Monthly Archives: மார்ச் 2009

TRAINING DAY (2001)

trainingdayபோலீஸ் வேலையை மக்கள் சேவையாக நினைத்து பணியாற்ற விரும்பும் ஒருவருக்கு, அதே போலீஸ் வேலையை தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் மூத்த போலீஸ் அதிகாரி பயிற்சி கொடுத்தால் என்ன நடக்கும்? அதுதான் படத்தின் கதை. படத்தின் நாயகனாக ஆண்டி ஹீரோ கேரக்டரில்  Denzel Washington னும் இணை கதாயகனாக Ethan Hawke கும்  நடித்துள்ளனர். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியதற்காக Denzel Washington  னுக்கு மொத்தமாக 8 விருதுகள் கிடைத்தன. (அதில் 1 ஆஸ்கர் விருது மற்றும் 1 கோல்டன் குளோப் விருது உள்ளடங்கியுள்ளது.) பாதுகாவலரான  Jake Hoyet போலீஸ் வேலையில் சேர விரும்புகிறார். அதற்காக போதை பொருள் ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் மூத்த அதிகாரியான  Alonzo Harris   சிடம் 24 மணி நேர பயிற்சி எடுக்கும்படி அவர் பணிக்கப்படுகிறார். இந்த இருவருக்கும் இடையில் அந்த ஒருநாள் நடக்கும் பரபரப்பான சம்பவங்களின் கோர்வைதான் Training Day. 

இதை action படம் என்று சொல்ல முடியாது. ஆனால்  Alonzo Harris  ஆக  நடித்திருக்கும் Denzel Washington   தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் வில்லத்தனம் காட்டியிருப்பார். (என்னா வில்லத்தனம்!) அதற்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.  எந்த நேரத்தில் துப்பாக்கியை உருவி யாரை சுடுவார் என்று கணிக்க முடியாத அசத்தலான நெகடிவ் கேரக்டர். Ethan Hawke கும் Denzel Washington  னும்   படம் முழுக்க  பேசிக் கொண்டே இருப்பது கொஞ்சம் அயர்வைத் தரலாம். ஆனால் கதையோட்டத்தின் பின்னணி உணர்ந்து ரசிப்பவர்களுக்கு அந்த உரையாடல்களே சுவாரசியம் தரக்கூடும். குறிப்பாக  “You wanna go home or jail?” என்று Ethan Hawke  கிடம் Denzel Washington  அடிக்கடி கேட்கும் கேள்வி. Ethan Hawke, Denzel Washington   னின் உத்தரவின்றி ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதும் பிறகு அந்த பெண்ணைக் காப்பாற்றிய காரணத்துக்காகவே தன்னை கொலை செய்வதற்காக Denzel Washington   பின்னிய சதி வலையில் இருந்து தப்பிப்பதும்  திருப்பம் என்றால், படத்தின்  இறுதி காட்சியும் யாரும் எதிர்பார்க்காததுதான். பார்த்து ரசித்து அனுபவிக்க வேண்டிய இந்த படத்தின் இயக்குநர் Antoine Fuqua.

சாமி வரம் கொடுத்தாலும்…

அண்மையில் கே.எல் பெரிய மருத்துவமனைக்கு போயிருந்தேன். ரத்த அழுத்தம்  எகிறி குதித்து தாண்டி ஓடியதில்….

முடியல…!

பொதுவாக நான் மருத்துவமனைகளின் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை. காரணம், பெரிதாக ஒன்றும் இல்லை. அங்கே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டுமே என்ற எண்ணம்தான். அன்றும் போயிருக்க மாட்டேன். அங்கே என்ன சொல்கிறார்கள் என்று அறிந்து கொள்ளத் தோன்றியது. கொட்டும் மழையில் நனைந்துக் கொண்டு போனேன்.

மருத்துவமனையில் காலடி எடுத்து வைத்தபோது காலை மணி சரியாக 9.20 காட்டியது. இதற்கு முன்பு அங்கு போனதில்லை என்பதால் பெயர் பதிவு செய்ய வேண்டும் என்றார்கள். வழக்கம் போலவே வரிசை. எனது முறை வந்தபோது பெரிதும் சிறிதுமாக இரு அட்டைகளை கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார்கள். வழக்கம் போலவே நம்பர் கொடுத்தார்கள். அட்டைகளில் என் விபரங்களை பூர்த்தி செய்து விட்டு காத்திருந்தேன். சரியாக பதினைந்து நிமிடங்களில் எனக்கான அழைப்பு வந்தது அப்போது மணி 9.35. கௌண்டருக்குப் போனேன். அட்டையை வாங்கி சரிபார்த்தவர் உங்களுக்கு என்ன பிரச்னை என்றார். சொன்னேன். ஒரு அறை எண்ணை எழுதிக் கொடுத்து போய் காத்திருங்கள் என்றார். நேராக அங்கே போனேன். இப்போது அரசாங்க மருத்துமனை இயக்கம் முன்பு போல மெதுவாக நகர்வதில்லை. எல்லாம் துரித கதியில் நடக்கிறது.

அன்று நம்மினத்தவர் அதிகம் இல்லை. பத்துக்கும் குறைவானர்களே இருந்தார்கள். இதர இனத்தவர்களே அதிகம். நம்மின இளம் ஆண் மருத்துவர் ஒருவர் அங்கும் இங்கும் நடந்து யாரையோ தேடிக் கொண்டிருந்தார். எனக்கு எழுதிக் கொடுத்த அறை முன்பு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டேன். சுமார் 35 நிமிடங்களுக்குப் பிறகு என்னை உள்ளே வருமாறு அழைத்தார் ஒரு தாதி, அப்போது மணி 10.10. அறைக்குள் போனேன். நம்மின இளம் பெண் டாக்டர் ஒருவர் இன்னொரு நோயாளியிடம் பேசிக் கொண்டிருந்தார். என்னை உள்ளே அழைத்த தாதி உடம்புக்கு என்ன? என்றார். சொன்னேன். வெளியில் அமர்ந்திருக்கும் தாதியிடம் சென்று உங்கள் அளவையும் ரத்தத்தின் இனிப்பின் அளவையும் பரிசோதித்து கொண்டு வாருங்கள் என்றார். மீண்டும் வெளியில் வந்தேன்.

எனக்குப் பின்னால் வந்தவர்கள் அவர்களது வேலையை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்கள். பரிசோதித்த தாதி உங்களது ரத்த அழுத்த அளவு அதிகமாக இருக்கிறது என்று  அந்தக் குறிப்பை எண்களில் எழுதிக் கொடுத்தார். மீண்டும் அறைக்குள் சென்றேன். மருத்துவர் பிஸியாக எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அப்போது மணி 10.20. சாவகாசமாக அவர் எழுதிய குறிப்புகளை சரிபார்த்து விட்டு, என்னிடம் திரும்பி என்ன பிரச்னை என்றார்? சொன்னேன். இந்த குறைபாடு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்றார். என்னுடைய வேலையும் வாழ்க்கை முறையும் அதற்கு காரணமாக இருக்கலாம் என்றேன். அப்படியென்றால் உங்களைப் போன்று வேலை செய்யும் அனைவருக்குமே இந்த குறைபாடு இருக்க வேண்டுமே என்று நக்கலாக கேட்டார். எரிச்சலாக இருந்தது.

அதன் பின்னர் சம்பிரதாயமான 3 கேள்விகள். உங்களுடைய கேஸை நான் ஆரம்பத்தில் இருந்து கவனிக்க வேண்டும் என்ற முடிவு. அவ்வளவுதான். மருந்தும் இல்லை ஒன்றும் இல்லை.  ஓய்வெடுக்க எம்சியும் தரப்படவில்லை.  எம்சி கிடைக்குமா? என்று கேட்டதற்கு… நன்றாகத்தானே நடந்து வந்திருக்கிறீர்கள் பின்னர் எதற்கு விடுமுறை? என்ற நக்கல் வேறு. வேண்டுமானால் டைம் ஸ்லிப் கொடுக்கிறேன். அடுத்த மாதம் வந்து பாருங்கள். அதற்கு முன்பாக சில பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள் என்ற அதிகார தோரணையில் 2 கட்டளைகள். இறுக்கமான பேச்சுவார்த்தை.  அவ்வளவுதான். வெளியே அனுப்பி விட்டார்.

வெளியே வந்தபோது மணி 10.35. வெளியில் அடை மழை. என்னிடம் கொடுக்கப்பட்ட டைம் சிலிப்பில் 11 மணி வரை நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. அடை மழையில் நனைந்துக் கொண்டே அலுவலகம் சென்று சேர்வது சாத்தியமில்லை. உடல் நிலையும் அதற்கு ஒத்துழைக்காது. யோசித்தேன். பேசாமல் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் குடும்ப மருத்துவரிடம் போயிருக்கலாம். மீண்டும் மழையில் நனைந்து கொண்டே அவரிடம் போனேன்.

 அடடா… நனைந்து விட்டீர்களா? என்ன செய்கிறது உங்களுக்கு என்றார். சொன்னேன். ரத்த அழுத்த அளவை பரிசோதித்தார். ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. முன்பே உங்களுக்கு மருந்து தந்திருக்க வேண்டும். ஆனாலும் இன்னும் உங்களுக்கு இளம் வயதுதான். அதுவாக குறைந்து விடும் வாய்ப்பிருக்கிறது என்பதால்தான் மருந்து தரவில்லை. இந்த மருந்தை எடுக்க தொடங்கி விட்டால் வாழ்நாள் முழுக்க எடுக்க வேண்டியதிருக்கும். இன்று மருந்து தருகிறேன். இனி தொடர்ந்து சாப்பிட வேண்டும். இன்றைக்கு எம்சி தருகிறேன். நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஓய்வு ரொம்ப முக்கியம். எல்லாம் சரியாகி விடும். கவலைப்படாதீர்கள். ஒரு வாரம் கழித்து வந்து என்னைப் பாருங்கள் என்றார்.

மருத்துவமனையில் நடந்ததைச் சொன்னேன். சிரித்தார். புதிதாக பணிபுரிய தொடங்கியுள்ள மருத்துவர் போலிருக்கிறது. அதனால்தான் மருந்து தர பயப்படுகிறார். பொதுவாக உங்களுடைய ரத்த அழுத்தத்திற்கு மருந்து கொடுப்பதே போதுமானது. சிறுநீரக பரிசோதனை எல்லாம் இப்போதைக்கு தேவையில்லை. ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த கூடிய அளவில்தான் இருக்கிறது. மருந்து சாப்பிட்டும் கட்டுப்படவில்லை என்றால்தான் அடுத்தடுத்த பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். சரியாக பத்து நிமிடம் கழித்து மீண்டும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார். முன்பைவிட குறைந்திருந்தது. ரிலாக்ஸ் ஆக இருந்தாலே ரத்த அழுத்தம் குறைந்து விடும். இப்போது உங்கள் மன இறுக்கம் குறைந்துள்ளது அதனால் ரத்த அழுத்தமும் குறைந்துள்ளது என்றார்.

இரண்டு மருத்துவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தீர்களா?

என்னைப் பரிசோதித்த அரசாங்க மருத்துவரைக் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இதை எழுதவில்லை. எனக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டதற்கான காரணத்தை முழுமையாக புரிந்துக் கொண்டு அதற்கேற்ற சிகிச்சையைத் தருவதே சரியான முறை என்று அவர் நினைக்கிறார். நியாயம்தான்.

ஆனால், ஒரு மருத்துவர் நோயாளிகளிடம் எப்படி பேச வேண்டும்? மக்களுடன் தோழமையுடன் பழகுங்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. அரசாங்க பொது மருத்துவமனையில் பணிபுரிகின்ற மருத்துவர்களுக்கும் அது பொருந்தும்தானே? நோயுற்றவர்களிடம் எப்படி நடந்துக் கொள்வது என்று தெரிய வேண்டாமா? நோயாளிகளோடு ஒரேடியாக சிரித்துப் பேச சொல்லவில்லை. நோயாளியைக் கண்டவுடன் புன்னகையாவது செய்யலாம் அல்லவா? தன்னிடம் வருகின்ற நோயாளியிடம் அனுசரணையாக பேசினாலே அவர்களது துன்பத்தில் பாதி குறைந்து விடும்.  அதை விட்டுவிட்டு நோயுற்றவர்களிடம் நக்கலடிப்பதும் அவர்களது உடல் நிலைப் புரிந்துக் கொள்ளாமல் பேசுவதும் கொஞ்சம் ஓவர்தான். (உடல் நிலை சரியில்லை என்பதால் அன்று கோபத்திற்கு விடுமுறை… அதனால் டாக்டர் தப்பித்தார்.)

அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தாலும் இது போன்ற நடவடிக்கைகளால்  பெருவாரியான மக்கள் அதிருப்தியுறுகிறார்கள் என்பதே உண்மை.

FREEDOM WRITERS (2007)

freedom_writers_ver2ஒரு பள்ளி ஆசிரியை நிறத்தால் இனத்தால் சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் பிரிந்து கிடக்கின்ற தம்முடைய மாணவர்களை ஒன்றுபட வைக்கிறார். தனது மாணவர்களின் வாழ்க்கை அனுபவங்களை டைரியில் சொந்தமாக எழுத வைத்து அதை புத்தகமாக வெளியிட்டு அவர்களை சுதந்திர எழுத்தாளர்களாக மாற்றுகிறார். தனது ஒவ்வொரு மாணவனும் வாழ்க்கையில் அவர்கள் விரும்பியபடி உயர வழிகாட்டுகிறார். இதுதான் படம். ஏற்கனவே The Freedom Writers Diary என்ற பெயரில்  வெளிவந்த  புத்தகம்தான் இந்த படம். Erin Gruwell  என்ற ஆசிரியையும் அவரது மாணவர்களும்தான் அதை எழுதியவர்கள். படத்தின்  கதாநாயகிக்குக் கூட அந்த ஆசிரியையின் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது. படம் தொடங்கியது முதல் நிறைவு பெறும் வரை பார்வையாளர்களின் கவனம் வேறு எங்கும் சிதறிவிடக்கூடாது என்று நோக்கத்திலேயே படம் எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. காட்சிக்கு காட்சிக்கு புதிய விஷயங்கள் கண்முன்னே விரிந்துக் கொண்டே இருக்கின்றன.

ஓர் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற நெருக்கம் மாணவர்களின் வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றியமைக்கும் சக்தி கொண்டதாக இருக்கிறது என்பதை சின்ன சின்ன சம்பவங்களின் மூலம் அழகாக காட்டியுள்ள இயக்குனர் Richard LaGravenese இனம், நிறம் வேறுபாடு காரணமாக மாணவர்கள் மத்தியில் ஏற்படும் வெறுப்பின் உணர்ச்சிக் கொந்தளிப்பை அதே தீவிரத்தோடு நாம் உணரும் வகையில் காட்டியுள்ளார். தாங்கள் சார்ந்துள்ள தொழிலில் புதியதொரு மாற்றத்தை கொண்டு வர விரும்பும் பெண்கள் தங்களது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் சவால்களைப் பற்றியும் இந்தப் படத்தில் நன்கு பதிவு செய்துள்ளார். மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆசிரியராகவும், தன்னுடைய இலட்சியத்திற்கு துணை நிற்க இயலாமல் தன்னை விட்டு ஒதுங்கிச் செல்லும் கணவனுக்காக வருத்தப்படும் பெண்ணாகவும் Hillary Swank அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர்.

ஒவ்வொரு மாணவனின் பின்னணிக் கதையும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அதன் காரணமாக ஒரே வகுப்பறையில் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் கொண்ட மனிதர்களாக அவர்கள் நடமாடுகிறார்கள். அந்த மாணவர்களுக்கு எது செய்தாலும் அது பயனற்றது என பள்ளி நிர்வாகமும் சில ஆசிரியர்களும் கருதுகிறார்கள். அந்த கருத்தை மாற்றியமைக்க Erin Gruwell   மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளும் அவரது இலாகா உயர் அதிகாரியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு மேலிடத்துக்கு புகார் செய்யப்படுகிறது. எல்லாவற்றையும் தனியொரு பெண்ணாக போராடி கடந்து தனது எண்ணத்தை எப்படி சாதித்து காட்டுகிறார் என்பதை சுவாரசியம் குன்றாமல் சொல்லியிருக்கிறார்கள். பார்க்க வேண்டிய படம் (குறிப்பாக ஆசிரியர்கள்).

நன்றி!

அண்மையில் என்னுடைய மோட்டார் சைக்கிளின் சாவியை அதிலேயே மறந்து வைத்து விட்டு அலுவலகம் வந்து விட்டேன். சுமார் 8 மணி நேரங்கள் அதைப்பற்றிய நினைப்பே எனக்கு இல்லை. அலுவலகத்திலிருந்து புறப்படும் சமயம்தான் அதைப்பற்றிய நினைப்பே வந்தது. சாவியை எங்கோ தொலைத்து விட்டு வெளிச்சமான இடத்தில் சாவியைத் தேடிய முல்லாவைப் போல நானும் என் அலுவலகத்தின் மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டு தேடினேன்.

என் மோட்டார் சைக்கிள் சாவியைத் தவிர என்னுடன் பணியாற்றும் சக தோழியின் எப்போதோ காணாமல் போன ஹேர் பின் உட்பட பலதும் கிடைத்தது. குழப்பமான மனநிலையோடு விதியை நொந்தபடி மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருக்கும் பார்க்கிங் பகுதிக்கு வந்தேன். என்னுடைய அலுவலகம் ஒரு ஷாப்பிங் சென்டர் அருகில் இருப்பதால் மோட்டர் சைக்கிள் பார்க் செய்வதற்குக்கூட கட்டணம் செலுத்த வேண்டும்.

அங்கிருந்த கட்டண வசூலிப்பாளர்  என் முகத்தைப் பார்த்து விட்டு என்ன ஏது என்று விபரம் கேட்டார். சொன்னேன். பெறுத்திருங்கள் பாதுகாலவர்கள் அலுவலகத்தில் விசாரித்து விட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். போனவர் சட்டென்று திரும்பி வந்து இதுதான் உங்கள் சாவியா? என்று என் சாவியைக் காட்டிக் கேட்டார்.

சட்டென்று நின்று போன இதயத்திற்கு உயிர் வந்தால் எப்படி துடிக்குமே அதைவிட வேகமாக துடித்தது என் இதயம். என்னுடைய மோட்டர் சைக்கிள் ஒன்றும் புத்தம் புதிய வண்டி இல்லைதான். இருந்தாலும் கடந்த 7 வருடமாக என்னுடைய வாகனமாக இருக்கின்ற  இயந்திர ஜீவன் அது. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வந்து விட்டேன்.  ஆனாலும் அவர்கள் செய்த அந்த உதவியை மறக்க முடியவில்லை.

காரணம் இந்த வட்டாரத்தில் மோட்டர் சைக்கிள் களவு போவது சர்வ சாதாரணமான விஷயம்.  கட்டண பார்க்கிங்தான் என்றாலும் கட்டண சீட்டிலேயே “பொருளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்கிற ரீதியில் வாசகங்களை அச்சடித்து வைத்திருப்பார்கள். இப்படியொரு நிலையில் நம் பொருட்கள் மீது அவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்ற அவசியமே இல்லை. இருந்தாலும் தங்களது பார்க்கிங்கில்  வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் களவு போய்விடக் கூடாது என்ற அக்கறையில் அதை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்த அட்ரியா ஷாப்பிங் சென்டர் பார்க்கிங் பாதுகாவலர்கள் அனைவருக்கும் இப்போது மீண்டும்  ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.