Monthly Archives: ஓகஸ்ட் 2010

தானே வைச்சுக்கிட்ட சூனியம்!!!

இன்றைய ‘தி ஸ்டார்’ தினசரியில் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஒரு செய்தி வந்திருந்தது. இப்போது நம் நாட்டில் பலரது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் ‘சம்மன் ஏக்கோர்” விவகாரம் தொடர்பில் மசீச பொதுச்சேவை மற்றும் புகார் பிரிவு தலைவர் டத்தோ மைக்கல் சோங்கை சந்திக்கச் சென்ற 60 வயதுடைய தம்பதிகள் தாங்கள் செல்லாத ஒரு இடத்தில் சாலை விதிகளை மீறி இருப்பதாக தங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனவும், இதற்கு டத்தோ மைக்கல் சோங்  உதவி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அவரும் விவகாரத்தை முழுமையாக கேட்டு விட்டு, குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. போலீஸ் சொல்கின்ற அந்த குற்றத்தை நீங்கள் செய்யவில்லை என்பதை காட்டும் போட்டோவை போலீசாரிடமே கேட்டு வாங்கி சம்பந்தப்பட்ட நபர் நீங்கள் இல்லை என்று உறுதிப்படுத்துவதுதான் சரியாகும் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். சம்பந்தப்பட்ட கணவரோ இந்த ஆலோசனைக்கு சம்மதிக்க மறுத்திருக்கிறார்.

இருந்தாலும் மனைவி விடுவதாக இல்லை. கண்டிப்பாக இந்த தப்பை நாங்கள் செய்திருக்க வாய்ப்பே இல்லை. எங்கு சென்றாலும் நாங்கள் இருவரும் ஒன்றாகவே சென்றுள்ளோம். காராக் நெடுஞ்சாலை பக்கம் நாங்கள் போனதே இல்லை. எங்கள் வீட்டை விட்டும் நீண்ட தூரம் நாங்கள் எங்கும் போனதேயில்லை என்று உறுதியாக கூறியிருக்கிறார். ஆகவே இதைக் கொஞ்சம் விசாரித்து தாருங்கள் என்று போலீசாரிடமிருந்து போட்டோவைப் பெறுவதற்கான கட்டணமான பத்து வெள்ளியை செலுத்தியிருக்கிறார்.

இரண்டு வாரம் கழித்து மீண்டும் தன்னை வந்து சந்திக்குமாறு சொல்லியிருந்த டத்தோ மைக்கல் சோங், போட்டோ கிடைத்த பின்பு அவர்களை அழைத்திருக்கிறார். வந்தும் வராததுமாக அந்தக் கணவர் போட்டோ இருந்த கவரை வாங்கிக் கொண்டதோடு, அதைப் பிரித்துக் கூட பார்க்காமல் இந்தப் படத்தை வீட்டில் வைத்து பிரித்துப் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் நேரத்தை நாங்கள் வீணாக செலவழிக்க விரும்பவில்லை என்று பெருந்தன்மையோடு சொல்லியிருக்கிறார்.

ஆனால் மனைவி விடாப்பிடியாக, இங்கேயே போட்டோவை பிரித்துப் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார். மனைவியின் பிடிவாதம் காரணமாக ஒன்றும் செய்ய முடியாத கணவர், போட்டோவை வெளியே எடுக்க, அதில் கணவர் இன்னொரு பெண்ணோடு காரில் இருக்கும் படம் இருந்திருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி டத்தோ முன்பாகவே கணவரை குடையால் விளாசியிருக்கிறார்.

புதிரான இந்த கதையின் க்ளைமேக்ஸ் பரபரப்பாக இருக்குமென டத்தோ எதிர்பார்த்தாரோ என்னவோ தெரியவில்லை ஆனால் இதை அப்படியே காமெடி காட்சியாக்கி விதி சிரிக்க, அதிர்ந்து போன டத்தோ மைக்கல் இருவரையும் சமாதானப்படுத்தியதோடு கணவரை தன் அறையிலிருந்து வெளியேறும்படியும் பணித்திருக்கிறார். மனைவியை ஆறுதல் கூறி அனுப்பி வைத்திருந்தாலும்  அதற்குப் பிறகு அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.

சம்மன் ஏக்கோர் எது எதுக்கெல்லாம் உதவுது பார்த்தீங்களா?

இதைதான் “தானே வைச்சுக்கிட்ட சூனியம்’னு சொல்லுவாங்களோ?