Monthly Archives: ஜூன் 2009

GONE BABY GONE (2007)

gone2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவுச் சந்தைக்குச் சென்ற நூரின் என்ற 8 வயது சிறுமி கடத்தப்பட்டதும், பின்னர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடைத்ததும் மலேசியர்கள் பலருக்கு நினைவிருக்கும். அதே ஆண்டு கிட்டத்தட்ட அதே போன்ற சிறுமி கடத்தலை மையப்படுத்தி வெளிவந்த படம்தான் Gone Baby Gone. இந்தப் படம் திரையேறவிருந்த சமயத்தில் நூரின் கடத்தல் சம்பவம் நமது நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த காரணத்தால் குறிப்பிட்ட நாளுக்கு சில மாதங்கள் கழித்தே இந்தப் படம் நம் நாட்டில் திரையீடு கண்டது. இதே போல இங்கிலாந்திலும் Medeleine McCann என்ற சிறுமி கடத்தப்பட்டிருந்த காரணத்தால் திரையீடு காணவிருந்த நாளைக் கடந்து பல மாதங்கள் கழித்துதான் இந்தப் படம் அங்கே திரையிடப்பட்டது.

ஒரு நாள் Amanda என்ற சிறுமி காணாமல் போகிறாள். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை உண்டாக்குகிறது. இதற்கிடையில் காவல் துறையின் மேல் நம்பிக்கை இழக்கும் கடத்தப்பட்ட சிறுமியின் மாமனும் அத்தையும் Patrick Kenzie மற்றும் Angie Gennaro  என்ற இரு தனியார் துப்பறிவாளர்களிடம் சிறுமியை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைக்கின்றனர். அவர்கள் இருவரும் காணாமல் போன சிறுமியை நெருங்கி விடும் சமயத்தில் அவள் கொல்லப்படுகிறாள்.

இந்த கொலைக்கு Patrick க்கும் Angie யும் நேரடி சாட்சியாகிறார்கள். சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அவர்களை நிறையவே பாதிக்கிறது. இரண்டு மாதங்கள் கழித்து இன்னொரு சிறுவனும் அதே போல கடத்தப்படுகிறான். அவனை பிணமாக கண்டுபிடிக்கும் நேரத்தில் ஏற்கனவே கொல்லப்பட்ட சிறுமியின் கடத்தல் மற்றும் கொலை சம்பவத்தில் நிகழ்த்தப்பட்ட மறைமுக நாடகம் Patrick ஆல் கண்டுபிடிக்கப்படுகிறது. உண்மை தெரிந்த நிலையில் Patrick எடுக்கின்ற முடிவு, Patrick மற்றும் Angie க்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக அமைகிறது. அதுவே அவர்களை நிரந்தரமாக பிரித்தும் விடுகிறது.

Patrick எடுத்த முடிவு என்ன? Amanda எதற்காக கடத்தப்பட்டாள்? அதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார்? Patrick மற்றும் Angie கிடையில் ஏன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது? என்ற கேள்விகளுக்கு படத்தில் தெளிவான, மனதை கலங்க வைக்கும் பதில் இருக்கிறது. ரசிகர்களுக்கு குழப்பமே ஏற்படுத்தாமல் சொல்ல வந்ததை மிகத் தெளிவான திரைக்கதையாக தந்திருக்கிறார் படத்தின் இயக்குநரும் பிரபல ஹாலிவூட் நடிகருமான Ben Affleck .

இந்தப் படத்தில் Ben Affleck தம்பி Casey Affleck தான் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரது தோழி Angie யாக Michelle Monaghan னும் Capten Jack Doyle யாக Morgan Freeman  னும் நடித்துள்ளனர். இந்தப் படம், படத்தின் பெயரிலேயே Dennis Lehane எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. சில உண்மைச் சம்பவங்களும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

மெதுவாக நகரும் திரைக்கதைதான் என்றாலும் இறுதி வரை சுவாரசியத்துக்கு குறைவில்லை. குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருந்த சமயத்தில் வெளிவந்த படம் என்பதால் படத்திற்கு உலகளாவிய ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தில் கடத்தப்பட்ட சிறுமியின் தாயாராக நடித்திருந்த Amy Ryan என்ற நடிகை 17 சிறந்த துணை நடிகை விருதை வென்றுள்ளார்.

குறையென்று பார்த்தால், படத்தில் அநியாயத்துக்கும் நான்கெழுத்து வார்த்தையை உபயோகித்திருக்கிறார்கள். வரிக்கு வரி காதில் விழுந்து இம்சிக்கிறது. அதைத் தவிர மற்றபடி கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

சமூக, அரசியல் சூழல் குறித்து வெளிப்படையான கருத்து சொல்ல நமது இந்திய எழுத்தாளர்கள் பயப்படுகிறார்கள்! – உதயசங்கர் எஸ்பி நேர்காணல்

12

‘தி ஓன்’ கல்லூரி விரிவுரையாளர், டிவி 1 தேசிய மொழி செய்தி ஆசிரியர், டிவி 1 தினசரி பத்திகை ஆய்வாளர், ‘செலாமாட் பாகி மலேசியா’ நிகழ்ச்சியின் நூல் ஆய்வாளர், காவ்யன் அமைப்பின் தலைவர், டேவான் பாஹாசா டான் புஸ்தாகாவின் மதிப்பிற்குரிய எழுத்தாளர், தேசிய மொழி கட்டுரையாளர், நாவலாசிரியர், சிறுகதையாளர், சிலாங்கூர் மாநில புத்தக கண்காட்சி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் என்று பல்வேறு தளங்களில் வெகு தீவிரமாக இயங்கி வருபவர் உதயசங்கர் எஸ்பி.

தேசிய மொழி இலக்கிய பக்களிப்பில் இவரது ஆளுமை குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. நமது இந்திய சமுதாயத்தின் பிரதிநிதி என்ற முறையில் தேசிய மொழி உலகில் இவர் தடம் பதித்து வருவது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒரு விஷயமாகும்.

இவரை பேட்டியெடுக்க தொடர்பு கொண்டபோது, சிறிது நேர யோசனைக்குப் நேரம் ஒதுக்கி தருவதாக ஒப்புக் கொண்டார். குறிப்பிட்ட நாளில் சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடம் முன்பாகவே வந்து சேர்ந்தார் அவர்.

மெலிந்த தேகமும் சிறிய உருவமுமாக கிட்டத்தட்ட ஒரு கல்லூரி மாணவர் போலிருந்தார் உதயசங்கர் எஸ்பி. தேசிய மொழி இலக்கிய உலகம், நமது இந்திய எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பு என்று பலதரப்பட்ட விஷயங்களை இந்தப் பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார் அவர்…

இன்றைய தேசிய மொழி இலக்கியப் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

உதயா: தேசிய மொழி இலக்கிய உலகம் மிகச் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை என்று எந்தப் படைப்பை எடுத்துக் கொண்டாலும் அதில் நிறைய மாற்றங்களும் புதுமைகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

தேக்கம் ஏதும் இல்லாமல் நல்ல சரளமான முறையில் தேசிய மொழி இலக்கிய உலகம் செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில் தேசிய மொழி இலக்கியத்தில் நமது இந்திய எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.

எழுத்துத் துறையில் முன்னேற்றத்தை நோக்கி பயணப்படும் தேசிய மொழி இலக்கிய உலகில் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளும் இந்திய எழுத்தாளர்கள் மிக குறைவு என்பதே நிதர்சன உண்மை.

தேசிய மொழி இலக்கிய விமர்சனப் போக்குகள் பற்றி, குறிப்பாக இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் மீதான விமர்சனங்கள் குறித்த உங்கள் கருத்தென்ன? ஒரு படைப்பாளி என்ற முறையில் அதைப் பற்றி விவரிக்க முடியுமா?

உதயா: பொதுவாக சிறுகதை, நாவல் ஆகியவற்றை ஆய்வு செய்ய அழைக்கப்படுகிறவர்கள் திறமையான, முதுகலைப் பட்டம் பெற்ற ஆய்வாளர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒரு படைப்பை ஆய்வு செய்யும் வேளையில் சொந்த கற்பனை அல்லது கருத்தை முன்வைத்து அந்த ஆய்வை மேற்கொள்ளாமல் இலக்கிய கோட்பாடுகளை முன்வைத்தே ஆய்வுகளைச் செய்வார்கள். இதனால் அவர்கள் நமது படைப்பின் மீது வைக்கின்ற விமர்சனங்களைக் கொண்டு நிறைய தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும்.

தற்போதைய சூழ்நிலையில் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளை ஆய்வு செய்வதில் தேசிய மொழி இலக்கிய கல்வியாளர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். காரணம், இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளில் இவர்கள் வித்தியாசம் காண்கிறார்கள். இலக்கிய கோட்பாடுகளை முன்வைத்து இந்த ஆய்வாளர்கள் இந்திய படைப்பாளிகளின் எழுத்தை ஆய்வு செய்யும் போது நமக்கும் அது புது உற்சாகத்தைத் தருகிறது.

இந்தியர்கள் எழுதிய தேசிய மொழி கதைகளுக்கு தற்போது முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக ஒற்றுமை கோட்பாட்டை வலியுறுத்தி நிறைய கதைகள் தேசிய மொழியில் எழுதப்பட்டு வருகின்றன. இதில் இந்திய எழுத்தாளர்களின் படைப்பில் தேசிய ஒற்றுமை கோட்பாடு எந்த வகையில் இடம்பெறுகிறது என்பது குறித்தும் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எழுத்தாளர்களின் சமூக அரசியல் அக்கறை குறித்த உங்கள் கருத்தென்ன?

உதயா: பொதுவாக சமூக, அரசியல் சூழல் குறித்து மலாய் இன எழுத்தாளர்கள் மிகத் தீவிரமாக எழுதிக் கொண்டு வருகிறார்கள். இதில் தமிழ் இலக்கியத்திலும் தேசிய மொழி இலக்கியத்திலும் ஈடுபாடு காட்டி வரும் இந்திய எழுத்தாளர்கள் சமூக, அரசியல் சூழல் குறித்து வெளிப்படையான கருத்து சொல்ல பயப்படுகிறார்கள்.

மலேசிய இலக்கிய உலகம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இயங்குவதாக உணர்கிறீர்கள்?

உதயா: இலக்கியத்துக்கு இப்போது பரவலான ஆதரவு கிடைத்து வருகிறது. அரசியல்வாதிகள் கூட இலக்கியம் படிப்பதிலும், படைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நிறைய புத்தக வெளியீட்டு விழாக்கள் நடக்கின்றன. பெரிய நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் கூட இப்போது கவிதை படிக்கிறார்கள்.

இது போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளைத் தவிர்த்து நிறைய இலக்கிய பளிசளிப்பு போட்டிகளும் நமது நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன. தேசிய மொழி, ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகிய மொழிகளில் நடத்தப்படும் போட்டிகளில் பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது. இது தவிர பல்வேறு துறையைச் சார்ந்த எழுத்தாளர்கள் இப்போது எழுதத் தொடங்கியுள்ளார்கள்.

உதாரணத்திற்கு மருத்துவர், வழக்கறிஞர், பொறியியலாளர் போன்றவர்கள் எழுத்துத் துறையில் தங்களது பங்களிப்பை செய்வதன் மூலம் பல துறை சார்ந்த தகவல்களால் எழுத்துலகம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. தளமும், களமும் புதிதாக இருப்பதால் வாசகர்களுக்கு இவை புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. இவை எல்லாவற்றையும் விட இணையத்தளத்தில் இருந்தும் நிறைய தகவல்கள் கிடைப்பதால் ஒரு சாதாரணக் கதையைக்கூட மிகச் சிறந்த படைப்பாக மாற்றிவிடக் கூடிய வாய்ப்பு இன்றைய எழுத்தாளர்களுக்கு கிடைத்திருக்கிறது. நாளுக்கு நாள் இலக்கியத் துறை வளர்ச்சியை நோக்கி பயணப்படுகிறது என்று இப்போது துணிந்து கூற முடியும்.

banner_main_new-25May2007-111934H

இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு டேவான் டான் புஸ்தாகா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது?

உதயா: வாசலைத் திறந்து வைத்துக் கொண்டு வாய்ப்புத் தர அவர்கள் எப்போதுமே காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், படைப்பாளிகளைத்தான் காண முடியவில்லை. அதே சமயம் இந்திய எழுத்தாளரின் கதை என்பதற்காக மட்டும் எல்லா கதையையும் ஏற்றுக் கொண்டுவிட முடியாது. கதையின் தரத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. டேவான் பஹாசா டான் புஸ்தாகாவைப் பொருத்தவரை எனது படைப்புக்கு ஈடான அல்லது அதைவிட மேலான படைப்பாக இருந்தால் மட்டுமே பதிப்பிக்க முன் வருகிறார்கள். ஒரு வகையில் இதற்காக நான் பெருமைப்பட்டாலும், இன்னொரு எழுத்தாளனுக்கு தடையாக இருக்கிறேனோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

கே: நீங்கள் எழுதத் தொடங்கிய காலத்தில் உங்கள் படைப்புகளுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது?

உதயா: நான் பள்ளி பருவக் காலம் தொட்டே எழுதத் தொடங்கி விட்டேன். எழுத்துத் துறையில் ஒரு புதுமை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் என்னைத் திருப்திப்படுத்த நானே எழுதிக் கொண்டது. இதற்கும் எனது பள்ளி ஆசியர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. பள்ளி ஆண்டு மலரில் வெளியிடும் அளவிற்கு அவர்கள் என் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.

1992 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் என்னுடைய படைப்புகள் வார, மாத இதழ்களிலும் பத்திரிகைகளிலும் இடம்பெறத் தொடங்கியது. இதை வாசித்த காலஞ்சென்ற தேசியமொழி இலக்கியவாதி ஒஸ்மான் பூத்தே  அவர்கள்தான் எழுத்துலகில் என்னை தீவிரமாக ஈடுபடும்படி ஊக்கமளித்தார். இதே காலக் கட்டத்தில்தான் டேவான் டான் புஸ்தாகாவும் என் படைப்புகளை பதிப்பிக்க முன் வந்தது.

கே: அந்த சமயத்தில் உங்கள் மீதும் உங்கள் படைப்புகள் மீதும் வைக்கப்பட்ட விமர்சனம் என்ன?

உதயா: தேசியமொழி இலக்கிய தளத்திற்கு வித்தியாசமான எழுத்தாளர் கிடைத்திருக்கிறார். இந்தியர்களைப் பற்றி தேசியமொழியில் திறம்பட எழுதுகிறார் என்று மிகப் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். இதற்கு காரணமும் உண்டு. அப்போது வெளிவந்த தேசியமொழிக் கதைகளில் இந்தியர்களின் கலாச்சாரத்தைப் பற்றி எந்தத் தகவலும் இருக்காது. அதற்கு அப்போது தேசியமொழி இலக்கிய தளத்தில் மலாய்க்கார எழுத்தாளர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்ததும் ஒரு காரணமாகும். அப்படியே அவர்களது கதைகளில் இந்திய கதாபாத்திரங்கள் தலைகாட்டினாலும் பெயரளவில் மட்டுமே அவர்களது பாத்திரப் படைப்பு இருந்தது.

நான் இந்தக் குறையைப் போக்கும் விதமாக எனது படைப்புகளில் இந்தியக் கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் எழுதத் தொடங்கியது அவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது கூட காரணமாக இருக்கலாம்.

UDHAYA

கே: உங்களுக்கு வரும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

உதயா: விமர்சனங்கள் இரு வகைப்படும். ஒன்று நமது படைப்பை ஆதரித்து பாராட்டி வரும் விமர்சனம். இன்னொன்று நமது படைப்பின் குறைகளை சுட்டிக் காட்டி வரும் கூர்மையான விமர்சனம். உதாரணத்திற்கு, ஒன்று சொல்கிறேன். ‘மிங்குவான் மலேசியா’ (Mingguan Malaysia) பத்திரிகையில் எனது ‘மொழி போராட்டவாதி’ (Pejuang Bahasa) என்ற கவிதை வெளிவந்தது. இந்தக் கவிதை மீதான விமர்சனம் ‘பெரித்தா ஹரியான்’ (Berita Harian) பத்திரிகையில் வெளிவந்தது.

தேசியமொழி என்பது அனைத்து மலேசியர்களுக்குமான பொது மொழி. இந்த மொழியைப் பாதுகாப்பது அனைத்து மலேசியர்களின் கடமை என்ற பொருள்பட நான் எழுதிய கவிதையை தவறாக புரிந்துக் கொண்ட வாசகர் ஒருவர், இந்தக் கவிதையை எழுதியவர் மலாய் இனத்தை எதிர்க்கிறார் என்றும் தேசியமொழி போராட்டவாதிகளை தவறாக சித்தரித்துள்ளார் என்றும் என்னைப் பற்றி காரசாரமாக விமர்சனம் செய்திருந்தார்.

பரவாயில்லை. இவர் என்னை இப்படி விமர்சித்திருப்பதை படித்துவிட்டு பலரும் அந்தக் கவிதையை தேடிப் படிக்க மாட்டார்களா என்ற எண்ணத்தில் அதனை நான் கடந்து வந்தேன். நான் எழுதுகின்ற அனைத்தையுமே வாசகர்கள் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. காரணம் சக எழுத்தாளர்களின் படைப்பை நானே பலமுறை விமர்சித்து கட்டுரை எழுதியிருக்கிறேன். அப்படியிருக்கும் போது, என் படைப்பின் மீது சொல்லப்படுகின்ற விமர்சனங்களை நான் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்?

கே: நீங்கள் எழுதுவதற்கு ஏதாவது நடைமுறை ஒழுங்கு வைத்திருக்கிறீர்களா?

உதயா: எழுதும் சமயத்தில் யாரும் என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது. நான் எழுத முடித்த கதையை யாரிடமும் காட்டுகின்ற பழக்கமும் எனக்கில்லை. முதலில் என்னுடைய கதையை நான் ஒரு எழுத்தாளராகவே வடிவமைப்பேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு எழுதிய கதையை நானே விமர்சகர் பார்வையிலிருந்து வாசிப்பேன். அப்போது எனது கதையில் தெரியும் குறைகளைச் சரி செய்துக் கொள்வேன். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து அதே கதையை வாசகர் கோணத்தில் படித்துப் பார்ப்பேன். அதில் திருப்தி கிடைத்த பின்புதான் கதைகளை நான் இதழ்களுக்கு அனுப்புவது வழக்கம்.

எனது இந்த சுபாவத்தை நிறைய பேர் தலைக்கனம் என்று கூட சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை நான் அப்படி கருதவில்லை. என்னைப் பொருத்தவரை மற்றவர்களின் கருத்தைப் பெறாமல் எனது கதையை நானே சுயமாக திருத்திக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். அப்படி நான் எண்ணி இதுவரை பிரசுரத்திற்கு அனுப்பிய கதைகள் எதையும் சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர் திருத்தி வெளியிட்டதில்லை என்பதும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம். இதன் காரணமாக நான் மேற்கொள்ளும் நடைமுறை சரிதான் என்ற நம்பிக்கை அழமாக என்னுள் பதிந்துள்ளது.

என்னிடம் இன்னொரு பழக்கமும் இருக்கிறது. ஏதாவது பத்திரிகையின் ஆசிரியர் என்னிடம் கதை பிரசுரமாகின்ற தேதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக கதை வேண்டுமென கேட்டால் அதை மறுத்து விடுவேன். மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் பிரசுரமாகப் போகின்ற இதழுக்கு வேண்டுமானால் கதை கேளுங்கள் தருகிறேன், ஒரு மாத காலத்திற்குப் பிறகு வெளிவரப் போகின்ற கதை வேண்டுமென்றால் அதை எழுத நான் மறந்து விடுவேன் என்று அவர்களிடம் நேரடியாக சொல்லியும் இருக்கிறேன். இதற்கு ஒரு காரணமும் உண்டு, எனது சிந்தனைக் கருவறைக்குள் நிறைய கதை கருக்கள் சூழ் கொண்டுள்ளன. எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் அவற்றை எழுத்தில் பிரசவிக்க நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

கே: ஒரு கதையின் கரு எந்தப் புள்ளியில் இருந்து உங்களுக்கு உதயமாகிறது?

உதயா: முதலில் நான் சொன்னது போலவே கதைக்கான கரு என் மனதில் எப்போதுமே  இருக்கிறது. சில சமயங்களில் சம்பவங்களின் அடிப்படையில் நான கதை எழுதுவேன். அதைக்கூட பல்வேறு ஆதாரங்களை திரட்டித்தான் முழு கதையாக்குவேன். அதனால், என் கதைகள் ஆதாரப்பூர்வமானவை என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். பத்திரிகைகளில் வருகின்ற செய்திகளைக் கூட நான் கதைகளாக மாற்றுவதுண்டு.

கே: உங்கள் கதைகளில் முடிவுகளைக் காண முடியவில்லை. இதற்கு ஏதேனும் காரணம் உண்டா? ஏன் கதைப் பின்னலின் தீர்வை அல்லது முடிவை சொல்லாமல் அப்படியே விட்டு விடுகிறீர்கள்?

உதயா: எனது கதையை, கதையில் வரும் கதாபாத்திரங்களே நகர்த்திச் செல்வதாக நான் நினைக்கிறேன். எனது கதாபாத்திரங்கள், கதைக்குள் உருவாக்கும் சம்பவங்களை விவரிக்கும் ஒரு கதைசொல்லியாகவே என்னை நான் கருதுகிறேன். இதனால் கதையின் முடிவை நான் தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.

சிறுகதை என்பதை நான் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி என்பதாகவே கருதுகிறேன். இதில், ஒரு கதை தொடங்கி அங்கேயே முடிந்து விடுகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம் இப்போது நடக்கின்ற ஒரு சம்பவம் அப்படியே முடிந்துவிடாமல் அதற்குப் பின்னும் தொடர்ந்து நடப்பதாக நான் நம்புகிறேன். அதே சமயத்தில் எனது கதையை வாசிக்கும் வாசகர்களின் பார்வை எனது கதை முடிவிலிருந்து மாறுபட்டு வேறு விதமாக அமையவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு சம்பவத்தின் மீதான அவர்களது பார்வை வேறு மாதிரியாகவும் அமைந்திருக்கக்கூடும். இதனால், கதையின் நம்பகத்தன்மையின் மீது அவர்கள் சந்தேகம் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு… ஒரு குடும்பக் கதை என்றே வைத்துக் கொள்வோமே, அந்தக் கதையில் இதுதான் பிரச்னை என்று விவரித்து விட்டு, முடிவை வாசகர்களிடமே விட்டு விடுவதுதான் பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

கே: ஒரு எழுத்தாளர் சொந்த அனுபவத்தை வைத்துதான் எழுத வேண்டுமா?

உதயா: சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத வேண்டும் என்றால் நான்கு அல்லது ஐந்து கதைகள் எழுதலாம். நமது நாட்டுச்சூழலில் நிறைய விஷயங்கள் குறித்து கவனிக்கத்தக்க செய்திகள் இல்லை. அதற்கு நாம் ஒரு சுபிட்சமான, அமைதியான நாட்டில் வாழ்வதும் ஒரு காரணம். அப்படியே நம் நாட்டில் சின்ன-சின்ன பிரச்னைகள் தோன்றி மறைந்துப் போனாலும், பிரச்னை நடந்த அந்த சமயத்தில் நாம் எந்த இடத்தில் இருந்தோம் என்பதும் முக்கியம். அப்போதுதான் அங்கு நடந்த சம்பவ அடிப்படையில் நம்முடைய சொந்த அனுபவத்தை நாவலாகவோ அல்லது சிறுகதையாகவோ எழுத முடியும்.

சம்பவ இடத்தில் உள்ளவர்கள் எழுத வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தாலும், அவர்களில் எத்தனை பேர் எழுத்தாற்றல் உள்ளவர்களாக இருக்கப் போகிறார்கள்? ஆக நடந்த விஷயத்தை தெரிந்துக் கொண்டு, சம்பவ இடத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களின் அனுபவத்தையும் கருத்தையும் கேட்டறிந்து எழுதக்கூடியவர்தான் உண்மையான எழுத்தாளராக இருக்க முடியும். மாறாக, ஒரு எழுத்தாளர் தன்னுடைய சொந்த அனுபவத்தைக் கொண்டு மட்டும் எழுத வேண்டும் என்று நினைத்தால், அவரது வாழ்நாளில் ஒரே ஒரு ‘சுயசரிதை’ மட்டுமே எழுத முடியும். 

கே: வெகு தீவிரமாக இலக்கிய தளத்தில் செயல்பட்டு வரும் உங்களது பொழுதுபோக்கு என்ன?

உதயா: சினிமா பார்ப்பதுதான் (சிரித்தார்). நான் எல்லா படங்களையும் பார்க்கும் தீவிர சினிமா ஆர்வலன் இல்லை. இருப்பினும் நாவலைத் தழுவி எடுக்கப்படும் எல்லா படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். நிறைய ஆங்கில, ஜப்பானிய, பிரான்ஸ் நாட்டு திரைப்படங்களை பார்ப்பேன். தமிழில் எனக்கு கமல்ஹாசன் நடித்த படங்கள் பிடிக்கும். அதற்காக என்னை அவரது ரசிகன் என்று நினைத்து விடாதீர்கள்… (சிரித்தார்).

கே: இதன் தொடர்பாக உங்களிடம் ஒரு கேள்வி. உலக சினிமாவைப் பொருத்தவரை நாவல், உண்மைச் சம்பவம், சரித்திரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிறைய திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், நமது நாட்டைப் பொருத்தவரை அதுபோன்ற படங்கள் வெளிவருவது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

உதயா: நமது நாட்டைப் பொருத்தவரை சரித்திரப் பதிவுகள் பத்திரப்படுத்தி வைக்கப்படவில்லை. ஒரு சரித்திர படத்தை எடுக்க வேண்டும் என்றால் கூட அதையும் கற்பனை கலந்துதான் சொல்ல வேண்டியதிருக்கிறது. உதாரணத்திற்கு ஹங் துவாவைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்றால் கூட  பெரும்பாலான காட்சிகளை கற்பனை கலந்துதான் எடுக்க வேண்டும். அதே சமயத்தில் லெஃப்ட்ணன்ட் அட்னானைப் பற்றி படம் எடுக்க வேண்டுமென்றாலும் கூட, இப்போது நம்மிடம் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சரித்திர ஆதாரங்களை வைத்துக் கொண்டுதான் படம் எடுக்க முடியும் என்ற நிலை இங்கே இருக்கிறது. 

கே: சம கால எழுத்தாளர்களில் உங்களை பாதித்த எழுத்தாளர் யார்? எந்த வகையில் அவர் உங்களை வசீகரித்தார்?

உதயா: நமது நாட்டின் தேசிய இலக்கியவாதி எ.சமாட் சைட் அவர்கள்தான் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். 50ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அவர் இலக்கிய தளத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது எளிமையான எழுத்து பாணியும் தனது கருத்தை அவர் துணிச்சலாக வெளியிடும் பாணியும் என்னை மிகவும் கவர்ந்தவை. இவை எல்லாவற்றையும் விட, ஒரு முடிவை எடுத்து விட்டால் இறுதி வரை அதற்காக அவர் போராடும் விதத்தைக் கண்டு நான் பிரமித்துப் போயிருக்கிறேன்.

samad saidஎனக்குத் தெரிந்து இருமுறை அவர் அவ்வாறு போராடியிருக்கிறார். முதலாவது இலக்கியத்திற்கு அங்கீகாரம் கிடைக்க அவர் நடத்திய ‘இலக்கியப் போராட்டம்’ (Mogok Sastera). இரண்டாவது கலைகளுக்காக அவர் நடத்திய ‘கலைப் போராட்டம்” (Mogok Seni). இவ்விரு போராட்டங்களையும் அவர் யாருக்காகவும் தள்ளிப் போடவில்லை. முடிவெடுத்தார். செய்தார். அவரது துணிச்சலான இந்த அணுகுமுறையைத்தான் நானும் பின்பற்றுகிறேன்.

அவரைப் பற்றி இன்னொரு செய்தியும் சொல்கிறேன்… அவரது புத்தகங்களை பதிப்பித்த டேவான் டான் புஸ்தாகா அவற்றை மறுபதிப்பு செய்யவில்லை. இது குறித்து அவர் காரணம் கேட்டபோது, உங்கள் புத்தகங்களுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்று சொல்லி விட்டார்கள். இதைக் கேட்ட அவர், தமது புத்தகங்களை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதோடு சொந்தமாகவே ‘வீரா புக்கிட் சென்.பெர்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி தமது புத்தகங்களை மறுபதிப்பு செய்து வெளியிடத் தொடங்கினார்.

இப்போது அவர் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவர் இருவிதங்களில் புத்தகங்களை அச்சிட்டு வெளியிடும் முறையைக் கடைபிடிக்கிறார். முதலாவது, தடிமனான அட்டை கொண்ட புத்தகம். (வசதி படைத்தவர்கள் வாங்கும் அளவில்), இன்னொன்று சாமானிய மக்களும் வாங்கக்கூடிய மெல்லிய அட்டை கொண்ட சிக்கன விலையிலான புத்தகம். இதன் வழி அவரது புத்தகம் பரவலான வாசகர் வட்டத்தை எட்டியது.

இவருக்கு ஒரு சுபாவம் உண்டு. இலக்கிய கூட்டங்களுக்கு எங்கிருந்து அழைப்பு வந்தாலும் சென்று கலந்துக் கொள்வார். பெரிய நிகழ்ச்சிகளில் மட்டும்தான் அவர் விரும்பிக் கலந்துக் கொள்வார் என்பதில்லை. சாதாரண கம்பத்து இலக்கிய கூட்டமாக இருந்தாலும் அழைப்பை மதித்து கலந்து கொள்ளும் அவரது பணிவு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

LogoKavyan

கே: காவ்யன் அமைப்பைப் பற்றி சொல்ல முடியுமா?

உதயா: காவ்யன் அமைப்பு 1999ஆம் வருடம் தோற்றுவிக்கப்பட்டது. இதில் சுமார் 150 பேர் அங்கத்தினராக இருக்கின்றனர். அனைவரும் தேசியமொழியில் எழுதக்கூடிய திறன் கொண்ட இந்திய எழுத்தாளர்கள். அனைத்து இந்திய தேசியமொழி எழுத்தாளர்களையும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காகத்தான் காவ்யன் உருவாக்கப்பட்டது. இங்கே அனைவரையும் ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் ஒவ்வொருவரும் தங்களது படைப்புகள் குறித்து கருத்துப் பறிமாற்றத்தில் ஈடுபட முடிகிறது. இது அவர்களின் திறனை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும். அதோடு புது விதமான இலக்கிய படைப்புகளை அவர்கள் உருவாக்க ஒரு தூண்டுகோலாகவும் அமைகிறது.

காவ்யன் அமைப்பின் வாயிலாக நாங்கள் நிறைய தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெறும் சிறுகதை பயிலரங்குகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறோம். நமது இளைய தலைமுறையினர் தேசியமொழி ஆளுமையில் பின்தங்கி விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே நாங்கள் இதனை தொடர்ந்து நடத்தி வருகிறோம். காவ்யன் பற்றி முழு விவரங்களை http://www.kavyan.blogspot.com என்ற வலைப்பூவைப் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

(விடியல் 08/2007)

‘கதகளி’ – Kathakali

kathacover

தேசிய மொழி இலக்கிய உலகில் முத்திரை பதித்த இந்திய எழுத்தாளர்களில் நண்பர் உதயசங்கர் எஸ்பி குறிப்பிடத்தக்கவர். இவர் எழுதிய தேசிய மொழி சிறுகதைகள் ‘கதகளி’  என்ற பெயரில் தொகுப்பு நூலாக இன்று முதல் (19-06-09)  விற்பனையாகும்.  இது அவரது படைப்பில் வெளிவரும் 12வது நூல். இந்த புத்தகத்தின் விலை ரி.ம 20.00 மட்டுமே.

5க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இந்த நூலை வாங்கி பள்ளிகளுக்கு அன்பளிப்பு செய்ய விரும்பும் கொடை நெஞ்சங்களுக்கு 50 விழுக்காடு கழிவு விலையில் புத்தகங்கள் வழங்க அவர் முடிவெடுத்துள்ளார்.  மேல் விபரங்களுக்கு 012-336 8142 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது uthayasb@yahoo.com.my என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அவரை தொடர்பு கொள்ளலாம்.

தேசிய மொழி இலக்கிய துறையில் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு வெற்றி நடை போட்டு வரும் உதயசங்கர் எஸ்பி, இந்திய மாணவர்கள் தேசிய மொழி ஆளுமையில் பின்தங்கி விடக்கூடாது என்ற நோக்கத்தில் காவ்யன் (KAVYAN) என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த அமைப்பின் வாயிலாக இந்திய மாணவர்கள் தேசிய மொழியில் சிறந்து விளங்குவதற்கான பல பயிற்சி பட்டறைகளையும் அவர் நடத்தி வருகிறார். நம் நாட்டின் தேசிய இலக்கியவாதி பெருமதிப்பிற்குரிய ஏ.சமாட் சைட் அவர்கள்தான் காவ்யன் அமைப்பின் ஆலோசகராக செயல்படுகிறார்.

விடியல் வார இதழில் வெளிவந்த அவருடனான நேர்காணல் விரைவில் இங்கே இடம்பெறும். அதுவரை… ப்ளீஸ் வெயிட்!

THICK AS THIEVES (2009)

ttMorgan Freeman மற்றும் Antonio Banderas போன்ற பெரிய நடிகர்கள் நடித்துள்ள படம் என்று   பெரிய நம்பிக்கையோடு இதனை வாங்கி ஏமாந்து விடாதீர்கள். படம் காலி டப்பா. லேபிள் மட்டும் அழகாக இருக்கிறது.

கதை?

Keith Ripley (Morgan Freeman) ஒரு திருடன். அவன் இறுதியாக ஒரு பெரிய திருட்டை செய்ய விரும்புகிறான். அவனை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நியூயார்க் போலீஸ் அதிகாரி Lt.Weber (Robert Foster), Gabriel Martin (Antonio Banderas)  என்ற உளவாளியை Ripleyயின் பார்ட்டனராக அனுப்பி வைக்கிறார். திருடனை பிடிக்க வந்த உளவாளி திருடனின் பேத்தி Alexandra Korolenko (Radha Mitchell) வைக் காதலிக்கத் தொடங்குகிறான். அதே சமயத்தில் Gabriel ஒரு உளவாளி என்று ஆரம்பத்திலிருந்தே தெரிந்து வைத்திருக்கும் Ripley அவனை வைத்தே அந்த திருட்டை வெற்றிகரமாக நடத்தி சட்டத்தின் பிடியில் இருந்த தப்பி விடுகிறான். அதற்கு பேத்தி என்ற போர்வையில் நடிக்கும் வழக்கறிஞரும் ரஷ்ய குண்டர் கும்பல் தலைவனாக நடிக்கும் Ripley யின் நண்பனும் உதவி செய்கிறார்கள். தன்னை அவர்கள் பகடைக் காயாக பயன்படுத்திக் கொண்டதை இறுதியில் புரிந்து கொள்ளும் Gabriel போலீஸ் வேலையை துறந்து விட்டு தனது காதலியுடன் சேர்ந்துக் கொள்கிறான்.

அவ்வளவுதான் கதை. இதை சுவாரசியமாக சொல்கிறேன் பேர்வழி என்று தலையை சுத்தி மூக்கைத் தொட்டு அதகளம் பண்ணியிருக்கிறார்கள். படம் தொடங்கிய அரை மணி நேரத்திற்குப் பிறகு அடுத்த என்ன நடக்கப் போகிறது என்று முன்கூட்டியே யூகிக்க முடிவது திரைக்கதையின் பலவீனம். நல்ல crime story யாக வந்திருக்க வேண்டிய படம். Morgan Freeman மற்றும் Antonio Banderas போன்ற சிறந்த நடிகர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியிருக்கிறார் படத்தின் இயக்குநர் Mimi Leder. இந்த படம் The Code என்ற பெயரிலும் அறியப்படுகிறது.

ஆப்பிள் கொடுத்த நிலா

sp13

உறக்கம் கலையாமல் பனி போர்த்தியபடி துயில் கொண்டிருக்கும் கெந்திங் மலை குளிரில், நிலா உங்கள் அருகில் அமர்ந்து ஆப்பிள் வெட்டிக் கொடுத்தால் எப்படி இருக்கும்? சில்லென்று சிலிர்க்க வைத்து உபசரித்த நிலா யார் தெரியுமா? “பாடும் நிலா” எஸ்.பி பாலா.

அந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, நயனம் ஆசிரியர் ஆதி இராஜகுமாரன் என்னை அழைத்தார். (அப்போது நான் நயனம் வார இதழ் நிருபர்) “பரத்வாஜ் இன்னிசை இரவில் பாடவிருக்கும் எஸ்.பி பாலாவோடு ஒரு நேரடி தொலைபேசி பேட்டியை ஆஸ்ட்ரோ வானவில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு சென்று வாருங்கள்” என்றார். கையில் கிடைத்த ஒரு தாளை உருவி சடசடவென்று மனதில் தோன்றிய கேள்விகளை எழுதி எடுத்துக் கொண்டு போனேன்.

ஆங்கிலம், தமிழ் என்று இரு மொழிகளில் அந்த பேட்டி நடந்தது. முதலில் நடந்த ஆங்கில மொழி பேட்டி முழுசாய் 40 நிமிடங்களை முழுங்கியிருந்தாலும், நேரமாகிறது கொஞ்சம் சீக்கிரம் முடித்துக் கொள்ளுங்கள் என்று காதைக் கடிக்காமல் “ரொம்ப நேரம் காத்திருக்கீங்க இல்லையா?” என்று சிரித்தபடியே என்னையும் ‘தமிழ் நேசன்’ நாளிதழின் நிருபரையும் பேட்டி அறைக்கு அழைத்துச் சென்றார் வானவில் தலைவர் டாக்டர் ராஜாமணி. பேட்டி ஆரம்பித்தது.

தொலைக்காட்சி வானொலியில் மட்டுமே பாத்துக் கேட்டு மயங்கிய குரலுக்கு சொந்தக்காரர் காதோடு வணக்கம் சொன்னார். மின்சார கம்பியில் கை வைக்காமலேயே ஓர் அதிர்வு உடலெங்கும் பரவி ஓடியது. தொடர்ந்து 25 நிமிடங்களுக்கு கேள்வி – பதில் மட்டும்தான். இளையராஜாவுடனான நட்பு, ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடிய அனுபவம் என்று பலதரபட்ட விஷயங்களை ஜாலியாய் பகிந்து கொண்டார் எஸ்.பி.பி. அந்த பேட்டி அந்த வார நயனத்தில் வெளிவந்தது.

6ஆம் ஆண்டு விழாவுக்காக பரத்வாஜ் இன்னிசை இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்ல ஆஸ்ட்ரோ வானவில் பஸ் ஏற்பாடு செய்திருந்தது. டாக்டர் ராஜாமணியும் எங்களுடனே வந்தார்.

பாடகர் உன்னி கிருஷ்ணன், பாடகி அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கே வந்து எங்களுடன் பேசிவிட்டு போனார்கள். அவர்கள் போன பிறகு பாடும் நிலாவை தன்னோடு அழைத்துக் கொண்டு வந்தார் டாக்டர் ராஜாமணி. 

நேராக நான் அமர்ந்திருந்த மேசைக்கு வந்தவர், எஸ்.பி.பியை அங்கேயே அமரும்படி கேட்டுக் கொண்டார். டாக்டர் ராஜாமணியும் எங்களுடனே அமர்ந்துக் கொண்டார். தொலைபேசி பேட்டியைக் குறிப்பிட்டு இவர்தான் உங்களை அன்று பேட்டி எடுத்தவர் என்று எஸ்.பி.பிக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

என்னைப் பார்த்து மென்மையாய் சிரித்த எஸ்.பி.பி என் பக்கத்தில் அமர்ந்தார். பல்லாயிரக்கணக்கான இதயங்களை தன் குரலால் வசியம் செய்த ஒரு சரித்திரம் ‘நலமா இருங்கீங்களா?’ என்று என்னிடம் கேட்டுவிட்டு புன்னகைத்தது. உடன் வந்திருந்த தமது துணைவியாரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

எங்களுடனே அமர்ந்து சாப்பிட்ட எஸ்.பி.பி இடையிடையே எங்களிடம் மலேசியா பற்றி நிறைய கேட்டார். நான் , மக்கள் ஓசை (அப்போது வார பத்திரிகை) துணையாசிரியர் சின்னராசு மற்றும் டாக்டர் ராஜாமணி  அவருக்கு பதிலளித்துக் கொண்டிருந்தோம். எஸ்.பி.பி பேசினாலே பாடுவது போலதான் இருக்கிறது. கேட்டுக் கொண்டே இருக்கலாம். மென்மையான, பண்பான வார்தைகள். சாப்பிட்டு முடிந்ததும் துணைவியார் ஆப்பிள் பழங்களை எடுத்து தர, அதை தன் கையாலே வெட்டி  எங்களுக்குத் தந்தார். 

எஸ்.பி.பியைப் பார்க்க ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள் அங்கே வந்திருந்தனர்.  அவர்களை நோக்கி தன் துணைவியாரோடு  சென்ற அவர், ஒவ்வொரு குழந்தையாக பார்த்து பேசினார். அதோடு ஒவ்வொரு குழந்தைக்கும் தன் கையாலேயே பழங்களையும் வெட்டி கொடுத்தார்.  இந்த உபசரிப்பு கண்ட அத்தனை குழந்தைகள் முகத்திலும் எல்லையில்லா மகிழ்ச்சி.

எஸ்.பி.பி அடைந்திருக்கும் இந்த உயர்வுக்கு அவர் சொல்வது போல ஆண்டவன் அனுக்கிரகம் மட்டுமா காரணம் என்று நினைக்கிறீர்கள்? அவரது மனதும், பணிவும் கூட காரணமாக இருக்கும்.

அன்று நடந்த இன்னிசை இரவு பற்றிய நானெழுதிய
முழுமையான கட்டுரை பின்னர் நயனத்தில் ‘பனிமலையில் ஓர் இசைமழை” என்ற தலைப்பில் வெளிவந்தது.

(ஜூன் 4ஆம் தேதி எஸ்.பி பாலாவின் பிறந்தநாள். அதற்காக எழுதியது.)

TERMINATOR SALVATION (2009)

terminatorMarcus Wright (Sam Worthington) ஒரு மரண தண்டனை கைதி. Serena Kogan என்ற டாக்டரின் வேண்டுகோளுக்காக தன்னுடைய உடலை மருத்துவ பரிசோதனைக்கு தந்து விடுகிறான். அந்த பரிசோதனை நடத்தப்பட்ட ஒரு வருடத்திற்கு பிறகு Skynet செயல்படத் தொடங்குகிறது. தன்னுடைய இருப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மனித இனத்தை Judgment Day என்று கூறி இயந்திரங்கள் கூண்டோடு அழிக்கத் தொடங்குகின்றன. அதோடு கதை 2018க்குத் தாவி விடுகிறது.

Skynet க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள John Connor (Christian Bale)  இயந்திரங்கள் மனிதர்களின் திசுக்களை பயன்படுத்தி அவர்களையும் Cyborg  ஆக மாற்றும் முயற்சியில் இறங்கியிருப்பதை கண்டுபிடிக்கிறார். தங்களது ரகசியத்தை John Conner அறிந்துக் கொண்டதை உணரும் இயந்திரங்கள் அந்த இடத்தையே அணுகுண்டு வீசி அழிக்கின்றன. ஆனாலும் John Conner மட்டும் அந்த தாக்குதலில் இருந்து தப்பி விடுகிறார்.

தான் அறிந்துக் கொண்ட ரகசியத்தைப் பற்றி Resistance அமைப்பின் தலைமையிடம் சொல்லும் John Conner பதிலுக்கு இயந்திரங்களை முற்றாக செயலிழக்க வைக்கும் சக்தி வாய்ந்த ரேடியோ அலைவரிசை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை அறிந்துக் கொள்கிறார். அந்த ரேடியோ அலைவரிசையைப் பயன்படுத்தி Skynet ட்டை அழிக்கும் பொறுப்பு John Conner க்குத் தரப்படுகிறது. இன்னும் 4  நாட்களில் Skynet கொல்ல குறிவைத்திருக்கும் தளபதிகள் பட்டியலில் John Conner  ரின் பெயர் 2வது இடத்திலும் Kyle Reese என்ற ஓர் இளைஞனின் பெயர் முதல் இடத்திலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கான காரணம் மற்ற தலைவர்களுக்கு புரியாவிட்டாலும் John Conner ருக்கு நன்கு விளங்குகிறது. காரணம்  Kyle Reese தான் John Conner ரின் தந்தை.

இதற்கிடையில் ஆரம்பத்தில் John Conner ஆல் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அணுகுண்டு வீசி அழிக்கப்பட்ட மறைவிடத்திலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்துக்கு வரும் Marcus சை ஓர் இயந்திரத்திடமிருந்து Kyle Reese காப்பாற்றுகிறார். ரேடியோவில் John Conner ரின் செய்தியைக் கேட்கும் அவர்கள் John Conner ரைச் சந்திக்க புறப்படுகின்றனர். ஆனால் Kyle Reese இடையிலேயே இயந்திரத்தால் பிடிக்கப்பட்டு விடுகிறார். இயந்திரத்திடமிருந்து தப்பிவிடும் Marcus, Blair Williams என்ற பெண் விமானியை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார். அவள் Marcus சை John Conner ரிடம் அழைத்துச் செல்வதாக கூறுகிறாள். ஆனால் அவர்களது மறைவிடத்தை நெருங்கியதுமே அந்த இடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் காந்த பாதுகாப்பு வளையத்தில் Marcus சிக்கிக் கொள்கிறார்.

அவரும் புதுமையான Cyborg என்று கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனாலும் தானொரு மனிதன் என்று Marcus வாதிடுகிறார். இதயமும் மூளையும் இருப்பதால் மட்டும் உன்னை மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்துவிடும் John Conner, Marcus சைக்  கொல்லும்படி உத்தரவிடுகிறார். ஆனால் Blair உதவியுடன் Marcus தப்பி விடுகிறார். அதே நேரத்தில் Skynet ட்டை அழிக்க முடிவெடுக்கும் Resistance தலைமை அங்கு பரிசோதனைக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களையும் சேர்த்தே அழிக்க முடிவெடுக்கிறது.

தலைமையின் இந்த முடிவை John Conner எதிர்க்கிறார். மக்களை காப்பாற்றி விட்டு பின்னர் Skynet ட்டை அழிக்கும் வேலையில் இறங்குவோம் என்று அவர் தலைமையிடம் வாதிடுகிறார். ஆனால் தலைமை அவரை பதவியிலிருந்து நீக்குகிறது. இந்த நிலையில் John Conner  என்ன முடிவெடுத்தார்? Marcus நிலை என்ன? Skynet என்னவானது? அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களின் நிலையென்ன? என்பதுதான் மீதிப் படம்.

படம் ‘பார்க்கலாம்’ ரகம். ஆனாலும் முதல் முறை படத்தைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக கதை புரியாது. Terminator 1,2 ,3 பார்த்துவிட்டு செல்வது உதவக்கூடும். மற்றபடி ஏமாற்றம்தான்.