Monthly Archives: மே 2009

TAKEN (2008)

takeDistrict 13 படத்தை இயக்கிய இயக்குநர் Pierre Morel லின் இன்னொரு அதிரடி action படம்தான் Taken . Bryan Mills ஓர் ஓய்வுபெற்ற சிஐஏ அதிகாரி. மனைவியையும் மகளையும் பிரிந்து வாழும் அவர், முன்பு தன்னுடைய  வேலையின் காரணமாக மகளுடன் ஏற்பட்டு விட்ட இடைவெளியை குறைக்க மகளோடு நெருக்கமாக விரும்புகிறார். மனைவி இன்னொரு வசதி படைத்த கணவரை மறுமணம் செய்துக் கொண்ட காரணத்தால் அவரால் ஓர் அளவுக்கு மேற்பட்டு மகளோடு நேரம் செலழிக்க முடியாமல் போகிறது.

ஒரு நாள் மகள் France நாட்டிற்கு சுற்றுலா போக அவரிடம் அனுமதி கேட்கிறாள். அதற்கு சம்மதிக்க Bryan Mills மறுத்து விடுகிறார். காலம் கெட்டுக் கிடக்கும் நிலையில் மகளை தனியே அயல் நாட்டிற்கு அனுப்ப அவர் தயாராக இல்லை. ஆனால் முன்னாள் மனைவியோ Bryan Mills செயலை விமர்சிக்கிறார். மகளின் சுதந்திரத்திற்கும் சந்தோஷத்திற்கும் Bryan Mills  முட்டுக்கட்டையாக திகழ்வதாக குற்றஞ்சாட்டுகிறாள். இதனை யோசிக்கும் Bryan Mills மகளை France நாட்டிற்கு அனுப்ப சம்மதிக்கிறார்.

France நாட்டின் Paris நகரில் சென்று தரையிறங்கிய சில மணி நேரங்களுக்குள்ளாக அவரது மகள் சிலரால் கடத்தப்படுகிறாள். முகம் தெரியாத அந்த கடத்தல்காரர்களை தேடிக் கண்டு பிடித்து, மகளை விடுவிக்க புறப்படுகிறார் Bryan Mills. அதில் அவர் வென்றாரா? அந்த கடத்தல்காரர்கள் யார்? அவர்களது நோக்கமென்ன என்பதுதான் பரபரப்பான மீதிப்படம். ஜேம்ஸ்பாண்ட் வகையிலான  action நிறைந்த படம் என்பதால் 90 நிமிடங்கள் கடந்து போவதே தெரியவில்லை.  

Action காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கின்றன. அதிலும் தன்னை கடத்தப்போகிறார்கள் என்று அயல் நாட்டிலிருந்து தொலைப்பேசியில் கதறும் மகளை அந்த சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் இருக்கச் செய்து, அவள் கடத்தப்படவிருக்கின்ற எத்தனையோ வினாடிக்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்று பதறாமல் சொல்வதாகட்டும், மகளின் கைத்தொலைபேசியை வைத்திருக்கும் கடத்தல்காரனிடம் அமைதியாக அதே சமயத்தில் தீர்க்கமாக குரலில் மகளை விட்டு விடச் சொல்லி கேட்டுக் கொள்வதோடு, மறுத்தால் நிச்சயம் உன்னைக் கொன்று என் மகளை காப்பாற்றிச் செல்வேன் என்று எச்சரிப்பதாகட்டும் அசத்தியிருக்கிறார் Liam Neeson . தந்தை வழங்குகின்ற பாதுகாப்பிற்கு எல்லையில்லை என்று ‘அடித்துச்’  சொல்லியிருக்கின்ற படம்.

JOHN Q (2OO2)

JQதன் மனைவி Denise (Kimberly Elise) மற்றும் மகனோடு அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறார் John Quincy Archibald (Denzel Washington). ஒரு நாள் பேஸ்பால் விளையாடிக் கொண்டிருக்கும் அவரது மகன் திடீரென மயங்கி விழுகிறான். அவனை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். பையனுக்கு இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவன் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் இதய மாற்று அறுவை சிகிச்சை அவசியம் என்றும் கூறுகிறார்கள். காப்புறுதி திட்டத்தை நம்பி தனது மகனுக்கு அறுவை சிகிச்சை நடத்த முடிவெடுக்கும் John Q பின்னர் காப்புறுதி திட்டத்தில் தனக்கு தெரியாமலேயே செய்யப்பட்டுள்ள மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.

அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் தொகைக்கான உதவியைப் பெறுவதற்காக பல அரசு சார்ந்த அமைப்புகளை நாடியும் அவரது கோரிக்கை மறுக்கப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகமோ, பணம் கட்ட முடியாத நிலையில், மகனை மருத்துமனையை விட்டு வெளியேற்ற முடிவெடுக்கிறது. இதனால் கோபமடையும் John Q அந்த மருத்துமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை தனியொரு ஆளாக பிணைப்பிடிக்கிறார். உள்ளே இதய மாற்று சிகிச்சை மருத்துவர் ஒருவரோடு மேலும் 11 பேர் மாட்டிக் கொள்கிறார்கள். மகனது பெயரை இதயம் தேவைப்படுவோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை  அவர் முன் வைக்கிறார்.

மருத்துவமனை பிணைப்பிடிக்கப்பட்ட தகவலை அறிந்து அங்கு வரும் காவல் துறையினர் பலமுறை John Q வுடன் பேச்சு நடத்துகின்றனர். ஒரு முறை அவரைக் கொல்லவும் முடிவெடுக்கின்றனர். இதற்கிடையில் John Q இந்தச் செயல் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது. எல்லாரது கவனமும் John Q பக்கம் திரும்புகிறது. மகனின் அறுவை சிகிச்சை நடந்ததா? பிணைப்பிடிக்கப்பட்ட இதர நோயாளிகளின் நிலை என்ன? முடிவு என்ன? என்பதுதான் மீதிப் படம்.

மகனை காப்பாற்ற வேண்டும் என்று துடிப்பதும், அது முடியவில்லை என்பதற்காக பொங்கி எழுவதும், வலுக்காட்டயமாக மற்றவர்களை பிணைப்பிடிப்பதும், தன்னால் பிணைப்பிடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யச் சொல்லி மருத்துவமனை ஊழியர்களை விரட்டுவதும், பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சேவையாக மருத்துவம் மாறி வருவதை சாடுவதும்….

படம் தொடங்கி முடியம்வரை கிட்டத்தட்ட 2 மணி நேரம் தனியொரு ஆளாக அசர வைத்து தன்னையொரு தேர்ந்த நடிகன் என்று நிரூபித்திருக்கிறார் Denzel Washington.

அப்பாவின் தியாகத்தைப் பற்றி பேசுகின்ற படங்களில் இந்த படத்துக்கு தனியொரு இடம் எப்போதுமே இருக்கும். அதோடு, அமெரிக்க மத்திய வர்க்க மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றியும் அவர்களுக்கு இருக்கின்ற மருத்துவ காப்புறுதி பாதுகாப்பு திட்டம் குறித்தும் பரவலான சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்பிய படம் இது. இந்த படத்தின் இயக்குநர் Nick Cassavetes.

THE ORPHANAGE (2008)

elபல்வேறு நாட்டு திரைப்பட விழாக்களில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த நடிகை என ஒரு திரைப்படத்திற்கு எத்தனை முக்கிய விருது பிரிவுகள் உண்டோ அத்தனையிலும் குறைந்தபட்சம் ஒரு விருதையாவது வென்ற படம் EL ORFANATO (THE ORPHANAGE). 2008ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் மொத்தம் 31 விருதுகளை வென்றுள்ளது. ஸ்பெய்ன் நாட்டுப் படமான இதை இயக்கியவர் Juan Antonio Bayona.

சிறு வயதில் தான் வளர்ந்த ஆதரவற்றோர் விடுதியை விலை கொடுத்து வாங்கும் லாரா, அதை உடல் ஊனமுற்ற குழந்தைகளின் இல்லமாக மாற்ற விரும்புகிறாள். அதற்காக தன் கணவன் கார்லோஸ் மற்றும் தனது வளர்ப்பு மகன் சைமன் ஆகியோருடன் அவள் அந்த விடுதிக்கு வருகிறாள். அப்போது அங்கே வரும் ஒரு தொண்டூழிய சேவை செய்யும் பெண்மணி, சைமனை தத்தெடுத்த பத்திரம் தன்னிடம் இருப்பதாகவும் அதில் சைமனுக்கு HIV பீடித்திருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும் சொல்கிறாள். இதனால் கோபமடையும் லாரா, அவளை வெளியேற்றும்படி கார்லோஸைக் கேட்டுக் கொள்கிறார்.

பின்னர் ஒரு நாள் சைமன், லாராவிடம் தனது ரகசிய சிநேகிதனைப் பற்றி சொல்கிறான். அதோடு அவன் கற்றுக் கொடுத்த ஒரு விளையாட்டையும் அவன் லாராவோடு விளையாடுகிறான். இதனால் கலவரமடையும் லாரா, அந்த முகம் காட்டாத ரகசிய சிநேகிதனை கண்டுபிடிக்க முயற்சிக்கிறாள். ஆனால் அதற்கு முன்பே திடீரென சைமன் காணாமல் போகிறான். தனது மகனை தொலைத்த சோகத்தில் இருக்கும் லாரா, எல்லாரிடமும் சைமனின் புதிய நண்பனைப் பற்றி சொல்கிறாள். அவன்தான் சைமனை ஒளித்து வைத்து விளையாடுவதாகவும் கூறுகிறாள். இதனால் பலரும் லாராவை மனப்பிறழ்வுக்கு உள்ளானவள் என்று எண்ணுகிறார்கள்.

மகன் காணாமல் போன பின்பு லாராவின் நடவடிக்கையில் பல மாற்றங்களை காணும் கார்லோஸ், நிலைமை கைமீறி போவதற்குள் லாராவை அங்கிருந்து அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறான். ஆனால் அதனை மறுத்துவிடும் லாரா, தன்னை மட்டும் தனியே அங்கே விட்டுவிட்டு கார்லோஸைக் கிளம்பி போகும்படி கேட்டுக் கொள்கிறாள். அவளது உணர்வுக்கு மதிப்பளித்து கார்லோஸ் மட்டும் அங்கிருந்து கிளம்புகிறான்.

லாராவின் நிலை என்ன? காணாமல் போன சைமன் என்னவானான்? அந்த பழைய வீட்டிற்குள் பூட்டிக் கிடக்கும் மர்மம் என்ன? முகம் காட்டாத சைமனின் நண்பன் யார்? இப்படி பல கேள்விகளுக்கான விடை அதற்குப் பின் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்து விழத் தொடங்குகிறது. படத்தின் நாயகியாக நடித்திருக்கும் Belen Rueda ஒவ்வொரு காட்சியிலும் உயிரோட்டமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எல்லாவற்றிலும் படம் நேர்த்தியாக இருக்கிறது. பார்க்க வேண்டிய படம்!

THE SKELETON KEY (2005)

skeleton_key_ver225 வயது கொண்ட Caroline Ellis  தாதியர் தொழிலில் ஆர்வம் கொண்டவர். சில காரணங்களால் அந்த வேலையை விட்டு விலக முடிவெடுக்கிறார். அப்போது பத்திரிகையில் முதியவர் ஒருவருக்கு பராமரிப்பாளர் தேவை என்ற விளம்பரத்தை பார்க்கிறார். உடனே அந்த வேலைக்கு மனு செய்கிறார். Shoutern Louisiana பகுதியில் இருக்கின்ற ஒரு பண்ணை வீட்டில் வேலை கிடைக்கிறது.

Ben  மற்றும் Violet என்ற வயதான தம்பதிகள் அந்த வீட்டில் வசிக்கின்றனர். அதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட Ben னைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு Caroline  னுக்கு  தரப்படுகிறது.  அந்த வீட்டின் எல்லா கதவையும் திறக்கக்கூடிய தலைமை சாவியும் Caroline  னிடம் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் எந்த பிரச்னையும் எதிர்நோக்காத  Caroline நாட்கள் செல்ல செல்ல அந்த வீட்டில் ஏதோ மர்மம் புதைந்து கிடப்பதை கண்டுபிடிக்கிறார்.

அவரது சந்தேகப் பார்வை Violet மீது விழுகிறது. Vodoo (ஆப்ரிக்க-கரீபிய வம்சாவழியினர் உபயோகிக்கும் மந்திரக் கலை) எனப்படும் மந்திரக் கலையைப் பயன்படுத்தி கணவரையே Violet நடைப்பிணமாக்கி விட்டார் என்று சந்தேகப்படும் Caroline, அதே Vodoo கலையைக் கொண்டு அந்த வீட்டில் புதைந்து கிடக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்க விழைகிறார். ஆனால் அதன் முடிவு Caroline  மட்டுமல்ல நாமும் எதிர்பார்க்காத வகையில் அமைகிறது.

கிட்டத்தட்ட 2 மணிநேரம் ஒடுகின்ற படத்தில், எந்த காட்சியும் சோர்வு தரவில்லை. எல்லாமே கதையோட்டத்தோடு நம்மை ஒன்றிப்போகச் செய்யும் வகையிலேயே இருக்கின்றன. படத்தின் ஒளிப்பதிவு, இசை என எல்லாம் நன்றாக இருக்கிறது. அதிலும் Caroline  னாக நடித்திருக்கும் Kate Hudson சிறப்பாக நடித்திருக்கிறார். Violet ஆக வரும் Gena Rowland ட்டும் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். நல்ல திகில் + மர்மப் படமான இதை இயக்கியிருப்பவர் Iain Softley.

ONG BAK 2 (2008)

ong-bak-21தாய்லாந்தின் Action ஹீரோ Tony Jaa நடித்திருக்கும் படம். Panna Rittikrai யுடன் இணைந்து Tony Jaa வும் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 2003ஆம் ஆண்டு வெளிவந்த Ong Bak படத்தின் கதைக்கும் இந்த படத்தின் கதைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால் விரைவில் வெளிவரவிருக்கும் Ong Bak 3 படமும் இந்த படமும் இணைந்து 2003ஆம் ஆண்டு வெளிவந்த படத்திற்கு முன்படமாக அமையவிருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகார வெறி கொண்ட Rajasena என்ற மன்னன். ஆசிய கண்டத்தையே தன் கைப்பிடிக்குள் கொண்டுவர நினைக்கிறான். இது அவனுடைய அரச தளபதியும் குறுநில மன்னர்களில் ஒருவருமான Siha Decho வுக்குப் பிடிக்கவில்லை. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.  Siha Decho  வைக் கொல்ல  தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்ற கொலைகாரர்களை அனுப்பி வைக்கிறான் Rajasena. அவர்கள் Siha Decho யும் அவர் மனைவி மற்றும் பாதுகாவலர்களையும் கொன்று விடுகின்றனர். இதில் Siha Decho வின் மகன் Tien மட்டும் தப்பி விடுகிறான்.

தப்பி ஓடும் அவனை, அடிமைகளை விற்கும் கும்பல் பிடித்துக் கொள்கிறது. அவனை Cher Nung என்ற கொரில்லா கும்பலின் தலைவன் காப்பாற்றுகிறார். Tien னை தன்னுடைய வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொள்வதோடு ஆசியாவில் இருக்கின்ற பல்வேறு இனத்தின் முக்கியமான தற்காப்பு கலைகளை அவனுக்கும் கற்றுத் தருகிறார். அதன் மூலமாக யாராலும் வெல்ல முடியாத தலைசிறந்த வீரனாக Tien உருவாகிறான்.

எல்லாவற்றையும் நன்கு கற்று தேர்ந்தபின் சிறுவயதில் தன்னை பிடித்து கொடுமைப்படுத்திய அடிமைகள் விற்கும் கும்பலை கூண்டோடு அழிக்கிறான். அதோடு தன் தந்தையைக் கொன்ற Rajasena மன்னனையும் பழிவாங்கச் செல்கிறான். Rajasena வின்  பெரும்  படையை எதிர்த்து போரிட்டு அவன் வெற்றி பெற்றானா? அவன் தந்தையை கொன்ற கொலையாளி யார்? இறுதி முடிவு என்ன? என்பதுதான் மீதிப் படம்.

பழங்காலத்தில் நடக்கும் கதை என்றாலும் படத்தில் வருகின்ற சண்டைக் காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கிறது. வேகம், வேகம் ஒவ்வொரு அசைவிலும் அத்தனை வேகம். அதிரடி action காட்சிகளில் Tony Jaa அசத்தியிருக்கிறார். இருந்தாலும் ஒரே ஆளாக இருபது முப்பது பேரை சர்வ சாதாரணமாக அடித்து துவைப்பது கொஞ்சம் நெளிய வைக்கிறது.

பலருக்கு படத்தின் இறுதிக் காட்சி குழப்பம் தரக்கூடும். அந்த குழப்பத்திற்கு விடை கிடைக்க வேண்டுமானால் Ong Bak 3 வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும். மொத்தத்தில் நல்ல action  படம்.