Category Archives: அரசியல்

மே13 கலவரம்

மலேசிய வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளியாக திகழ்கிற மே13 கலவரம், 1969ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் முடிவின் எதிரொலி என்றால் அது மிகையில்லை.

 அன்று 1969ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி, காலையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருந்தன. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தும், அதிர்ச்சி தரும் வகையில் கூட்டணிக் கட்சி (அம்னோ-மசீச-மஇகா) 2/3 பெரும்பான்மையை தக்க வைப்பதில் தோல்வி கண்டிருந்தது. 1964ஆம் ஆண்டு 86 நாடாளுமன்ற தொகுதிகளை வென்ற கூட்டணிக் கட்சி 1969ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெறும் 66 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. எதிர்கட்சிகளான டிஏபி-பாஸ் மற்றும் பிபிபி அந்தத் தேர்தலில் மொத்தமாக 37 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றிருந்தன.

அந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்த எதிர்க்கட்சிகள், அதற்கொரு வெற்றி விழாவை நடத்த நாள் குறித்தன. அது 1969ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி. போலீஸ் பெர்மிட்டுடன் நடந்த இந்த வெற்றி ஊர்வலம், இன பிரச்னையை தூண்டிவிட நடத்தப்பட்ட ஒன்றல்ல என்றாலும் இதில் கலந்து கொண்ட அடையாளம் தெரியாத பலரின் தன்மூப்பான நடவடிக்கையால், மலாய் இன மக்களின் வெறுப்பு சீனர்களின் பக்கம் திரும்பியது. ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர், மலாய்காரர்களின் சிறப்புரிமை மற்றும் பூமிபுத்ரா அல்லாத இனங்களின் குடியுரிமை சார்ந்து கேள்வி எழுப்பியிருந்தது இதற்கு வசதியாக அமைந்து விட்டது.

மீண்டும் மே 12 ஆம் தேதி இன்னொரு வெற்றி ஊர்வலத்தை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. அதனை கோலாலம்பூரில்  நடத்தவும் முடிவு செய்தன. மலாய் இனத்தவர் அதிகம் வசிக்கின்ற கம்போங் பாரு வழியாக இந்த ஊர்வலம் வந்தபோது, பொறுப்பற்ற சில நபர்களால் எழுப்பப்பட்ட தேவையில்லாத இனநெடி மிகுந்த கோஷம் மற்றும் ஊர்வலத்தில் காட்டப்பட்ட பதாதைகளால் கோபமுற்ற மலாய் இன மக்கள் துடைப்பத்தை வீதிக்கு கொண்டு வந்து தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். சிலாங்கூர் மாநிலத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் வெற்றி ஊர்வலத்தில் அக்கட்சிகளின் ஆதரவாளர்கள், மலாய் இன மக்கள் மீது காறி உமிழ்ந்தும், துடைப்பத்தை தங்களது வாகனத்தில் கட்டிவைத்தும் (பல இடங்களில் கூட்டணிக் கட்சி
தொகுதிகளை எதிர்கட்சிகள் தங்கள் வசமாக்கி கொண்டதன் அடையாளமாக) கொண்டாடினர்.

பெரும்பான்மையான சீன உறுப்பினர்களைக் கொண்டிருந்த எதிர்கட்சிகள், இந்த ஊர்வலம் நடந்து முடிந்த மறுநாள் (மே 13) தங்களது ஆதரவாளர்களின் செயலுக்காக மன்னிப்பு கோரின. ஆனாலும், இந்த மன்னிப்பு கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களின் காதுகளை எட்டுவதற்கு முன்பாகவே, அதே நாளன்று முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒரு வெற்றி ஊர்வலத்தை கூட்டணிக் கட்சிகளின் சார்பாக அம்னோ நடத்த வேண்டுமெனக் கோரி அதன் ஆதரவாளர்கள் அப்போதைய சிலாங்கூர் முதல்வர் டத்தோ ஹரூண் இட்ரிஸ் வீட்டிற்கு முன்பாக கூடினர். டத்தோ ஹரூண் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்கும் பொருட்டு அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதோடு அம்னோ ஏற்பாட்டில் வெற்றி ஊர்வலம் அன்றைய இரவு 7.30 மணியளவில் நடத்தப்படும் என அறிவித்தார்.

இதற்கிடையில், ஸ்தாபாக்கில் மலாய் இன ஆடவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட தகவலும் மலாய் இன கர்ப்பிணி பெண் ஒருவரின் கருவை பன்றி இறைச்சியை மாட்டி வைக்க பயன்படுத்தும் கொக்கியைக் கொண்டு கருவறுத்த தகவலும் அங்கு கூடியிருந்த கூட்டத்தினரை கொந்தளிக்க வைத்தது. இது உண்மையா, பொய்யா என்று ஆராய்ந்துக் கொண்டிருக்க யாருக்கும் பொறுமையில்லை. இனக் கலவரம் தொடங்கி விட்டது.

சரியாக மாலை 4 மணியளவில் கம்போங் பாரு வழியாக சென்ற இரு சீன ஆடவர்களின் தலை துண்டிக்கப்பட்டது. சிகரட் கொண்டுவரப்பட்ட வேன் கொளுத்தப்பட்டது. அதன் ஓட்டுனநர் கொல்லப்பட்டார். சீன குண்டர் கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் இதற்கு பதிலடி கொடுக்கும் செயலில் இறங்கினர். கோலாம்பூர் சுற்று வட்டாரத்தில் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.. பொதுச் சொத்துகள் சேதமாக்கப்பட்டன. இந்த கலவரத்திற்கு ஏற்றவாறு ஆயுதங்களையும் அவர்கள் முன்கூட்டியே தயார் செய்தும் வைத்திருந்தனர்.

இருதரப்பின் தாக்குதலும் எல்லை மீறிப் போக.. நிலமையைக் கட்டுப்படுத்தும் வகையில் சிலாங்கூர் வட்டாரங்களில் ஊரடங்குச் சட்டம் அமலாக்கப்பட்டது. முதலில் ஃஎப்.ஆர்.யூ கட்டுப்பாட்டில் இருந்த கம்போங் பாரு பின்னர் ரெஜிமென் ரேஞ்சர் பிரிவின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு சீனரின் தலைமையில் செயல்பட்ட இந்தப் பிரிவு, நிலைமையைக் கட்டுப்படுத்துவதாக கூறி மலாய் இளைஞர்களை சுடத் தொடங்கியது. கம்போங் பாரு மலாய் இளைஞர்கள், தாங்கள் சீனர்களுக்கு மத்தியிலும் ரெஜிமென் ரேஞ்சர் படைக்கு மத்தியிலும் பலிகடா ஆக்கப்பட்டு விட்டதாக குமுறினர். இந்தக் குமுறல் பின்னர் மாபெரும் கோபக் கனலாக மாறியது. இதன் எதிரொலியாக ரெஜிமென் ரேஞ்சர் படைக்கு பதிலாக மலாய்காரர்கள் நிரம்பிய ராணுவப் படை அங்கே பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டது.

ஆனால், அப்படி வந்த சில ராணுவ வீரர்கள் சீனர்களுக்குச் சொந்தமான நகைக்கடைகளில் இருந்த பொருட்களை கொள்ளையடித்தனர். தவிர தங்கள் மீது கண்ணாடி பாட்டிலை வீசியதாக கூறி சீனர்களை சுடத் தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன இளைஞர்கள் ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மானில் அமைந்துள்ள ஓடியன் திரையரங்கை முற்றுகையிட்டு கைப்பற்றினர். அதில் படம் பார்த்துக் கொண்டிருந்த சீனர்களை மட்டும் வெளியேற்றும் விதமாக திரையில் சீன மொழியில் அறிவிப்பு போடப்பட்டது. அதில் இருந்த இதர இனத்தவருக்கு சீன மொழியை படிக்கத் தெரியாதென்பது கலகக்காரர்களுக்கு வசதியாக போய்விட்டது. கொலை வெறியுடன் ஓடியன் திரையங்கில் நுழைந்த சீன இளைஞர்கள், அங்கிருந்த அனைவரையும் கொன்று குவித்தனர்.

சிலாங்கூர் – கோலாலம்பூர் மட்டுமே இந்த இனக்கலவரம் நடந்தது. பேராக், கெடா, பினாங்கு, ஜொகூர், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. மலாக்காவில் சிறு கலவரம் நடந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

மே 13 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களால் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது. பின்னர் துங்குவின் ஆலோசனையின் பேரில் மே 16ஆம் தேதி பேரரசர் சுல்தான் இஸ்மாயில் நசாரூதீன் ஷா அவர்கள் தேசிய நடவடிக்கை மன்றத்தை அமைக்கும்படி உத்தரவிட்டார். அதன் தலைவராக துணைப்பிரதமர் துன் அப்துல் ரசாக் பொறுப்பேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்ட நிலையில் அடுத்த 18 மாதங்கள் நாட்டின் அனைத்து சட்ட திட்ட கட்டுப்பாடுகளும் தேசிய நடவடிக்கை மன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. மெல்ல-மெல்ல இனக்கலவர பாதிப்பிலிருந்தும் மலேசியா மீளத் தொடங்கியது.

1970ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி, துங்கு அப்துல் ரஹ்மான் பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து துன் அப்துல் ரசாக் நாட்டின் இரண்டாவது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1971ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மீண்டும் நாடாளுமன்றம் நடவடிக்கைகள் செயல்படத் தொடங்கியது. தீமையிலும் ஒரு நன்மை என்பது போல நமது நாட்டின் தேசிய கோட்பாடு (ருக்குன் நெகாரா) இந்த இனக் கலவரத்திற்கு பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது.

(மே 13 கலவரம் பற்றிய பல்வேறு கட்டுரை, செய்திக் குறிப்பு என பலவற்றை வாசித்த பின்தான் இந்தப் பதிவை எழுதினேன். பல தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தன. அதில் சில கட்டுரை மற்றும் செய்தி குறிப்புகளில் காணப்பட்ட முக்கிய தகவல்களை மட்டுமே இங்கே தொகுத்து தந்துள்ளேன்)

மகாதீர் டச்!

“ஐஎஸ்ஏ (ISA – Internal Security Act) சட்டத்தை ஒழிப்பதை நானும் ஆதரித்தேன்.  அது நமக்கு தேவையில்லாத ஒன்றுதான்.  ஆனால் நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எனக்கு ஆலோசகராக இருந்த காவல் துறை அதை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. ஐஎஸ்ஏ சட்டத்தினால் நமக்கு நன்மைகளும் விளைந்ததுண்டு, இப்ராஹிமைப் பாருங்கள், அந்தச் சட்டத்தின் கீழ் உள்ளே சென்று வந்த பின்பு இப்போது நல்லவராகி விட்டார்!” – பெர்னாமா.

(ஐஎஸ்ஏ சட்டத்தை ஒழிப்பது பற்றி கேட்டபோது)

KELING (கெலிங்) என்றால் என்ன? பி.ரம்லியின் பதில்!

கடந்த 18ஆம் தேதி (தலைநகர்) தேசிய நூலகத்தில்  நடைப்பெற்ற ‘ஹங் துவா’ கண்காட்சிக்கு கண்ணன் என்ற அன்பர் போயிருந்ததாகவும், அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பதாகையில் “ஜாவா, கெலிங், சீன, சீயாம் மற்றும் அரபு மொழிகளில் ஹங் துவா புலமை பெற்றவராக இருந்தார்’ என்று எழுதப்பட்டிருந்ததாகவும் மலேசிய இந்தியர் கிளப் வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இதில் கெலிங் என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது எந்த மொழியை என்றும் கேட்டிருந்தார். அதோடு இதையெல்லாம் தடுத்து நிறுத்தப் போகிறவர் யார்? என்று ஆதங்கப்பட்டிருந்தார்.

கெலிங் என்றால் உண்மையில் என்ன அர்த்தம்? சில தேசிய மொழி இணைய அகராதியில் தேடிப் பார்த்தேன்…

http://search.cari.com.my/dictionary/dic.php

Keling – Tamil, Telugu & Indian

http://prpm.dbp.gov.my/

(இந்த இணைய பக்கத்தில் மற்றவர்களை விட ஒருபடி மேலே சென்று ‘கெலிங்’ என்ற வார்த்தைக்கு வேறொரு அர்த்தத்தை தருகின்ற வகையில் கவிதையாகவும் பழமொழிகளாவும் உருவாக்கியுள்ளனர்)

Keling – Orang India yang Beragama Islam, Orang-Orang yang berasal dari Selatan India

கவிதை

Orang Keling sembahyang kusami,
     Bawa dian sepuntung seorang;
Ibarat ambo rumput di bumi,
     Pagi petang dipijak orang.

பழமொழி

1) Suruh kerja golok Keling,
     suruh makan parang puting.

இதன் பொருள்:
Malas bekerja tetapi banyak makan.

2) Bagai tabut keling, di luar berkilat di dalam berongga.

இதன் பொருள்:
Baik di luar tetapi jahat hatinya

http://kamus.lamanmini.com/index.php

Keling – Indian, Tamil & Telungu

இத்தனை நாட்களாக இந்திய முஸ்லிம்களையும் தமிழர்களையும் சேர்த்தே (ஒரு குறுகிய பார்வையோடு) கெலிங் என்று அழைத்து வந்தார்கள்.

ஆனால் இந்திய முஸ்லீம்கள் எப்போது ‘சாமி’ கும்பிட்டார்கள் என்று தெரியவில்லை.

Orang Keling sembahyang kusami

ஆக, நிச்சயமாக அது தொழுகையை குறிப்பிடும் வார்த்தை அல்ல. அதனால் இந்திய முஸ்லிம்கள் இந்த வட்டத்திற்குள் வர மாட்டார்கள். இதிலேயே கெலிங் வார்த்தையின் நம்பகத்தன்மையின் மீது சந்தேகம் ஏற்படுகிறது.

 அடுத்ததாக கலிங்க தேசத்தவர் என்றார்கள்.  கலிங்கம் என்று அவர்கள் நாக்கு உச்சரிக்க இயலாததால் கெலிங் என்று அழைப்பதாக சொன்னார்கள். இது வரைக்கும் கூட பொறுத்துக் கொள்ளலாம்.

என் மொழிக்கு கெலிங் என்று பெயர் வைக்க நீ யார்?

இதுதான் இப்போதைக்கு கேள்வி… உலக நாடுகள் பலவும் தமிழை – தமிழ் மொழி என்றுதான் குறிப்பிடுகின்றன. ஏன் அண்டை நாடான சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் வாய் கிழிய சகோதரத்துவம் பேணும் தேசம் – உண்மையான ஆசியா என்று கொக்கரிக்கும் மலேசியாவில் மட்டும் தமிழ் மொழி என்றால் என்னவென்று தெரியாதாம். கெலிங் என்று அர்த்தம் கொடுத்துதான் அதை விளக்குவார்களாம்.  யார் காதில் பூ சுற்றும் வேலை இது?

தமிழ் மொழிக்கு கெலிங் என்று அர்த்தம் கொடுக்க எந்த ஈனப்பயலுக்கு தகுதி இருக்கிறது? உலகின் மிக தொன்மையான மொழியடா அது!

செம்மொழி!

எல்லாவற்றையும் விட அது எங்கள் தாய்மொழி!

தமிழை, தமிழ் மொழி என்றே அடையாளப்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள். அன்றைய கால வழக்கம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டாதீர்கள். வழக்கம் என்பதே பழக்கத்தினால் வருவதுதான். மற்றவர்களின் மனதை உங்கள் வழக்கம் புண்படுத்தும் பட்சத்தில், அதை மாற்றிக் கொள்வதில் எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை. இருக்கவும் கூடாது. சகோதரத்துவம் பேணப்படுவதாக மார்த்தட்டி கூறப்படுகின்ற ஒரு நாட்டில் இதுபோன்ற மனக்கசப்பை விதைக்கக்கூடிய வார்த்தைகள் பயன்பாட்டில் இருப்பது அவமானம்.

இனி எந்தவொரு தேசிய மொழி அகராதியிலும் கெலிங் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. 1 மலேசியா கொள்கைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய களங்கமாகவே இதனைக் கருதி, கெலிங் என்ற வார்த்தையை தேசிய மொழியிலிருந்து மலேசிய அரசு நீக்கிவிட ஆவன செய்ய வேண்டும்.

வெறுமனே வேலை வெட்டிக்கு போகாமல் தின்றுக் கொழுத்த இனத்தின் மொழி தமிழ் அல்ல!

தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் பலவற்றை சாதிக்க முடியும். ஆனால் நம் இனத்தில் அதற்குதான் இடமில்லாமல் போய்விட்டது.

இந்த வார்த்தை குறித்து நான் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 1998 & 2005 ஆண்டுகளில்  கெலிங் என்ற வார்த்தையை பயன்படுத்த, அந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், கெலிங் வார்த்தையை அகராதியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பலர் குரல் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் நம்மில் ஒருசிலரோ, கெலிங் என்ற வார்த்தையை அகராதியில் இருந்து நீக்கி விடுவதால் மட்டும் நம்மை தரந்தாழ்த்தி பேசுவதை தடுத்து நிறுத்தி விட முடியுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

இனத்தைப் பற்றி குறிப்பிட்ட போதுதான் மௌனம் காத்தீர்கள் சரி, இப்போது மொழியை பற்றி குறிப்பிடும் போதும் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கலாம் அல்லவா? இந்த விஷயத்தில் மட்டும் நிலைமையை இப்படியே நீடிக்க விடக்கூடாது. நம் மொழியை கேவலப்படுத்தும் உரிமை எந்தக் கொம்பனுக்கும் இல்லை.

இப்படிச் சொல்லியும் கேட்காமல், நாங்கள் பிடித்த  முயலுக்கு 3 கால்கள் என்று அடம்பிடிப்பார்கள் என்றால்… நம் நாட்டின் உன்னதக் கலைஞனான காலஞ்சென்ற பி.ரம்லி அவர்கள், செனிமான் பூஜாங் லாபோக் (SENIMAN BUJANG LAPOK – 1961) படத்தில் அறிவுரையாக சொன்ன ஒரு வசனத்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறேன். அதைப் படித்தாவது அவர்கள் தங்களையே உணர்ந்துக் கொள்ளட்டும்…

“பஹாசா மெனுன்ஜுக்கான் பங்சா”

“BAHASA MENUNJUKKAN BANGSA”

(நீங்கள் உச்சரிக்கின்ற வார்த்தையே உங்கள் இனத்தின் அடையாளத்தைக் காட்டுகிறது)

இதைவிடவா வேறு தெளிவான சாட்டையடி வேண்டும்?

உலுசிலாங்கூர் இடைத்தேர்தல் முடிவு…

பரபரப்பாக பேசப்பட்ட உலுசிலாங்கூர் தொகுதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 5 நாட்களாகி விட்டன. இந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் பி.கமலநாதன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் கூட்டணி வேட்பாளர் டத்தோ ஸைட் இப்ராஹிம்மை விட 1,725 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பி.கமலநாதனின் இந்த வெற்றியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அவர்களின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டியுள்ளது. இது மஇகாவிற்கோ அல்லது பி.கமலநாதனுக்கோ கிடைத்த தனிப்பட்ட வெற்றியாக கொண்டாட முடியாது. அம்னோ, டத்தோஸ்ரீ நஜீப் மற்றும் தான்ஸ்ரீ முஹிடீன் யாசின் ஆகியோரின் பலத்தினால்தான் மீண்டும் அங்கே மஇகா தலைதூக்க முடிந்திருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.

தேர்தலில் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, மலாய் மற்றும் இந்திய வாக்காளர்களின் ஓட்டுகள் கணிசமான அளவு தேசிய முன்னணி பக்கம் சாய்ந்திருக்கிறது. ஆனால் சீனர்களின் ஓட்டுகள் இன்னமும் மக்கள் கூட்டணி பக்கம்தான் இருக்கிறது. நாங்கள் இன்னமும் எதிர்காலத்தை பற்றிதான் யோசிக்கிறோம் என்று சீனர்கள் சூசகமாக தேசிய முன்னணிக்கு சொன்ன செய்தியாகத்தான் இதனை நாம் கருத முடியும். அடுத்த பொதுத் தேர்தலுக்குள்ளாக தன்னை ஒட்டுமொத்த மலேசியர்களை பிரதிநிதிக்கும் கூட்டணியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை சீனர்கள் இதன் வழி தேசிய முன்னணிக்கு உறுதிபட தெரிவித்துள்ளனர். 1 மலேசியா கொள்கை மீதான சீனர்களின் சந்தேகமும் இதன் வழி தெரிய வந்துள்ளது.

உட்கட்சி கலவரத்திலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக மீண்டு வருவதாக கூறிக்கொள்ளும் எம்சிஏவுக்கு கிடைத்த அபாய அறிவிப்பாக இந்த வாக்களிப்பு இருந்தாலும்… ஒட்டுமொத்தமாக எம்சிஏவின் மீதே எல்லாப் பழியையும் தூக்கிப் போட்டுவிட முடியாது. தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளுமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக ஆளும் அரசு சீன சமூகத்திற்கு செய்து வந்திருக்கின்ற அனைத்து சேவைகளையும் மீண்டும் மறுபரிசோதனை செய்து பார்ப்பது அவசியமாகும். தவிர பெர்காசாவிற்கும் எம்சிஏவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள தேவையில்லாத மோதல் சுகமாக முறையில் தீர்க்கப்பட வேண்டும்.

மலாய் வாக்காளர்களை பொருத்தவரை இந்த தேர்தலில் அவர்கள் அம்னோ பக்கம் மீண்டும் சாய்ந்ததற்கு ஒரேயொரு முக்கியமான காரணம்தான் உண்டு, அது டத்தோஸ்ரீ நஜீப். உலுசிலாங்கூர் தொகுதியில் விரவிக் கிடக்கும் பெல்டா திட்டம் முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இப்போது அவரது மகனே ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் தந்தை மீதான தங்களது விசுவாசத்தை புலப்படுத்தும் வகையிலும் தந்தையின் திட்டத்தை தனயன் கைவிட்டுவிட மாட்டார் என்ற நம்பிக்கையிலும்தான் அவர்கள் தங்களது வாக்குகளை தே.முன்னணி பக்கம் திருப்பியிருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிட்டது மலாய்க்காரரா? சீனரா? இந்தியரா? என்றெல்லாம் அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. துன் ரசாக்கின் மகன் ஆட்சிப் பொறுப்பிலிருக்கிறார், அவர் நமக்கெதாவது புதிய திட்டங்களை வகுப்பார் என்ற நம்பிக்கைதான் அவர்கள் தே.முன்னணி பக்கம் வந்துள்ளார்கள். ஆக மலாய் சமூகத்தின் ஓட்டுக்கு முழு ஆதாரம் டத்தோஸ்ரீ நஜீப்தான்.

நமது இந்திய வாக்காளர்களை பொருத்தவரை, இந்த இடைத்தேர்தலில் தங்களுக்கு கிடைக்கவிருக்கின்ற லாபத்தை அடிப்படையாக கொண்டுதான் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளனர் என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால் தேசிய முன்னணி வழங்கிய வாக்குறுதிகள் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் இவர்களின் வாக்குகள் மீண்டும் மக்கள் கூட்டணி பக்கம் சாய்ந்துவிடும் வாய்ப்புகள் மிக-மிக அதிகம்.

பொதுவாக சீனர்களைப் போல இந்திய வாக்காளர்கள் எதிர்காலத்தை பற்றி திட்டமிட்டு செயல்படுவதில்லை. அப்போதைக்கு தங்களுக்கு கிடைக்கின்ற லாபம், வாக்குறுதிகள் மற்றும் வசதி வாய்ப்புகள் மட்டும்தான் தேர்தலின் போது அவர்களின் வாக்களிப்பை நிர்ணயிக்கிறது. அந்த வகையில் இந்த இடைத்தேர்தலின் போது மக்கள் கூட்டணியை விட தேசிய முன்னணியே நிறைய வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது, பல வகைகளில் இந்திய சமூகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வளிப்பதாகவும் சொல்லியிருக்கிறது. இந்த வாக்குறுதி மற்றும் செயல் திட்டங்கள் இந்த இடைத் தேர்தலின் வெற்றிக்கு உதவினாலும்… அடுத்த பொதுத் தேர்தலின் போதுதான் இந்தியர்களின் உண்மையான நிலைப்பாடு தெரிய வரும். இழந்து விட்ட இந்திய வாக்குகளை மீட்டு விட்டோம் என்ற எண்ணத்தில் பழையபடியே கொடுத்த வாக்குறுதிகளை வசதியாக மறந்து விட்டால் அதற்கான பலனை நிச்சயம் பொதுத் தேர்தலின் போது தேசிய முன்னணி அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்பது மட்டும் திண்ணம்.

இந்த இடைத்தேர்தலில் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்வதாக தெரிவித்துள்ள டத்தோ ஸைட், தேசிய முன்னணி ஓட்டுகளை வாங்கி விட்டதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். தவிர தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, பணம் கொடுத்த ஓட்டுகளை வாங்க வேண்டிய நிலையில் தேசிய முன்னணி இல்லை என கூறியுள்ளார். தோல்வியைத் தழுவியவர்கள் இதுபோல கூறுவது இயல்புதான் என்றாலும், டத்தோ ஸைட் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது விசாரணைக்கு கொண்டுவர வேண்டிய ஒன்றாகும். மிகவும் வெளிப்படையான ஆட்சியைத் தருவதாக உறுதி கூறியுள்ள நமது பிரதமர் இது பற்றி பரிசீலிப்பார் என நம்புவோம்.

எது எப்படியோ தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. பி.கமலநாதனும் இப்போது எம்.பியாகி விட்டார். அடுத்த அவர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் இப்போது இங்கே முக்கியமான கேள்வி. உலுசிலாங்கூர் தொகுதி முடிவு இன்னொரு ஈஜோக் முடிவு போல ஆகிவிடாமல் இருப்பதற்கு எம்.பி கமலநாதன் கடுமையாக உழைக்க வேண்டும். அவரது சேவையும் அர்ப்பணிப்பு உணர்வும்தான் பொதுத்தேர்தலின் போது அவரது நிலையை காப்பாற்றப் போகின்றன. அதையும் பொறுத்திருந்து பார்ப்போம்…

உலுசிலாங்கூர் தொகுதி இடைத்தேர்தல் – ஒரு பார்வை

உலுசிலாங்கூர் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளராக பி.கமலநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தொகுதி வேட்பாளர் தேர்வு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உலுசிலாங்கூர் தொகுதியைப் பொருத்தவரை டத்தோ ஜி.பழனிவேல் அல்லது முகிலன் ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் முகிலனை வேட்பாளராக அறிவிக்கக்கூடாது என்று டத்தோஸ்ரீ சாமிவேலு இறுதிவரை பிடிவாதமாக இருந்தததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

டத்தோ பழனிவேலுவைப் பொருத்தவரை அவர் கறைபடியாத, செயலாற்றக்கூடிய அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்டாலும், அடித்தட்டு மக்கள் நெருங்க முடியாத தலைவராக இருக்கிறார் என்றே தொகுதி மக்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். இதன் காரணமாகவே தேசிய முன்னணி இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனத்தெரிகிறது. ஆனாலும் மஇகா தலைமைத்துவ மாற்றம் சுமூகமாக நடக்கும் வகையில் டத்தோ பழனிவேலுவுக்கு செனட்டர் பதவி அளித்து துணை அமைச்சராக்கவும் தேசிய முன்னணி தயாராக இருப்பதாக தெரிய வருகிறது.

இது குறித்து டத்தோஸ்ரீ சாமிவேலுவிடம் தீவிரமாக கலந்தாலோசித்த பின்னரே பி.கமலநாதனை துணைப் பிரதமர் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் வேட்பாளராக அறிவித்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் இழுப்பறியாக இருந்த வந்த வேட்பாளர் தேர்வு ஒருவழியாக சுமுகமான தீர்வை கண்டுள்ளது.

அதே சமயம் இது போன்ற குழப்பங்கள் ஏதுமில்லாமல் டத்தோ ஸைட் அவர்களை வேட்பாளராக அறிவித்ததிலிருந்தே மக்கள் கூட்டணி இந்த இடைத் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி விட்டது தெரிய வருகிறது. ஆளும் மாநிலத்தில் நடக்கும் தேர்தல் என்பதால் அதிரடி அறிவிப்பு, மக்கள் நல திட்டம் என தொகுதியில் அமர்க்களப்படுத்தி வருகிறது மக்கள் கூட்டணி.

இனி வேட்பாளர்களை கவனிப்போம்:-

தே.மு வேட்பாளர் பி.கமலநாதன்

தொகுதி பக்கம் மஇகாவுக்கு முன்பிருந்த செல்வாக்கு இல்லை என்பதே நிதர்சன உண்மை. அண்மையில் நான் தொகுதி பக்கம் போயிருந்தபோது கூட, இதே நிலையைதான் பார்க்க முடிந்தது. மக்கள் கூடுகின்ற காலை சந்தை, முடிவெட்டு நிலையம், உணவகம், பேருந்து நிலையம், மருத்துவமனை என எல்லா இடங்களிலும் இப்போது இந்த இடைத்தேர்தல் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் டத்தோ பழனிவேலு தேவையில்லை என்பதில் நிறைய பேர் உறுதியாக இருந்ததையும் பார்க்க முடிந்தது.

தேசிய முன்னணியின் மீது மக்களுக்கு அதிருப்தியில்லை என்றாலும் மக்கள் கூட்டணியின் மீது அங்குள்ள மக்கள் நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளனர். தமிழ்ப்பள்ளிக்கு நிலம், நிதியுதவி என்பது தொடங்கி பல்வேறு நல திட்டங்களையும் மக்கள் கூட்டணி தலைமையில் அமைந்துள்ள சிலாங்கூர் மாநில அரசு தாராள மனதுடன் அங்கு செயல்படுத்தி வருகிறது. இது இடைத் தேர்தலையொட்டிய அரசியல் காய்நகர்த்தலாக தென்பட்டாலும்-விமர்சிக்கப்பட்டாலும், முழு வீச்சில் இது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது அங்குள்ள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தே.மு வேட்பாளர் பி.கமலநாதன் நிறுவனம் ஒன்றின் பொது உறவு இயக்குநராக பணியாற்றி வருகிறார். அதோடு மஇகா கட்சியின் தகவல் பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். தேர்தலில் வேட்பாளராக அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறை. வணிக ரீதியிலான பொது உறவுகளை வளர்ப்பதில் அவர் திறமை கொண்டவராக இருந்தாலும் மஇகாவின் தகவல் பிரிவு தலைவராக அவரது சேவை மக்களால் குறிப்பாக இந்தியர்களால் உணரப்பட்டுள்ளதா என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். அந்த பிரிவின் மூலம் அவர் மஇகா சார்ந்த தகவல்களை-மறுமலர்ச்சி திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளாரா என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கும் தேர்தலாக இது விளங்கப் போகிறது.

முற்றிலும் புதிய வேட்பாளராக திகழும் பி.கமலநாதன் முழுக்க-முழுக்க அம்னோவின் பலத்தை நம்பியே தேர்தல் களத்தில் நிற்கப்போகிறார். மஇகாவின் செல்வாக்கு இந்த முறை அவருக்கு எந்த முறையிலும் கை கொடுக்கப் போவதில்லை. தவிர தொகுதி பக்கம் பி.கமலநாதனுக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு அவரது வெற்றிக்கு எந்த அளவுக்கு கைக்கொடுக்கும் என்பது கணிக்க முடியாத ஒரு விஷயமாகவே உள்ளது. மேலும் மஇகா உலுசிலாங்கூர் தொகுதி முன்னாள் துணைத் தலைவர் வி.எஸ் சந்திரன் சுயேட்சை வேட்பாளராக வேறு களமிறங்குகிறார். இதுவும் பி.கமலநாதனின் வெற்றியை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆக, இந்த தேர்தலில் பி.கமலநானின் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவுதான். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் அதை அம்னோவின், குறிப்பாக டத்தோஸ்ரீ நஜீப் – தான்ஸ்ரீ முஹிடின் யாசின்  தலைமைத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகத்தான் கருத முடியுமே தவிர மஇகாவின் மறுமலர்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது.

மக்கள் கூட்டணி வேட்பாளர் டத்தோ ஸைட் இப்ராஹிம்

மக்கள் கூட்டணி சார்பில் இம்முறை டத்தோ ஸைட் இப்ராஹிம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே துன் அப்துல்லா அகமட் படாவி ஆட்சிக் காலத்தின் போது தேசிய முன்னணி சார்பில் அமைச்சராக பதவி வகித்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சர் பதவியிலிருந்தும் பின்னர் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்தும் விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கிளாந்தான் கோத்தா பாரு அம்னோ தொகுதி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற டத்தோ ஸைட், 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது கோத்தா பாரு நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டார். கடுமையான போராட்டத்துக்கு பிறகு அந்தத் தொகுதியில் வெற்றியும் பெற்றார். பாஸ் கட்சியின் கோட்டையான அந்த தொகுதியை, 15 வருடத்திற்கு பிறகு அப்போதுதான் தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 2004ஆம் ஆண்டு நடைப்பெற்ற கோத்தாபாரு அம்னோ தொகுதி தேர்தலில், பண அரசியலில் ஈடுபட்டதாக கூறி டத்தோ ஸைட்டின் உறுப்பினர் நிலையை அம்னோ ஒழுங்கு நடவடிக்கை குழு 3 ஆண்டு காலம் ரத்து செய்தது.

2008ஆம் ஆண்டு துன் அப்துல்லா அகமட் படாவி அவர்களால் டத்தோ ஸைட் மீண்டும் அமைச்சராக்கப்பட்டார். ஆனாலும் 6 மாதங்கள் மட்டுமே அவர் அந்தப் பதவியில் நீடித்தார். உள்நாட்டு தடுப்புக் காவல் சட்டம் மற்றும் லிங்கம் வீடியோ வழக்கு தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளால் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மக்கள் கூட்டணியில் இணைந்த டத்தோ ஸைட் அன்று முதல் இன்று வரை மக்கள் கூட்டணியின் முக்கிய ஜெனரலாக திகழ்ந்து வருகிறார்.

டத்தோ ஸைட் இப்ராஹிமிற்கு நாடு தழுவிய அளவில் நல்ல அறிமுகம் இருக்கிறது. ஆகவே தனிப்பட்ட வகையில், அவர் தன்னை தொகுதி மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்  இல்லை. ஆனாலும் இந்திய வாக்காளர்களைப் பொருத்தவரை அவரை எத்தனைப் பேர் அறிந்து வைத்துள்ளனர் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

இருந்தாலும், மக்கள் கூட்டணி நிறைய இந்திய பிரநிதிகளை கொண்டுள்ள காரணத்தால், இந்த பிரச்னை விரைவில் களையப்பட்டு விடும் என்றும் நம்பலாம். தொகுதி பிரச்னை மட்டுமின்றி தேசிய அளவிலான பிரச்னையிலும் குரல் கொடுக்க கூடியவர் என்ற நம்பிக்கையை மலாய் மற்றும் சீன வாக்காளர்களிடையே டத்தோ ஸைட் பெற்றுள்ளார். தவிர, ஏழை எளிய மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று அவர் சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்திருப்பது தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக, இந்த தேர்தலில் இவரே வெற்றி வாய்ப்பை அதிகம் கொண்ட வேட்பாளராக திகழ்கிறார்.

மொத்தத்தில்…

தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரு தரப்பும் இதுவொரு முக்கியமான இடைத்தேர்தலாக திகழ்கிறது. விரைவில் 13வது பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கின்ற நிலையில் தங்களது பலத்தை பரிசோதித்துக் கொள்ளும் களமாகத்தான் அவை இரண்டும் இந்த பொதுத் தேர்தலை அணுகப் போகின்றன. ஆகவே இருதரப்பிலும் சூடான, பரபரப்பான பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தாராளமாக நம்பலாம்.

இருதரப்புமே வெற்றி பெற கடுமையான போராட்டம் நடத்தினாலும், தேர்தல் கண்ணாமூச்சி காட்டினாலும்… கொளுத்துகின்ற வெயிலில் தன் குடும்பத்தின் அடுத்த வேளை தேவைக்காக வேர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் ஏழையின் கையிலுள்ள அந்த துப்புச் சீட்டில்தான் இருதரப்பில் யாரோ ஒருவருக்கான வெற்றி ஒளிந்துக் கொண்டிருக்கிறது!

உலுசிலாங்கூர் தொகுதி வேட்பாளர் யார்?

மஇகா தலைமைத்துவ மாற்றத்திற்கு வழிவிடப்போகும் இடைத் தேர்தல்?

நேற்று முன்தினம் வரை உலுசிலாங்கூர் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாக எந்தக் கட்சி வேட்பாளர் போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி அலையடித்த நிலை ஓய்ந்து, இன்று மஇகா சார்பில் அந்தத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழும்பத் தொடங்கியிருக்கிறது. இதற்காக மஇகா சார்பில் 3 வேட்பாளர்கள் பெயரையும் பிரதமரிடம் நேற்று சமர்ப்பித்திருப்பதாக அறிவித்திருக்கிறார் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு.

உலுசிலாங்கூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜைனால் அபிடின் அண்மையில் மூளை புற்றுநோயால் காலமானார். அதன் தொடர்பில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 1990ஆம் ஆண்டு முதற்கொண்டு இந்தத் தொகுதியை தன் வசம் வைத்திருந்த மஇகா துணைத் தலைவர் டத்தோ ஜி.பழனிவேலு 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அடித்த அரசியல் சுனாமியில் இந்த தொகுதியை பி.கே.ஆர் கட்சி வேட்பாளர் டத்தோ ஜைனால் அபிடினிடம் பறிகொடுத்தார். வெறும் 198 வாக்கு வித்தியாசத்தில்தான் அவர் தோல்வியுற்றார் என்றாலும் 1990ஆம் ஆண்டிலிருந்து அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்ற முறையில் டத்தோ ஜி.பழனிவேலுவின் செல்வாக்கு அங்கே சரிந்து வருகிறதோ என்ற ஐயப்பாட்டையும் அத்தோல்வி ஏற்படுத்தியது.

இதன் காரணமாக தற்போது நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் முதன்மைக் கட்சியாக விளங்கும் அம்னோவிற்கே அந்த தொகுதியை இம்முறை ஒதுக்க வேண்டுமென அம்னோ தலைவர்கள் சிலர் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தனர். தவிர, பெரும்பான்மையான உலுசிலாங்கூர் தொகுதி மக்களும் கூட மஇகா உறுப்பினரொருவர் அங்கே போட்டியிடுவதை விரும்பவில்லையென அவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி கருத்துரைத்த மஇகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு அப்படியொரு நிலை அந்த தொகுதியில் இல்லையென மறுப்பு தெரிவித்தார். அது மட்டுமின்றி அந்த தொகுதியில் டத்தோ ஜி.பழனிவேலு போட்டியிடுவதையே தாம் விரும்புவதாகவும் கூறினார். இதனால் மஇகாவிற்கு இன்னொரு அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

உலுசிலாங்கூர் தொகுதியில் போட்டியிடப் போவது மஇகா வேட்பாளர்தான் என்று முடிவாக நேற்று முன்தினம் அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், இதற்காக 3 மஇகா வேட்பாளர்களின் பெயர்களை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் தொடர்பில் பிரதமரை நேற்று சந்தித்த டத்தோஸ்ரீ சாமிவேலு 3 வேட்பாளர்களின் பெயரைப் பரிந்துரைத்துள்ளதாக கூறியுள்ளார். அந்த பெயர்ப்பட்டியலில் டத்தோ ஜி.பழனிவேலுவின் பெயரும் இருக்கிறது.

மஇகா கட்சியில் வழக்கம் போலவே டத்தோ சுப்ராவிற்கு (முன்னாள் துணைத் தலைவர்) இந்த முறை வாய்ப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. டத்தோ சுப்ரா சார்புடைய பத்திரிகை ஒன்று இதற்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் பல இணையத்தள பக்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே போல பெரும்பான்மையான தேசிய முன்னணி உறுப்பினர்கள், 61 வயதாகிவிட்ட டத்தோ ஜி.பழனிவேலுவை விட இன்னும் இளமையான ஒருவரை மஇகா ஏன் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டனர். ஆனாலும் இறுதி முடிவென்பது பிரதமர் கையில் இருக்கிறது.

அந்த வகையில், தேசிய முன்னணி வேட்பாளர் தேர்வில் டத்தோ ஜி.பழனிவேலு அவர்களே முன்னணியில் இருக்கிறார் என்று செய்தி கசிந்துக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் டத்தோ ஜி.பழனிவேலு வெற்றி பெறும் பட்சத்தில் மஇகா தலைமைத்துவ பொறுப்பை அவரிடமே ஒப்படைக்க டத்தோஸ்ரீ சாமிவேலு முடிவெடுத்து விட்டார் என்றும் மஇகா வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள். பிரதமரை சந்தித்தபோது கூட இதை தெளிவாக டத்தோஸ்ரீ சாமிவேலு கூறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை பிரதமரின் தேர்வும் டத்தோ ஜி.பழனிவேலுவாக இருந்தால் மஇகா புதிய தலைமைத்துவ மாற்றத்திற்கான முதல் படியில் கால் வைத்து விட்டது என்றே அர்த்தம் என்றும் பலமான பேச்சு அடிபடுகிறது.

மஇகாவின் துணைத் தலைவர் யார்?

நாளை மஇகா தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த முறையும் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலு, தன்னுடன் இணைந்து பணியாற்ற தகுதியுடையவர்கள் என்று சொல்லி அதிகாரத்துவ அணியை அறிவித்திருக்கிறார். மற்றபடி இந்த முறை நிறைய பேர் தனித்தே போட்டியிடுகிறார்கள். மஇகாவில் இது வழக்கத்திற்கு மாறான மாற்றம்.

துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான தேர்தலாக இது விளங்கினாலும் துணைத் தலைவர் பதவிக்கு நடக்கின்ற மும்முனை போட்டியைப் பற்றிதான் மலேசியா முழுவதும் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். டத்தோ எஸ்.சுப்ரமணியம், டத்தோ ஜி.பழனிவேலு மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் ஆகியோர் இந்த முறை துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். இதில் டத்தோ சுப்ராவும் டத்தோ பழனியும் ஏற்கனவே அந்தப் பதவியை அலங்கரித்திருக்கிறார்கள். டத்தோ சோதிநாதன் மட்டும் முதல் முறையான அந்தப் பதவியைக் குறிவைத்து களமிறங்குகிறார்.

இனி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தனித் தனியாக பார்ப்போம்…

டத்தோ எஸ்.சுப்ரமணியம்

மக்கள் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். டத்தோஸ்ரீ சாமிவேலுவும் இவரும் அடிக்கடி முறைத்துக் கொள்வார்கள். கொஞ்ச காலம் கழித்து கைகுலுக்கிக் கொண்டு ‘மக்கள் நலன் கருதி இணைக்கிறோம்’ என்று அறிக்கை விடுவார்கள். இடையில் எந்த சாத்தான் புகுந்து வேதம் ஓதுமோ தெரியாது, மீண்டும் பத்திரிகைகளில் அறிக்கை போர் நடத்தி ஒருவர் சட்டையை ஒருவர் இழுத்துக் கிழிக்காத குறையாக திட்டிக் கொள்வார்கள்.  மஇகா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு நடந்துக் கொண்டிருக்கும் அறிக்கை போர் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்போது அமெரிக்கா-ரஷ்யா மாதிரி அணுகுண்டு வீசுவதைப் பற்றியெல்லாம் பேசி மஇகா பேராளர்கள் வயிற்றில் புளியை அல்ல கிலோ-கிலோவாக மிளகாய்த் தூளை கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி வாய்ப்பைப் பொருத்தவரை டத்தோ சுப்ராவிற்கென தனிப்பட்ட ஆதரவாளர்கள் மஇகாவில் உண்டு. அந்த ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் நிச்சயம் டத்தோ சுப்ராவை சென்றடையும். ஆனால் அந்த ஓட்டுக்களை மட்டுமே டத்தோ சுப்ரா நம்பிக் கொண்டிருக்க முடியாது. காரணம் சென்ற முறை நடைப்பெற்ற தேர்தலில் கூட டத்தோ பழனிவேலுவிடம் இவர் தோற்றுப் போனார். இத்தனைக்கும் பழனிவேலு அப்போது முற்றிலும் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் ஆதரவை நம்பியே களத்தில் நின்றார். இப்போது அவரும் ஒரு தவணை துணைத் தலைவராக வேறு இருந்து விட்டார். ஆகவே போட்டி நிச்சயம் கடுமையானதாக இருக்கும். இந்த தேர்தல் டத்தோ சுப்ராவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்ற தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. வேறு கட்சியில் இணைய மாட்டேன். நான் மஇகாகாரன் என்று ஒவ்வொரு முறையும் டத்தோ சுப்ரா சொல்லி வந்திருக்கிறார். ஆனால் மஇகா தலைவரோ இவர் ஒரு செயல்படாத அரசியல்வாதி என்கிறார். மஇகா பேராளர்களின் நிலைதான் மதில் மேல் பூனை மாதிரி ஆகி விட்டது.

டத்தோ ஜி.பழனிவேலு

தேசிய தலைவரின் ஆசி பெற்ற தளபதி. வெற்றிக் கோட்டை தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறார். கிட்டத்தட்ட தலைமைப் பொறுப்பை இவரிடம்தான் கொடுத்து விட்டுச் செல்லப் போகிறேன் என்று டத்தோஸ்ரீ சாமிவேலுவும் கோடிகாட்டி விட்டார். டத்தோ சுப்ரா சாதிக்க முடியாத விஷயம் இது.  மௌனமாக இருந்தே பழனிவேலு சாதித்துக் கொண்டார். அந்த வகையில் இவர் ஓகே என்று மஇகாவில் லேசாக முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். எல்லாம் ஜயப்பனின் அருள்.

இவரது நிலை முயல் ஆமை கதை போல் ஆகிவிடும் என்றும் எதிர்தரப்பினர் சொல்கிறார்கள். தலைவனின் ஆணையை மீறி மஇகாவில் ஒன்றுமில்லை என்பதை டத்தோ பழனிவேலு அறியாதவரல்ல. ஆனாலும் சென்ற முறை இவருக்கு விழுந்த ஓட்டுகள் இந்தமுறை டத்தோ சோதிநாதன் தரும் போட்டியினால் சிதறிவிடும் வாய்ப்பு இருப்பதையும் இவர் கவனத்தில் கொள்ள வேண்டும். டத்தோ சோதியும் முன்பு டத்தோஸ்ரீயின் அரவணப்பில் இருந்தவர்தானே… ஆகவே இவருக்கு ஓட்டு போடுவதில் என்ன பிரச்னை ஏற்பட்டுவிடப் போகிறது என மஇகா பேராளர்கள் கருதினால் அதன் விளைவுகள் பழனிவேலுவின் வெற்றியை பாதிக்கும். ஆக, பழனிவேலு வெற்றிக் கோட்டிற்கு மிக மிக அருகில் இருந்தாலும், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு தெரியும் வரை எதுவும் உறுதியாக சொல்வதற்கில்லை.

டத்தோ எஸ்.சோதிநாதன்

இன்றைய தேதிக்கு மஇகாவின் டைனமிக் இளைஞர் இவர்தான். மாற்றத்திற்கான தேவை என்ற இவரது பிரச்சார யுக்தி மஇகா பேராளர்களின் குறிப்பாக இளைஞர்களின் பார்வையை இவர் பக்கம் ஒரளவுக்கு திருப்பியுள்ளது. அதே நேரத்தில் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் விசுவாசியாக இருந்த இவர், திடீரென தலைவர் ஆசி பெற்ற  வேட்பாளருக்கு எதிராக தேர்தலில் குதித்திருப்பதும் பலரது புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கைப்பிடியிலிருந்த அதிகார சாட்டை மெல்ல மெல்ல நழுவி விழுந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாகவும் இது தென்படுகிறது. 

தனது அதிகாரத்துவ அணி வேட்பாளரை எதிர்த்து களமிறங்கியிருக்கும் டத்தோ சோதிநாதனைப் பார்த்து, துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை விடுத்து நேராக தேசிய தலைவர் பதவிக்கே போட்டியிட்டிருக்கலாம் என்று டத்தோஸ்ரீ சாமிவேலு கிண்டலடிக்கிறார். பொதுவாக சாமிவேலு தனக்குப் பிடிக்காதவர்களை பற்றி மட்டும்தான் இப்படி கமெண்ட அடிப்பார் என்று மஇகா உறுப்பினர்களுக்கு தெரியும். இது மாற்றத்தை விரும்பும் மஇகா பேராளர்களால் கவனமாக பரிசீலிக்கப்படலாம். கட்சியின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் உண்மையான மஇகா உறுப்பினர்கள் டத்தோ சுப்ரா மற்றும் டத்தோ பழனிவேலுவை ஓரங்கட்டி விட்டு, தன் சேவையை மட்டும் நம்பி நிற்கும் சோதிநாதனுக்கு வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆக, மூவருக்குமே வெற்றி வாய்ப்பு சரிசமமான அளவிலேயே இருக்கிறது. இதில் யாருமே  பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்க தோன்றவில்லை. ஒரு வேளை அப்படி யாராவது பெரும்பான்மையில் வெற்றி பெற்றால் அவர்தான் அடுத்து கட்சியை வழிநடத்த சரியான தலைவராக மஇகா பேராளர்களால் கருதப்படுகிறார் என்று அர்த்தம்.

டத்தோஸ்ரீ சாமிவேலு துணைத் தலைவர் பதவிக்கு அறிவித்திருக்கும் வேட்பாளரைத் தவிர வேறு யார் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களால் சிறப்பாக கட்சிப் பணியாற்ற முடியுமா என்பது சந்தேகமே… காரணம் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தானே போட்டியிடுவது போலத்தான் டத்தோஸ்ரீ சாமிவேலு நடந்துக் கொள்கிறார். தான் விரும்புகின்ற தலைவரிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு செல்லும் வரை அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார் என்பதையும் பேராளர்கள் அறிவார்கள். தலைமைத்துவ மாற்றத்தை விரும்பும் மஇகா பேராளர்கள், கட்சியின் தலையெழுத்தை நாளை எப்படி நிர்ணயிக்கப் போகிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்….

மலேசியாவின் புதிய பிரதமர் – டத்தோஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக்

najib

மலேசியாவின் 6வது புதிய பிரதமராக நாளை (ஏப்ரல் 3 2009) டத்தோஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக் பதவியேற்பார்  என்று சொல்லப்படுகிறது. மலேசியா நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை இந்த நிகழ்வு தொடங்கி வைக்கப் போகிறது.

1953ஆம் வருடம் ஜூலை 23ஆம் தேதி பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள கோலலிப்பிஸ் நகரத்தில் நாட்டின் 2வது பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்களுக்கு மகனான பிறந்தார் டத்தோஸ்ரீ நஜீப். 6 பேர் கொண்ட குடும்பத்தில் இவர் மூத்த மகனாவார். 1974ஆம் ஆண்டு அவர் நோட்டிங்ஹாம் பல்கலைகழகத்தில் வர்த்தக நிதிநிர்வாக துறையில் பட்டப்படிப்பை முடித்தார். 1976ஆம் ஆண்டு தனது தந்தையின் திடீர் மறைவிற்கு பின் நடைப்பெற்ற பெக்கான் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசிய வரலாற்றில் மிக இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானவர் என்ற பெருமையையும் டத்தோஸ்ரீ நஜீப் அப்போது பெற்றார். அடுத்த வருடத்திலேயே துணையமைச்சர் பதவியை அலங்கரித்து இளம் வயதில் துணையமைச்சராக பதவி வகித்தவர் என்ற வரலாற்று பெருமையை பதிவு செய்தார். பின்னர் தனது 29வது வயதில் பகாங் மாநில முதல்வராக பதவி ஏற்றார்.

1987ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு முழு அமைச்சராக பொறுப்பேற்றார். 1988ஆம் ஆண்டு இவர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவராக அன்றைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களால் நியமிக்கப்பட்டார். 1993ஆம் ஆண்டு அம்னோ உதவி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ நஜீப் 2004ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அம்னோ உதவி தலைவர்களில் ஒருவராகவே பதவி வகித்து வந்தார்.

2004ஆம் ஆண்டு இவர் துணைப் பிரதமராக அப்போது புதிய பிரதமராக பதவியேற்ற டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி அவர்களால் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அம்னோ துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மாதம் நடைப்பெற்ற அம்னோ தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ நஜீப், நாளை நம் நாட்டின் 6வது பிரதமராக பதவியேற்கவிருக்கிறார்.

அல்தான்துயா

டத்தோஸ்ரீ நஜீப் அவர்களின் இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் வீசப்பட்டுள்ளன. அதில் அவரது அரசியல் வாழ்க்கையையே அசைத்துப் பார்த்தது பிரபல மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா கொலை வழக்கு. டத்தோஸ்ரீ நஜீப்பின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவரான அப்துல் ரசாக் பகிண்டா இந்த கொலை வழக்கில் குற்றவாளி என குற்றஞ்சாட்டப்பட்டதால், ஆரம்பத்தில் இந்த வழக்கு மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. கொலைக்கு காரணமானவராக குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் ரசாக் பகிண்டாவின் விடுதலைக்குப் பின்னர் அந்த பரபரப்பு கொஞ்சம் அடங்கி அமைதியாகி விட்டது.

நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற இந்த வழக்கு இன்னும் முழுமையாக பூர்த்தியடையவில்லை.  வழக்கு தொடங்கப்பட்ட போது டத்தோஸ்ரீ நஜீப்புக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் உண்டென எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டின. மலேசியா டுடே ஆசிரியர் ராஜா பெத்ரா கமாருடின், டத்தோஸ்ரீ நஜீப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் கொலை சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கடந்த வருடம் ஜூன் மாதம் சத்தியப்பிரமாண வாக்குமூலம் அளித்தார்.

அப்துல் ரசாக் பகிண்டாவால் நியமிக்கப்பட்ட தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம், டத்தோஸ்ரீ நஜீப்பை தொடர்புபடுத்தி கடந்த வருடம் ஜூலை 1ஆம் தேதி சத்தியபிரமாண வாக்குமூலம் ஒன்றை தாக்கல் செய்தார். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அதை அவர் மீண்டும் வாபஸ் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் அளித்த புதிய சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் டத்தோஸ்ரீ நஜீப் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் நீக்கப்பட்டிருந்தன. பல வெளிநாட்டு பத்திரிகைகள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவே செய்தி வெளியிட்டன.

டத்தோஸ்ரீ நஜீப் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக, தனக்கும் மங்கோலிய அழகி அல்தான்துயாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென பொதுப்படையாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி இஸ்லாம் சமய முறைப்படி புனித அல்-குரான் மீது சத்தியம் செய்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லாவும் துணைப்பிரதமர் நஜீப் அவர்களுக்கு இவ்விவகாரத்தில் பக்கபலமாக நிற்பதாக அறிவித்தார்.

இவை தவிர, சமீப காலத்தில் டத்தோஸ்ரீ நஜீப் லஞ்சம், பண அரசியல், அன்வார் இப்ராஹிம் மீதான் சைபுல் தொடுத்த ஒரின வழக்கு பின்னணியில் செயல்பட்டவர் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார். ஆனால் இவைகளில் எதுவுமே ஆதாரப்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

ஒன்றன் பின் ஒன்றாக தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் இருந்து மீண்டுக் கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ நஜீப் அவர்களின் கைகளில்தான் மலேசிய நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. அரசாங்கத்தின் பல்வேறு துறை அமைச்சர் பதவியை அலங்கரித்து பரந்த அனுபவம் பெற்ற அவரது தலைமைத்துவம் கொண்டுவரப் போகும் மாற்றங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

வாழ்த்துகள் டத்தோஸ்ரீ நஜீப்!