Monthly Archives: ஜூலை 2013

நண்பேன்டா!

சில மனிதர்கள் விசித்திரமானவர்கள். அவர்களை நீங்கள் புரிந்துக் கொள்வது கடினம். எல்லாரும் ஓர் இலக்கை துரத்தி ஓடிக்கொண்டிருக்க, இவர்கள் மட்டும் சாதிக்கிறோமென பல இலக்குகளைத் துரத்திக் கொண்டிருப்பார்கள். அதில் எந்த இலக்கை நோக்கி போகிறோமென அவர்களுக்கே முழுமையாக தெரியாது என்பதுதான் இதிலுள்ள ப்யூட்டி. அப்படியொரு நபரை அண்மையில் சந்தித்தேன். நேரக்கூடாத விபத்துதான். சில சமயங்களில் “விதி வலியது”.

நீங்கள் எல்லாரும் எம்எல்எம் என்றழைக்கப்படும் மல்டி லெவல் மார்க்கெடிங் துறையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மனித தொடர்புகளை சங்கிலிக் கோர்வையாக இணைப்பதன் வழி செயல்படும் துறை இது. உங்களது தொடர்புச் சங்கிலி எவ்வளவு நீளமோ அந்தளவுக்கு பெரிய லாபத்தை சம்பாதிக்கலாம். ஆனாலும் உங்களது கீழ்நிலைத் தொடர்பாளர்கள் அவர்கள் பங்குக்கு அந்த தொடர்ச்சியை பெருக்கிக் கொண்டே போக வேண்டும். அவர்கள் செயல்படாமல் நின்று விட்டால் ஓர் அளவுக்கு மேல் உங்களுக்கு அங்கே வளர்ச்சி இருக்காது. பொதுவாக பேசியே ஒரு பொருளை மார்க்கெட்டிங் செய்கிற துறை என்பதால், இந்த துறையில் பெரிய வளர்ச்சியை எட்டுவதற்கு பேச்சுத் திறன் ரொம்ப அவசியம். இப்படிதான் என்றில்லாமல் உங்களை நோக்கி வீசப்படுகின்ற சரமாரியான கேள்வி கணைகளை கூலாக டீல் செய்தாக வேண்டும்.

மலேசியாவில் மாதம் ஒருமுறை ஏதாவதொரு புதிய நிறுவனம் இப்படியொரு பொருளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட நிறுவனங்களில் உறுப்பினராக பதிந்து, தன்னை அங்கே நிலைநாட்டிக் கொள்ள விரும்பிய ஒருவர்தான் நான் சந்தித்த அந்த மனிதர். இதுதான் என்றில்லை.. புதிதாக நீங்கள் ஒரு பொருளைக் காட்டி, இப்போதுதான் சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது என்று சொன்னால் போதும், உடனே அந்த நிறுவன முகவராக பதிந்து, நிறுவனத்தின் பொருள், தரம் மற்றும் அந்த நிறுவன மார்க்கெட்டிங் ப்ளான் வரை கரைத்துக் குடித்துவிடும் அளவுக்கு மும்முரமாக வேலையில் இறங்கிவிடும் ஆள் இவர்.

பலமுறை இவரைக் கண்டு ஓடியிருக்கிறேன். மனிதர் பிடியில் மாட்டினால், சிக்கி சீரழிவதை தவிர வேறு வழியே இல்லை என்பதை அனுபவத்தில் ஏற்கனவே உணர்ந்திருக்கிறேன். 5 மணி நேரத்திற்கும் குறைவாக அவர் பேசி நான் கேட்டதே இல்லை. ஒரு புள்ளியி;ல் ஆரம்பித்து உலகையே வலம் வந்துவிடும் அபாயகரமான மனிதர். அந்தப் பீதியிலேயே அவர் இருக்கின்ற திசை பக்கமாகக் கூட நான் தலைவைத்துப் படுப்பதில்லை. ஆனாலும் சமீபத்தில் விதி என்னை அவரோடு கோர்த்து விட்டு கைக்கொட்டி சிரித்தது.

நம் நாட்டில் இருக்கின்ற ஒரு வசதி அங்காங்கே இருக்கின்ற மாமாக் ஸ்டால். அதிலும் குறிப்பாக இரவு நேர மாமாக் ஸ்டால் விசேஷமானவை. நண்பர்களோடு அரட்டையடிக்க, காதலியோடு பேச, வர்த்தக திட்டங்களை விவரிக்க, இன்றைய அரசியல் குறித்து அலசவென பல வாசல்களை திறந்து வைத்துக் காத்திருக்கும் ஒரு ஸ்பாட் அது. மலேசிய குடிமகனில் ஒருவனான நான் மட்டும் இதில் விதிவிலக்க என்ன? எனக்கு பிடித்த மாமாக் ஸ்டால் ஒன்றுக்கு போனேன். நெஸ்காபி சி ஒன்றுக்கு ஆர்டர் செய்து விட்டு வந்தமர்ந்த என்னை கரமொன்று தொட்டுத் தழுவியது. பார்த்தால் மேலே நான் புகழ்ந்து பேசிய நண்பர் புன்னகையோடு நின்றுக் கொண்டிருந்தார்.

“நண்பேன்டா….”

என் இதயம் துடிக்கின்ற ஓசை எனக்கே கேட்ட தருணமது. எந்த பொருளை கொடுத்து என்னை டெஸ்ட் செய்து பாருங்கள், டேஸ்ட் பண்ணி பாருங்கள் என கொடுமைப்படுத்த போகிறாரோ என உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், அவரையும் அமரச் சொன்னேன். அதற்குப் பின் நடந்ததெல்லாம் நாளைய வரலாற்றில் பொன்னெழுத்தில் செதுக்கப்படவிருக்கின்ற பிஸ்னெஸ் டாக்.

நண்பர் இப்போது புதிதாக 3 புதிய எம்எல்எம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாக சொன்னார். ஒரு பொருளைப் பற்றியே 5 மணி நேரம் பேசுவாரே… இப்போ 3னு சொல்றாரேனு அப்போதே மண்டைக்குள் கவுளி கத்தியது. “தப்பிச்சு ஓடிரு.. தப்பிச்சு ஓடிரு”னு என் மனம் உள்ளுக்குள் ஓலமிட்டு ஆடிய கதகளியை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரித்து வைத்தேன். நண்பர் உற்சாகமானார். “என்னய்யா குடிக்கிறீங்க? நெஸ்காபி சி யா? ஏன் சீனியின் அளவைக் கட்டுப்படுத்த ஆரம்பிச்சாச்சா?” என்று கேட்டபடி தன்னுடைய பேக்கில் கையை விட்டு துழாவினார்.

ஆஹா.. ஏழரைச் சனியின் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் பரிகாரம் செய்து கொள்வோம் என நினைத்து, “நண்பரே, ஏதாவது புதிய பொருளை எனக்கு காட்டப்போகிறீர்களா? உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? நீங்கள் சொல்லுங்க நான் கேட்டுக்கிறேன்” என்றெல்லாம் சொல்லிப் (கெஞ்சி)  பார்த்தேன். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளும் நிலையில் நண்பர் இல்லை. கர்மவீரன் போல் கடமையில் கண்ணாக இருந்தார். அதற்குப் பலனாக அவர் தேடியது கிடைத்தும் விட்டது.

நமது கட்டைவிரல் சைஸில் ஒரு சிறிய குப்பி. அதிலிருந்து ஒரு சொட்டை நாம் அருந்தும் பானத்திலோ உணவிலோ விட்டுக் கொண்டால் சீனியின் பயன்பாடு இல்லாமலேயே இனிப்பின் சுவையை அனுபவிக்க முடியும் என அவர் வரிசையாக அந்த பொருளின் பயன், மூலப் பொருட்கள்,  தயாரிப்பு நாடு, ஏற்றுமதி-இறக்குமதியாகும் நாடுகள், மலேசியாவில் அறிமுகமான நாள்,தேதி,கிழமை என புள்ளி விபரங்களை அடுக்க எனக்கு கிலிபிடிக்க ஆரம்பித்து விட்டது. ஏறக்குறைய 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு பொருளைப் பற்றி விலா நோக விவரித்த மனிதர், இன்று அந்த பழையப் பொருளின் ஞாபகமே ஏற்படாத வகையில் தனது புதிய விற்பனை பொருளைப் பற்றி எனக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

நீங்களும் அதன் சுவையை அனுபவியுங்கள் என வலுக்கட்டாயமாக ஒரு வெந்நீரை வரவழைத்து அதைக் கொஞ்சம் குடிக்கச் சொன்னார். பின்னர் தனது குப்பியிலிருந்து ஒரு சொட்டை அந்த நீரில் விட்டபின்பு மீண்டும் குடித்துப் பார்க்கச் சொன்னார். வெந்நீர் இனித்தது உண்மை. ஆனாலும் அதனைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ளும் ஆவலோ ஆசையோ எனக்கில்லை. நண்பரிடம் தண்ணீர் இனிக்கிறது என்று மட்டும் சொல்லி வைத்தேன். உடனே அந்த பொருளின் நன்மைகளையும் அது செயல்படும் முறையும் விளக்கத் தொடங்கி விட்டார் நண்பர்.

நான் நெஸ்காபி சி குடிக்க ஆரம்பித்துதான் இதற்கெல்லாம் காரணமா? ஒழுங்கின்மை சித்தாந்தம்  (chaos theory) இப்படியெல்லாமா வேலைச் செய்யும்? ஒருவேளை, இன்று  நண்பரிடம் ஏதாவது ஏடாகூடமாகப் பேசி, அது நாளைக்கு எனக்கு வண்ணத்துப்பூச்சி விளைவாக (butterfly effect) பாதகத்தை ஏற்படுத்தி விடுமா? என்றெல்லாம் எனக்கே பயம் வருகிற அளவுக்கு என் மூளை அறிவியல் கோட்பாடுகளைப் பற்றியெல்லாம் அலசத் தொடங்கி விட்டது.

அவர் பேசத் தொடங்கிய ஒரு விஷயத்துக்கே நான் ஏதேதோ யோசித்து குழம்பிக் கொண்டிருக்க, என் கவனம் அவரை விட்டு 100 கி.மீ வேகத்தில் விலகி ஓடுவதை உணர்ந்த நண்பர் என்னை இம்பிரஸ் செய்வதாக நினைத்து பேஸ்புக் போலவே அச்சு அசலாக அறிமுகமாகி இருக்கு இன்னொரு சோஷியல் வெப்சைட் பற்றி பேசத் தொடங்கினார். “இந்த சோஷியல் வெப்சைட்டில் உறுப்பினராக நீங்கள் பணம் செலுத்த வேண்டும், தொடர்ந்து நான்கு – நான்கு பேராக 16 பேரை உங்களுக்குக் கீழே சேர்த்து விட்டீர்கள் என்றால்….” என அவர் சொல்லிய வார்த்தைக்குப் பிறகு எனக்கு வேறெதுவுமே காதில் விழவில்லை.

ஆனாலும் திடீரென “நண்பா, உங்க தொடர்புல இருக்கிற 20 பேரை நமக்கு கீழே பார்க் பண்ணிங்கன்னு வைங்க.. நான் உங்களுக்கு ஒரு லைன், உங்க வைஃப்க்கு ஒரு லைன்னு 2 லைன் தனியா போட்டுத் தரேன். காசு கொட்டோ கொட்டுன்னு கொட்டும். அப்புறம் என்னய்யா…  பேஸ்புக் ஒனருக்கே ஜுஸ் வாங்கி கொடுக்கலாம்யா..” என அவர் சொன்னது மட்டும் காதில் விழுந்து தொலைத்த காரணமாக, யுஎஃப்போ எல்லாம் என் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்து விட்டது, தனியாக சொல்ல வேண்டிய கிளைக் கதை.

(இம்சைகள் தொடரும்….)