உதிர்ந்த ஆப்பிள் – ஸ்டீவ் ஜாப்ஸ்

1980ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை உலகப் பந்தில் இருந்த அத்தனை இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 5ஆம் தேதி காலமாகி விட்டார். இவரது தொழில் போட்டியாளராக கருதப்பட்ட பில்கேட்ஸ் கூட “ஸ்டீவ் ஜாப்ஸ், இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பல தலைமுறைக்கு நினைவுக்கூறப்படும்” என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அப்படி என்ன செய்து விட்டார் ஸ்டீவ்?

 1954ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ நகரில் திருமணமாகாத கல்லூரி காதலர்களுக்கு மகனாக பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், சூழ்நிலை காரணமாக பவுல் ஜாப்ஸ்-பவுலா ஜாப்ஸ் தம்பதியருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார். பொதுவாக அறிவாளிகளுக்கும் பள்ளிப் படிப்புக்கும் ஏழாம் பொருத்தம் போலிருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் கூட படிப்பில் தேறாதவர் என முத்திரை குத்தப்பட்டவர்தான். இருந்தாலும் ஏதோ தாக்குப் பிடித்து கல்லூரி வரை வந்தார். ஆனால் ஸ்டீவ் வோஸ் என்பவருடன் ஏற்பட்ட நட்பு இவரது வாழ்க்கையை வேறொரு தளத்திற்கு, இனிவரும் காலங்களில் சரித்திரமாகப் போகிற உயரத்திற்கு கொண்டு சென்றது.

21 வயதில் கல்லூரி படிப்புக்கு முழுக்கு போட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், தனது நண்பனுடன் சேர்ந்து ஆப்பிள் என்ற நிறுவனத்தை தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் தொடங்கினார். கணிணி மெல்ல – மெல்ல உலகத்திற்கு அறிமுகமாகிக் கொண்டிருந்த தருணத்தில் ஆப்பிள் 1 என்ற கணிணியை அவர்கள் தயாரித்து முடித்திருந்தனர். சில குறைகளோடு இருந்த ஆப்பிள் 1க்கு பதிலாக ஆப்பிள் 2 என்ற கலர் கணிணியை தொடர்ந்து உருவாக்கி அசத்தினார் ஸ்டீவ் வோஸ். இது போதாதா? ஒரு பொருளை எப்படி மக்கள் அலறியடித்துக் கொண்டு வாக்கும்படி செய்வது என்ற சூத்திரத்தை அப்போது உலகிற்கு கற்றுத் தந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆப்பிள் 2, மில்லியன் யூனிட் விற்பனையானது அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனை. பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகள் அறிமுகமான சில மணி நேரத்திற்குள்ளாக இமாயல உயரத்தைத் தொட்டது இரண்டாவது சாதனை. இவையிரண்டும் 24 வயதிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ்சை மில்லியனர் ஆக்கின.

சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஆப்பிள் இப்போது உலகமே வியக்கும் நிறுவனம். ஆயிரக்கணக்கான பங்குதாரர்கள். போதாதா? உடனே பெர்சனல் கம்ப்யூட்டரான மேக் என்ற மேக்கின்டாஷ்சை உருவாக்கத் தொடங்கி விட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். இப்படி வேண்டும், அப்படி வேண்டும் என ஃப்ரேம்-ஃப்ரேமாக செதுக்கி அதனை உருவாக்கினார். இதற்காக தனியொரு குழு இரவுப் பகலாக ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டளைக்கு ஏற்ப ஆப்பிளில் வேலை பார்த்தது.

(ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு இந்த கணிணி சாப்ட்வேர், அப்ளிகேஷன், இத்யாதி இத்யாதி பற்றி எல்லாம் ஒன்றுமே தெரியாது. இவருக்கு தெரிந்ததெல்லாம் யாரை எங்கே எப்போது எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதும் எந்தப் பொருளை எப்படி, எவ்வாறு, எப்போது உருவாக்கி சந்தையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே. இந்த விஷயத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ்சை மிஞ்ச வேறு ஆள் கிடையாது)

இருந்தாலும் மேக்கின்டாஷ் மக்கள் வாங்குகிற விலையில் இல்லை என்பது ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு உறைக்காமல் போனது அவரது கெட்ட நேரம். மேக் இனி உலகை ஆளும் என ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையில் ஆப்பிள் 2 விற்பனையே அப்போது ஆப்பிள் நிறுவன உயிர்ப்புக்கு காரணமாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ்சை பொருத்தவரை தான் செய்வதே சரியென நினைக்கக்கூடிய ஆசாமி என்பதால் ஆப்பிள் ஊழியர்கள் அனைவரும் பேசாமல் இருந்து விட்டனர். ஆனால் நிறுவன இயக்குநர் வாரியத்தால், ஸ்டீவ் ஜாப்ஸ் மேக் தயாரிக்கிறேன் பேர்வழி என செய்த அட்டகாசங்களை பொறுக்க முடியவில்லை.

இதற்கிடையில் ஆப்பிள் கம்பெனியில் அவரது இயக்குநர் பதவிக்கு வேட்டு வைக்கும் விதமாக சில சம்பவங்கள் நடந்தது. மனம் வெறுத்து போய், தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகினார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஒரே ஒரு பங்கை (ஷேர்) மட்டும் ஞாபகார்த்தமாக வைத்துக் கொண்டு தனக்கு சொந்தமாக இருந்த ஆப்பிளின் அனைத்து பங்குகளையும் விற்றார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு அவர் “நெக்ஸ்ட்’ என்றொரு நிறுவனத்தை தொடங்கினார்.

புதிதாக பிறந்த நெக்ஸ்ட் நிறுவனம் கல்லூரிகளில் பயன்படுத்தும் விலை மலிவான கணிணிகளை தயாரிக்கப் போகிறது என செய்தி காட்டுத்தீ போல பரவியது. வாயப்பைத் தவறவிட விரும்பாத ஐபிஎம் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ்சுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள அவர் வீட்டு வாசலில் வந்து நின்றது. வழக்கம் போலவே தனது ஸ்பெஷலான குணங்களால் ஐபிஎம் நிறுவனத்தை தலை தெறிக்க ஓட வைத்தார் ஸ்டீவ் ஜாப். அப்படி ஓடிய ஐபிஎம் நேராக பில் கேட்ஸ்சிடம் போய் நின்றதும் அதன் விளைவாக மைக்ரோசாப்ட் பிறந்ததும் தனி வரலாறு.

ஸ்டீவ் ஜாப்ஸ்சின் நெக்ஸ்ட் நிறுவனமோ அடுத்த ஸ்டெப்புக்கு போக முடியாமல் அப்படியே நின்றது. ஸ்டீவ் ஜாப்ஸ்சை நம்பி பணத்தைக் கொட்ட ஆட்கள் தயாராக இருந்தாலும் விற்பதற்கு ஏதாவது சரக்கிருக்க வேண்டுமல்லவா? வெறுமனே கையைப் பிசைந்துக் கொண்டிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். அடுத்து?

இந்தக் கேள்வி ஸ்டீவ் ஜாப்ஸ் மூளையை போட்டுக் குடைய, அனிமேஷன் பக்கம் தன் பார்வையை திருப்பினார் அவர். ஆப்பிளில் இருந்த காலத்திலேயே ஸ்டீவ் ஜாப்ஸ்சிற்கு ‘பிக்ஸார்” என்ற நிறுவனத்தின் மீது ஒரு கண் இருந்தது. அதை வாங்கச் சொல்லியும் அவர் ஆப்பிள் இயக்குநர் வாரியத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தார். ஆனால் ஆப்பிளில் இருந்த காலத்தில் அந்த கனவு நனவாகவில்லை. இப்போது வாய்ப்பு அவரைத் தேடி தானாக வந்தது. “பிக்ஸார்” ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு சொந்தமானது.

நெக்ஸ்ட் போல பிக்ஸாரும் ஸ்டீவ் ஜாப்ஸ்சிற்கு தொடக்கத்தில் பெரிய லாபத்தை வாரி இறைத்துவிடவில்லை. அகலக் கால் வைத்து விட்டோமோ என்றுதான் அவரும் யோசித்தார். ஆனால் பிக்ஸாரின் பலமாக இருந்தது அதன் வசமிருந்த இரண்டு அனிமேஷன் கிராபிக்ஸ் சாப்ட்வேர்ஸ். இவை இரண்டும் டிஸ்னியை பிக்ஸார் பக்கமாக இழுத்து வந்தன. ஆமாம் அனிமேஷன் துறையில் நாளை பிக்ஸார் தவிர்க்க முடியாத சக்தியாக திகழும் என டிஸ்னி போட்ட கணக்கு பொய்க்கவில்லை. இரண்டு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய “டாய் ஸ்டோரி” திரைப்படத் துறையில் தனக்கென ஒரு வரலாறை பதிவு செய்தது.

இந்தச் சூட்டோடு சூடாக பிக்ஸாரை பங்குச் சந்தையில் இறக்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். அது அவரை மீண்டும் பில்லியனர் ஆக்கியது. தொடர்ந்து ஆப்பிள் பக்கம் தன் பார்வையை திருப்பினார். என்ன இருந்தாலும் அவர் பார்த்து வளர்த்த நிறுவனமல்லவா? ஸ்டீவ் ஜாப்ஸ்சின் நல்ல நேரம் ஆப்பிள் அப்போது மைக்ரோசாப்ட் – ஐபிஎம் என்ற இரு ஜாம்பாவான்களுக்கு இடையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. ஆப்பிளை தூக்கி நிறுத்த ஏதாவது செய்தே ஆக வேண்டும் என அதன் இயக்குநர் வாரியம் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தபோது தனது நெக்ஸ்ட் சாப்ட்வேரை வாங்கிக் கொள்கிறீர்களா என்று வலை வீசினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அப்படியே நெக்ஸ்ட் நிறுவனத்தை வாங்க ஆப்பிள் முன்வந்தது. நல்ல விலைக்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு அதை விற்றவர் கையில் 1.5 மில்லியன் ஆப்பிள் பங்குகள் இருந்தன. ஒரு காலத்தில் கனத்த மனதுடன் தன்னிடமிருந்த ஆப்பிள் பங்குகள் அனைத்தையும் விற்று விட்டு ஒரே ஒரு பங்கை மட்டும் வைத்திருந்த அதே ஸ்டீவ் ஜாப்ஸ்… மீண்டும் ஆப்பிளின் முக்கிய பங்குதாரர் ஆனார். எங்களோடு இணைந்துக் கொள்கிறீர்களா ஆப்பிள் இயக்குநர் வாரியம் கேட்டபோது வருடம் 1 டாலர் சம்பளத்திற்கு இயக்குநர் வாரியத்தில் நீடிக்கிறேன். தலைவர் பொறுப்பு தேவையில்லை என்று பதில் சொன்னார்.

தொடர்ந்து ஆப்பிளை தூக்கி நிறுத்த வேண்டும். யோசித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். பதிலுக்கு பில்கேட்ஸ் 150 கோடியை ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அடுத்த சில வருடங்களுக்கு ஆப்பிள் தள்ளாடாமல் இருக்க இப்படியொரு ஏற்பாடு. தொடர்ந்து தான் முன்பு செய்த மேக்-கை புது வடிவம் கொடுத்து ஐ-மேக் என்ற பெயரில் வெளியிட்டார். அது மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

 ஆப்பிள் மீண்டும் இன்னொரு ஆட்டத்திற்கு தயாரானது. 99ஆம் ஆண்டு ஐ-புக் என்ற லேப்டாப். ஆப்பிள் லாபத்தில் செயல்படத் தொடங்கியது. 2001ஆம் இசைத்துறையின் தலையெழுத்தை மாற்றி வைக்கும் முதல் முயற்சியாக ஐ-டியூன்ஸ் என்ற சாப்ட்வேரை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அதே ஆண்டு ஐ-பாட் என்ற கையடக்க வாக்மேனை அறிமுகப்படுத்தினார். அது மக்களின் ஏக போக வரவேற்பை பெற்றது. எங்கு பார்த்தாலும் ஐ-போட் மயம். கிட்டத்தட்ட நூறு மில்லியன் ஐ-போட்களை விற்று ஆப்பிள் சாதனை படைத்தது.

இந்த நேரத்தில் அவர் ஆப்பிளின் தலைமை செயலாக்க அதிகாரி ஆகிவிட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். கணிணி, இணையம், இசைத்துறையில் ஆப்பிளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியாகி விட்டது. அடுத்து????? உலகமே ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவிப்பிற்காக காத்துக் கிடந்தது. ஐ-போட் அறிமுகமாகி சரியாக ஆறு வருடங்கள் கழித்து (2007) மீண்டும் மக்கள் முன் தோன்றினார் ஸ்டீவ் ஜாப்ஸ். தொலைத் தொடர்பு துறையின் தலையெழுத்தை மாற்றி வைக்கும் அதிசயம் நிகழ்ந்தது. ஆம், அன்றுதான் ஐ-போனை அறிமுகப்படுத்தினார் அவர். ஐ-போன் விற்பனையைப் பற்றி தனியாகத் சொல்லத் தேவையில்லை. சூப்பர் ஹிட்.

இன்னும் ஏதோ குறைகிறதே என யோசித்திருப்பார் போலிருக்கிறது 2010ஆம் ஆண்டு ஐ-பேட் என்ற கையடக்க கணிணியை ஆப்பிள் வெளியிட்டது. தொடர்ந்து ஐ-பேட்டின் மீது வைக்கப்பட்ட குறைகளை களைந்து ஜ-பேட்2 என்ற மாடலை கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்து வைத்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் தலைவராக அவர் கடைசியாக அறிமுகப்படுத்திய சாதனம் அதுதான்.

2004ஆம் ஆண்டிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ்சுக்கு தான் கணைய புற்றுநோய்க்கு ஆளாகி உள்ளோம் என்பது தெரியும். இருந்தாலும் அது தனது தனிப்பட்ட விவகாரம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பலமுறை பத்திரிகைகள் இது பற்றி கேள்வி எழுப்பிய போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி முடிந்தவரை அவரது உடல்நலன் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை தட்டிக் கழித்தார். இருந்தாலும் இந்த விஷயத்தை அவரால் 2009ஆம் ஆண்டு வரைதான் மூடி மறைக்க முடிந்தது.

2009 ஆம் ஆண்டு கணைய மாற்று அறுவவை சிகிச்சை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது ஆப்பிள் ஊழியர்களிடம் “நான் எதிர்பார்த்ததை விட என் உடல் மோசமாக இருக்கிறது” என தன்னுடைய உடல் நிலை குறித்து சூசகமாக அறிவித்து விட்டே மருத்துவ விடுப்பில் சென்றார் அவர்.

2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உடல்நலனில் கவனம் செலுத்தப் போவதாக கூறி காலவரம்பற்ற மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். மெலிந்து, சோர்வுற்ற நிலையில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ்சை அதற்கு முன்பாக ஆப்பிள் ஊழியர்கள் கண்டதில்லை. அபாயகரமான என்னமோ நடக்கப் போகிறது என்று மட்டும் அவர்களுக்கு புரிந்தது.

பங்குச் சந்தையிலோ ஆப்பிளின் பங்கு விலைகள் வீழ்ச்சியுற தொடங்கின. தொடர்ந்து அவர் பங்குதாரதாக இருந்த டிஸ்னி போன்ற நிறுவனங்களின் பங்குகளில் சரிவு ஏற்பட்டன. உலகம் ஒரு சோகமாக நாளுக்கு தன்னை தயார் செய்துக் கொள்ளத் தொடங்கியது.

இதோ.. நேற்று முன்தினம் தொடங்கி பத்திரிகை, இணையம், தொலைக்காட்சி என எங்கு திரும்பினாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இரங்கல் செய்திதான். முயற்சி செய், சரியான நேரத்தில் சரியான முடிவை எடு, மக்களின் தேவையைப் புரிந்துக் கொள், மாத்தி யோசி என அவர் நமக்கு விட்டுச் சென்ற அனுபவ பாடங்கள் ஏராளம். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சாதாரண மனிதர்தான். அவர் ஒன்றும் தேவகுமாரன் இல்லை. அவர் பிறக்கும்போது வானில் வால் நட்சத்திரம் எதுவும் தோன்றியதாக யாரும் சொல்லவில்லை. ஆனாலும் அவர் பல கோடி இளைஞர்களின்  கனவு நாயகன் அன்றும் இனி எப்போதும்….!

பின்னூட்டமொன்றை இடுக