Monthly Archives: ஜனவரி 2010

ஆயிரத்தில் ஒருவன் (2010)

செல்வராகவன் இயக்கத்தில் மிக நீண்ட கால தயாரிப்பில் இருந்த படம். டிரைய்லரில் பார்த்தபோதே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நிச்சயமாக தமிழ் சினிமாவில் இதுவொரு புதிய தொடக்கம். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொடாத கதைகளம். இதுவரை அயல்மொழி படங்களில் மட்டும்தான் இத்தகைய கதைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

கதை?

பாண்டிய – சோழ மன்னர்களின் போரின் இறுதியில் சோழ அரசின் கடைசி இளைவரசன் மட்டும் அங்கிருந்து தப்புகிறான். அவனோடு உயிர்ப் பிழைத்திருக்கும் அவன் குடிமக்களும் இடம்பெயர்ந்து செல்கிறார்கள். அவன் சென்ற இடம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே இருக்கிறது. அவன் சென்ற இடத்தைக் கண்டு பிடிக்க பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்தாலும், அவனைத் தேடி சென்ற யாருமே திரும்பி வருவதில்லை.

அவனது இருப்பிடம் குறித்த தொடர் ஆராய்ச்சியில் இருக்கின்ற தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் (பிரதாப் போத்தன்) காணாமல் போக, அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் குழுவொன்று இறங்குகிறது. ரீமா சென் தலைமை தாங்கும் அந்தக் குழுவில், காணாமல் போன பிரதாப் போத்தனின் மகளான ஆண்ட்ரியாவும் இணைந்துக் கொள்கிறார். இந்த குழுவினரின் பொருட்களை சுமக்க வரும் கூலிப்படை தலைவனாக கார்த்தி. இந்த குழுவினரின் இலக்கை நோக்கிய பயணம்தான் படத்தின் முதல் பகுதி.

மறைந்து வாழும் சோழ மன்னனின் மறைவிடம், அவனது மக்களின் பஞ்சம், என்றாவதொரு நாள் தஞ்சை மண்ணுக்கு திரும்பும் நம்பிக்கை, பஞ்சத்தில் வாழ்ந்தாலும் மன்னனுக்காக உயிர் துறக்க முன்வரும் மக்கள், இவர்களை கொன்றொழிக்க வரும் பாண்டிய மன்னர்களின் இன்றைய தலைமுறை இதுதான் படத்தின் இரண்டாம் பகுதி.

முதல் பகுதி வழக்கமான தமிழ் படங்களை ஒத்திருந்தாலும் இரண்டாம் பகுதிதான் படத்தின் மீதான நமது கருத்தை மாற்றிக் கொள்ளச் செய்கிறது. இரண்டாம் பகுதி முழுவதும் தங்களது அடையாளத்தை தொலைத்துவிட்ட ஓர் இன மக்களின் ஓலம் மட்டுமே காதில் கேட்கிறது. சொந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்து வாழும் மக்களில் எத்தனை பேருக்கு அப்படியொரு ஆசை இல்லாமல் இருக்கக்கூடும்?

சோழ மன்னனாக வரும் பார்த்திபன் மட்டுமே படம் முடிந்து வெளியில் வரும்போது மனதெல்லாம் நிறைந்திருக்கிறார். சொந்த மண்ணுக்கு திரும்பப் போகிறோம் என்று அவர் மக்களிடையே அறிவிப்பதாகட்டும், தன்னை நெருங்கி வரும் பெண்களெல்லாம் தன்னை கூடவே வருகிறார்கள் என்று அவர் நினைப்பதாகட்டும், ரீமா சென் தன்னை ஏமாற்றியதைக் கண்டு கண் கலங்குவதாகட்டும், இடையிடையே டைமிங் சென்சுடன் அவர் அடிக்கும் கமெண்டுகளாகட்டும்… அசத்தியிருக்கிறார். அவர் இல்லாவிட்டால் படத்தின் இரண்டாம் பகுதி இறுக்கம் நிறைந்ததாகவே இருந்திருக்கும்.

படத்தின் ஆரம்பத்திலேயே இதுவொரு கற்பனைக் கதை என்று காட்டப்படுவதால், கதை உண்மையா பொய்யா? நடக்குமா நடக்காதா? என்ற ஆராய்ச்சிக்குள் போகாமல் படத்தை ரசிக்க முடிகிறது. தவிர சினிமா என்றாலே கற்பனையின் வடிவம்தானே (Fantasy). அதில் என்ன போய் லாஜிக்கைத் தேடுவது? படத்தில் நிறைய கிராபிஃக்ஸ் காட்சிகள் இருக்கின்றன. அவை கொஞ்சம் கண்களை உறுத்தினாலும்… செல்வராகன் எடுத்திருக்கும் கன்னி முயற்சி இதுவென்பதால் தாராளமாக மன்னித்து விட்டு படத்தைப் பார்க்கலாம்.

இசை ஜி.வி.பிரகாஷ், அச்சு அசலாக யுவனின் சாயல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தனுஷ், ஜஸ்வர்யா மற்றும் ஆண்ட்ரியா பாடியிருக்கும் ‘உன் மேல ஆசைதான்” பாடல், ‘சர்வம்’ படத்தில் வருகின்ற ஒரு பாடலை ஒத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உழைப்பு ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. செல்வராகன் வசனங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். மற்றபடி படம் பார்க்கலாம் ரகம். தமிழ் சினிமாவில் இத்தகைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது நாம் ஆதரவளித்தால் மட்டுமே எதிர்காலத்தில் நல்ல படங்கள் வரும்.

 படம் குறித்த சில பதிவுகளை படித்தேன். அதில் படத்தை பற்றி கடுமையான விமர்சனத்தை தந்திருந்த உயர்ந்த உள்ளங்களுக்கு அன்புடன் சொல்லிக் கொள்ள விரும்புவது…

அம்புலி மாமா கதையில வர்ற கூடு விட்டு கூடு பாயுற வித்தையை வெள்ளைக்காரன் காப்பியடிச்சு டெக்னாலஜின்னு சொன்னா வாயைப் பொளந்துக்கிட்டு பார்ப்பீங்க… (அவதார்)

நம்ம தமிழ் சினிமாவில் ஒருத்தன், ஏதோ கொஞ்சமா முயற்சி செஞ்சானா அதை உங்களால பொறுத்துக்க முடியாது, உடனே வானத்துக்கும் பூமிக்குமா தாண்டி குதிச்சு உங்க நண்டு புத்தியைக் காட்டுவீங்க.. அப்படிதானே தமிழர்களே???