Monthly Archives: மார்ச் 2011

இதுவும் ஒரு காதல் கதை…

காதல்
சிலருக்கு வாய்ப்பு
சிலருக்கு யோகம்

உன்னிடம்
நான் பேச
அவள் சிரித்தாள்

அவள் நிமிர
நான் குனிந்தேன்

ஓவியப் போட்டியில்
உன்னை நான்
வரைந்தேன்
பரிசு மட்டும்
அவளுக்குப் போனது…

உனக்கு ராமன் பிடிக்கும்
எனக்கு சீதை பிடிக்கும்
அவளுக்கோ ராவணன் பிடிக்கும்
அதனால் உனக்கு
அவளை ரொம்பவே பிடிக்கும்!

நான் நீலம் என்பேன்
நீ வெண்மை என்பாய்
அவள் சிவப்பு என்பாள்
கடைசியில் அது இளஞ்சிவப்பாகும்!

இருவரின் தேநீர் கோப்பையில்
அவள் கோப்பையை மட்டும்
தனியாக பிரித்தெடுக்க
தெரிந்தவன் நீ மட்டும்தான்!

ஹெச்2ஓ தொடங்கி ஹெச்ஜவி வரை
பேசத் தெரிந்தவன் நீ
நீ பேசும் அழகை
ரசிக்க கற்றவர்கள் நாங்கள்…

ஓர் அந்தி மழை
பொழுதில்
அவள் காதோடு நீ சொன்ன
“ஐ லவ் யூ”
என் காது மடலையும்
தழுவிப் போனது

தெரிந்தே போட்டியிட
நானொன்றும் முட்டாளில்லை
வாழ்த்தக் கற்றுக் கொண்ட
நடுத்தர வர்க்கம்!

கல்லூரி காலம் முடிந்து
சிறகு முளைத்த பறவைகளாய்…
திசை மாறி பறக்கத் தொடங்கினோம்…

வருடங்கள் இருபத்தைந்து
நேற்றோடு முடிந்தது.

முன்தினம் உன்னை
பார்த்த போது
நிறைய மாறிப் போயிருந்தாய்…

எங்களது
பழைய “அவன்”
அல்ல நீ..

இல்லாவிட்டால்
காதலித்தவளின் மகளையே…
உன் மகனுக்கு பெண் கேட்டு
வந்திருப்பாயா?