Monthly Archives: நவம்பர் 2009

BLOW (2001)

blowScarface, Goodfellas போன்ற படங்களின் வரிசையில் அமெரிக்க நாட்டின் போதைப் பொருள் கடத்தல் மன்னர்களில் ஒருவனாக விளங்கிய George Jung பற்றிய படம்தான் Blow. George Jung மற்றும் அவனுடைய சகாக்களான Pablo Escober, Carlo Lehder போன்றோரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியவர் Ted Demme. (இந்தப் படமே அவருடைய கடைசிப் படமாகும்)

சிறு வயதிலேயே தந்தை திவாலாகி, தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து விடுவதைப் பார்த்து வளரும் George Jung வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்ற லட்சியத்துடனே வளர்கிறான்.

பருவ வயதில் தன் நண்பன் Tunaவுடன் சௌதர்ன் கலிஃப்போர்னியா பகுதிக்கு குடிபெயரும் George, தன் காதலி Barbara Buckley (Franka Potente)  உதவியுடன் Derek Foreal என்ற கடத்தல் மன்னனை  சந்திக்கிறான். Derek உதவியுடன் போதைப் பொருள் விற்பனை செய்வதை தொடங்கும் George, குறுகிய காலத்திலேயே நிறைய சம்பாதித்து விடுகிறான். இதற்கிடையில் Georgeஉடன் கல்லூரியில் படித்த நண்பனொருவன் போஸ்டன் நகரில் போதைப் பொருள் விற்பனைக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறவும், ஒரு விமானப் பணிப்பெண் உதவியுடன் போஸ்டன் நகருக்கு போதைப் பொருளைக் கடத்தத் தொடங்குகிறான் George.

போதைப் பொருளுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்வதை கவனிக்கும் George, நிறைய சம்பாதிக்கும் நோக்கத்தில் நேரடியாக மெக்சிகோ நாட்டிலிருந்தே போதைப் பொருளை இறக்குமதி செய்ய திட்டமிடுகிறான். அதற்கு மெக்சிகோ நாட்டு போதைப் பொருள் கடத்தல்காரர்களும் உதவி செய்கிறார்கள். தொடர்ந்து சிக்காகோ நகரில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தும் George, 660 பவுண்ட் போதைப் பொருளுடன் காவல் துறையிடம் சிக்கிக் கொள்கிறான். அதற்காக அவனுக்கு 2 வருடம் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனாலும் நோயுற்றிருக்கும் காதலியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஜாமீனில் வெளியாகும் George, அப்படியே தலைமறைவாகிறான்.

தலைமறைவாக இருக்கின்ற காலத்தில் பெற்றோரைப் பார்க்கப் போகின்ற Georgeஜை அவன் தாயாரே காவல் துறையிடம் பிடித்துக் கொடுக்கிறார். தப்பியோடிய குற்றத்திற்காக Georgeக்கு 2 வருடம் 2 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. சிறையில் Diego Delgado என்பவனை சந்திக்கும் George, பரோலில் வெளிவந்தவுடன் கொலம்பியா சென்று Diego உதவியுடன் மீண்டும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகிறான். அங்கேதான் Pablo Escobar என்ற மிகப் பெரிய கடத்தல் மன்னனுடன் Georgeக்கு தொடர்பு ஏற்படுகிறது.

அதன் பிறகு George Jung வாழ்க்கை என்ன ஆனது? சிறுவயதில் விரும்பியது போலவே George பணக்காரனாக வாழ்ந்தானா? என்பதுதான் மீதிக் கதை.  கடத்தல்காரன் George Jungஆக Johnny Depp. ஏமாற்றாமல் Georgeஜாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். மகனாக, காதலனாக, கடத்தல்காரனாக, நண்பனாக, கணவனாக, பாசம் கொண்ட தந்தையாக ஒரே படத்தில் பல பரிணாமங்களை காட்டியிருக்கிறார் Johnny Depp.  கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஓடுகின்ற படத்தில், நமக்கு ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டாது. அவ்வளவு அருமையாக படத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் படத்தின் இயக்குநரான Ted Demme. Georgeஜின் மனைவி Mirthaவாக படத்தின் சில காட்சிகளே வந்தாலும் Penelope Cruz நன்றாக நடித்திருக்கிறார்.

இதற்கு முன்பாக வெளிவந்த Scarface மற்றும் Goodfellas இதே போன்ற கதையோட்டத்தைக் கொண்டிருந்தாலும் அந்தப் படங்களைப் போல இதுவொரு Action படமில்லை. ஒரு மனிதனின் வாழ்க்கையை மிகத் தன்மையாக சொல்கின்ற படம் என்பதால், மற்ற இரு படங்களைப் போல இந்தப் படம் மிகப் பெரிய வசூலைப் பெறவில்லை. ஆனாலும் Johnny Deppப்பின் நடிப்பு மற்றும் Ted Demmeயின் இயக்கம் ஆகியவற்றுக்காக பாராட்டைப் பெற்ற படமிது. பார்க்க வேண்டிய படம்.

BREACH (2007)

breachஉண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் Billy Ray இயக்கிய படம்.அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான நம்பிக்கைத் துரோகத்தை செய்த Robert Hanssen என்ற FBI அதிகாரியை கைது செய்வதற்கு முன்னர் நடந்த சம்பவங்களின் கோர்வைதான் படத்தின் கதை.

Eric O’Neill ஓர் இளம் FBI அதிகாரி. பதவி உயர்வு பெற்று புதிய பிரிவுக்கு மாற்றலாகி வரும் Robert Hanssen என்ற மூத்த அதிகாரியின் கிளர்க்காக நியமிக்கப்படுகிறான். கூடவே அந்த அதிகாரியின் நடவடிக்கையை கண்காணிக்குமாறு உத்தரவும் தரப்படுகிறது. காரணம், அவர் பெண்களிடம் தப்பாக பழகும் ஆசாமி என்று மட்டும் மேலதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் மிகக் கடுமையான அதிகாரியாக நடந்துக் கொள்ளும் Robert Hanssen கொஞ்ச காலத்துக்குப் பிறகு Eric-க்கிடம் மிகவும் நெருங்கிப் பழகத் தொடங்குகிறார். இருவரும் கிட்டத்தட்ட நல்ல நண்பர்கள் என்ற அளவுக்கு நெருங்கி வருகின்றனர். Robert Hanssen தீவிர மத நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். Eric மற்றும் அவனுடைய மனைவி Juliana-வை  கூட ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்தில் நடக்கின்ற பிராத்தனைக் கூட்டங்களில் தன் குடும்பத்தினரோடு இணைந்துக் கொள்ளுபடி அழைப்பு விடுக்கிறார். அதனால் குடும்ப ரீதியாகவும் இருவரும் நெருக்கமாகின்றனர்.

Robet Hanssen-னின் நடவடிக்கைகள் சாதாரண மனிதனைப் போலவே இருப்பதை கவனிக்கும் Eric, தன்னை அவரை  வேவு பார்க்கும் பொறுப்பிலிருந்து விலக்கிக் கொள்ள விரும்புவதாக மேலிடத்துக்கு தெரிவிக்கிறான். அப்போதுதான் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சோவியத் யூனியன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை கொடுக்கின்ற குற்றவாளியென Robert Hanssen சந்தேகிக்கப்படுவது தெரிய வருகிறது. அதோடு FBI இயக்குநரே நேரடியாக இந்த விசாரணையில் ஈடுபட்டிருப்பதை அறிந்துக் கொள்ளும் Eric, அன்று தொடங்கி Robert Hanssen-னின் நடவடிக்கைகளை அணுக்கமாக கண்காணிக்கத் தொடங்குகிறான். இன்னும் இரண்டே மாதத்தில் ஓய்வு பெறப்போகின்ற நிலையில், தன்னைச் சுற்றி FBI ஏதோ மர்ம வலை விரிப்பதையும் Robert Hanssen அறிந்தே இருக்கிறார். Robert Hanssen செய்த தவறுகளுக்கான ஆதாரத்தை திரட்ட Eric எப்படி FBI-க்கு உதவுகிறார் என்பதே மீதிப் படம்.

தவறு செய்த FBI அதிகாரி Robert Hanssen-ஆக Chris Cooper. அவரை கண்காணிக்க நியமிக்கப்படும் இளம் அதிகாரி Eric O’neill-ஆக Ryan Phillippe. இருவருமே படத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் Robert Hanssen அறையில் புகுந்து Eric முக்கிய ஆதாரங்களை தேடும்போதெல்லாம் Robert Hanssen வந்து விடுவதும், உடனே Eric சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து அதை சமாளிப்பதும், தன்னை Eric உளவு பார்ப்பதை உணர முடிந்தாலும் அதை வாய்விட்டு கேட்க முடியாமல் Robert Hanssen தடுமாறுவதும், ஒவ்வொரு முறையும் FBI தன்னைப் பற்றிய விபரங்களை தோண்டும்போது Robert Hanssen அதை உணர்ந்து பதற்றமடைவதும் ரசிக்கத்தக்க காட்சிகள்.

ஒரு FBI அதிகாரி தன்னுடைய குடும்ப வாழ்வில் எதிர்க்கொள்ள வேண்டிய பிரச்னைகள் குறித்தும் படத்தில் காட்டியிருக்கிறார்கள். அதே சமயத்தில், தகுதியில்லாத மனிதனுக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்படும் போது எத்தகைய பின் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கிறது என்பதையும் அறிந்துக் கொள்ள முடிகிறது. எவ்வளவு பெரிய சாணக்கியனாக இருந்தாலும் அவனையும் சட்டத்தின் பிடியில் நிறுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையையும் இந்தப் படம் ஏற்படுத்துகிறது. 2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாகும். பார்க்க வேண்டிய படம்.

BODY OF LIES (2008)

‘யாரையும் நம்பாதீர்கள்! எல்லாரையும் ஏமாற்றுங்கள்!”

body of liesமேலே நீங்கள் படித்தது இந்த படத்தின் டேக்லைன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் படம் முழுக்க அதை நிரூபித்த வண்ணம் இருக்கிறார்கள். தீவிரவாதம் என்றாலே அமெரிக்கா எந்த மதத்தை சுட்டிக்காட்டுகிறதோ அதையே பிரபல இயக்குநரான Ridley Scott  தனது இந்த படத்தில் அழுத்தந்திருத்தமாக பதிவு செய்துள்ளார். அதை பூடகமாக சொல்லும் யுக்தியாக அமெரிக்கர்களின் மனப்போக்கு மற்றும் நடத்தை குறித்து கேள்வியெழுப்பும் வகையில் மேல் பூச்சாக ஒரு கதை, அதுதான் Body Of Lies. இந்தப் படம் கூட படத்தலைப்பிலேயே David Ignatius எழுதிய நாவலின் தழுவல்தான்.

மேற்கத்திய நாடுகள் – இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலேயான அரசியல் பற்றி புரிந்தவர்கள் இந்த படத்தை பார்ப்பது நல்லது. குறைந்தபட்சம் CNN, BBC, CNBC போன்ற தொலைக்காட்சி லென்ஸ் வழியாக மட்டுமே இஸ்லாமிய நாடுகளை பார்க்காமல் தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்ற குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்காமலும் படத்தைப் பார்ப்பது நல்லது.

சரி படத்தின் கதை?

ஒரு CIA உளவாளி. அவனது மேலதிகாரி. ஜோர்டான் GID தலைவர். இவர்கள் மூவரும் மத்திய கிழக்கு பகுதியில் இயங்கி வரும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் நடக்கின்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணமான ஒரு தீவிரவாத கும்பலை பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அந்த வேலையை செய்வதற்கு இவர்களுக்குள்ளேயே நிறைய போட்டி நடக்கிறது. ஒன்றுபட்டு செயலாற்றுவது போல் காட்டிக் கொண்டாலும் ஆளாளுக்கு தனிப்பட்ட பாணி, கருத்து, ஈகோ. அதற்காக ஒருவரையொருவர் தாராளமாக ஏமாற்றிக் கொள்கிறார்கள். இந்த மூவரும் தங்களுடைய கடமையை செய்து முடித்தார்களா? இல்லையா? என்பதுதான் படம்.

சிஜஏ உளவாளி Roger Ferris ஆக Leonardo DiCaprio. தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். படத்தில் இவர் நவீன தகவல் சாதன கருவிகளை விடவும் மனித தொடர்புகளை நம்புகிறவராக இருக்கிறார். அதோடு கொஞ்சம் மனிதாபிமானம் கொண்டவராகவும் காட்டப்படுகிறார். இவருக்கும் படத்தில் தாதியாக வரும் Aisha (Golshifteh Farahani) என்ற பெண்ணுக்கும் ஏற்படுகின்ற காதல் கள்ளிச் செடியில் பூக்கின்ற மலர் மாதிரி பூக்கிறது. வெ வ்வேறு மதம், மொழி, கலாச்சாரம்.. ஆனாலும் 2-3 முறை பார்த்தும் பற்றிக் கொள்கிறது காதல். காதலிக்காக அவள் அக்காவிடம் சம்மதம் கேட்பதும், அவளுடனான பேச்சு வார்த்தை வேறு தளம் நோக்கி நகர்வது கண்டு பொறுமை காப்பதும், தன் மேலதிகாரி செய்கின்ற குறுக்கீடுகளுக்காக மனம் வருந்தினாலும் உயிரை பணயம் வைத்து கடமையைச் செய்வதும், காதலி கடத்தப்பட்ட செய்தி அறிந்து துடிப்பதும்… DiCaprio தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

Ferrisசின் மேலதிகாரி Ed Hoffman ஆக Russell Crowe. படத்தில் இவர் மனித தொடர்புகளை விடவும் நவீன கருவிகள் மற்றும் தகவல் சாதன தொடர்புகள் மீது நம்பிக்கை கொண்டவராக காட்டப்படுகிறார். தன்னுடைய எண்ணம் ஈடேற எதையும் பலிகொடுக்க தயாராக இருக்கும் இவர் செய்யும் காரியத்தால் Ferris – Hani Salaam உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதையொட்டி பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இறுதிக் காட்சியில், மத்திய கிழக்கிலேயே செட்டிலாகி விட விரும்புகிறேன் என்று  ஏஜெண்ட் Ferris சொல்லும்போது “யாருமே மத்திய கிழக்கை விரும்ப மாட்டார்கள். இங்கே விரும்புவதற்கு ஒன்றுமில்லை” என்று சொல்வதே இவர் கேரக்டரை விளக்க போதுமானது.

ஜோர்டான் GID தலைவர் Hani Salaam ஆக Mark Strong . படத்தில் இவர், அமெரிக்கர்களுக்கும் – தீவிரவாதிகளுக்கும் இடைப்பட்ட நபராக வருகிறார். அப்பாவிகள் காப்பாற்றப்பட வேண்டும். தீவிரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஒன்றைக் குறிக்கோளுடன் இவர் படம் முழுக்க செயல்படுகிறார். அமெரிக்கர்களின் குறுக்கு புத்தியை உணர்ந்த இவர் ஆரம்பத்திலேயே Ferris சிடம் ‘என்னிடம் பொய் மட்டும் பேசாதே’ என்று எச்சரித்து வைப்பதும், தன்னுடைய இடத்திலேயே தீவிரவாதிகளின் உளவாளியாக இருந்த Mustapha Karami யை மன்னித்து அவனையே ஜோர்டான் அரசின் நண்பனாக மாற்றி எதிரிகளின் கூடாரத்துக்கு அனுப்பி வைப்பதும் அவர் கேரக்டரை சொல்லி விடும்.

Ferris – தீவிரவாதி Al-Saleem சந்திப்பும், அதன் பிறகு நடக்கின்ற சம்பவங்களும் அதிர வைப்பவை. இது முழு நீள action படமில்லை என்றாலும், மேற்கத்திய நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்குமிடையே நிலவி வரும் போர் மற்றும் வன்முறை பதற்றத்தை இப்படத்தின் வழி உணர முடியும். படம் ‘பார்க்கலாம்’ ரகம்.