Monthly Archives: ஒக்ரோபர் 2010

IRREVERSIBLE (2002)

2002ஆம் ஆண்டு Gaspar Noe  இயக்கி Monica Bellucci நடிப்பில் வெளிவந்த படம்தான் Irreversible. இந்தப் படத்தின் திரைக்கதை   இறுதிக் காட்சியிலிருந்து தொடங்கி அப்படியே ஒவ்வொரு காட்சியாக முதல் காட்சியை நோக்கி நகர்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது படத்தின் காட்சி A,B,C,D… என்று தொடங்கி முடிவதற்கு பதிலாக Z,Y,X,W.. என்று தொடங்கி முடியும். இவ்வாறு கதை சொல்லும் முறையை Reverse Chronological – Nonlinear Narrative  என்று  குறிப்பிடுவார்கள்.

ஒரு பெண்ணை, சுரங்கப் பாதையில் ஒருவன் வன்புணர்ச்சி (குதப்புணர்ச்சி) செய்து கடுமையாக தாக்கி விடுகிறான். அந்தப் பெண்ணின் காதலனும் இன்னொரு நண்பனும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து கிடைத்த பெயரை மட்டும் வைத்துக் கொண்டு அந்த ஈவு இரக்கமற்ற மனிதனைத் தேடி புறப்படுகிறார்கள். கடைசியில் அவனை பழிவாங்குகிறார்கள். இதுதான் படத்தின் கதை.

வழக்கமாக நாம் பார்த்து பழகிப்போன பழிவாங்கும் கதைதான். ஆனால் ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலியல் தொழிலாளிகள் என்று படத்தின் பின்னணி வேறொரு உலகத்தை நமக்கு காட்டுகிறது. படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் அந்த ஓரினச் சேர்க்கையாளர்களின் விடுதியும்.. அங்கு காட்டப்படுகின்ற காட்சிகளும் பேச்சுக் குரல்களும் முனகல் சத்தங்களும் மனதை என்னவோ செய்கிறது. படத்தில் வருகின்ற அந்த வன்புணர்ச்சி காட்சியும் அந்தப் பெண்ணின் அடிவயிற்றுக் கதறலும் நம்மை உறைய வைக்கும் என்பது திண்ணம். (9 நிமிடங்களுக்கு இந்த காட்சி வருகிறது)

இந்தக் காட்சியை சாதாரணமான வன்புணர்ச்சியாக காட்டியிருந்தால் படத்தை பற்றி பேச ஒன்றுமே இருந்திருக்காது. ஆனால் தன் உடலில், தனது அனுமதி இல்லாமல் இன்னொரு மனிதன் அத்துமீறல் நிகழ்த்திக் கொண்டிருப்பதை தன் அங்க அசைவு, குரல், கண்பார்வை மூலம் வெளிகாட்டி நம்மை உணர்ச்சிக் கொந்தளிப்பில் மிதக்க விடுகிறார் Monica Bellucci. படத்தைப் பார்த்து முடித்த பின்னும் கூட அந்தச் சம்பவத்தை விட்டு வெளிவர மனம் மறுக்கிறது.

இந்தப் படத்தைப் பார்க்கும் வரை… வன்புணர்ச்சி என்பது எனக்கொரு செய்தியாக மட்டுமே தெரிந்தது. நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டு வரப்பட்ட சில குறிப்பிட்ட வழக்குகளை தவிர்த்து மற்ற அனைத்தையும் படித்து முடித்த அடுத்த நிமிடமே வசதியாக மறந்தும் விடுவேன். ஆனால் வன்புணர்ச்சியின் வலி என்னவென்பதை இந்தப் படம்தான் உணர்த்தியது. இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்கள் காலம் முழுவதும் புறக்கணிப்பு, விரக்தி போன்றவற்றால் மன உளச்சலில் வாழ நேரும். இதற்கு பயந்தே பல பெண்கள் தங்களுக்கு நேரும் இது போன்ற அநீதிகளை வெளியே சொல்ல தயங்குகிறார்கள். ஆனால் இந்தச் செயல்களை செய்கின்ற மனித மிருகங்களுக்கு இவ்வாறான பாதிப்புகள் இல்லை. சட்டப்பூர்வமாக கூட,  தண்டித்தே ஆக வேண்டுமென்பதற்காக பிரம்படியும் சிறைத் தண்டனையும் வழங்கப்படுகிறது.

இன்னொரு உடலின் மீது நிகழ்த்தப்படுகின்ற அத்துமீறல்கள் கடுமையான தண்டனைக்குரியவை. ஆண் என்ற திமிரில் செய்யப்படுகின்ற இது போன்ற காட்டுமிராண்டிதனமான செயல்களுக்கு கட்டாய மரண தண்டனை மட்டுமே தீர்வாக இருக்க முடியும். மரண பயம் மட்டுமே இது போன்ற குற்றச் செயல்களை ஒடுக்க உதவும்.

எந்திரன் (2010)

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆர்ப்பாட்டம் இல்லாத ரஜினி. வசீகரன் ரொம்பவே மென்மையான பாத்திரம். சிட்டி (ரோபோ) உண்மையிலேயே சிலிகான் சிங்கம்தான். ஷங்கர் – ரஜினி நம்பியிருப்பதும் அவரைதான். ஜஸ்வர்யா ராய்? உணர்ச்சியே இல்லாத ரோபோவும் காதல் செய்ய  வேண்டுமல்லவா? அதற்காக மட்டுமே. சந்தானம் – கருணாஸ் இருவரும் படத்தில் காமெடி செய்கிறோம் என வந்து போகிறார்கள்.

 எழுத்தாளர் சுஜாதாவின் மறைவு இந்த படத்திற்கு ஏற்பட்ட இழப்பு. அவர் இருந்திருந்தால் காட்சிகள் இன்னும் மெருகேற்றப்பட்டிருக்கும். படத்தில் அசுர உழைப்பு உழைத்திருப்பவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மானை விட வேறு யாரும் சிறப்பாக பின்னணி இசையமைத்திருக்க முடியாது. படம் பார்த்து முடித்த பிறகு, கலாநிதி மாறனுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாமல், தனது பத்து வருட கனவை ரஜினி தயவால் நிறைவேற்றிக் கொண்டுள்ள இயக்குநர் ஷங்கர் புத்திசாலி என்றே தோன்றியது!.

எந்திரன் ரஜினி படமாக வந்திருப்பதாலேயே இவ்வளவு ரசிக்கப்படுகிறது. இதுவே கமல் நடிப்பில் வந்திருந்தால் “படம் கார்ட்டூன் மாதிரி இருக்கிறது – இப்படியெல்லாம் நடக்குமா? – காதுல பூக்கடையையே வைச்சு அனுப்பி இருக்கானுங்க!’ என்று பலவகையான எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்கும். அந்த வகையில் மகிழ்ச்சி.

கதையில் லாஜிக் இருக்கிறதோ இல்லையோ படம் ஓடிவிடும். காரணம் ரஜினி. தவிர, தமிழ் சினிமா தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதற்கான அடையாளம் இந்தப் படம். மெகா பட்ஜெட்டை சுமந்து வெற்றி பெற வைக்க ரஜினியால் மட்டுமே முடியும். அதை அவர் இந்த முறையும் நிரூபித்திருக்கிறார்.