Category Archives: அனுபவம்

நண்பேன்டா!

சில மனிதர்கள் விசித்திரமானவர்கள். அவர்களை நீங்கள் புரிந்துக் கொள்வது கடினம். எல்லாரும் ஓர் இலக்கை துரத்தி ஓடிக்கொண்டிருக்க, இவர்கள் மட்டும் சாதிக்கிறோமென பல இலக்குகளைத் துரத்திக் கொண்டிருப்பார்கள். அதில் எந்த இலக்கை நோக்கி போகிறோமென அவர்களுக்கே முழுமையாக தெரியாது என்பதுதான் இதிலுள்ள ப்யூட்டி. அப்படியொரு நபரை அண்மையில் சந்தித்தேன். நேரக்கூடாத விபத்துதான். சில சமயங்களில் “விதி வலியது”.

நீங்கள் எல்லாரும் எம்எல்எம் என்றழைக்கப்படும் மல்டி லெவல் மார்க்கெடிங் துறையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மனித தொடர்புகளை சங்கிலிக் கோர்வையாக இணைப்பதன் வழி செயல்படும் துறை இது. உங்களது தொடர்புச் சங்கிலி எவ்வளவு நீளமோ அந்தளவுக்கு பெரிய லாபத்தை சம்பாதிக்கலாம். ஆனாலும் உங்களது கீழ்நிலைத் தொடர்பாளர்கள் அவர்கள் பங்குக்கு அந்த தொடர்ச்சியை பெருக்கிக் கொண்டே போக வேண்டும். அவர்கள் செயல்படாமல் நின்று விட்டால் ஓர் அளவுக்கு மேல் உங்களுக்கு அங்கே வளர்ச்சி இருக்காது. பொதுவாக பேசியே ஒரு பொருளை மார்க்கெட்டிங் செய்கிற துறை என்பதால், இந்த துறையில் பெரிய வளர்ச்சியை எட்டுவதற்கு பேச்சுத் திறன் ரொம்ப அவசியம். இப்படிதான் என்றில்லாமல் உங்களை நோக்கி வீசப்படுகின்ற சரமாரியான கேள்வி கணைகளை கூலாக டீல் செய்தாக வேண்டும்.

மலேசியாவில் மாதம் ஒருமுறை ஏதாவதொரு புதிய நிறுவனம் இப்படியொரு பொருளை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட நிறுவனங்களில் உறுப்பினராக பதிந்து, தன்னை அங்கே நிலைநாட்டிக் கொள்ள விரும்பிய ஒருவர்தான் நான் சந்தித்த அந்த மனிதர். இதுதான் என்றில்லை.. புதிதாக நீங்கள் ஒரு பொருளைக் காட்டி, இப்போதுதான் சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது என்று சொன்னால் போதும், உடனே அந்த நிறுவன முகவராக பதிந்து, நிறுவனத்தின் பொருள், தரம் மற்றும் அந்த நிறுவன மார்க்கெட்டிங் ப்ளான் வரை கரைத்துக் குடித்துவிடும் அளவுக்கு மும்முரமாக வேலையில் இறங்கிவிடும் ஆள் இவர்.

பலமுறை இவரைக் கண்டு ஓடியிருக்கிறேன். மனிதர் பிடியில் மாட்டினால், சிக்கி சீரழிவதை தவிர வேறு வழியே இல்லை என்பதை அனுபவத்தில் ஏற்கனவே உணர்ந்திருக்கிறேன். 5 மணி நேரத்திற்கும் குறைவாக அவர் பேசி நான் கேட்டதே இல்லை. ஒரு புள்ளியி;ல் ஆரம்பித்து உலகையே வலம் வந்துவிடும் அபாயகரமான மனிதர். அந்தப் பீதியிலேயே அவர் இருக்கின்ற திசை பக்கமாகக் கூட நான் தலைவைத்துப் படுப்பதில்லை. ஆனாலும் சமீபத்தில் விதி என்னை அவரோடு கோர்த்து விட்டு கைக்கொட்டி சிரித்தது.

நம் நாட்டில் இருக்கின்ற ஒரு வசதி அங்காங்கே இருக்கின்ற மாமாக் ஸ்டால். அதிலும் குறிப்பாக இரவு நேர மாமாக் ஸ்டால் விசேஷமானவை. நண்பர்களோடு அரட்டையடிக்க, காதலியோடு பேச, வர்த்தக திட்டங்களை விவரிக்க, இன்றைய அரசியல் குறித்து அலசவென பல வாசல்களை திறந்து வைத்துக் காத்திருக்கும் ஒரு ஸ்பாட் அது. மலேசிய குடிமகனில் ஒருவனான நான் மட்டும் இதில் விதிவிலக்க என்ன? எனக்கு பிடித்த மாமாக் ஸ்டால் ஒன்றுக்கு போனேன். நெஸ்காபி சி ஒன்றுக்கு ஆர்டர் செய்து விட்டு வந்தமர்ந்த என்னை கரமொன்று தொட்டுத் தழுவியது. பார்த்தால் மேலே நான் புகழ்ந்து பேசிய நண்பர் புன்னகையோடு நின்றுக் கொண்டிருந்தார்.

“நண்பேன்டா….”

என் இதயம் துடிக்கின்ற ஓசை எனக்கே கேட்ட தருணமது. எந்த பொருளை கொடுத்து என்னை டெஸ்ட் செய்து பாருங்கள், டேஸ்ட் பண்ணி பாருங்கள் என கொடுமைப்படுத்த போகிறாரோ என உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், அவரையும் அமரச் சொன்னேன். அதற்குப் பின் நடந்ததெல்லாம் நாளைய வரலாற்றில் பொன்னெழுத்தில் செதுக்கப்படவிருக்கின்ற பிஸ்னெஸ் டாக்.

நண்பர் இப்போது புதிதாக 3 புதிய எம்எல்எம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாக சொன்னார். ஒரு பொருளைப் பற்றியே 5 மணி நேரம் பேசுவாரே… இப்போ 3னு சொல்றாரேனு அப்போதே மண்டைக்குள் கவுளி கத்தியது. “தப்பிச்சு ஓடிரு.. தப்பிச்சு ஓடிரு”னு என் மனம் உள்ளுக்குள் ஓலமிட்டு ஆடிய கதகளியை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரித்து வைத்தேன். நண்பர் உற்சாகமானார். “என்னய்யா குடிக்கிறீங்க? நெஸ்காபி சி யா? ஏன் சீனியின் அளவைக் கட்டுப்படுத்த ஆரம்பிச்சாச்சா?” என்று கேட்டபடி தன்னுடைய பேக்கில் கையை விட்டு துழாவினார்.

ஆஹா.. ஏழரைச் சனியின் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் பரிகாரம் செய்து கொள்வோம் என நினைத்து, “நண்பரே, ஏதாவது புதிய பொருளை எனக்கு காட்டப்போகிறீர்களா? உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? நீங்கள் சொல்லுங்க நான் கேட்டுக்கிறேன்” என்றெல்லாம் சொல்லிப் (கெஞ்சி)  பார்த்தேன். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளும் நிலையில் நண்பர் இல்லை. கர்மவீரன் போல் கடமையில் கண்ணாக இருந்தார். அதற்குப் பலனாக அவர் தேடியது கிடைத்தும் விட்டது.

நமது கட்டைவிரல் சைஸில் ஒரு சிறிய குப்பி. அதிலிருந்து ஒரு சொட்டை நாம் அருந்தும் பானத்திலோ உணவிலோ விட்டுக் கொண்டால் சீனியின் பயன்பாடு இல்லாமலேயே இனிப்பின் சுவையை அனுபவிக்க முடியும் என அவர் வரிசையாக அந்த பொருளின் பயன், மூலப் பொருட்கள்,  தயாரிப்பு நாடு, ஏற்றுமதி-இறக்குமதியாகும் நாடுகள், மலேசியாவில் அறிமுகமான நாள்,தேதி,கிழமை என புள்ளி விபரங்களை அடுக்க எனக்கு கிலிபிடிக்க ஆரம்பித்து விட்டது. ஏறக்குறைய 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு பொருளைப் பற்றி விலா நோக விவரித்த மனிதர், இன்று அந்த பழையப் பொருளின் ஞாபகமே ஏற்படாத வகையில் தனது புதிய விற்பனை பொருளைப் பற்றி எனக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

நீங்களும் அதன் சுவையை அனுபவியுங்கள் என வலுக்கட்டாயமாக ஒரு வெந்நீரை வரவழைத்து அதைக் கொஞ்சம் குடிக்கச் சொன்னார். பின்னர் தனது குப்பியிலிருந்து ஒரு சொட்டை அந்த நீரில் விட்டபின்பு மீண்டும் குடித்துப் பார்க்கச் சொன்னார். வெந்நீர் இனித்தது உண்மை. ஆனாலும் அதனைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ளும் ஆவலோ ஆசையோ எனக்கில்லை. நண்பரிடம் தண்ணீர் இனிக்கிறது என்று மட்டும் சொல்லி வைத்தேன். உடனே அந்த பொருளின் நன்மைகளையும் அது செயல்படும் முறையும் விளக்கத் தொடங்கி விட்டார் நண்பர்.

நான் நெஸ்காபி சி குடிக்க ஆரம்பித்துதான் இதற்கெல்லாம் காரணமா? ஒழுங்கின்மை சித்தாந்தம்  (chaos theory) இப்படியெல்லாமா வேலைச் செய்யும்? ஒருவேளை, இன்று  நண்பரிடம் ஏதாவது ஏடாகூடமாகப் பேசி, அது நாளைக்கு எனக்கு வண்ணத்துப்பூச்சி விளைவாக (butterfly effect) பாதகத்தை ஏற்படுத்தி விடுமா? என்றெல்லாம் எனக்கே பயம் வருகிற அளவுக்கு என் மூளை அறிவியல் கோட்பாடுகளைப் பற்றியெல்லாம் அலசத் தொடங்கி விட்டது.

அவர் பேசத் தொடங்கிய ஒரு விஷயத்துக்கே நான் ஏதேதோ யோசித்து குழம்பிக் கொண்டிருக்க, என் கவனம் அவரை விட்டு 100 கி.மீ வேகத்தில் விலகி ஓடுவதை உணர்ந்த நண்பர் என்னை இம்பிரஸ் செய்வதாக நினைத்து பேஸ்புக் போலவே அச்சு அசலாக அறிமுகமாகி இருக்கு இன்னொரு சோஷியல் வெப்சைட் பற்றி பேசத் தொடங்கினார். “இந்த சோஷியல் வெப்சைட்டில் உறுப்பினராக நீங்கள் பணம் செலுத்த வேண்டும், தொடர்ந்து நான்கு – நான்கு பேராக 16 பேரை உங்களுக்குக் கீழே சேர்த்து விட்டீர்கள் என்றால்….” என அவர் சொல்லிய வார்த்தைக்குப் பிறகு எனக்கு வேறெதுவுமே காதில் விழவில்லை.

ஆனாலும் திடீரென “நண்பா, உங்க தொடர்புல இருக்கிற 20 பேரை நமக்கு கீழே பார்க் பண்ணிங்கன்னு வைங்க.. நான் உங்களுக்கு ஒரு லைன், உங்க வைஃப்க்கு ஒரு லைன்னு 2 லைன் தனியா போட்டுத் தரேன். காசு கொட்டோ கொட்டுன்னு கொட்டும். அப்புறம் என்னய்யா…  பேஸ்புக் ஒனருக்கே ஜுஸ் வாங்கி கொடுக்கலாம்யா..” என அவர் சொன்னது மட்டும் காதில் விழுந்து தொலைத்த காரணமாக, யுஎஃப்போ எல்லாம் என் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்து விட்டது, தனியாக சொல்ல வேண்டிய கிளைக் கதை.

(இம்சைகள் தொடரும்….)

7ஆம் அறிவு (2011)

வழக்கம் போலவே கடைசியில் அமைந்திருக்கும் Couple Seat. சனிக்கிழமை இரவு 9.15 காட்சி. ட்ரோபிகானா சிட்டி மால் GSC. பொதுவாக இந்த திரையரங்குக்கு தமிழர்கள் வருவது குறைவு. எல்லாரும் தி கெர்வ், 1 உத்தாமா அல்லது பிஜே ஸ்டேட் பிக் சினிமா திரையரங்குகளை நோக்கியே படையெடுப்பார்கள். இந்த முறை அதிலொரு மாற்றம். 4 நாட்களுக்கான 24 காட்சிகளின் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்திருந்தன. படம் வெளிவந்து 4 நாட்களாகி விட்டது. ஆனாலும் கூட்டம் அலைமோதுகிறது. பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புவதை பார்க்க முடிந்தது. படத்திற்கு கொடுக்கப்பட்ட விளம்பரம் செய்த மாயம் இது. ஆனால் படம் ஏமாற்றவில்லை.  

டாமோ என சீன மக்களால் போற்றி வணங்கப்படுகிற போதிதர்மன் ஒரு தமிழன். இந்த ஒற்றை வரியை தமிழ் சினிமாவிற்கு ஏற்றபடி திரைக்கதை அமைத்து அதை நமக்கெல்லாம் தீபாவளி விருந்தாக பரிமாறி இருக்கிறார் முருகதாஸ்.

 போதிதர்மன் பல்லவ இளவரசன். நோக்கு வர்மம், தற்காப்புக் கலை, மூலிகை மருத்துவத்தில் அவரொரு நிபுணர். சீனாவில் பரவி வரும் ஒரு மர்ம நோய் தமிழ்நாட்டை பீடிக்காமல் இருக்க அவரை சீன தேசத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். (பலர் அவர் ஏன் சீன தேசத்துக்குப் போனார் என புரியாமல் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்) அவரும் அங்கு சென்று அந்த நோயை குணப்படுத்துகிறார். அப்படியே அந்த சீன மக்களுக்கு தற்காப்பு கலையையும் நோக்கு வர்மத்தையும் கற்றுத் தருகிறார். அந்த சீன மக்களின் சுயலநல வேண்டுகோளுக்காக விஷம் கலக்கப்பட்ட உணவை உண்டு அங்கேயே இறந்து சமாதியாகிறார்.

இப்போது போதிதர்மன் கற்றுக் கொடுத்த அதே கலைகளைக் கொண்டு இந்தியாவை தனது கைப்பாவை ஆக்கிக் கொள்ள சீன சக்திகள் முயற்சிக்கின்றன. அவர்களுக்கு சுபா என்றொரு மாணவி போதிதர்மனின் டிஎன்ஏ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. தங்களது திட்டத்திற்கு சுபாவின் ஆராய்ச்சி இடையூறு விளைவிக்கும் என்பதால் அவளை அழிக்க டோன் லீ என்றொரு ஆளை அனுப்பி வைக்கின்றனர். சுபாவையும் இந்தியாவையும் காப்பாற்ற போதிதர்மன் வம்சாவளியில் பிறக்கின்ற அரவிந்த் உதவுகிறார். இதுதான் படத்தின் கதை.

ஒரு தமிழனின் பெருமையை பறைசாற்றும் படமென்றாலும் இடையிடையே ஸ்ருதிஹாசனும் சூர்யாவும் பேசும் சில வசனங்கள் நமக்கு  அறை கொடுக்கின்ற எண்ணத்தை உருவாக்குவதை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக, அடிமைத்தனத்தையே விரும்பி ஏற்றுக் கொள்ளும் பெருமிதம் நமக்கு மட்டும்தான் இருக்கிறதென ஸ்ருதிஹாசனும் தமிழன் போகிற இடங்களில் எல்லாம் அடி வாங்குகிறான் என்று சூர்யா சொல்லும்போதும் வலிக்கிறது.

9 நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனை கொன்றால் அது வீரமல்ல என சூர்யா சொல்லும்போது புலித் தலைவன் மீது ஏற்படுகின்ற அந்த கண நேர மதிப்பு.. அதை விவரிக்க வார்த்தையில்லை.

உண்மைதான். இந்தப் படம் நமது உணர்ச்சிகளை தூண்டி அதன் மூலம் லாபம் பார்க்கும் முயற்சிதான். திரைப்படம் என்பதே லாபத்திற்காக செய்யப்படும் வணிகமே தவிர நம்மை திருத்தவோ அல்லது நமக்கு கருத்து சொல்லவோ உருவாக்கப்படுவதில்லை. அப்படியொரு எண்ணத்தோடு படம் பார்க்க போகிறவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்றும் புரியவில்லை. இளைஞர்கள் சினிமா பார்த்து கெட்டுப் போகிறார்கள் என்பது எந்த அளவுக்கு கேணைத்தனமாக கூற்றோ.. அதுபோலதான் ஒரு படத்தை பார்த்து விட்டு வந்தபின்பு கன்னாபின்னாவென படத்தின் இயக்குநருக்கு அறிவுரையும் ஆலோசனையும் வழங்குவதும்.
 
ஒரு படத்தைப் பற்றி விவாதிக்க என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை. பல கோடிகளை கொட்டி படமெடுக்கும் ஒரு தயாரிப்பாளரை விட, ஒரு கதையை உருவாக்கி அதை சினிமாவாக எடுக்கின்ற இயக்குநரை விட 10-15 ரிங்கிட் கொடுத்து விரும்பியே போய் படம் பார்த்து விட்டு கருத்து வாந்தி எடுக்கின்ற சிலரின் ஒலக சினிமா தேடல் என்னவென புரியவில்லை. ஏன்பா.. நீங்களும் ஓர் ஒலக சினிமா எடுத்துதான் காட்டுங்களேன். அப்போதாவது உங்கள் ஒலக சினிமாவின் புரிதல் என்னவென எங்களுக்கும் விளங்குமல்லவா? சரி, அவர்கள் எதையோ செய்து தொலைக்கட்டும். உலக இயக்கம் நடைபெற இது போன்ற கோமாளிகளும் தேவைப்படுகிறார்கள்.

இந்தப் படம் முடிந்து வெளியே கார் நிறுத்துமிடத்திற்கு வந்தபோது கிட்டத்தட்ட 85 விழுக்காடு சீனர்களே என்னைச் சுற்றி அங்கே இருந்தார்கள். படத்தில் காட்டப்படுவது போல சீனர்களில் பலர் சுயநலவாதிகளே. இது கொஞ்சம் காரமான கூற்றாக தோன்றலாம். ஆனால் போதிவர்மன் கற்றுக் கொடுத்தது போல சீனர்களிடமிருந்து நீங்கள் எதையும் இலகுவாக கற்றுக் கொள்ள முடியாது. நமக்கு தெரியாத ஒன்றை அவர்களிடம் கேட்டால் அதற்கொரு தயாரான பதிலை அவர்கள் வைத்திருப்பார்கள். அது… “தெரியாது”.

சீனர்களோடு வேலை செய்பவர்களுக்கு நான் சொல்வது புரியும். தொழில் நுணுக்கங்களை அவ்வளவு சுலபமாக அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவுதான் நீங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் ரகசியத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள மாட்டார்கள்.

தொழில் விவகாரத்திலும் சீனர்கள் நடந்துக் கொள்ளும் முறை புரிந்துக் கொள்ள முடியாதது. தன் இனத்திற்கு வியாபாரம் கொடுக்கவே அவர்கள் விரும்புவார்கள். ஒரு கடைவரிசையில் 3 வேறு இனத்தவரின் கடைகள் இருந்தால் இதில் சீனர் கடையாக தேடிச் சென்று பொருட்கள் வாங்குவது தொடங்கி, மற்ற வியாபாரிகளை குறைத்து பேசுவது வரை சீனர்களுக்கு நிகர் சீனர்களே. மிக நல்ல சீன முதலாளிகளும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கை மிக சொற்பமே.

இதில் தமிழன் மட்டும்தான் “தவுக்கே, பாஸ்” என இன்னமும் சீனர்களை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சீனர்களை இப்படி முதலாளி – முதலாளி என்றழைப்பதில் தமிழர்களுக்கு அப்படியொரு ஆனந்தம். தவிர தங்களுக்கு தெரிந்த விஷயத்தை யாரும் கேட்பதற்கு முன்பாகவே தம்பட்டம் அடித்து காட்டிக் கொள்வதும் ஏமாளித்தனமாக தன் இனத்தை தவிர மற்ற இனத்தவருக்கு தங்களுக்குத் தெரிந்ததைக் கற்று தருவதிலும் தமிழர்களை மிஞ்ச ஆளில்லை.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என யார் சொன்னது? பெரும்பாலான தமிழனிடமும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது இன்னொரு தமிழன் எப்படி நம்மை விட நன்றாக வாழலாம் என்ற வயிற்றெரிச்சல். இதனால் ஏற்படும் பொறாமையில் ஆயிரம் பிரிவினைகள், கூச்சல்கள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. விளைவு நம்மை பிரநிதிக்க 30 கட்சிகள் 300 தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.

படம் முடிந்து வெளியே வரும்போது இளைஞர் பட்டாளத்திலிருந்து  ஒரு கபோதி கூவியது “என்னவோ பெரிய
..தி தர்மனாம். பேசாம வேலாயுதம் பார்க்க போயிருக்கலாம்”. இதுதான் நமது இளைய தலைமுறையின் லட்சணம்.  இவர்களுக்கு உலக சினிமாவை எடுத்துக் காட்டினால் மட்டும் மாற்றம் வந்துவிடப் போகிறதா? அடப்போங்கடா…

பி.கு: இது எனது 100வது பதிவு.

நாய் வளர்க்கும் கலை.

இது எனக்கு நன்கு தெரிந்தவனின் கதை. அதனால் தைரியமாக வலையேற்றலாம். அவனைத் தவிர வேறு யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. அந்த “அவன்” யாரென்று பின்னால் தெரியவரும்.

சிறிய நகரங்களில் நாய் வளர்ப்பது போல, கோலாலம்பூர் குடியிருப்பு பகுதிகளில் அவ்வளவு சுலபமாக நாய் வளர்த்துவிட முடியாது. 1008 ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் உண்டு. இங்கே பெரும்பாலும் பலரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு பை-பை சொல்லியவர்கள் என்பதால் நாய் வளர்ப்பதெல்லாம் நாளுக்கு நாள் அருகிக் கொண்டே வருகிறது. சீனர்களைத் தவிர பெரும்பான்மையான இந்தியர் வீடுகளில் இப்பொதெல்லாம் நாய்களைக் காண முடிவதில்லை.

மேலும் இங்கு யாருக்கும் நேரமே இருப்பதில்லை. நேரமின்மை என்ற நோய் பீடித்த மனிதர்களே இங்கு அதிகம். என்ன செய்வது புற்றுநோயை விட மிக பயங்கரமான வியாதியாக இப்போது நேரமின்மை கருதப்படுகிறது. “எந்த 5 நிமிஷத்தைக் கேட்குறீங்க? கொடுத்தா வைச்சிருக்கீங்க?” என டிஹெச்ஆர் ராகாவில் பொதுநல அறிவிப்பு போடுகிற அளவுக்கு ஆளாளுக்கு நேரத்தைப் பாராபட்சமின்றி கடனாகக் கேட்கின்றனர். இவனும் இப்படியொரு சிக்கலில் சிக்கிக் கொண்டவன்தான். வீட்டில் ஓய்வெடுக்கவே நேரமில்லை. இதில் நாய் வளர்க்க கிளம்பினால் என்ன ஆகும்?

திடீரென ஒரு காலை பொழுதில் அவனுடைய வெளிநாட்டு நண்பன், தன்னுடைய நாய் ஈன்றிருக்கும் குட்டியில் ஒன்றைத் தருவதாக சொன்னபோது, தனக்கு கிடைத்த புது வாய்ப்பை எண்ணி அவன் மனம் துள்ளிக் குதித்தது. (“கண்ணா லட்டு திங்க ஆசையா???”) போதாக்குறைக்கு அது அல்சேஷன் மற்றும் லெபரேட்டர் கலப்பில் உருவான குட்டி. (“கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆ..சை..யா????”) விலை எப்படியும் 3000 ரிங்கிட்டுக்கும் மேல்.

இருந்தாலும் மனைவியாகிய, வீட்டின் நிரந்தர நிதி மற்றும் தலைமை செயலாக்க அதிகாரியிடம்  ஒப்புதல் வாங்காமல் எதையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் போய்விட முடியாது.

“நான் ஒரு நாய்க்குட்டி வளர்க்கலாம்னு இருக்கேன்.”

“எதுக்கு? சும்மா இருக்க முடியலியா?”

மனைவியிடம் நாயின் குலம் கோத்திரம் பற்றி எல்லாம் சொல்லி, கெஞ்சி –  கொஞ்சி சம்மதம் கேட்டபோது, ஏதோ பண்ணுங்க என்று அவளும் சொல்லி விட்டாள். ஒரு சுபயோக சுபதினத்தில் நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு வந்தாகி விட்டது.

முதல் வேலையாக நாய்க்கு வேண்டிய சங்கிலி, தட்டு, பிஸ்கட், டின் உணவுகள், விளையாட்டுப் பொருட்கள் என்று வாங்கியதில் செலவு 200 வெள்ளியைத் தாண்டியது. அடுத்ததாக கூண்டு வாங்க வேண்டும். இதுவோ சின்ன ரக நாயில்லை. இப்போது சின்னதாக வாங்கும் கூண்டு இன்னும் 10-12 மாதத்தில் உபயோகப்படாது. தவிர எந்தக் கூண்டுமே மேலே கூரை கொண்டதாக இல்லை. அப்படி கூரை கொண்ட கூண்டுகள் வைக்க வீட்டில் இடம் போதாது. விலையும் 2000 ரிங்கிட் என பயமுறுத்தியது.

முதல் பிரச்னை தோன்றியது அப்போதுதான்..

இந்த வீடு கட்டுற டெவலப்பர் இருக்கானுங்களே.. கொஞ்சங்கூட யோசிக்கவே மாட்டானுங்களா? ஒரு வீட்டைக் கட்டுனா அதோட முன் தாழ்வாரத்தை குறைந்தபட்சம் கேட் வரைக்கும் வைக்கிறது இல்லை? இப்போ நான் நாயை எங்கே கொண்டு போய் கட்டுறது????? மழை தூறினால் நாய் நனையுமே? அவன் உச்சி மண்டையில் யாரோ அம்மியை வைச்சு நச்சு நச்சென்று அரைத்தார்கள்.

பெரிய ஏ3 பேப்பர் ஒன்றை எடுத்து, என்னமோ இன்னொரு கேஎல்சிசி கட்டுகிற தோரணையில்  அங்கும் இங்கும் 4 கோடுகளைப் போட்டு, கூரை, கதவு, ஜன்னல் என்று தனித் தனியாக வரைந்து, அதற்கு என்ன வர்ணம் கொடுக்கலாம், நிப்போன் பெயிண்ட் அடிக்கலாமா? இல்லை ஜசிஜ பெயிண்ட் பெட்டரா? வெளியே விளக்கு வைத்து மின்சார இணைப்பு கொடுக்கலாமா? இல்லை அப்படியே விட்டு விடலாமா? நாயின் ஹாலில் சின்னதாக கார்ப்பெட் போட்டு படுக்க வைக்கலாமா? இல்லை வெறும் இரும்புக் கம்பியை தரையாகப் போட்டு, கீழே ஒரு ட்ரே மாதிரி வைத்தால் நாயின் இயற்கை கழிவுகளை சுத்தப்படுத்திக் கொள்ள வசதியாக இருக்குமா? என்றெல்லாம் துல்லியமாக திட்டமிட்டு, ஒருவேளை வேறு வீடு மாற வேண்டியதிருந்தால் சிமெண்ட் வைத்து கட்டப்பட்ட நாய் வீட்டை தூக்கிக் கொண்டு போக முடியாது என்பதால் நாய் வீட்டின் சுவரை பலகையிலேயே செய்து விடலாம் என்று அவன் முடிவு செய்து நிமிர்ந்த போதே அவனுக்குத் தெரிந்து விட்டது. “நாம் போகாத ஊருக்கு வழி தேடுறோம்!”.

இனி என்ன செய்வது என்று திக்கித் தடுமாறி நின்றபோது, அவன் மனைவி தேவதை மாதிரி ஒரு அருள் பாலித்தாள். “வீட்டுக்குள்ளேயே கட்டி வைங்க”. உடனே அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினான் அவன். வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்த்து நாயை கட்டி வைக்க முடியாது. அதனால் கண்ணுக்குத் தென்பட்ட ஒரு காலியான இடத்தை தேர்ந்தெடுத்து நாயை அங்கே கட்டினான். இந்த நாய்க்குட்டிக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. சிறுநீரை மிகச் சரியாக அது படுப்பதற்காக விரித்து வைத்த துணியில் அடித்து வைத்தது.

எத்தனை முறை துணியை மாற்ற முடியும்? உடனே துணிக்கு மாற்றாக பேப்பரை விரித்துப் பார்த்தான். உயர்ரக நாயல்லவா? மிகச் சரியாக பேப்பர் மீது சுச்சா போனது. ஒருவகையில் அவனுக்கு அது பெருமை தரக்கூடிய விஷயமாகப் பட்டது. கண்ட இடத்தில் வீட்டை அசுத்தப்படுத்தி வைக்காமல், ஒழுங்காக ஒரே இடத்தில் போகிறதே என.. ஆனால் அந்த மகிழ்ச்சி 30 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. சீறுநீரை சரியாக பேப்பரில் அடிக்கக் கற்றுக் கொண்ட அந்த நாய்க்குட்டி, மலம் கழிப்பதை மட்டும் பேப்பரை விட்டு தனியாக வீட்டுத் தரையில் செய்து வைத்தது. அவனுக்கு இரண்டாவது முறை தலையில் அம்மிக்கல் இடி விழுந்தது.

சரி எல்லாமே நாம் பழகிக் கொடுப்பதில்தானே இருக்கிறது என்று அவனும் மறுநாள் முதலாக நாயை வீட்டில் இருக்கின்ற டாய்லெட்டை பயன்படுத்த சொல்லிக் கொடுக்க தொடங்கினான். அவன் கெட்ட நேரமா இல்லை நாயின் பிடிவாதமா என்று தெரியவில்லை.. நாயக்கு டாய்லெட்டை பயன்படுத்துவதில் சுத்தமாக விருப்பமே இல்லை. அதற்காக தினமும் வீட்டின் முன்புறமுள்ள திடலைச் சுற்றி 45 நிமிடங்கள் நாயோடு அவன் வாக்கிங் போக வேண்டியதிருந்தது.

அதிகாலை 1-2 மணிக்கு படுப்பவனை அவ்வளவு சீக்கிரம் எழுப்ப மனைவியே துணிந்ததில்லை. ஆனாலும் நாய் தனது சங்கீத குரலால் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவனை அதிகாலை 5 மணிக்கே அலறிக் கொண்டு எழ வைப்பதில் வெற்றி கண்டது. 5 மணியிலிருந்து 5.45 மணி வரை இருவரும் வாக்கிங் போவார்கள். பின்னர்  காலை 7 மணி அளவில் நாய்க்கு காலை உணவு வைக்க வேண்டும். வேலைக்கு கிளம்பும் சமயம் நாயை வீட்டிற்குள் கொண்டு வந்து கட்டினால் அதோடு இரவு சரியாக 8 மணியளவில் நாயைக் கூட்டிக் கொண்டு வாக்கிங் போயே தீர வேண்டும். அப்படி  இல்லையென்றால் அதற்குரிய தண்டனையாக வீட்டை கழுவ வேண்டியதிருக்கும். 9 மணியளவில் இரவு உணவை வைக்க வைக்க வேண்டும்

இதுவே அவனது தினசரி வழக்கமானது.  விரும்பி ஏற்றுக் கொண்ட சுமை. இறக்கி வைக்க முடியாது. தவிர இதில் அவன் பின்வாங்கி விட்டால் இனி ஆயுளுக்கும் “நாய்” என்று எழுத்துக்கூட்டி படித்தாலும் முகவாய் கட்டையில் பூரிக்கட்டையால் அடி விழலாம். நாமே உருவாக்கிக் கொண்ட இந்த சுகமான சுமையை நமக்கு பிடித்த மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டியதுதான், கௌரவமாவது மிஞ்சும் என முடிவெடுத்தான். அதிலும் ஒரு பிரச்னை இருந்தது. மழைத்தூறும் சமயத்தில் நாயை வாக்கிங் அழைத்துக் கொண்டு போவது இயலாத காரியம். அப்போதெல்லாம் வீட்டைக் கழுவினான்.

அடுத்ததாக நாய்க்குத் தடுப்பூசி போட வேண்டும். இந்தக் குட்டிக்கு இன்னும் போடவில்லை என்று ஏற்கனவே நண்பன் சொல்லியிருந்தான். தடுப்பூசி போட நல்ல கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு முன்பாக அங்கே எல்லாம் எட்டிக் கூட பார்த்ததில்லை. தன் வட்டாரத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவர் பட்டியலை Yellow Pages புத்தகத்தில் தேடினான். காலாற நடந்து போகிற தூரத்தில் ஏதும் இல்லை. நாயை வாகனத்தில்தான் ஏற்றிச் செல்ல வேண்டும்.

ஒரு விடுமுறை நாளன்று நாயை அங்கே கொண்டு சென்றான்.

‘1இல் 9 அடங்கிய ஊசியா? இல்லை 1இல் 41 அடங்கிய ஊசியா?’

முதல் கேள்வியே திக்குமுக்காட வைத்தது.

“உங்களுக்கு எதைப் போடணும்னு தோணுதோ அதைப் போடுங்க..” ஒருவழியாக தன்னை நோக்கி ஏவப்பட்ட அணுகுண்டை டாக்டர் பக்கமே திருப்பி விட்டான். தன் நாய்க்கு ஏதும் ஏடாகூடாமாகி விடக்கூடாது என்ற கவலையும் கூடவே சேர்ந்துக் கொண்டது. ஒருவழியாக.. பல கேள்விகளால் அவனை தொடர்ந்து வறுத்தெடுத்து.. நாய்க்கு 1இல் 9 அடங்கிய ஊசியே போதும் என டாக்டர் முடிவு செய்தார்.

ஊசி போட்ட பிறகு, இன்னும் 1 வாரத்திற்கு நாயைக் குளிப்பாட்டக் கூடாது என்று தொடங்கி தனியாக 5-6 கட்டளைகள் இட்டார். எல்லாவற்றையும் கர்ம சிரத்தையும் அவனும் கேட்டுக் கொண்டான். நாய்க்கு ஏதும் ஆகிவிடக் கூடாதல்லவா? நாளைய சரித்திரத்தில் நாய் வளர்க்கத் தெரியாதவன் என்ற அவப்பெயர் எக்காரணத்தைக் கொண்டும் தன்னோடு ஒட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

ஊசி போட்டு விட்டு வந்த இரண்டு நாட்களும் நாயின் ஒவ்வொரு அசைவையும் உற்றுக் கவனித்தான். ஓகே! எல்லாம் சரியாக இருக்கிறது.  நமக்கு நாய் வளர்க்கத் தெரிந்து விட்டது. அவனுக்குள்ளேயே ஒரு பெருமித உணர்வு பொங்கி அடங்கியது.

இப்போது அவனுக்கு எல்லாம் பழகிப் போய் விட்டது. முன்கோபியான அவனுக்கு ஓர் இமாலய பொறுமையும் கைக்கூடி வந்திருக்கிறது. கூடவே “பரவாயில்லையே வீட்டு வேலையும் நல்லா செய்றீங்களே” என்ற மனைவியின் பாராட்டும் கிடைத்துள்ளது. (இந்தப் பாராட்டின் பின்னணியில் என்னவெல்லாம் இருக்கோ????)

இப்போது அவன் நாய்க்கு லைசன்ஸ் வாங்கும் முயற்சியில் இருக்கிறான். இப்போது இல்லையெனினும் என்றெனும் ஒருநாள், அவன் “நாய் வளர்க்கும் நுணுக்கங்கள்” என்ற தலைப்பில் புத்தகம் எழுதலாம். அப்படியொரு நிலை வரும் சமயத்தில் தமிழுக்கு புது வரவு என ஆறுதல்பட்டுக் கொள்வதைத் தவிர இந்த மலையக தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை!

என்ன, அவன் யாரென்றா கேட்கிறீர்கள்?. ஹிஹிஹிஹிஹி…

மங்காத்தா – தியேட்டரில் நடந்த கலாட்டா!

மங்காத்தா “தல”யின் 50வது படம். வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்பந்தம். அதற்கு தல தேர்ந்தெடுத்த நபர்  வெங்கட் பிரபு. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தின் அதிர்ச்சி அதுதான். மிகப் பெரிய சவால். இந்த இளைஞனால் முடியுமா என்றுதான் எங்கேயும் பேசிக் கொண்டார்கள். ஆனால் வெங்கட் பிரபுவின் திறமை மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தார் அஜீத். அதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. ஆமாம், சொல்லி அடித்த “கில்லி”யை விடவும் சொல்லாமல் அடித்த மங்காத்தாவுக்கு இப்போது மவுசு அதிகம். மீண்டும் விஜய்யுடனான அடுத்த சுற்று மங்காத்தா ஆட்டத்துக்கு “தல” ரெடி, வெல்டன் ‘தல’! படத்தைப் பற்றி கேட்டால் இவ்வளவுதான் சொல்ல முடியும். மற்றபடி பார்த்து ரசிக்க வேண்டிய படமிது.

இந்த பதிவு படத்தை பற்றி சொல்வதற்காக அல்ல. படத்தைப் பார்க்கப் போனபோது நடந்த டிக்கெட் கலாட்டா பற்றி சொல்வதற்காகவே… மங்காத்தா நம் நாட்டில் கடந்த 1ஆம் தேதி திரையிடப்பட்டது.  நான் 3ஆம் தேதி சனிக்கிழமை இரவு 9மணி ஷோவுக்கு டிக்கெட் எடுத்திருந்தேன். இடம்: ப்ரைம் மால், கெப்போங். லோட்டஸ் பிக் சினிமா தியேட்டர்.

பொதுவாக நான் தியேட்டருக்கு போய் டிக்கெட் எடுப்பதில்லை. நேரடியாக ஒன்லைன் வழியாக டிக்கெட் வாங்கி விடுவேன். இந்த முறையும் அப்படிதான் Couple சீட்டுக்கான டிக்கெட் ஒன்றை வாங்கினேன். விலை 13 வெள்ளி மட்டுமே. இந்த (குறைந்த) விலை எனக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றாலும் அதைப்பற்றி எல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க நேரமில்லை. நேராக தியேட்டருக்குப் போய்விட்டேன். கூடவே நிறைமாதமாக இருந்த என் மனைவி.

எங்கள் அரங்குக்கான சீட்டிங் விளக்கு எரியத் தொடங்கியவுடன் உள்ளே போனோம். வாசலில் டிக்கெட் பரிசோதகர்களாக நம் இளைஞர்கள் இரண்டு பேர் இருந்தார்கள். டிக்கெட்டை காட்டியவுடன் உள்ளே போக அனுமதித்தவர்கள். பின்னர் என்னை மட்டும் அழைத்து இது ஒரு ஆள் அமர்வதற்கான டிக்கெட் மட்டுமே என்றார்கள்.

இது Couple சீட். எப்படி தனியாக ஒரு ஆளுக்கு மட்டும் கட்டணம் வசூலித்திருப்பீர்கள் என்று கேட்டேன். தவிர ஒன்லைனில் டிக்கெட் வாங்கும் போது Couple சீட் என்றால் (குறிப்பாக கிஎஸ்சி தியேட்டர்) இருவருக்கும் சேர்த்தே விலை போட்டிருப்பார்கள். மேலும் பிக் சினிமா தன்னுடைய டிக்கெட் புக்கிங் சிஸ்டத்தில் Couple சீட்டுக்கு தனித் தனியாக டிக்கெட் வாங்க வேண்டும் என்று அறிவிப்பு ஏதும் போடவில்லை. பிறகெப்படி அது எனக்குத் தெரியும் என்றும் கேட்டேன்.

அதற்கு அவர்கள் ஆங்கிலப் படமென்றால் நான் சொல்வது போல இரண்டு பேருக்கும் சேர்த்தே விலை காட்டப்படும் என்றும் தமிழ்ப்படத்திற்காக அந்த முறை மாற்றப்பட்டுள்ளது என்றும் சொன்னார்கள். இருந்தாலும் பரவாயில்லை. உள்ளே இடம் இருந்தால் நீங்கள் அங்கே அமர்ந்துக் கொள்ளலாம் என்றும் பச்சைக் கொடி காட்டினர்.

தியேட்டர் உள்ளே போனால், நான் பதிவு செய்த இடத்தில் இன்னொரு ஜோடி அமர்ந்திருந்தது.  அவர்களிடம் கேட்டபோது, தனித்தனியாக வேறு சீட்டுக்கு பதிவு செய்தவர்கள் ஒழுங்காக என் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.

அதாவது நான் பதிவு செய்த  சீட் ஏ7-ஏ8 என்றால் என்னிடம் ஏ7 இருக்க அவரிடம் ஏ8 இருந்தது. அவருடைய காதலியோ சி7 சீட்டுக்கான டிக்கெட்டை வைத்திருந்தார். அவர்கள் பிக் சினிமா முறைப்படி Couple சீட்டுக்கு தனித் தனியாக டிக்கெட் வாங்கி இருந்தாலும் வேறு வேறு சீட்டுக்கான டிக்கெட்டை வாங்கி இருந்தார்கள். எப்படியும் ஒருவர்தானே ஏ7 டிக்கெட் வாங்கி இருப்பார். அவரிடம் சொல்லி இடம் மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

டிக்கெட் குழப்பம் அங்கேயே தொடங்கி விட்டது. அதற்குள் படமும் ஆரம்பமாகி விட்டது. 3 திரையரங்கில் மங்காத்தா அன்று ஒரே காட்சியாக திரையிடப்பட்டிருந்தாலும் எல்லாமே House Full. நிறைய பேர் திரையரங்கின் உள்ளே வந்த வண்ணமிருந்ததால் மேலும் அங்கேயே நின்று பேசிக் கொண்டிருக்காமல் வெளியே வந்து டிக்கெட் பரிசோதகர்களிடம் பிரச்னையை விளக்கினேன்.

“நீங்க மட்டும் இல்லண்ணே.. இந்த முறை நிறைய சீட்டிங்ல நிறைய குழப்பம். தமிழ்ப்படம் போட்டாலே இப்படிதான் 1000 குழப்பம் வரும்” என்று அவர்கள் தங்களுடைய சோக குமுறலை சொல்ல ஆரம்பித்தபோதே கிட்டத்தட்ட 20 பேர் அங்கே வந்து தங்களுடைய சீட்டில் வேறு ஆட்கள் உட்கார்ந்திருப்பதாக முறையிட்டனர். “நான் சொல்லலை?” என்றவாறு ஒருவர் சிரித்துக் கொண்டே அவர்களை சம்பந்தப்பட்ட 10ஆம் எண் கொண்ட அரங்கிற்குள் அழைத்துப் போனார்.

அங்கிருந்த இன்னொரு டிக்கெட் பரிசோதகர் அன்றைய டூட்டி சூப்பர்வைசரை அழைத்து என் பிரச்னை குறித்து சொன்னார். நிலைமையைப் புரிந்துக் கொண்ட அவரோ, இன்றைய அனைத்து காட்சிகளுக்குமான டிக்கெட் (நள்ளிரவு 12 மணி உட்பட) அனைத்தும் விற்று முடிந்து விட்டதென சொல்லி, நாளைக்கு முதல் ஷோவுக்கான (நண்பகல் 12மணி) மாற்று டிக்கெட் தரட்டுமா என்று கேட்டார். மேலும் நடந்துவிட்ட கேளாறுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் வகையில்  26 வெள்ளி மதிப்புடைய சீட்டை நான் வாங்கிய விலைக்கே தருவதாக சொன்னார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சம்மதித்தேன். டிக்கெட் எடுத்து வர போய்விட்டார்.

அப்போது, 11ஆம் அரங்கிலிருந்து வெளிவந்த ஒரு ஜோடி தங்களுடைய சீட்டில் வேறு ஆள் அமர்ந்திருப்பதாக மிகவும் கோபமாக முறையிட்டனர். நேற்றே தாங்கள் டிக்கெட்டை பதிவு செய்து வாங்கி விட்டதாகவும், எப்படி அந்த இடத்தில் வேறு ஆள் அமர முடியும் என்றும் கடும் டென்ஷனோடு கேள்விகள் கேட்டனர். அவர்கள் கேள்வி கேட்ட தோரணையும் காட்டி முகபாவங்களும் கடுமையானவை. தங்களது அதிருப்தியை புலப்படுத்தும் வகையில் அடிக்கடி  தலையை வேறு ஆட்டிக் கொண்டார்கள். பரிதாபத்திற்குரிய டிக்கெட் பரிசோதகரோ என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.

மௌன சாட்சியாக நானும் என் மனைவியும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம். பொதுவாக இது போன்ற சமயங்களில் நான்தான் மிகுந்த டென்ஷன் ஆவேன். என்னை சமாளித்து சண்டை போடாமல் அழைத்து வருவதற்குள் என் மனைவி பெரும் போராட்டமே நடத்த வேண்டியதிருக்கும். ஆனால் அன்று ஏனோ கோபமே வரவில்லை. நடப்பதை வேடிக்கை பார்க்க மட்டுமே தோன்றியது.

அந்த ஜோடி கொடுத்த டிக்கெட்டை வாங்கிப் பார்த்த அந்த டிக்கெட் பரிசோதகர், பிரகாசமான முகத்துடன் “அண்ணே நீங்க போக வேண்டியது 12ஆம் அரங்கம். 11வது அரங்கத்துல போய் உங்க சீட்டைத் தேடுனா எப்படியண்ணே கிடைக்கும்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார், ஒரு கணம் ஆடிப்போன அந்த ஜோடி, அசடு வழிய மன்னிப்பு கூட கேளாமல் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு 12ஆம் அரங்கினுள் ஓடியது. அதற்குள் பலரை இடம் மாற்றி அமர வைத்த களைப்பில் வெளியே வந்தார் 10ஆம் எண் அரங்கத்தில் நுழைந்த இன்னொரு டிக்கெட் பரிசோதகர்.

அந்த சமயத்தில் 11ஆம் அரங்கிலிருந்து வெளியே வந்த மேலும் 2 ஜோடி தங்களுடைய சீட்டில் வேறு ஆட்கள் அமர்ந்திருப்பதாக முறையிட்டார்கள். அவர்களையும் உள்ளே அழைத்துக் கொண்டு போனார் வெளியே வந்த பரிசோதகர். எங்களுடன் இருந்தவரோ உள்ளே போனவரைப் பார்த்தவாறு, “தமிழப்படம் போட்டாலே இப்படிதான்ணா, ஒவ்வொரு ஷோவும் ஆரம்பிச்சு முடிகிற வரைக்கும் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கணும்” என்று கவலையுடன் சொன்னார். உள்ளே போன பரிசோதகர் வெளியே வந்த சமயத்தில், எங்களுக்கான டிக்கெட்டை எடுத்துவர போன சூப்பர்வைசரும் டிக்கெட்டோடு வந்தார்.

அவரிடமிருந்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு நன்றி சொல்லி கிளம்புகிற சமயத்தில் மீண்டும் 12 அரங்கிலிருந்து மேலும் 5 பேர் வெளியே வந்தார்கள். தங்களுடைய சீட்டில் வேறு ஆட்கள் அமர்ந்திருப்பதாக சொன்னார்கள். 11ஆம் அரங்கிலிருந்து வெளியே வந்த பரிசோதகர் அவர்கள் டிக்கெட்டை வாங்கி சரிபார்த்தார். சிரித்தார். தன்னுடைய நண்பர்களிடமும் காட்டினார். அவர்களும் சிரித்தார்கள். அங்கேயே ரொம்ப நேரம் நின்று பேசிக் கொண்டிருந்த நானும் அவர்கள் நட்பு வளையத்தில் இணைந்து விட்ட காரணத்தினால் எனக்கும் டிக்கெட்டைக் காட்டினார்கள். அதிர்ந்தே போனேன். அவர்கள் காட்டிய 5 டிக்கெட்களிலும் 2ஆம் தேதி, இரவு 9மணி காட்சி என போட்டிருந்தது.

(அடப்பாவிங்களா… நேற்றைய ஷோவுக்கான டிக்கெட்டை இன்னைக்கு கொண்டு வர்றீங்க?? டிக்கெட் வாங்குனா என்ன தேதி எத்தனை மணி ஷோன்னு கூடவா பார்க்க மாட்டீங்க? இல்லை முதல் நாள் ஷோவைப் பார்த்திட்டு திரும்ப அதே டிக்கெட்டை கொண்டு வருவீங்களா? எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க இப்படி?)

பி.கு: காருக்குள் வந்து நானும் என் மனைவியும் டிக்கெட்டை சரியாகப் பார்க்காமல் விஸ்வாமித்திரர் லெவலுக்கு கோபப்பட்ட ஜோடியையும் நேற்றைய டிக்கெட்டை வைத்துக் கொண்டு மறுநாள் படம் பார்க்க வந்த நபர்களையும் நினைத்து  சிரித்த சிரிப்பை வேறு யாரேனும் பார்த்திருந்தால் எங்களை மனநோயாளிகள் என்று நினைத்திருக்கக் கூடும்.

இன்று தமிழர் புத்தாண்டா?

காலையிலிருந்து கிட்டத்தட்ட 20 புத்தாண்டு வாழ்த்து மின்னஞ்சல்கள் வந்துவிட்டன இதுவரை. நேரம் ஆக-ஆக இதன் எண்ணிக்கை கூடலாம். தவிர்க்க முடியாமல் இதற்கு நான் பதிலும் அனுப்பி வைத்திருக்கிறேன். ஆனாலும் மனசுக்குள் நெருடல். இன்று தமிழர் புத்தாண்டா?

இல்லவே இல்லை. தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாள்தான் என்பதை ஆணித்தரமாக நம்புகிறவன் நான்.

 ஆனாலும் நம் மக்களின் மனப்போக்கு இன்னும் மாறவில்லை. பல முறை இது குறித்து நான் விளக்கிய போதெல்லாம் கருத்து வேறுபாடுகள்தான் அதிகரிக்கிறதே தவிர, யாரும் இதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள தயாராக இல்லை.

கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்க பல சமயம் விட்டுக் கொடுத்து போக வேண்டியதிருக்கிறது. தவிர, என்னை விட வயது முதிர்ந்தவர்கள் வாழ்த்து சொல்லும்போது, முகத்தில் அடித்தாற்போல இன்று நீங்கள் சொல்வது போல் தமிழர் புத்தாண்டு இல்லை என்று சொல்ல மனம் வரவில்லை.

நான் செய்வது தவறு என்று எனக்குத் தெரியும். ஆனால் தன்னை அதிபுத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கின்ற மூடர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நான் செய்ய வேண்டிய வேலைகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட வேண்டியதுதான்.

அதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கும் பொருட்டு இப்போதெல்லாம் முன்பு போல விவாதம் செய்வதில்லை. புன்னகைத்து விட்டு நகரப் பழகிக் கொண்டிருக்கிறேன். இது, மூன்று வகையில் எனக்கு உதவுகிறது.

1) என் நேரம் மிச்சப்படுகிறது.

2)என் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

3)என்னைக் கண்டதும் ஏதோ விரோதியைப் பார்ப்பது போல் யாரும் இப்போதெல்லாம் பார்ப்பதில்லை.

மற்றபடி என் பதிவைப் படித்து விட்டு “அதெப்படி நீ இப்படி சொல்லலாம்… ” என்று ஆரம்பிப்பவர்கள், தயவு செய்து கீழே படித்து விட்டு கேள்வியைத் தொடருங்கள்.

“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரிய கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
– பாரதிதாசன்.

A Doctor In The House:The Memoirs of Mahathir

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது எழுதிய A Doctor In The House : The Memoirs of Mahathir என்ற இந்த புத்தகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை என் மனைவி எனக்குப் பரிசளித்தாள். புத்தகம் வெளிவந்து கிட்டத்தட்ட 1 மாதம் ஆகப் போகிறது (9 மார்ச்). இப்போதுதான் என் கைக்கு கிடைத்திருக்கிறது. விலை 100 ரிங்கிட் மட்டுமே.

 தனிப்பட்ட முறையில் எனக்கு துன் மகாதீரைப் பிடிக்கும். ஒரு சில அரசியல் முடிவுகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் துன் மகாதீர் மலேசியாவின் அடையாளம். அப்படிப்பட்ட தலைவனின் சுயசரிதம் இது. பால்ய பருவம் தொடங்கி 22 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த வரை உள்ள  தனது எண்ண அலைகளை ஒளிவு மறைவில்லாமல் இந்த புத்தகத்தில் பதிவு செய்திருப்பதாக துன் மகாதீர் கூறியிருந்தார்.

 கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான பக்கங்களில் 62 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளது. இனி படித்துப் பார்த்துதான் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். இன்று படிக்கத் தொடங்குகிறேன். விரைவில் புத்தகத்தில் அடங்கியிருக்கும் முக்கியத் தகவல்களை பதிவிடுகிறேன். இதற்கிடையில் புத்தகத்தை வாங்க விரும்புவோர் MPH கடைகளில் நேரடியாக சென்று வாங்கலாம்.

உலுசிலாங்கூர் தொகுதி இடைத்தேர்தல் – ஒரு பார்வை

உலுசிலாங்கூர் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளராக பி.கமலநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தொகுதி வேட்பாளர் தேர்வு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உலுசிலாங்கூர் தொகுதியைப் பொருத்தவரை டத்தோ ஜி.பழனிவேல் அல்லது முகிலன் ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் முகிலனை வேட்பாளராக அறிவிக்கக்கூடாது என்று டத்தோஸ்ரீ சாமிவேலு இறுதிவரை பிடிவாதமாக இருந்தததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

டத்தோ பழனிவேலுவைப் பொருத்தவரை அவர் கறைபடியாத, செயலாற்றக்கூடிய அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்டாலும், அடித்தட்டு மக்கள் நெருங்க முடியாத தலைவராக இருக்கிறார் என்றே தொகுதி மக்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். இதன் காரணமாகவே தேசிய முன்னணி இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனத்தெரிகிறது. ஆனாலும் மஇகா தலைமைத்துவ மாற்றம் சுமூகமாக நடக்கும் வகையில் டத்தோ பழனிவேலுவுக்கு செனட்டர் பதவி அளித்து துணை அமைச்சராக்கவும் தேசிய முன்னணி தயாராக இருப்பதாக தெரிய வருகிறது.

இது குறித்து டத்தோஸ்ரீ சாமிவேலுவிடம் தீவிரமாக கலந்தாலோசித்த பின்னரே பி.கமலநாதனை துணைப் பிரதமர் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் வேட்பாளராக அறிவித்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதன் மூலம் இழுப்பறியாக இருந்த வந்த வேட்பாளர் தேர்வு ஒருவழியாக சுமுகமான தீர்வை கண்டுள்ளது.

அதே சமயம் இது போன்ற குழப்பங்கள் ஏதுமில்லாமல் டத்தோ ஸைட் அவர்களை வேட்பாளராக அறிவித்ததிலிருந்தே மக்கள் கூட்டணி இந்த இடைத் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி விட்டது தெரிய வருகிறது. ஆளும் மாநிலத்தில் நடக்கும் தேர்தல் என்பதால் அதிரடி அறிவிப்பு, மக்கள் நல திட்டம் என தொகுதியில் அமர்க்களப்படுத்தி வருகிறது மக்கள் கூட்டணி.

இனி வேட்பாளர்களை கவனிப்போம்:-

தே.மு வேட்பாளர் பி.கமலநாதன்

தொகுதி பக்கம் மஇகாவுக்கு முன்பிருந்த செல்வாக்கு இல்லை என்பதே நிதர்சன உண்மை. அண்மையில் நான் தொகுதி பக்கம் போயிருந்தபோது கூட, இதே நிலையைதான் பார்க்க முடிந்தது. மக்கள் கூடுகின்ற காலை சந்தை, முடிவெட்டு நிலையம், உணவகம், பேருந்து நிலையம், மருத்துவமனை என எல்லா இடங்களிலும் இப்போது இந்த இடைத்தேர்தல் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் டத்தோ பழனிவேலு தேவையில்லை என்பதில் நிறைய பேர் உறுதியாக இருந்ததையும் பார்க்க முடிந்தது.

தேசிய முன்னணியின் மீது மக்களுக்கு அதிருப்தியில்லை என்றாலும் மக்கள் கூட்டணியின் மீது அங்குள்ள மக்கள் நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளனர். தமிழ்ப்பள்ளிக்கு நிலம், நிதியுதவி என்பது தொடங்கி பல்வேறு நல திட்டங்களையும் மக்கள் கூட்டணி தலைமையில் அமைந்துள்ள சிலாங்கூர் மாநில அரசு தாராள மனதுடன் அங்கு செயல்படுத்தி வருகிறது. இது இடைத் தேர்தலையொட்டிய அரசியல் காய்நகர்த்தலாக தென்பட்டாலும்-விமர்சிக்கப்பட்டாலும், முழு வீச்சில் இது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது அங்குள்ள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தே.மு வேட்பாளர் பி.கமலநாதன் நிறுவனம் ஒன்றின் பொது உறவு இயக்குநராக பணியாற்றி வருகிறார். அதோடு மஇகா கட்சியின் தகவல் பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். தேர்தலில் வேட்பாளராக அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறை. வணிக ரீதியிலான பொது உறவுகளை வளர்ப்பதில் அவர் திறமை கொண்டவராக இருந்தாலும் மஇகாவின் தகவல் பிரிவு தலைவராக அவரது சேவை மக்களால் குறிப்பாக இந்தியர்களால் உணரப்பட்டுள்ளதா என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். அந்த பிரிவின் மூலம் அவர் மஇகா சார்ந்த தகவல்களை-மறுமலர்ச்சி திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளாரா என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கும் தேர்தலாக இது விளங்கப் போகிறது.

முற்றிலும் புதிய வேட்பாளராக திகழும் பி.கமலநாதன் முழுக்க-முழுக்க அம்னோவின் பலத்தை நம்பியே தேர்தல் களத்தில் நிற்கப்போகிறார். மஇகாவின் செல்வாக்கு இந்த முறை அவருக்கு எந்த முறையிலும் கை கொடுக்கப் போவதில்லை. தவிர தொகுதி பக்கம் பி.கமலநாதனுக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு அவரது வெற்றிக்கு எந்த அளவுக்கு கைக்கொடுக்கும் என்பது கணிக்க முடியாத ஒரு விஷயமாகவே உள்ளது. மேலும் மஇகா உலுசிலாங்கூர் தொகுதி முன்னாள் துணைத் தலைவர் வி.எஸ் சந்திரன் சுயேட்சை வேட்பாளராக வேறு களமிறங்குகிறார். இதுவும் பி.கமலநாதனின் வெற்றியை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆக, இந்த தேர்தலில் பி.கமலநானின் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவுதான். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் அதை அம்னோவின், குறிப்பாக டத்தோஸ்ரீ நஜீப் – தான்ஸ்ரீ முஹிடின் யாசின்  தலைமைத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகத்தான் கருத முடியுமே தவிர மஇகாவின் மறுமலர்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது.

மக்கள் கூட்டணி வேட்பாளர் டத்தோ ஸைட் இப்ராஹிம்

மக்கள் கூட்டணி சார்பில் இம்முறை டத்தோ ஸைட் இப்ராஹிம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே துன் அப்துல்லா அகமட் படாவி ஆட்சிக் காலத்தின் போது தேசிய முன்னணி சார்பில் அமைச்சராக பதவி வகித்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சர் பதவியிலிருந்தும் பின்னர் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்தும் விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கிளாந்தான் கோத்தா பாரு அம்னோ தொகுதி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற டத்தோ ஸைட், 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது கோத்தா பாரு நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டார். கடுமையான போராட்டத்துக்கு பிறகு அந்தத் தொகுதியில் வெற்றியும் பெற்றார். பாஸ் கட்சியின் கோட்டையான அந்த தொகுதியை, 15 வருடத்திற்கு பிறகு அப்போதுதான் தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 2004ஆம் ஆண்டு நடைப்பெற்ற கோத்தாபாரு அம்னோ தொகுதி தேர்தலில், பண அரசியலில் ஈடுபட்டதாக கூறி டத்தோ ஸைட்டின் உறுப்பினர் நிலையை அம்னோ ஒழுங்கு நடவடிக்கை குழு 3 ஆண்டு காலம் ரத்து செய்தது.

2008ஆம் ஆண்டு துன் அப்துல்லா அகமட் படாவி அவர்களால் டத்தோ ஸைட் மீண்டும் அமைச்சராக்கப்பட்டார். ஆனாலும் 6 மாதங்கள் மட்டுமே அவர் அந்தப் பதவியில் நீடித்தார். உள்நாட்டு தடுப்புக் காவல் சட்டம் மற்றும் லிங்கம் வீடியோ வழக்கு தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளால் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மக்கள் கூட்டணியில் இணைந்த டத்தோ ஸைட் அன்று முதல் இன்று வரை மக்கள் கூட்டணியின் முக்கிய ஜெனரலாக திகழ்ந்து வருகிறார்.

டத்தோ ஸைட் இப்ராஹிமிற்கு நாடு தழுவிய அளவில் நல்ல அறிமுகம் இருக்கிறது. ஆகவே தனிப்பட்ட வகையில், அவர் தன்னை தொகுதி மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்  இல்லை. ஆனாலும் இந்திய வாக்காளர்களைப் பொருத்தவரை அவரை எத்தனைப் பேர் அறிந்து வைத்துள்ளனர் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

இருந்தாலும், மக்கள் கூட்டணி நிறைய இந்திய பிரநிதிகளை கொண்டுள்ள காரணத்தால், இந்த பிரச்னை விரைவில் களையப்பட்டு விடும் என்றும் நம்பலாம். தொகுதி பிரச்னை மட்டுமின்றி தேசிய அளவிலான பிரச்னையிலும் குரல் கொடுக்க கூடியவர் என்ற நம்பிக்கையை மலாய் மற்றும் சீன வாக்காளர்களிடையே டத்தோ ஸைட் பெற்றுள்ளார். தவிர, ஏழை எளிய மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று அவர் சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்திருப்பது தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக, இந்த தேர்தலில் இவரே வெற்றி வாய்ப்பை அதிகம் கொண்ட வேட்பாளராக திகழ்கிறார்.

மொத்தத்தில்…

தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி ஆகிய இரு தரப்பும் இதுவொரு முக்கியமான இடைத்தேர்தலாக திகழ்கிறது. விரைவில் 13வது பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கின்ற நிலையில் தங்களது பலத்தை பரிசோதித்துக் கொள்ளும் களமாகத்தான் அவை இரண்டும் இந்த பொதுத் தேர்தலை அணுகப் போகின்றன. ஆகவே இருதரப்பிலும் சூடான, பரபரப்பான பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தாராளமாக நம்பலாம்.

இருதரப்புமே வெற்றி பெற கடுமையான போராட்டம் நடத்தினாலும், தேர்தல் கண்ணாமூச்சி காட்டினாலும்… கொளுத்துகின்ற வெயிலில் தன் குடும்பத்தின் அடுத்த வேளை தேவைக்காக வேர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் ஏழையின் கையிலுள்ள அந்த துப்புச் சீட்டில்தான் இருதரப்பில் யாரோ ஒருவருக்கான வெற்றி ஒளிந்துக் கொண்டிருக்கிறது!

அசல் (2010)

நேற்று கொலிசியம் திரையரங்கில் ‘அசல்’ படத்தை பார்க்கப் போயிருந்தேன். ‘தல’ படம், முதல் நாளே பார்க்க ஆசை இருந்தாலும், வேலை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த காரணத்தால் நேற்றுதான் போக முடிந்தது. இப்படியொரு படத்தை பார்க்கவா ஆசை-ஆசையாய் போனோம் என்றாகி விட்டது.

அப்பா அஜீத், அவருக்கு நேர்வழியில் பிறந்த வாரிசுகள் இரண்டு பேர். வீட்டில் நிம்மதி இல்லாமல் போனதால் அவராக ஏற்படுத்திக் கொண்ட உறவில் பிறந்தது இன்னொரு அஜீத். 3 பிள்ளைகளும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று அப்பா விரும்புகிறார். மகன் அஜீத்தும் விரும்புகிறார். ஆனால் நிஜ வாரிசுகளுக்கு இதில் துளியும் சம்மதமில்லை. இதற்கிடையில் அப்பா இறந்துவிட… சொத்து காரணமாக 3 சகோதரர்களுக்கும் நடக்கும் போராட்டமே கதை.

தமிழ் சினிமாவில் இதைவிட என்ன பெரிய கதையை எதிர்ப்பார்க்க முடியும்? 2 மணி நேரம் நம்மை வாட்டி,  ரோஸ்ட் பண்ணி அனுப்புகிறார்கள். அஜீத்தை விதவிதமாக உடைகளில் வலம் வர வைத்தால் மட்டும் படம் ஓடிவிடாது என்பதை அவரை வைத்து படமெடுக்கும் இயக்குநர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

படத்தில் கொஞ்சம் ஒன்றிப் போக முடிவது யூகிசேது வந்த பின்புதான். ‘டோன் சம்சா’வாக அவர் அடிக்கும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன… அதுவும், அவர் பிரான்ஸ் சென்ற பிறகு போரடிக்கிறது.

5 வில்லன்கள் இருக்கிறார்கள். 2 நாயகிகள் இருக்கிறார்கள். அன்புக்காக பிரபுவும் இருக்கிறார். நீண்ட  இடைவெளிக்குப் பின்னர் நடிகர் சுரேஷ், பிரான்ஸ் போலீஸ் அதிகாரியாக ‘கோமாளி + வில்லன்’ கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார். 

பாடல்களில் பாதியைக் காணவில்லை. ‘எங்கே-எங்கே மனிதன் எங்கே’ பாடல் படத்தில் இல்லவே இல்லை. இதற்காகவா டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறோம்? லோட்டஸ் நிறுவனம் கவனிக்க வேண்டிய விஷயம் இது! விநியோகஸ்தர்கள் என்ற முறையில் அவர்கள் பெயர்தான் இதில் வீணாக கெட்டுப் போகும். கவனிங்கப்பா…!

படத்தின் திரைக்கதையை அஜீத், யூகிசேது, சரண் எழுதியிருப்பதாக போடுகிறார்கள். அஜீத் இணை இயக்குநராக வேறு பணியாற்றி இருக்கிறாராம். நம்ம ‘தல’ உண்மையிலேயே தைரியமான ஆள்தான். இப்படியொரு படத்தில் தான் நடித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல்… பணியாற்றி இருப்பதாகவும் ஒப்புக் கொள்ளும் துணிச்சல் இங்கு வேறு எந்த கதாநாயகனுக்கு இருக்கிறது? அதுதான் நம்ம ‘தல’.

‘டொட்டோடொய்ன்’ என்ற வார்த்தையோடு படத்தில் ஒரு பாடல் வருகிறது. சோகத்தோடு செல்ல வேண்டிய விஷயம் இது… இந்தப் படமும் ‘டொட்டோடொய்ன்’தான். எனக்கென்னவோ ரேசில் விஜய் முந்திக் கொண்டு வருவது போல் தெரிகிறது…. பார்த்து ‘தல’!

TARE ZAMEEN PAR (2007)

உங்களில் மாணவப் பருவத்தைப் பற்றிய ஞாபகங்கள் இல்லாதவர்கள் யாராவது உண்டா? பட்டாம்பூச்சி போல் கவலையின்றி திரிந்த அந்த வசந்த காலங்கள், இனியொரு முறை வாழ்வில் வருமா என்று ஏங்காத இதயம் உண்டா? வாழ்க்கையின் ஏதாவதொரு நொடியில்,  ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நிகழ்காலத்திலிருந்து நம்மை பிரித்தெடுக்கும் அந்த ஈர நினைவுகள் நெஞ்சில் சொட்டு சொட்டாக விழுந்து, இன்பம் நிரப்பி சுகமான சுமையை விட்டுச் செல்லும்.

சில படங்களுக்கு இதுபோன்ற உணர்வை தட்டி எழுப்பக்கூடிய ஆற்றல் உண்டு. உதாரணம் ஆட்டோகிராஃப். அந்தப் படம்,
ஓர் இளைஞனின் வாழ்க்கையில் ஒவ்வொரு பருவத்திலும் நடந்த சம்பவங்களில் ஒரு பகுதியை மட்டும் காட்டிய படம் என்பதால் பள்ளிப் பருவ நினைவுகள் ஒரு கட்டத்துக்கு மேல் நகராமல் அப்படியே வேறொரு பருவத்துக்கு தாவி விடும்.

taare_zameen_par_posterஆனால் சமீபத்தில் நான் பார்த்த Tare Zameen Par என்ற இந்திப் படம் நிச்சயம் நமது ஆழ்மனதில் இருக்கின்ற பழைய ஞாபகத் தந்திகளை மீட்டிச் செல்லும். அதிலும் நம்முடைய ஆசிரியர்களுடனான நமது உறவு குறித்த நினைவுகளையும் கண்முன் நிறுத்தும் என்பது நிச்சயம்.

இஷான் என்ற எட்டு வயது மாணவனுக்கு படிப்பென்றாலே ஆகாது. பள்ளிக்கூடம் செல்வதையே வெறுக்கிறான். பாடத்தில் கவனம் செலுத்த முடியாததால் அனைத்து பாடங்களிலும் குறைவான மதிப்பெண்களே அவனுக்குக் கிடைக்கிறது. தூண்டுகோலாக இருந்து உதவி செய்ய வேண்டிய ஆசிரியர்களே அவனை உருப்படாத மாணவன் என்று சொல்கிறார்கள். சக மாணவர்கள் மத்தியில் நிற்க வைத்து அவமானப்படுத்தும் ஆசிரியர்களை அவன் வெறுக்கிறான். இதற்கிடையில் இஷானின் தனிப்பட்ட உலகமோ மிகவும் பரந்து விரிந்தது. விதவிதமான வர்ணங்கள் மற்றும் பிராணிகள் நிறைந்த குழந்தைப் பருவத்திற்கே உரிய மேஜிக் உலகம் அவனது. அதில்தான் அவன் நிறைவாய் வாழ்கிறான்.

பள்ளியில்தான் அவனுக்கு பிரச்னை என்றால் வீட்டிலும் அவனைப் புரிந்துக் கொள்ளும் மனிதர்கள் இல்லை. வேலை-வேலை என்று ஓடும் அப்பா.. வீட்டு வேலையில் இருந்து எல்லாவற்றையும் தனியொரு பெண்ணாக சமாளிக்கும் அம்மா… அதில் ஆறுதலாய் இருப்பது அண்ணன் மட்டுமே… அவனும் படிப்பு, விளையாட்டு என்று முதல்தர மாணவனாக இருக்கிறான். அதனால் இஷான் செய்யும் சின்ன-சின்ன குறும்புகள் கூட பெரிய பிரச்னையாகிறது, அல்லது பிரச்னையாக்கப்படுகிறது.  ஒரு நாள் பள்ளி பள்ளிக்கு மட்டம் போடும் இஷான் தன் மனம் போன போக்கில் தெருவெல்லாம் அழைந்து திரிந்து விட்டு வீட்டிற்கு வருகிறான். இஷான் பள்ளிக்கு மட்டம் போட்டதைக் கண்டிக்கும் அவனது பெற்றோர்கள் அவனை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்ப முடிவெடுக்கின்றனர். அங்கேயாவது அவன் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டு நல்ல முறையில் படிப்பான் என்று நம்புகின்றனர்.

ஆனால், அங்கே சேர்க்கப்பட்டது முதல், நன்றாக படிக்கும் மற்ற மாணவர்களுடன் கல்வியில் போட்டி போட வேண்டிய சூழலும், குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் தனிமையுணர்வும் அவனை பாதிக்கிறது. அதனால் மற்றவர்களிடம் அந்நியப்பட்டு வாழவே அவன் விரும்புகிறான். அவனது இந்த திடீர் மாற்றம் கல்வியில் மேலும் அவனை பின்தங்க வைக்கிறது. அங்கேயும் மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் இஷான் ஆளாகிறான்.

அப்போதுதான் ராம் ஷங்கர் நிகும்ஃப் என்ற இளம் ஆசிரியர்  இஷான் படிக்கும் பள்ளிக்கு ஓவிய ஆசிரியராTare Zameen 1க வந்து சேர்க்கிறார். நட்பான, ஆதரவான இவரது அணுகுமுறை ஆசிரியர் என்ற பயத்தைப் போக்கி மாணவர்கள் மத்தியில் நல்ல நண்பர் என்ற உணர்வை உண்டாக்குகிறது. ஒருநாள் வகுப்பிற்கு பாடம் நடத்தும் இவர்  எல்லா மாணவர்களையும் ஓவியம் வரையச் சொல்கிறார்.
ஆனால் இஷான்  மட்டும் தனக்கு வழங்கப்பட்ட தாளில் எதையும் வரையாமல் அப்படியே காலியாக விட்டுச் செல்கிறான். இஷானின் நடவடிக்கையை கவனிக்கும் நிகும்ஃப், அவன் ஏதோ பிரச்னையில்
இருப்பதை உணர்கிறார்.

இஷானின் பழைய புத்தகங்களை திருப்பிப் பார்க்கும் நிகும்ஃப், அவன் Dyslexia எனப்படும் ‘புரிந்து படிக்கும் இயலாமை’யில் திண்டாடுவதை புரிந்துக் கொள்கிறார். அதே சமயத்தில் அவனுள் புதிந்து கிடக்கும் ஓவியத் திறமை கண்டும் திகைத்துப் போகிறார்.  அதனை உறுதி செய்துக் கொள்ள அவன் வீட்டிற்கும் போகிறார். இஷானது பெற்றோரிடம் அவன் திறமையான மாணவன்தான் என்றும் அவனை புரிந்துக் கொண்டு உதவி செய்தால் அவனும் மற்ற மாணவர்கள் போல் கல்வியில் பிரகாசிப்பான் என்றும் நிகும்ஃப் கூறுகிறார். மேலும் Dyslexia – ஆல் அவதியுறுவதால் அவன் திறமையான மாணவன் இல்லையென்று கருதிவிடக் கூடாது என்று சொல்கிறார். 

இஷானின் பெற்றோரிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்காததைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வரிடம் பேசும் நிகும்ஃப்,  தனக்கு அவகாசமும் வாய்ப்பும் கொடுத்தால் இஷானை சிறந்த மாணவனாக்கி காட்டுகிறேன் என்று கூறுகிறார்.  நிகும்ஃப்பின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் முதல்வர் அதற்கு சம்மதிக்கிறார்.

இஷானுக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு வகுப்பு நடத்தும்taare-zameen-par 2 நிகும்ஃப், அவனது பலவீனத்தைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் பாடம் நடத்தி அவனையும் சிறந்த மாணவர்கள் வரிசையில் இடம்பெற வைக்கிறார். அதே சமயத்தில் நிகும்ஃப் ஏற்பாட்டில் பள்ளியில் நடக்கும் ஓர் ஓவியப் போட்டியில் தனது ஆசிரியர் நிகும்ஃப்பையே பின்னுக்குத் தள்ளி முதல் பரிசை வெல்கிறான் இஷான் . இலைமறைவில் இருந்த ஒரு நட்சத்திரத்தின் திறமையை அப்போதுதான் அந்த பள்ளியே புரிந்துக் கொள்கிறது.

உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடிய மிக நுட்பமான கதையை இயக்கி அதில் நிகும்ஃப் பாத்திரம ஏற்று நடித்திருப்பவர் அமீர்கான். அவருடைய பாத்திரத்தை கன கச்சிதமாக செய்திருக்கிறார். படத்தில் அசர வைத்தது 8 வயது சிறுவன் இஷானாக நடித்திருக்கும் டர்ஷில் ஷஃபாரிதான்.

தன்னை எல்லாரும் திட்டுகின்ற ஆத்திரம், தனிமையின் தவிப்பு, அதனால் உருவாகும் வெறுப்பு, தன்னை புரிந்து கொண்ட மனிதனை சுற்றி வரும் குழந்தை மனம், பலபேர் முன்னிலைக்கு வரத் தயங்கும் தடுமாற்றம், நடிப்பில் அமீர்கானை சர்வ சாதாரணமான பின்னுக்குத் தள்ளியிருக்கிறான் டர்ஷில் ஷஃபாரி. 

படத்தில் இறுதிக் காட்சியில் வருகின்ற ஓவியப் போட்டியில் ஒட்டுமொத்தப் பள்ளியும் ஓவியம் வரைவதில் மூழ்கிக் கிடக்க, தன்னுடைய மாணவனை காணவில்லையே என்று நிகும்ஃப்  பரிதவிப்பதும்… அவன் வந்ததும் ஓடிச் சென்று அவனது கையில் ஒரு தாளை கொடுத்து ஓவியம் வரைய அனுப்புவதும் ஓர் ஆசிரியருக்கே உரித்தான குணங்கள்.

இறுதியில் தான் வரைந்ததை ஆசிரியரிடம் கொடுத்து விட்டு, தன் ஆசிரியர் என்ன வரைந்திருக்கிறார் என்று எட்டிப் பார்க்கும் இஷான் அவர் வரைந்த படத்தைப் பார்த்து விட்டு கண்கலங்குவது கவிதை… ஏனெனில் அவன் ஆசிரியர் வரைந்த ஓவியம் இதுதான்……

tzp 3

2007ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம், உலகளாவிய ரீதியில் பலரது பாராட்டைப் பெற்றதோடு நல்ல வசூலையும் கண்டது. 2008 ஆம் ஆண்டுக்கான பிலிம்ஃபேர் விருதையும் இப்படம் வென்றுள்ளது. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

***ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உறவை சொற்களுக்குள் அடக்கி விட முடியாது. அது எல்லையில்லாதது. படத்தைப் பார்த்து முடித்ததும் ஆரம்ப பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு ஆசிரியர்களாக இருந்த ஒவ்வொருவரும் நினைவில் வந்து போனார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் பற்றி இன்னொரு பத்தியில் சொல்கிறேன்…

ஆப்பிள் கொடுத்த நிலா

sp13

உறக்கம் கலையாமல் பனி போர்த்தியபடி துயில் கொண்டிருக்கும் கெந்திங் மலை குளிரில், நிலா உங்கள் அருகில் அமர்ந்து ஆப்பிள் வெட்டிக் கொடுத்தால் எப்படி இருக்கும்? சில்லென்று சிலிர்க்க வைத்து உபசரித்த நிலா யார் தெரியுமா? “பாடும் நிலா” எஸ்.பி பாலா.

அந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, நயனம் ஆசிரியர் ஆதி இராஜகுமாரன் என்னை அழைத்தார். (அப்போது நான் நயனம் வார இதழ் நிருபர்) “பரத்வாஜ் இன்னிசை இரவில் பாடவிருக்கும் எஸ்.பி பாலாவோடு ஒரு நேரடி தொலைபேசி பேட்டியை ஆஸ்ட்ரோ வானவில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு சென்று வாருங்கள்” என்றார். கையில் கிடைத்த ஒரு தாளை உருவி சடசடவென்று மனதில் தோன்றிய கேள்விகளை எழுதி எடுத்துக் கொண்டு போனேன்.

ஆங்கிலம், தமிழ் என்று இரு மொழிகளில் அந்த பேட்டி நடந்தது. முதலில் நடந்த ஆங்கில மொழி பேட்டி முழுசாய் 40 நிமிடங்களை முழுங்கியிருந்தாலும், நேரமாகிறது கொஞ்சம் சீக்கிரம் முடித்துக் கொள்ளுங்கள் என்று காதைக் கடிக்காமல் “ரொம்ப நேரம் காத்திருக்கீங்க இல்லையா?” என்று சிரித்தபடியே என்னையும் ‘தமிழ் நேசன்’ நாளிதழின் நிருபரையும் பேட்டி அறைக்கு அழைத்துச் சென்றார் வானவில் தலைவர் டாக்டர் ராஜாமணி. பேட்டி ஆரம்பித்தது.

தொலைக்காட்சி வானொலியில் மட்டுமே பாத்துக் கேட்டு மயங்கிய குரலுக்கு சொந்தக்காரர் காதோடு வணக்கம் சொன்னார். மின்சார கம்பியில் கை வைக்காமலேயே ஓர் அதிர்வு உடலெங்கும் பரவி ஓடியது. தொடர்ந்து 25 நிமிடங்களுக்கு கேள்வி – பதில் மட்டும்தான். இளையராஜாவுடனான நட்பு, ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடிய அனுபவம் என்று பலதரபட்ட விஷயங்களை ஜாலியாய் பகிந்து கொண்டார் எஸ்.பி.பி. அந்த பேட்டி அந்த வார நயனத்தில் வெளிவந்தது.

6ஆம் ஆண்டு விழாவுக்காக பரத்வாஜ் இன்னிசை இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்ல ஆஸ்ட்ரோ வானவில் பஸ் ஏற்பாடு செய்திருந்தது. டாக்டர் ராஜாமணியும் எங்களுடனே வந்தார்.

பாடகர் உன்னி கிருஷ்ணன், பாடகி அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கே வந்து எங்களுடன் பேசிவிட்டு போனார்கள். அவர்கள் போன பிறகு பாடும் நிலாவை தன்னோடு அழைத்துக் கொண்டு வந்தார் டாக்டர் ராஜாமணி. 

நேராக நான் அமர்ந்திருந்த மேசைக்கு வந்தவர், எஸ்.பி.பியை அங்கேயே அமரும்படி கேட்டுக் கொண்டார். டாக்டர் ராஜாமணியும் எங்களுடனே அமர்ந்துக் கொண்டார். தொலைபேசி பேட்டியைக் குறிப்பிட்டு இவர்தான் உங்களை அன்று பேட்டி எடுத்தவர் என்று எஸ்.பி.பிக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

என்னைப் பார்த்து மென்மையாய் சிரித்த எஸ்.பி.பி என் பக்கத்தில் அமர்ந்தார். பல்லாயிரக்கணக்கான இதயங்களை தன் குரலால் வசியம் செய்த ஒரு சரித்திரம் ‘நலமா இருங்கீங்களா?’ என்று என்னிடம் கேட்டுவிட்டு புன்னகைத்தது. உடன் வந்திருந்த தமது துணைவியாரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

எங்களுடனே அமர்ந்து சாப்பிட்ட எஸ்.பி.பி இடையிடையே எங்களிடம் மலேசியா பற்றி நிறைய கேட்டார். நான் , மக்கள் ஓசை (அப்போது வார பத்திரிகை) துணையாசிரியர் சின்னராசு மற்றும் டாக்டர் ராஜாமணி  அவருக்கு பதிலளித்துக் கொண்டிருந்தோம். எஸ்.பி.பி பேசினாலே பாடுவது போலதான் இருக்கிறது. கேட்டுக் கொண்டே இருக்கலாம். மென்மையான, பண்பான வார்தைகள். சாப்பிட்டு முடிந்ததும் துணைவியார் ஆப்பிள் பழங்களை எடுத்து தர, அதை தன் கையாலே வெட்டி  எங்களுக்குத் தந்தார். 

எஸ்.பி.பியைப் பார்க்க ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள் அங்கே வந்திருந்தனர்.  அவர்களை நோக்கி தன் துணைவியாரோடு  சென்ற அவர், ஒவ்வொரு குழந்தையாக பார்த்து பேசினார். அதோடு ஒவ்வொரு குழந்தைக்கும் தன் கையாலேயே பழங்களையும் வெட்டி கொடுத்தார்.  இந்த உபசரிப்பு கண்ட அத்தனை குழந்தைகள் முகத்திலும் எல்லையில்லா மகிழ்ச்சி.

எஸ்.பி.பி அடைந்திருக்கும் இந்த உயர்வுக்கு அவர் சொல்வது போல ஆண்டவன் அனுக்கிரகம் மட்டுமா காரணம் என்று நினைக்கிறீர்கள்? அவரது மனதும், பணிவும் கூட காரணமாக இருக்கும்.

அன்று நடந்த இன்னிசை இரவு பற்றிய நானெழுதிய
முழுமையான கட்டுரை பின்னர் நயனத்தில் ‘பனிமலையில் ஓர் இசைமழை” என்ற தலைப்பில் வெளிவந்தது.

(ஜூன் 4ஆம் தேதி எஸ்.பி பாலாவின் பிறந்தநாள். அதற்காக எழுதியது.)