Monthly Archives: நவம்பர் 2011

நிழல் உலகின் ராஜா – Lucky Luciano (1897-1962)

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குண்டர் கும்பலில் சேர சொல்லி மாணவர்களை குண்டர் கும்பல் உறுப்பினர்கள் மிரட்டியதாக செய்திகள் வந்தன. அவர்களோடு இணைய மறுத்த மாணவர்களை சிலர் தாக்கியதாகக் கூட செய்திகள் வெளிவந்தன. உண்மையில் குண்டர் கும்பல் தங்களது உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பணத்தைக் கொண்டே இயங்கி வருகின்றன. பல எண்களை தங்களது அடையாளமாக கொண்டு செயல்படும் இதுபோன்ற குண்டர் கும்பல் அந்த எண்களுக்கு தொடர்புடைய தொகையை தங்களது சந்தாவாக வசூலித்துக் கொள்கின்றன. இது தவிர பாதுகாப்பு தருவதாகக் கூறி கடை, உணவகம் உள்ளிட்ட சில வர்த்தக மையங்களிலும் அவர்கள் பணம் வசூலித்துக் கொள்கிறார்கள்.

சட்டத்தை மதிக்கின்ற சிலர், இவர்களது பேரத்திற்கு பணியாத பட்சத்தில் அவர்களது வர்த்தகம் பல பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறது. போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் யார் மீதும் போலீஸ் புகார் கொடுக்க முடியாமல் பல வர்த்தகர்கள் இவர்களது பேரத்திற்கு பணிந்து கப்பம் கட்டுகிறார்கள். இப்படி கிடைக்கின்ற பணத்தை வட்டிக்கு கொடுத்து பணம் சம்பாதிப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. நிழல் உலகில் பல ஆயிரங்களை இப்படி சம்பாதிக்கின்ற குண்டர் கும்பலின் தலைவர்கள் பணத்திற்கு அடிமையாகிற சில அரசியல்வாதிகளையும் உயரதிகாரிகளையும் தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொண்டு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள்.

இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். அதனால் யாரும் இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நமக்கு தொல்லைக்கு தராத வரை பிரச்னையில்லை என்றே எல்லாரும் கருதுகிறார்கள். குண்டர் கும்பலின் உருட்டல் மிரட்டலுக்கு பயந்து பலர் மௌனியாக இருந்து விடுகிறார்கள். இது போன்ற கும்பலின் தலைவராக திகழ்பவர் தங்களது உடல் பலத்தை அட்டைப்போல் உறிஞ்சு சொகுசு வாழ்க்கை நடத்துகிறார் என அதன் உறுப்பினர்கள் உணருவதே இல்லை. நம்மோடு 10-15 அடியாட்கள் இருந்தால் போதும் என்ற திருப்தி குண்டர் கும்பல் உறுப்பினர்களிடம் விரவிக் கிடக்கிறது.

குண்டர் கும்பல் உறுப்பினர்கள் யாராவது ஏதாவது பிரச்னையில் சிக்கி சிறை செல்ல நேர்ந்தால் அவர்களை சிறையிலிருந்து விடுவிக்கவும் அல்லது வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல கொடுக்கவும் மிரட்டி வசூலிக்கப்படுகின்ற பணம் செலவழிக்கப்படுகிறது. இதனால் நாமொரு பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறோம் என குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கருதுகிறார்கள். இந்த தைரியத்தில்தான் பல பேர் அமர்ந்திருக்கின்ற உணவகத்தில் நுழைந்து சக மனிதனை வெட்டிக் கொல்லும் தைரியத்தை குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கொண்டிருக்கிறார்கள்.

எதற்கும் ஆரம்பம் என்ற ஒன்று இருந்திருக்க வேண்டுமல்லவா? இப்படியொரு ஒழுங்கு செய்யப்பட்ட குண்டர் கும்பல் கட்டமைப்பு விதிகளை உருவாக்கிய மனிதன் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு கும்பலை உருவாக்கி அவர்களிடமிருந்து பணத்தை வசூலித்து அதை சட்டத்தின் பிடியிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் இந்த கும்பலை உருவாக்குவதன் வழி தனியொரு வட்டி நிறுவனத்தை நடத்துவது போல நடத்தி பணம் சம்பாதிக்க முடியும் எனவும் அன்றே யோசித்து செயல்படுத்திய மாஸ்டர் மைண்ட் மனிதனின் பெயர் Lucky Luciano.

அமெரிக்க வரலாற்றில் ஒழுங்கு செய்யப்பட்ட நவீன குற்ற விதிகளின் தந்தை என இவனை அழைக்கிறார்கள். டைம் இதழ் கூட இவனை இருபதாம் நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த டான் (கொடுங்குற்றம் புரியும் கூட்டத்தின் தலைவன்) என குறிப்பிட்டுள்ளது.

1897ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி இத்தாலி, Sicily மாநிலத்தில் Antonio – Rosalia Lucania தம்பதியருக்கு நான்காவது பிள்ளையாக பிறந்த Charlie  ‘Lucky’ Luciano தனது குடும்பத்தோடு பத்து வயதில் அமெரிக்க நாட்டில் அமைந்துள்ள நியூயார்க் நகரின் Lower East Side நகருக்கு குடிபெயர்ந்தான். நிழல் உலகின் இருப்பிடமான திகழ்ந்த அந்த நகர், Lucky Luciano வையும் அதே பாதைக்கு இழுத்துச் சென்றதில் வியப்பொன்றும் இல்லை.

அந்த ஏரியாவில் பிரபலமாக திகழ்ந்த Jo Masseria என்ற குண்டர் கும்பல் தலைவனின் கீழ் Lucky Luciano செயல்படத் தொடங்கினான். Masseria யூத இளைஞர்களின் செல்வ வளத்தை பெருக்குவதில் மட்டும் ஆர்வம் காட்டியது Lucky Luciano விற்கு பிடிக்கவில்லை. யூத இளைஞர்களோடு இத்தாலிய இளைஞர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் நல்ல வருமானத்தையும் ஆள் பலத்தையும் மிக விரைவில் சம்பாதிக்க முடியுமென அவன் நம்பினான். தனது தலைவனைப் போல பாரம்பரிய குண்டர் கும்பல் விதிகளையும் நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் புதிய வழியில் ஒரு குண்டர் கும்பலை உருவாக்கி வழிநடத்த விரும்பினான்.

மிக ரகசியமாக யூத இளைஞர்களை கொண்ட குண்டர் கும்பலை உருவாக்கிய Lucky Luciano, மற்ற குண்டர் கும்பல்களை போல் வழிப்பறி, பிக்பாக்கெட், திருட்டு போன்ற சாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தனது குழுவின் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் வாரத்திற்கு ஆளுக்கு பத்து சென் வீதம் வசூலித்தான். அதோடு வணிகர்களையும் பணக்காரர்களையும் மிரட்டி பாதுகாப்பு பணம் வசூலிப்பதையும் போதைப் பொருளைக் கடத்தி பணம் சம்பாதிப்பதையும் தனது கும்பலின் நடவடிக்கையாக வரையறுத்துக் கொண்டான். அப்படி திரட்டிய பணத்தில் சிறிய அளவிலான தொகை வட்டிக்கு கொடுத்து அதன் மூலமும் லாபம் பார்க்கத் தொடங்கினான்.

1919ஆம் ஆண்டு அமெரிக்காவில் மதுபான தடை அமலில் இருந்த சமயம், மதுபானத்திற்கு மக்களிடையே இருந்த வரவேற்பை புரிந்துக் கொண்ட Lucky Luciano அதனை கள்ளத்தனமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யத் தொடங்கினான். இது அவனது கும்பலுக்கு மேலும் பண பலத்தை சேர்த்தது. Meyer Lansky என்ற இன்னொரு யூத குண்டர் கும்பல் தலைவனுடன் ஏற்பட்ட நட்பு இதற்கு உதவியாக அமைந்தது. (இந்த மதுபானத் தடை 1933ஆம் ஆண்டு மீட்டுக் கொள்ளப்பட்டது)

தனது வர்த்தக எல்லையை மேலும் விரிவுபடுத்தி அதிக லாபம் பார்க்க நினைத்த Lucky Luciano இத்தாலிய குண்டர் கும்பல்களை தன்னோடு இணைத்துக் கொண்டான். இந்த ஒருங்கிணைப்பின் மூலம் அரசியல் மற்றும் சட்ட பாதுகாப்பிற்காக செலவிட்ட தொகையை அவர்களால் பெருமளவு மிச்சப்படுத்த முடிந்தது. 1921ஆம் ஆண்டு மேலும் சில முக்கிய குண்டர் கும்பல் தலைவர்களின் நட்பு Lucky Luciano விற்கு கிடைத்தது. இதனால் 1925ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 12 மில்லியன் வருமானம் பெரும் நிலைக்கு அவன் உயர்ந்தான். விஸ்கி, ரம் போன்ற மதுபான விற்பனை மற்றும் பணத்தை வட்டிக்கு விடுவதை தவிர்த்து சூதாட்டத்திலும் ஈடுபடத் தொடங்கினான் Lucky Luciano.

இதற்கிடையில் Luciano வின் தலைவர் Masseria வுக்கு அவன் திரை மறைவில் செய்து வரும் காரியங்கள் தெரிய வந்தது. இதனால் இருவருக்கும் பிரச்னை வலுக்க ஆரம்பித்தது. அது குறித்து பேசி சமரசம் செய்துக் கொள்வதற்காக 1931ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி உணவகம் ஒன்றில் Masseria வும் Luciano வும் சந்தித்தனர். புறப்படும் சமயம் கழிவறை செல்வதாகக் கூறி Luciano அங்கிருந்து எழுந்து சென்ற வேளையில், திடீரென அந்த உணவகத்தில் நுழைந்த நால்வர் Masseriaவை  சுட்டுக் கொன்றனர். (சில காலத்திற்கு பின்னர் Luciano வின் உத்தரவின் பேரிலேயே அவரது கையாட்கள் அந்த கொலையைச் செய்ததாக கூறப்பட்டது)

Masseria வின் மறைவுக்குப் பின்னர் அவனது கீழ் செயல்பட்ட குண்டர் கும்பல் அனைத்து Luciano வின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. ஆரம்ப காலந்தொட்டு Masseria வின் பகைவனாக கருதப்பட்ட Salvatore Maranzano, தனது எதிரியின் மறைவையொட்டி Luciano வோடு இணைந்து செயல்பட சம்மதம் தெரிவித்தான். இதன் வழி அனைத்து குண்டர் கும்பலையும் ஒருங்கிணைந்த பெருமை Luciano விற்கு கிட்டியது.

யாரும் எதையும் செய்துக் கொள்ளலாம். யாருடைய விவகாரத்திலும் யாரும் தலையிட மாட்டார்கள் என அவர்களுக்குள்ளாக பேசி வைத்துக் கொண்டனர். ‘Omerta’ என்றழைக்கப்படும் குண்டர் கும்பலின் சத்திய பிரமாணப்படி அனைவரும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக உறுதி எடுத்துக் கொண்டனர்.

Luciano விற்கு இந்த ‘Omerta’ எல்லாம் பழங்கதையாக தோன்றினாலும் Lansky யின் வற்புறுத்தலால் அதனை ஏற்றுக் கொண்டான். ‘Omerta’ என்ற சத்தியப் பிரமாணம் செய்யும் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அடைய நேர்ந்தாலும் உண்மையான குற்றவாளிகளை காட்டிக் கொடுக்க மாட்டார்கள். அப்படி காட்டிக் கொடுப்பது மிகப் பெரிய துரோகமாக கருதப்பட்டு காட்டிக் கொடுதவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. குண்டர் கும்பலில் பல இளைஞர்கள் விரும்பமுடன் இணைய இது போன்ற கட்டுப்பாடுகள் பெரிதும் துணை நின்றன.

மெல்ல மெல்ல அமெரிக்காவின் நிழல் உலகை தன் கைப்பிடிக்கு கொண்டு வந்த Luciano அனைத்து குண்டர் கும்பல் தலைவர்களுக்கும் தலைவனாக மதிக்கப்பட்டான். Luciano வின் இந்த அசுர வளர்ச்சியைக் கட்டுப்படுத்த Thomas E. Dewy என்ற சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். முதலில் விபசார விடுதி ஒன்றில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட Thomas, அங்கிருந்து கிடைத்த சாட்சியங்களைக் கொண்டு Luciano வை மடக்கினார்.

1936ஆம் வருடம் விபசார வழக்கின் கீழ் Luciano விற்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. Clinton Correctional Facility  சிறையில் அடைக்கப்பட்ட Luciano சிறையிலிருந்தபடியே தனது இயக்கங்களை வழிநடத்தினான். பின்னர் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி சிறைக்குள்ளாகவே ஒரு தேவாலயத்தை எழுப்பினான்.

இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில், அமெரிக்க அரசாங்கம் Luciano வோடு ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்துக் கொண்டது. அதன்படி இத்தாலி நாட்டிலிருந்த Luciano வின் நண்பர்கள் இத்தாலி நாட்டின் ராணுவ ரகசியங்களை அமெரிக்க ராணுவத்திற்கு கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்படி தகவல்களை பெற்றுத் தரும் பட்சத்தில் Luciano விற்கு விடுதலை அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

சொன்னபடியே, 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் Luciano தன் சொந்த ஊரான Sicily க்கு திரும்பிவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். ஆனால் Luciano இத்தாலிக்கு திரும்பாமல் கியூபா நாட்டிற்கு சென்று விட்டான். அங்கிருந்தபடியே அமெரிக்காவில் செயல்பட்ட தனது குண்டர் கும்பல்களை வழிநடத்தினான். இது அமெரிக்க அரசுக்கு தெரிய வந்த பிறகு அவனை இத்தாலி நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கியூபா அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்தது. ஒருவேளை கியூபா அரசு அதனைச் செயல்படுத்தத் தவறினால் கியூபாவிற்கு வழங்கப்படுகின்ற மருந்து ஏற்றுமதிகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா எச்சரித்தது.

இதனால் Luciano மீண்டும் இத்தாலிக்கு திரும்ப முடிவெடுத்தான். அதற்கு முன்பாக அமெரிக்க வரலாற்றில் அதுவரை செய்யப்படாத போதைப் பொருள் கடத்தலை செய்வதற்குரிய திட்டத்தை இதர அமெரிக்க குண்டர் கும்பல் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே அங்கிருந்து புறப்பட்டான். அதன்படி Sicily லிருந்து ஏற்றுமதி செய்யப்படும் போதைப் பொருளை அமெரிக்க குண்டர்கள் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்புவார்கள். இதன் மூலம் அவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கின்ற வாய்ப்பு உருவாகியது.

இத்தாலிக்கு திரும்பிய Luciano விற்கு அவனைவிட 20 வயது குறைந்த Igea Lissoni என்ற நடனக்காரி மீது காதல் ஏற்பட்டது. நாடு கடத்தப்பட்ட Luciano விற்கு திருமணம் செய்துக் கொள்ள தடை இருந்ததால் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் சேர்ந்து வாழத் தொடங்கினர். அதே சமயத்தில் Luciano வைக் கொல்ல கூலிப்படையினர் சுற்றிக் கொண்டிருக்கும் தகவல் அவர்களுக்கு கிடைத்தது. இதனால் அடிக்கடி அவர்கள் தங்களது இருப்பிடத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர்.

11 வருடத்திற்கு பிறகு 1958ஆம் ஆண்டில் Igea மார்பகப் புற்றுநோயால் காலமானார். Igea வின் மறைவு Luciano வை மிகவும் பாதித்தது. இதனால் அமெரிக்க குண்டர் கும்பல்களின் மீதிருந்த அவனது பிடி நழுவத் தொடங்கியது. நீண்ட நாட்களாக அமெரிக்காவை விட்டு விலகியிருந்த காரணத்தால் வேறு பல புதிய தலைவர்கள் Luciano விட்டுச் சென்ற காலி இடத்தை நிரப்ப போட்டியிட்டனர். இதுவும் ஒருவகையில் Luciano வை பாதித்தது.

கடைசியாக Igea இறுதியாக பார்க்க விரும்பிய ஒரு திரைப்பட தயாரிப்பாளரை அவள் இறந்து பின்னர், விமான நிலையத்தில் காணச் சென்ற Luciano அங்கேயே மாரடைப்பால் இறந்து போனான். அவனது இறுதி வேண்டுகோளுக்கு இணங்க அவனது உடல் அமெரிக்காவின் Queens St.Johns இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.