Monthly Archives: ஏப்ரல் 2011

CONVICTION (2010)

இதுநாள் வரை அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக பாசமலர் படத்தைப் பற்றியே பேசி வந்தோம். இனி அதனுடன் இந்த  படத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். தவிர இந்தப் படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என்பதுதான் இதன் சிறப்பு.

Kenny Water ரும் Betty Anne Water ரும் அண்ணன்- தங்கை. சிறு வயதில் தாயாரின் (9 கணவருக்கு 7 பிள்ளைகள் பெற்றுக் கொடுத்தவள்) சரியான கவனிப்பின்றி கொஞ்சம் முரட்டுத்தனமும் குறும்புத்தனமும் மிகுந்த பிள்ளைகளாக வளர்கின்றனர். இவர்களின் அட்டூழியம் அவர்கள் குடியிருந்த Ayer (America) நகர் மக்களிடையே வெகு பிரபலம் என்பதால், அடிக்கடி காவல் நிலையம் சென்று வர வேண்டியதிருக்கிறது. அதிலும் Kenny மீது போலீசார் தனி கவனம் செலுத்தி கண்காணிக்கின்றனர். அந்த அளவுக்கு முரட்டுப் பேர்வழி.

அண்ணன் தங்கை இருவரும் வளர்ந்து திருமணமாகி மகிழச்சியான வாழ்ந்து வரும் சமயத்தில்,1983ஆம் வருடம்  Kenny மீது ஒரு கொலைக் குற்றசாட்டு மீது சுமத்தப்படுகிறது.  1980ஆம் ஆண்டு Ayer நகரில் நடந்த அந்தக் கொலையை Kennyதான் செய்ததாக kennyயின்  மனைவி உட்பட பலரும்  சாட்சி சொல்கிறார்கள். தங்கை Betty மட்டும் தன் அண்ணன் அந்தக் கொலையைச் செய்திருக்க மாட்டான் என்று தீர்மானமாக நம்புகிறாள். சாட்சியங்களின் அடிப்படையில் Kennyக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

தவறே செய்யாத தன் அண்ணன் தண்டிக்கப்பட்டதை கண்டு பொங்கி எழும் தங்கை Betty, தன்னுடைய வாழ்நாளில் அண்ணனை சிறையிலிருந்து மீட்பதையே லட்சியமாகக் கொண்டு சட்டம் பயிலத் தொடங்குகிறாள். இடையிடையே.. சிறைக்குச் சென்று அண்ணனுக்கு ஆறுதலாகவும் இருந்து வருகிறாள். இது அவள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கிறது. இருந்தாலும் அண்ணனுக்காக எல்லாவற்றையும் அந்த அன்புத் தங்கை தாங்கிக் கொள்கிறாள்.

ஒரு வழியாக டிஎன்ஏ பரிசோதனை மற்றும் பிரபல வழக்கறிஞர் Berry Sheck துணையுடன் 18 வருடங்கள் கழித்து அவளால் தனது அண்ணனை நிரபராதி என்று நிரூபிக்க முடிகிறது. 1983ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட அண்ணனுக்கு 2001ஆம் ஆண்டு ஜுன் 19ஆம் தேதி விடுதலை வாங்கிக் கொடுக்கிறாள் தங்கை. இந்தப் படம் இதுவரை வெளிவந்த படங்களில் சிறந்த படம் என்று சொல்ல முடியாது. ஆனால் அண்ணன் தங்கை உறவுக்கு தனி மதிப்பளிக்க வந்திருக்கும் படம். அண்ணன் Kenny Waterராக Sam Rockwellலும் தங்கை Betty Anne Waterராக Hilary Swankக்கும் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநர் Tony Goldwyn.

THE CLIENT LIST (2010)

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தமிழ் சினிமாவில் உருவாக்கிய சில பெண் கதாபாத்திரங்கள் பிரபலமானவை.

அன்றைய காலக்கட்டத்திலேயே சமுதாயம் வரையறுத்து வைத்திருக்கின்ற கட்டமைப்புகளை உடைத்தெரியும் பாத்திரமாக விளங்கும்.

அதிலும் குடும்ப நிலையை மாற்றியமைக்க தன்னையே விறகாக்கிக் கொள்ளும் பாத்திரங்களாவும் அவை உருவாக்கப்பட்டிருக்கும்.

கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு பெண் கதாபாத்திரத்தின் கதையை ஆங்கிலத்தில் எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு உணர்வை ஏற்படுத்திய படம்தான் The Client List.

Samantha Horton ஒரு முன்னாள் Texas அழகி. அவளது கணவன் Rex ஒரு விபத்தில் சிக்கி காலில் அடிப்பட்டு விடுகிறது. அதனால் அவனுக்கு வேலை பறிபோகிறது. 3 குழந்தைகள், வேலை இல்லாத கணவன். பொருளாதார நெருக்கடி. வேறென்ன அவள்தான் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக தன்னுடைய நகரிலேயே வேலை தேடுகிறாள். ஆனால் அச்சிறிய நகரத்தில் வேலை காலி இல்லை.

ஆகவே தன் நகரை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கின்ற நகருக்கு வேலை தேடி போகின்றாள்.  அங்கே ஒரு மசாஜ் நிலையத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள், மசாஜ் செய்து விடுவது தவிர வேறு சில சேவைகளையும் அவள் வழங்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.

வேலையைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு அவளும் எல்லாவற்றிக்கும் சம்மதம் சொல்கிறாள். ஆரம்பத்தில் குடும்ப தேவைக்காக விரும்பாத வேலையை செய்யத் தொடங்குகிறவள், நாளடைவில் அங்கு தனக்கு கிடைக்கின்ற மரியாதைக்கும், பரிசுப் பொருட்களுக்கும் அடிமையாகிறாள். அப்படியே அவளுக்கு போதைப் பொருள் பழக்கமும் ஏற்படுகிறது.

இதற்கிடையில் இந்த மசாஜ் நிலையத்தில் நடக்கின்ற சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை பற்றி காவல் துறைக்கு தெரிய வருகிறது. இதுதவிர அந்த நகரில் நடைபெறவிருக்கின்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புகிற அரசியல்வாதி ஒருவர் இந்த விவகாரத்தை பெரிதாக்கி அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார்.

பத்திரிகை, தொலைக்காட்சி மட்டுமின்றி அவ்வட்டார மக்களிடையேயும் பிரபலமாகி விட்ட இந்த விவகாரத்தினால் அவள் குடும்ப வாழ்க்கை பாதிப்புறுகிறது. Samanthaவின் கணவன் அவர்களது மூன்று பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வேறு இடத்திற்கு சென்று விடுகிறான். தனிமரமாக தான் செய்த தவற்றை எண்ணி வருந்தத் தொடங்குகிறாள் Samantha.

இந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவள் எப்படி மீண்டு வந்தாள்? அவளுக்கு என்ன தண்டனை கிடைத்தது? அவளிடம் வாடிக்கையாளர்களாக இருந்த அதே நகரைச் சேர்ந்த ஆண்களின்  மனைவிகள் அவளை என்ன செய்தார்கள்? மீண்டும் அவள் குடும்பத்தோடு சேர்ந்தாளா? என்பதே நெஞ்சை உருக்கும் மீதிக் கதை.

இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய காரணத்திற்காக Samantha Hurton ஆக நடித்த Jeniffer Love Hewitt பெயர் சிறந்த நடிகைக்கான கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Lifetime Network தொலைக்காட்சியில் ஒளிபரப்ப எடுக்கப்பட்ட இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்தப் படத்தின் இயக்குநர் Eric Laneuville. மக்களின் ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து 2011 ஜனவரி மாதம் டிவிடியிலும் இப்படம் வெளியிடப்பட்டது.

இன்று தமிழர் புத்தாண்டா?

காலையிலிருந்து கிட்டத்தட்ட 20 புத்தாண்டு வாழ்த்து மின்னஞ்சல்கள் வந்துவிட்டன இதுவரை. நேரம் ஆக-ஆக இதன் எண்ணிக்கை கூடலாம். தவிர்க்க முடியாமல் இதற்கு நான் பதிலும் அனுப்பி வைத்திருக்கிறேன். ஆனாலும் மனசுக்குள் நெருடல். இன்று தமிழர் புத்தாண்டா?

இல்லவே இல்லை. தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாள்தான் என்பதை ஆணித்தரமாக நம்புகிறவன் நான்.

 ஆனாலும் நம் மக்களின் மனப்போக்கு இன்னும் மாறவில்லை. பல முறை இது குறித்து நான் விளக்கிய போதெல்லாம் கருத்து வேறுபாடுகள்தான் அதிகரிக்கிறதே தவிர, யாரும் இதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள தயாராக இல்லை.

கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்க பல சமயம் விட்டுக் கொடுத்து போக வேண்டியதிருக்கிறது. தவிர, என்னை விட வயது முதிர்ந்தவர்கள் வாழ்த்து சொல்லும்போது, முகத்தில் அடித்தாற்போல இன்று நீங்கள் சொல்வது போல் தமிழர் புத்தாண்டு இல்லை என்று சொல்ல மனம் வரவில்லை.

நான் செய்வது தவறு என்று எனக்குத் தெரியும். ஆனால் தன்னை அதிபுத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கின்ற மூடர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நான் செய்ய வேண்டிய வேலைகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட வேண்டியதுதான்.

அதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு இப்போதெல்லாம் முன்பு போல விவாதம் செய்வதில்லை. புன்னகைத்து விட்டு நகரப் பழகிக் கொண்டிருக்கிறேன். இது, மூன்று வகையில் எனக்கு உதவுகிறது.

1) என் நேரம் மிச்சப்படுகிறது.

2)என் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

3)என்னைக் கண்டதும் ஏதோ விரோதியைப் பார்ப்பது போல் யாரும் இப்போதெல்லாம் பார்ப்பதில்லை.

மற்றபடி என் பதிவைப் படித்து விட்டு “அதெப்படி நீ இப்படி சொல்லலாம்… ” என்று ஆரம்பிப்பவர்கள், தயவு செய்து கீழே படித்து விட்டு கேள்வியைத் தொடருங்கள்.

“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரிய கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
– பாரதிதாசன்.

THE MECHANIC (2011)

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஆங்கில சினிமாவிலும் புகழ் பெற்ற சில படங்கள் ரீமேக் செய்யப்படுவதுண்டு. அப்படி ரீமேக் செய்து வெளிவந்துள்ள படம் The Mechanic. 1972ஆம் ஆண்டு Charles Bronson நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தின் ரீமேக்கில் தற்போதைய ஹாலிவூட் அதிரடி நாயகன் Jason Statham நடித்துள்ளார். இயக்கம் Simon West.

Arthur Bishop ஒரு கொலைக்காரன். தான் செய்கின்ற கொலைகளை விபத்தாகவோ, தற்செயலான நிகழ்வாகவோ அல்லது எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நுணுக்கமாகவோ செய்வதில் வல்லவன். இந்த துறையில் இவனுக்கு வழிகாட்டியாகவும் நல்ல நண்பனாகவும் இருக்கின்ற Harry McKennaவைக்  கொலை செய்யும்படி முதலாளி Dean-னால் பணிக்கப்படுகிறான்.

ஏற்றுக்கொண்ட தொழிலில் இருந்து சற்றும் பின்வாங்காத Bishop, Harry McKenna கார் திருட்டு சம்பவத்தில் கொலையுண்ட வகையில் கொலை செய்து விட்டு போகிறான். இருந்தாலும் Harry McKenna-வுக்கு பட்ட நன்றி கடனை தீர்க்கும் வகையில் அவனது மகன் Steve-வைத் தன்னுடன் இணைந்துக் கொண்டு தான் செய்து வரும் தொழில் நுணுக்கங்களைப் பற்றி கற்றுத்தரத் தொடங்குகிறான் Bishop. இதனை Bishop முதலாளி Dean கண்டிக்கிறான். இருந்தாலும் Bishop தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து Steveவைத் தன்னுடன் வைத்துக் கொள்கிறான்.

ஒரு கட்டத்தில் Harry McKenna-வைக் கொல்ல தன் முதலாளியால் தான் பலிகடா ஆக்கப்பட்டதை தெரிந்துக் கொள்ளும் Bishop, தன்னுடைய முதலாளியைக் கொல்ல முடிவெடுக்கிறான். அதே சமயத்தில் தன்னுடைய தந்தையை கொன்றது Bishop-தான் என்ற உண்மையையும் steve தெரிந்துக் கொள்கிறான்.  தன் தந்தையைக் கொன்றவனை பழிவாங்கி Steve வஞ்சம் தீர்க்கிறானா?  இறுதியில் இருவரது நிலையும் என்ன ஆகிறது? என்பதுதான் பரபரப்பான முடிவு.

ஏன் கொலை செய்கிறார்கள் என்ற கேள்விக்கெல்லாம் படத்தில் பதில் இல்லை. இருந்தாலும் ஒவ்வொரு கொலையும் ஒவ்வொரு விதத்தில் செய்யப்படுவது ரசிக்க வைக்கிறது. The Transporter 1,2,3, The Italian Job, The Bank Job படங்களின் வரிசையில் Jason Statham-க்கு இன்னொரு வெற்றிப் படம்.

A Doctor In The House:The Memoirs of Mahathir

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது எழுதிய A Doctor In The House : The Memoirs of Mahathir என்ற இந்த புத்தகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை என் மனைவி எனக்குப் பரிசளித்தாள். புத்தகம் வெளிவந்து கிட்டத்தட்ட 1 மாதம் ஆகப் போகிறது (9 மார்ச்). இப்போதுதான் என் கைக்கு கிடைத்திருக்கிறது. விலை 100 ரிங்கிட் மட்டுமே.

 தனிப்பட்ட முறையில் எனக்கு துன் மகாதீரைப் பிடிக்கும். ஒரு சில அரசியல் முடிவுகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் துன் மகாதீர் மலேசியாவின் அடையாளம். அப்படிப்பட்ட தலைவனின் சுயசரிதம் இது. பால்ய பருவம் தொடங்கி 22 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த வரை உள்ள  தனது எண்ண அலைகளை ஒளிவு மறைவில்லாமல் இந்த புத்தகத்தில் பதிவு செய்திருப்பதாக துன் மகாதீர் கூறியிருந்தார்.

 கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான பக்கங்களில் 62 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளது. இனி படித்துப் பார்த்துதான் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். இன்று படிக்கத் தொடங்குகிறேன். விரைவில் புத்தகத்தில் அடங்கியிருக்கும் முக்கியத் தகவல்களை பதிவிடுகிறேன். இதற்கிடையில் புத்தகத்தை வாங்க விரும்புவோர் MPH கடைகளில் நேரடியாக சென்று வாங்கலாம்.

THE TOWN (2010)

Chuck Hogan எழுதிய நாவலைத் தழுவி Ben Affleck இயக்கிய படம்தான் The Town . Charlestown என்ற அமெரிக்க நகரத்தில் வங்கி கொள்ளை என்பது சர்வ சாதாரணம். அப்படி வங்கியைக் கொள்ளையடிக்கின்ற திருடன் ஒருவனுக்கு அதே வங்கியில் துணை நிர்வாகியாக பணியாற்றுகின்ற பெண் மீது காதல் வந்தால் என்ன நடக்கும்?

Dough MacRay, Jem Coughlin, Albert Magloan, Desmond Eldenஆகிய நால்வரும் சிறு வயது தோழர்கள். நகரத்தில் பூக்கடை நடத்தும் Fergie என்பவனின் கையாளாக இவர்கள் செயல்படுகிறார்கள். Fergie யின் ஆலோசனையின் அடிப்படையில் பல கொள்ளைகளையும் செய்கின்றனர். இந்த சூழலில்தான் இந்தத் திருட்டுக் கும்பலை பிடிக்கும் பொறுப்பு Adam Frawley என்ற FBI அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரும் இவர்களை ஒடுக்க திட்டமிடுகிறார்.

அதே நேரத்தில் ஏற்கனவே இவர்கள் கொள்ளையடித்த வங்கியின்  துணை நிர்வாகி Claire Keesey மீது Dough காதல் கொள்கிறான். இவனுக்கு அவளைப் பற்றி தெரிந்தாலும், இவனை பற்றி தெரியாமலேயே Claire அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். இதைத் தெரிந்து கொள்ளும் FBI அதிகாரி,  Claireரும் அந்த வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் Claireரின்  காதலனைப் பற்றிய உண்மையையும் அவளிடம் சொல்லி விடுகிறார்.

Claireரைக்  காதலிக்கத் தொடங்கிய பிறகு கொள்ளையடிப்பதை நிறுத்தி விட முடிவு செய்யும் Dough , அதனை தன் நண்பன் Jemமிடம் சொல்கிறான். இதனால் இருவருக்கும் மனவருத்தம் ஏற்படுகிறது. இருந்தாலும் தன்னை தன் போக்கில் விட்டுவிடும்படி Dough கேட்டுக் கொள்வதற்கு இணங்க, Jem  அவனை போகச் சொல்கிறான். இருந்தாலும் இத்தனை காலமாக வேலை செய்து வந்த Fergie யிடமும் இந்த தொழிலில் இருந்து Dough விலகிக் கொள்ள விரும்புவதாக சொல்லிவிட்டு போகச் சொல்கிறான் Jem.

நேராக Fergieயிடம் சென்று தன்னுடைய முடிவை Dough சொல்லும்போது, அதனை ஏற்க மறுத்து விடுகிறான் Fergie. மாறாக, இந்த முடிவு அவன் காதலியை பாதிக்கும் என்றும் மிரட்டுகிறான். அதனால் இறுதியாக ஒரு கொள்ளை செய்ய ஒப்புக்கொள்கிறான் Dough. அந்தக் கொள்ளை திட்டமிட்டபடி நடந்ததா? காதல் நிறைவேறியதா? நண்பர்கள் நால்வரும் என்னவானார்கள்? என்பதுதான் படத்தின் முடிவு.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான க்ரைம் படம். அதிலும் ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவை குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, கொள்ளையடித்து விட்டு வரும்போது பின்னாடி 10-20 போலீஸ் கார்கள் துரத்த, அதிலிருந்து தப்பித்து இன்னொரு காருக்கு மாறும் சமயத்தில் அவர்களுக்கு பக்கத்திலேயே ஒரு காரில் அமர்ந்திருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர்.. அவர்களை கண்டும் காணாதது போல் முகத்தை அந்தப் பக்கமாக திருப்பிக் கொள்வது.. நல்ல கலகலப்பான காட்சி. Gone Baby Gone படத்தையடுத்து Ben Affleck இயக்கத்தில் வெளிவந்துள்ள இன்னொரு சூப்பர் திரைப்படம் இது.