Monthly Archives: பிப்ரவரி 2010

THE ROAD (2009)

John Q, The Pursuit Of Happyness படங்களின் வரிசையில் தந்தை பாசம் குறித்த இன்னொரு படம். முதல் இரண்டு படங்களும் நகரத்தில் நடப்பதாக இருக்கும். இந்தப் படமோ.. ஒரு சமயத்தில் மிகப் பெரிய நகரமாக இருந்து பின்னர் ஏதோவொரு காரணத்தால் நரகமாகி விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது. இந்தப் படத்தின் அடிப்படை நோக்கம் மிகவும் எளிமையானது. உயிர் வாழ்ந்தாக வேண்டும். அவ்வளவுதான். அனைத்தும் அழிந்து விட்ட ஒரு பிரதேசத்தில் உயிர் வாழ்வதற்காக இன்னொரு மனிதனை வேட்டையாட தயங்காத மனிதர்கள் உலவுகின்ற நிலையில் தன் மகனின் எதிர்காலம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்கு நோக்கி புறப்படுகின்ற ஒரு தந்தையின் பயணம்தான் The Road.

2006ஆம் ஆண்டு Cormac McCarthy என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதி புலிட்சர் விருது பெற்ற The Road நாவல்தான் இயக்குநர் John Hillcoat அவர்களால் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. கையில் ஒரே ஒரு கைத்துப்பாக்கியை (அதில் இரண்டு தோட்டா மட்டுமே இருக்கிறது) வைத்துக் கொண்டு கொட்டுகின்ற பனி, குளிர், புகை மண்டலம், மொத்தமாக சீரழிந்து விட்ட சுற்றுப்புற சூழல்… என அனைத்தையும் தன் மகனுக்காக கடந்து போக நினைக்கும் பாசமிகுந்த தந்தையாக The Lord of the Rings, Hidalgo, Eastern Promises போன்ற படங்களில் நடித்த Viggo Mortensen. தாயின் முகமறியாத, தந்தையின் நிழலிலேயே வாழ்கின்ற மகனாக Kodi Smit-McPhee. அடிக்கடி நினைவில் வந்து போகும் மனைவியாக Charlize Theron.

படத்தில் நிரந்தமாக உறைந்துக் கிடப்பது பயம் மட்டுமே. மகனை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்ற தந்தை, ஒரு கட்டத்தில் அவன் சுட்டுக் கொல்லவும் முடிவெடுக்கிறார். அவர், மற்ற மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாதவராகவும் காட்டப்படுகிறார். பயம் அவரை அந்த அளவுக்கு மாற்றியிருக்கிறது. கெட்டவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதாக நினைத்துக் கொண்டு, நாமும் அவர்களைப் போலவே மாறி கொண்டிருக்கிறோமோ என்று கூட மகன் தந்தையைப் பார்த்து கேட்கிறான். படத்தில் வருகின்ற இந்த சிறுவன், அழிந்து போன அந்த உலகத்தின் தார்மீக அடையாளமாக இருக்கிறான். அடுத்தவர் மீது இரக்கம் காட்டவும், உணவைப் பகிர்ந்து கொடுக்கவும் அவனுக்கு தோன்றுகிறது.

படத்தின் இறுதிக் காட்சி நிச்சயம் அனைவரையும் கண்கலங்க வைக்கும். இருந்தாலும், தொடருகின்ற அந்த சிறுவனின் பயணம்தான் ஆதி காலம் தொட்டு மனிதனிடம் இருந்து வருகின்ற நம்பிக்கையின் அடையாளம். அந்த நம்பிக்கை இருக்கும் வரை, எப்படிப்பட்ட நிலையிலும் மனிதனின் பயணம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

அசல் (2010)

நேற்று கொலிசியம் திரையரங்கில் ‘அசல்’ படத்தை பார்க்கப் போயிருந்தேன். ‘தல’ படம், முதல் நாளே பார்க்க ஆசை இருந்தாலும், வேலை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த காரணத்தால் நேற்றுதான் போக முடிந்தது. இப்படியொரு படத்தை பார்க்கவா ஆசை-ஆசையாய் போனோம் என்றாகி விட்டது.

அப்பா அஜீத், அவருக்கு நேர்வழியில் பிறந்த வாரிசுகள் இரண்டு பேர். வீட்டில் நிம்மதி இல்லாமல் போனதால் அவராக ஏற்படுத்திக் கொண்ட உறவில் பிறந்தது இன்னொரு அஜீத். 3 பிள்ளைகளும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று அப்பா விரும்புகிறார். மகன் அஜீத்தும் விரும்புகிறார். ஆனால் நிஜ வாரிசுகளுக்கு இதில் துளியும் சம்மதமில்லை. இதற்கிடையில் அப்பா இறந்துவிட… சொத்து காரணமாக 3 சகோதரர்களுக்கும் நடக்கும் போராட்டமே கதை.

தமிழ் சினிமாவில் இதைவிட என்ன பெரிய கதையை எதிர்ப்பார்க்க முடியும்? 2 மணி நேரம் நம்மை வாட்டி,  ரோஸ்ட் பண்ணி அனுப்புகிறார்கள். அஜீத்தை விதவிதமாக உடைகளில் வலம் வர வைத்தால் மட்டும் படம் ஓடிவிடாது என்பதை அவரை வைத்து படமெடுக்கும் இயக்குநர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

படத்தில் கொஞ்சம் ஒன்றிப் போக முடிவது யூகிசேது வந்த பின்புதான். ‘டோன் சம்சா’வாக அவர் அடிக்கும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன… அதுவும், அவர் பிரான்ஸ் சென்ற பிறகு போரடிக்கிறது.

5 வில்லன்கள் இருக்கிறார்கள். 2 நாயகிகள் இருக்கிறார்கள். அன்புக்காக பிரபுவும் இருக்கிறார். நீண்ட  இடைவெளிக்குப் பின்னர் நடிகர் சுரேஷ், பிரான்ஸ் போலீஸ் அதிகாரியாக ‘கோமாளி + வில்லன்’ கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். 

பாடல்களில் பாதியைக் காணவில்லை. ‘எங்கே-எங்கே மனிதன் எங்கே’ பாடல் படத்தில் இல்லவே இல்லை. இதற்காகவா டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறோம்? லோட்டஸ் நிறுவனம் கவனிக்க வேண்டிய விஷயம் இது! விநியோகஸ்தர்கள் என்ற முறையில் அவர்கள் பெயர்தான் இதில் வீணாக கெட்டுப் போகும். கவனிங்கப்பா…!

படத்தின் திரைக்கதையை அஜீத், யூகிசேது, சரண் எழுதியிருப்பதாக போடுகிறார்கள். அஜீத் இணை இயக்குநராக வேறு பணியாற்றி இருக்கிறாராம். நம்ம ‘தல’ உண்மையிலேயே தைரியமான ஆள்தான். இப்படியொரு படத்தில் தான் நடித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல்… பணியாற்றி இருப்பதாகவும் ஒப்புக் கொள்ளும் துணிச்சல் இங்கு வேறு எந்த கதாநாயகனுக்கு இருக்கிறது? அதுதான் நம்ம ‘தல’.

‘டொட்டோடொய்ன்’ என்ற வார்த்தையோடு படத்தில் ஒரு பாடல் வருகிறது. சோகத்தோடு செல்ல வேண்டிய விஷயம் இது… இந்தப் படமும் ‘டொட்டோடொய்ன்’தான். எனக்கென்னவோ ரேசில் விஜய் முந்திக் கொண்டு வருவது போல் தெரிகிறது…. பார்த்து ‘தல’!

INVICTUS (2009)

ஒரு தேசிய ஒற்றுமை மலர்ந்தே ஆக வேண்டும். வேலையில்லா திட்டாட்டம், குற்றச் செயல்கள், வறுமை, முக்கியமாக இனப் பிரிவினைவாதம் கொண்ட நாட்டை சிறுபான்மையினராக இருக்கின்ற இனத்தவர்களை மட்டும் அப்படியே ஒதுக்கி விட்டு தூக்கி நிறுத்தி விட முடியாது. அவர்கள் சிறுபான்மையினர்தான் என்றாலும் காவல் துறை, மருத்துவம், வர்த்தகம் என ஓர் அரசு இயங்குவதற்கான துறைகளில் மிக முக்கிய பொறுப்பில் அவர்கள்தான் இருக்கிறார்கள். மனம் நிறைய வெறுப்பையும் அச்சத்தையும் கொண்டிருக்கும் அவர்களிடம் ஆற அமர பேசி புரிய வைப்பது சாத்தியமில்லை. அவர்களை அவர்களது போக்கிலேயே அரவணைத்துச் செல்ல வேண்டும். அதே சமயத்தில், தன்னை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த தன் இன மக்களுக்கும் தானொரு நல்ல தலைவன் என்று நிரூபித்தாக வேண்டும். என்ன செய்யலாம்? மக்கள் இனம், மதம், மொழி தாண்டி இணைகிற விஷயம் என்ன? விளையாட்டு. அங்கே கைவைத்தால் இனத்திற்கிடையிலேயான ஒற்றுமை தன்னால் விளைந்துவிடப் போகிறது என்று அழகாக யோசித்த தலைவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் மண்டேலா. ஆமாம், கிட்டத்தட்ட 30 வருடங்களை சிறையில் கழித்த நெல்சன் மண்டேலாதான் அவர்.

Invictus என்ற இந்தப் படம், இன வேற்றுமையால் வெள்ளையர்கள் – கறுப்பர்கள் என பிரிந்து கிடந்த ஒரு தேசத்தை மண்டேலா என்ற ஒரு தலைவர் எப்படி ஒன்றுபடுத்தினார் என்பதையே விவரிக்கிறது. John Carlin என்பவர் எழுதிய Playing The Enemy: Nelson Mandela and the Game That Changed a Nation  என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக கருத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் படத்தில் அத்தனை விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

முன்னரே உடைக்க அனுமதி தந்துவிட்டு பின்னர் சாகவகாசமாக வந்து எப்படி ஆனது? என்ன ஆனது? என விசாரிக்கும் தலைவர் இல்லை மண்டேலா. தன்னுடைய அதிகார எல்லைக்கு உட்பட்ட வகையில் தன் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நன்மைக்கு என்ன செய்ய முடியும் என்பதை பற்றி மட்டுமே யோசித்தவர்.

இந்தப் படத்தின் கதையை நான் இங்கு விவரிப்பதை விட, படத்தை பார்த்து அனுபவிப்பதே சிறந்தது என நினைக்கிறேன். காட்சிகளாகட்டும், வசனங்களாகட்டும் அனைத்துமே ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கின்றன.

நாம் வெறுத்து ஒதுக்கிய ஒரு மனிதன், அந்நாட்டுக்கே அதிபராகி எல்லாவற்றையும் மறந்து விட்டு வாருங்கள், ஒன்றுபடுவோம், எங்களைக் கண்டு நீங்கள் அச்சப்பட தேவையில்லை எனக் கூறி நம் இனத்தின் அடையாளத்தை உலக அரங்கில் தூக்கி நிறுத்தினால் எப்படி இருக்கும்? தென் ஆப்பிரிக்க வெள்ளையர்கள் ஒரு கணம் ஆடித்தான் போனார்கள். இப்படியொரு மாமனிதனா இவன் என மண்டேலாவைப் பார்த்து வியந்துதான் நின்றார்கள்.

நெல்சன் மண்டேலா எப்படிப்பட்ட தலைவர் என்பதை படத்தைப் பார்த்தே தெரிந்துக் கொள்ளலாம். அதற்கான முழு பாராட்டும் மண்டேலாவாக நடித்திருக்கும் Morgan Freemanனைத்தான் சேரும். இனி மண்டேலா என்றாலே இவர் முகம்தான் ஞாபகத்திற்கு வருமென நினைக்கிறேன். அப்படியொரு நடிப்பு. அசத்தியிருக்கிறார்.

ரக்ஃபி அணியின் பயிற்றுனரும் கேப்டனுமான Francois Pienaar ஆக Matt Damon. பெரிதாக இவர் நடிக்க ஒன்றுமில்லை என்றாலும், மண்டேலா தங்கியிருந்த சிறையை பார்வையிடும் இவர், அப்படியொரு சிறையில் அடைக்கப்பட்ட மனிதன் இவ்வளவு பெரிய மனிதநேயம் மிக்கவராக திகழ்வதைக் கண்டு அசந்து நிற்பதும், முன்பே தங்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்த ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளர் உலகக் கிண்ணத்தை வென்றதும் தன்னிடம் வந்து “63,000 ரசிகர்கள் உங்களுக்கு ஆதரவாக இங்கே திரண்டிருப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்கும் போது பட்டென அவர் முகத்தில் அடித்தாற்போல் ‘எங்களுக்கு வெறும் 63,000 ரசிகர்கள் மட்டும் ஆதரவு தரவில்லை. 43 மில்லியன் தென் ஆப்பிரிக்கர்களும் எங்கள் பின்னால் ஓரணியில் திரண்டிருக்கிறார்கள்” என்று சொல்லும் இடத்திலும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.

படத்தின் இயக்குநர் Clint Easwood. The Rookie, Unforgiven, True Crime, Mystic Rever, Million Dollar Baby, Changeling, Gran Torino போன்ற சிறந்த படங்களின் வரிசையில் இவர் இயக்கியிருக்கும் இன்னொரு அருமையான படமிது. இது Clint Eastwood இயக்கத்தில் வெளிவரும் 33வது படமாகும்.

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக அரசியல் தலைவர்கள்!

SWORDFISH (2001)

Dominic Sena இயக்கி John Travolta, Hugh Jackman, Halle Berry மற்றும் Don Cheadle நடித்த படம்தான் Swordfish. இதுவொரு க்ரைம் த்ரில்லர் படமாகும்.

அமெரிக்கா நாட்டுக்கு எதிராக செயல்படும் அனைத்துலக தீவிரவாத கும்பல்களை களையெடுப்பதற்கு செனட்டர் ஒருவரின் தலைமையில் ரகசிய இயக்கம் ஒன்று செயல்படுகிறது. ‘ப்ளாக் செல்’ என்றழைக்கப்படும் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு நிதி சேர்க்கும் பொருட்டு இயக்க தலைவனான கேப்ரியல் (John Travolta), ஒருகாலத்தில் போருக்கென அரசாங்கம் வங்கியில் ஒதுக்கி வைத்து, கிட்டத்தட்ட பலரும் மறந்து விட்ட ரகசிய பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறான்.

FBI சிஸ்டத்தை ஹேக் செய்த காரணத்துக்காக தண்டனை விதிக்கப்பட்ட ஸ்டேன்லி (Hugh Jackman) என்ற ஹேக்கரை இதற்காக தன்னுடன் இணைந்து வேலை செய்யுமாறு கேட்கிறான் கேப்ரியல். ஆரம்பத்தில் ஸ்டேன்லி இதை மறுத்தாலும், மனைவின் பொறுப்பில் இருக்கின்ற மகளை மீட்க நடத்த வேண்டிய வழக்குத் தொகையை கருத்தில் கொண்டு அதற்கு சம்மதிக்கிறான்.

இதனிடையே கேப்ரியல் போடுகின்ற இந்த திட்டத்தை FBI மோப்பம் பிடித்து விடுகிறது. இதனை அறிந்துக் கொள்ளும் செனட்டர், கேப்ரியலை கொல்ல ஆள் அனுப்பி வைக்கிறார். அதிலிருந்து தப்பிக்கும் கேப்ரியல் தன்னை கொல்ல ஆள் அனுப்பிய செனட்டரை சுட்டுக் கொல்கிறான்.

தொடர்ந்து பணம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வங்கியை பிணைப் பிடிக்கும் கேப்ரியல், வங்கி சிஸ்டத்தை ஹேக் செய்து அரசாங்க பணத்தை தனது ரகசிய வங்கி கணக்குக்கு மாற்றச் சொல்கிறான். ஸ்டேன்லிக்கு இதில் உடன்பாடு இல்லையென்றாலும், மற்ற உயிர்களை கருத்தில் கொண்டு பணத்தை கேப்ரியல் கேட்டபடி மாற்றித் தருகிறான்.

வங்கியைச் சுற்றி போலீசும், FBI அதிகாரிகளும் குவிந்திருக்க, கேப்ரியல் மற்றும் ஸ்டேன்லி இருவரும் அங்கிருந்து தப்பித்தார்களா? தாயோடு இருக்கின்ற மகளை ஸ்டேன்லி தன்னோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டானா? என்பதுதான் படம்.

படத்தில் Halle Berry, கேப்ரியலின் உதவியாளர் ‘Ginger’ராக வருகிறார். Halle Berryயின் முதல் அரை நிர்வாணக் காட்சி இடம் பெற்ற படம் என்பதால் அது குறித்தும் நிறைய விமர்சனங்கள் இப்படத்தின் மீது வைக்கப்பட்டன. ‘HOTEL RWANDA’ படத்தில் மனிதாபிமானம் நிறைந்த ஹோட்டல் நிர்வாகியாக நடித்த Don Cheadle, இந்தப் படத்தில் சீரிஸான FBI அதிகாரியாக நடித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்வை மிக அருமையாக காட்டியிருப்பார்கள். பார்க்க வேண்டிய காட்சி அது. மற்றபடி இது வழக்கமான க்ரைம் த்ரில்லர் படம்தான்.