இந்து அறவாரியத் தலைவர் பதவிக்கு சீனரா?

மலேசிய இந்து அறவாரியத் தலைவராக ஓர் சீனரை நியமினம் செய்து, மலேசிய இந்துக்களின் மனதில் ஓர் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது தேசிய முன்னணி அரசு. மஇகாவை தனது கூட்டணியில் வைத்திருக்கும் நிலையில், தடாலடியாக ஒரு சீனரை இந்தப் பதவிக்கு நியமனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதுதான் மலேசிய இந்துக்களின் கேள்வியாகும்.

தேர்தல் காலங்களில் மஇகா மட்டுமே மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே இந்தியர் கட்சி என்று பிரசாரம் செய்த தேசிய முன்னணி, திடீரென கெராக்கான் கட்சித் தலைவர் மா சியு கியோங்கை இந்து அறவாரியத் தலைவராக நியமித்திருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வேடிக்கையானதும் கூட.

இந்து அறவாரியம் என்பது இந்து சமயம் சார்ந்த அமைப்பு. இதன் தலைவராக ஓர் இந்துவே நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாறாக வேற்று மதத்தைச் சேர்ந்தவரை தலைவராக நியமனம் செய்துள்ள தேசிய முன்னணி அரசாங்கம் மலேசிய இந்துக்களுக்கு என்ன புரிய வைக்க முயற்சிக்கிறது என்பதுதான் விளங்கவில்லை. அதாவது இந்து அறவாரியத் தலைவராக செயல்பட மஇகாவில் திறமை வாய்ந்த இந்து தலைவர்களே இல்லை என்று தேசிய முன்னணி அரசு கருதுகிறதா?

நிறைய பேர் இதை ஒரு 1 மலேசியா கொள்கையின் வெளிப்பாடு என்று சொல்லி புளங்காகிதம் அடைகிறார்கள். நல்லது. அப்படியென்றால் ஓர் இந்துவை இஸ்லாமியத் துறை அறவாரியத் தலைவராக நியமனம் செய்து விட்டு இதைச் செய்திருக்க வேண்டும். அதுதானே 1 மலேசியா கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் செயலாக இருக்க முடியும்?

இது குறித்து கண்டனம் தெரிவித்த பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியை கெராக்கான் இளைஞர் பகுதி தலைவர் டான் ‘மலேசியர் என்ற உணர்வு இல்லாதவர்” என்று வசைபாடியுள்ளார். மேலும் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவாங் எங் சீனராக இருப்பதால், அவர் பினாங்கு மாநில சீன சமூகத்துக்கு மட்டும் பாடுபடுகிறார் என்று பொருள் கொள்ளலாமா? என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

இதை சிறுபிள்ளைதனமாக பேச்சு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு மாநில முதல்வருக்கும் – ஒரு சமய அறவாரியத் தலைவருக்கும் உள்ள வேறுபாடு புரியாதவரெல்லாம் ஒரு கட்சியின் இளைஞர் பகுதி தலைவராக ஆக முடியும் என்பதற்கு டான் ஒரு நல்ல உதாரணம்.

மாநில முதல்வர் என்பவர் ஒரு மாநிலத்துக்கே பொறுப்பானவர். இந்து அறவாரியத் துறை என்பது இந்துக்களின் சமய நலன் சார்ந்த ஓர் அமைப்பு. இரண்டும் நிறைய வேறுபாடு உண்டு டான் அவர்களே… ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பும் புரிந்துக் கொண்டு பேசுங்கள். எப்படி இப்படி ஒரு வேகாத முட்டைகளை எல்லாம் தலைவராக வைத்திருக்கிறார்கள்? ஆச்சரியம், ஆனால் உண்மை!

சீனரான டான் தன் இனத்தவரின் நியமனத்திற்கு வக்காலத்து வாங்குகிறார் என்றால் நமது விளையாட்டுத் துறை துணை அமைச்சரும் – மஇகா உதவித் தலைவருமான டத்தோ சரவணன், இந்து அறவாரியத் துறை முன்பு ஒரு மலாய் அமைச்சரின் கீழ் செயல்பட்டபோது இது குறித்து கேள்வி எழுப்பாதவர்கள், இப்போது இந்நியமனம் குறித்து கேள்வி எழுப்புவதன் அவசியம் என்ன? என்று கேட்டிருக்கிறார்.
டத்தோ சரவணன் அவர்களே, நீங்கள் ஒரு நல்ல தமிழ் ஆர்வலர். மேடையில் நல்ல தமிழ் பேசுகிறீர்கள். சமயத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்கிறீர்கள். கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக்கூடாது என்ற அக்கறையும் உங்களிடம் இருக்கிறது. எதிர்கால இந்திய சமுதாயம் தமிழ் படித்த சமூகமாக இருக்க வேண்டும் என்ற அக்கறையும் உங்களிடம் காணப்படுகிறது.

அப்படியிருக்கும் போது ஏற்கனவே இந்து அறவாரியத் தலைவராக ஒரு மலாய் அமைச்சர் செயல்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருந்தும், இப்போது அதைத் தூக்கி சீனர் ஒருவருக்கு கொடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்தபோது நீங்கள் ஏன் அந்நியமனம் குறித்து கேள்வி எழுப்பவில்லை? குறைந்தபட்சம் உங்கள் மஇகா உறுப்பினர் யாராவது ஒருவருக்கு அதை பெற்றுத் தர நீங்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை?

எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. கவனித்துக் கொள்கிறோம் என்றுதானே மேடை தோறும் சொல்கிறீர்கள்?

“உங்களுக்கொரு பிரச்னையா – மஇகா இருக்கிறது. உங்கள் குரலாக மஇகா இருக்கிறது. உங்களுக்காக மஇகா போராடுகிறது. உங்கள் தலைவர்கள் நாங்கள் இருக்கிறோம். மக்களோ எங்களை நம்புங்கள். நாங்கள் உங்களுக்காக போராடுகிறோம்” இப்படித்தானே காலங்காலமாக எங்களிடம் சொல்லி வாக்கு வேட்டையாடுகிறீர்கள்? அதை நம்பித்தானே ஓட்டு போடுகிறோம்?

அம்னோதான் ஏதோ அரசியல் லாபங்களுக்காக கெராக்கான் கட்சிக்கு இந்தப் பதவியை கொடுத்து அழகு பார்க்கிறது என்றால் அதையும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நீங்களும் சொல்கிறீர்களே.. இது சரியா?

எங்கள் எல்லாருக்கும் முன்பாக நீங்களல்லவா இவ்விவகாரத்தில் எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும்? மஇகாவில் தலைவர்கள் இல்லையா டத்தோஸ்ரீ? என்றல்லவா நீங்கள் பிரதமரை வினவியிருக்க வேண்டும்? குறைந்தபட்சம் இவரை பரிசீலியுங்கள் என்றாவது ஆலோசனை சொல்லியிருக்கலாமே?

இதுவே ஒரு சீன அறவாரியத்துக்கு ஒரு தமிழன் தலைவராக முடியுமென்றால் ஆக்கிக் காட்டுங்கள். நமது பிரதமரின் 1 மலேசியா கொள்கை இந்த பூமியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறோம். அதையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ சமாளிக்க வேண்டும் என்பதற்காக காரணம் சொல்லாதீர்கள் டத்தோ சரவணன்.

நான் ஒன்றும் மதவாதியில்லை. ஆனால் இந்த நியமனம் தப்பாக இருக்கிறது. இதையெல்லாம்விட மலேசிய இந்து அறவாரியத்துக்கு தலைமையேற்க ஓர் இந்து தலைவருக்கு கூடவா அருகதையில்லை?

வெட்கக்கேடு!

பின்னூட்டமொன்றை இடுக