலாம் என்று டத்தோஸ்ரீ சாமிவேலு கிண்டலடிக்கிறார். பொதுவாக சாமிவேலு தனக்குப் பிடிக்காதவர்களை பற்றி மட்டும்தான் இப்படி கமெண்ட அடிப்பார் என்று மஇகா உறுப்பினர்களுக்கு தெரியும். இது மாற்றத்தை விரும்பும் மஇகா பேராளர்களால் கவனமாக பரிசீலிக்கப்படலாம். கட்சியின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் உண்மையான மஇகா உறுப்பினர்கள் டத்தோ சுப்ரா மற்றும் டத்தோ பழனிவேலுவை ஓரங்கட்டி விட்டு, தன் சேவையை மட்டும் நம்பி நிற்கும் சோதிநாதனுக்கு வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆக, மூவருக்குமே வெற்றி வாய்ப்பு சரிசமமான அளவிலேயே இருக்கிறது. இதில் யாருமே  பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்க தோன்றவில்லை. ஒரு வேளை அப்படி யாராவது பெரும்பான்மையில் வெற்றி பெற்றால் அவர்தான் அடுத்து கட்சியை வழிநடத்த சரியான தலைவராக மஇகா பேராளர்களால் கருதப்படுகிறார் என்று அர்த்தம்.

டத்தோஸ்ரீ சாமிவேலு துணைத் தலைவர் பதவிக்கு அறிவித்திருக்கும் வேட்பாளரைத் தவிர வேறு யார் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களால் சிறப்பாக கட்சிப் பணியாற்ற முடியுமா என்பது சந்தேகமே… காரணம் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தானே போட்டியிடுவது போலத்தான் டத்தோஸ்ரீ சாமிவேலு நடந்துக் கொள்கிறார். தான் விரும்புகின்ற தலைவரிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு செல்லும் வரை அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார் என்பதையும் பேராளர்கள் அறிவார்கள். தலைமைத்துவ மாற்றத்தை விரும்பும் மஇகா பேராளர்கள், கட்சியின் தலையெழுத்தை நாளை எப்படி நிர்ணயிக்கப் போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்….